திருவெறும்பூர் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் நடத்திய பேச்சுப் போட்டி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 26, 2020

திருவெறும்பூர் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் நடத்திய பேச்சுப் போட்டி!

200 மாணவர்கள் பங்கேற்பு!


பெரியார் பிஞ்சுவின் "வைரல் வீடியோ!'



திருவெறும்பூர் பெரியார் பிஞ்சு வாசகர் வட் டம் மற்றும் பாரத மிகுமின் நிறுவனத் தோழர்கள் இணைந்து மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஒன்றை நடத்த முன் வந்தனர்.


அதன்படி 2,3,4,5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "என் பார்வையில் பெரியார்", 6,7,8,9 மாணவர்களுக் குப் "பெரியார் பேணிய மனிதநேயம்" ஆகிய தலைப்புகள் வழங்கப்பட்டன!


16.5.2020 அன்று இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டது. 18.5.2020 பெயர் பதிவிற்கான கடைசி நாள்!


மூன்று நாள் இடைவெளியில் பேச்சுப் போட் டியா? அதுவும் கரோனா காலத்தில்... அதுவும் தமிழ்நாடு முழுக்க!


யார் வருவார்கள்? எப்படி வர முடியும்? செய் திகள் போய் சேர வேண்டாமா? படிக்க அவகாசம் வேண்டாமா? செயலி (App) வேண்டாமா? அதைச் செயல்படுத்த வேண்டாமா? என்கிற பலப்பல கேள்விகள். இதற்கு விடை சொல்வதற்குள் பெயர் பதிவிற்கான இறுதி நாளும் வந்துவிட்டது.


ஒருங்கிணைப்பில் ஒருவரான சட்டக் கல்லூரி மாணவர் மதிவதனியிடம் பேசினோம்!


நள்ளிரவைக் கடந்த முன்பதிவு!


பெரிய விளம்பரங்கள் எதுவும் எங்களிடம் இல்லை. வாட்சப், முகநூலில் சிறிது அறிவிப்பு செய்திருந்தோம்! முதல் நாளில் மெதுவாகத் தொடங்கிய மாணவர் பதிவு, இரண்டாம் நாளில் அதிகரித்து, மூன்றாம் நாளில் 170 பேர் என்ற அளவில் இருந்தது.


என்ன செய்வதென்றே புரியவில்லை. மாணவர் சேர்க்கையை நிறுத்தினோம். பெற்றோர்கள் அழைத்து, இரவு 12 மணி வரை பதிவு செய்ய நேரம் இருக்கிறது என நியாயமாகக் கேட்க, அதன் பிறகு 25 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.


அதில் ஒரு மாணவர் அழைத்தார். நான் 12 ஆம் வகுப்புப் படிக்கிறேன் என்றார். மன்னிக்கவும் 9 வரை தான் நடத்துகிறோம் என்றேன். பரவாயில்லை, 12ஆம் வகுப்புக்கு நடத்தும் போது கூறுங்கள், பெயர் குறித்துக் கொள்ளுங்கள் என்கிறார்.


இன்னொரு சுவை! சிவகங்கையில் இருந்து ஒரு மாணவர் அழைத்தார். நான் 6 ஆம் வகுப்புப் படிக்கிறேன் என்றார். பெற்றோரிடம் கொடுங்கள், விவரம் கூறுகிறேன் என்றேன். எனக்கே விவரம் தெரியும். என்னிடமே கூறுங்கள் என்றார் அந்த 6 ஆம் வகுப்புப் பெரியவர்.


ஒரு அம்மா பேசினார். நாள் முடிந்தது என்றேன். 3 ஆம் வகுப்புப் படிக்கும் மகளிடம் கைப்பேசியைக் கொடுத்துப் பேசச் சொல்கிறார்.


நான் முகநூலில் செய்திருந்த பதிவில் அன்றிரவு ஒரு பெண்மணி 11.30 மணிக்குப் பின்னூட்டம் செய்து, என் பிள்ளையையும் சேர்த்துக் கொள் ளுங்கள் என்று கேட்டது மகிழ்ச்சியான ஒன்று. அதே இரவு நேரத்தில் "மெசஞ்சரில்" வந்த ஒரு இஸ்லாமிய அம்மா என் மகள் ஆர்வமாக இருக் கிறார், இணைத்துக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்ததும் நெகிழ்ச்சியான மற்றொன்று!


நெற்றியில் திருநூறும், கையில் கயறும் கொண்ட மாணவர்கள் பெரியாரை இயல்பாக மட்டுமல்ல; உள்வாங்கியும் பேசினார்கள். கட வுளை மற; மனிதனை நினை, வைக்கம் போராட்டம், தொண்டு செய்து பழுத்த பழம் போன்ற கருத்துகளை நிறைய கேட்க முடிந்தது.


கிராமப் பகுதியில் இருந்து நிறைய மாணவர்கள் கலந்து கொண்டனர். மின்சாரம் தடையான ஒரு கிராமத்தில், மாணவரின் முகத்தில் பெற்றோர் "டார்ச்" அடிக்க, அந்த வெளிச்சத்தில் பேசினார் ஒரு மாணவர்.


இவர்களுக்குப் பெரியார் குறித்து யார் எழுதிக் கொடுத்திருப்பார்கள் என யோசித்தால், ஒன்று பெற்றோர் அல்லது மற்றோர்! ஆக எல்லோரிடமும் பெரியாரின் தாக்கம் இருப்பதை அறிய முடிந்தது என்றார் மதிவதனி!


நாங்கள் பெற்ற வெற்றி!


திருநங்கைகள் குறித்து "திருமகள்" என்கிற குறும்படம் எடுத்து, அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்றவர் பெல் கழகத் தோழர் ஆண்டிராஜ். பேச்சுப் போட்டியின் முக்கியக் காரணிகளில் ஒருவர்.


இவர் தனது அனுபவத்தைக் கூறும்போது, தோழர்கள் காணொலி வாயிலாக நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என ஆசிரியர் கூறியது தான் இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கம். தொழிற் சங்கக் கூட்டம், திருவெறும்பூர் ஒன்றியக் கூட்டம், திருச்சி மாவட்ட மகளிர் கூட்டம், பட்டிமன்றம், கருத்தரங்கம் ஆகியவை "ZOOM   APP" மூலம் நாங்கள் நடத்தினோம்.


அதன் தொடர்ச்சியாகத் திருவெறும்பூர் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் சார்பில் பேச்சுப் போட்டியை நடத்தி இருக்கிறோம். 25 பேர் பங்கேற்பார்கள் என்றும், அதிகபட்சம் 100 பேர் வரலாம் என்றும் எதிர்பார்த்தோம்.


தமிழ்நாடு முழுக்கப் பெரியார் பிஞ்சுகளுக்கு மட்டும் நடத்தலாம் என்பது தான்  திட்டமாக இருந்தது. பிறகு எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கலாம் என முடிவு செய்தோம். குறுகிய நாள் ஏற்பாடு என்பதால், எந்தத் தொழில் நுட்பத் தவறுகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்; வெற்றியும் பெற்றோம்!


அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுடன் நேரடியாகப் பேசி, தேவையான ஏற்பாடுகளைச் செய்தோம். திருச்சி கலைக் காவிரி கல்லூரி பேராசிரியர் வின்சென்ட் அவர்களின் உதவியுடன் தரமான விளம்பரக் காணொலி ஒன்று தயார் செய்தோம். அதில் பெற்றோர், மாணவர்கள் செய்ய வேண்டியது, செயலியை இயக்கும் முறை மற்றும் போட்டியின் நிபந்தனைகளைத் தெளிவாக அறிவித்தோம்.


கரோனா விடுமுறை என்றிருந்த நிலையில், திடீரென பெல் நிறுவனம் செயல்பட தொடங்கியது. தோழர்கள் பஞ்சலிங்கம், திலீப்குமார், சுதர்சன் உள்ளிட்ட தோழர்களுடன் பணிக்குச் சென்று கொண்டே இந்த ஏற்பாடுகளையும் செய்தோம் என்றார் தோழர் ஆண்டிராஜ்.


பதிவர் - 193  பங்கேற்பு - 182


COPY OP என்கிற பெயரில் YOU TUBE பக்கம் ஒன்றை நடத்தி வருபவர் கழகத் தோழர் அசோக் குமார். ஒரு ஆண்டாக செயல்படும் இந்தப் பக் கத்தில் 200க்கும் மேற்பட்ட பல்துறை காணொ லிகள் உள்ளன. இவையனைத்தும் இவரே நேரடி யாகச் சென்று எடுத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


கள செயற்பாட்டாளரான இவரும் இந்தப் பேச்சுப் போட்டியின் வெற்றிக்கு வித்திட்டவர். இவர் கூறும்போது, போட்டிக்கு மொத்தம் பெயர் கொடுத்தவர்கள் 193 பேர். இத்துடன் நிறுத்தா விட்டால் இன்னும் அதிகரித்திருக்கும். பதிவு செய்தவர்களில் 30 விழுக்காட்டினர் வராமல் போகலாம் என எதிர்பார்த்தோம்


ஆனால் வியப்பு என்னவெனில் பதிவு செய்த 193 பேரில் 182 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண் டனர். இதில் சில பெற்றோர்கள் தங்கள் பிள் ளைகள் பேசியதைக் காணொலியில் பதிவு செய்து அனுப்பி இருந்தனர். அவர்களின் ஆர்வமும், ஒத்துழைப்பும் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒரு பதிவு எண் கொடுத்து, எந்தக் குழப்பமும் இன்றி சிறப்பாகவே நிகழ்ச்சியை முடித்தோம்.


இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக செயல்பட்ட ம.ஆறுமுகம், ம.வி.அருள்மொழி, மதிவதனி, மு.சு.கண்மணி, பிரபாகரன், யாழ்.திலீபன், வி.சி.வில்வம் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அசோக்குமார்.


ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு!


நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூரில் இருந்து உதவிகள் செய்தவர்  தோழர் பிரபாகரன். அவர் கூறும்போது, மாணவர் சேர்க்கைக்காக 50 பேர் வரை என்னிடம் பேசியிருப்பார்கள். இதில் பாதி பேர் ஆசிரியர்கள். அவர்கள் தங்கள் பள்ளி மாணவர்களை விடுமுறை நாளிலும் தொடர்பு கொண்டு இந்தப் பேச்சுப் போட்டியில் பங்கேற்க செய்தனர்.


பேராசிரியர் ஒருவர் பேசி, 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இதை எடுத் துச் செல்லலாம் என்று கேட்டுக் கொண்டார். இயக்கம் சாராத பொதுவான மாணவர்கள் ஏராளம் பங்கேற்றனர். பெரியார் குறித்துச் சிறப் பாகப் பேசிய ஒரு மாணவி, இறுதியில் "ஜெய்ஹிந்த்" என முடித்தார்.


கொள்கை சார்ந்த மாணவர்கள் கருப்புச் சட்டை, பெரியார் டி.சர்ட், நிற்பதற்குப் பின்னால் பெரியார், ஆசிரியர் படம் என்கிற அடையாளத் துடன் இருந்தனர் என்றார் பிரபாகரன்.


மக்களிடம் பேச ஒரு வாய்ப்பு!


தொடர்ந்து பேசிய மற்றொரு தோழர் யாழ் திலீபன், எனக்கு  வந்த அழைப்புகளில் பெரும் பாலும் பேராசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களே அதிகம் இருந்தனர்.


இன்று காலையில் கூட ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஒரு பெண்மணி அழைத்தார். எனது பையன் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகவில்லை. அதனால் வருத்தமில்லை. அதேநேரம் இது போன்று திரும்பவும் நடத்தினால் கண்டிப்பாகத் தகவல் கொடுங்கள் என்றார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாவட்டம் தோறும் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தி ருக்கிறார்கள் என்கிற செய்தியை அந்தப் பெண்மணியிடம் கூறினேன்.


இன்னும் சிலர் பெரியார் பிஞ்சு எனப் பத்திரிகை வருகிறதா என்றும், அதை இணையத்தில் எப்படி பெறுவது எனவும், சந்தா செலுத்தும் வழிமுறைகள் குறித்தும் கேட்டார்கள். மறைமலை நகரில் இருந்து பேசிய நமது கழகத் தோழர், மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் நடத்த வேண் டும் என்றார். பெரியார் பிஞ்சுகள் சமூகத்திற்குள் வர கொஞ்சம் காலம் தேவைப்படும். அதற்கு முன் நடைமுறைக்குத் தேவையான மாணவர்கள், இளைஞர்கள் நமக்கு வேண்டும் என்றார்.


பேசிய பெரும்பாலான மக்கள் ஆத்திக நண்பர்களே! பெரியார் ஆயிரம் வினா - விடை ஒரு வகை என்றால், இதுபோன்ற பேச்சுப் போட்டிகள் மற்றொரு வகை! சென்னை, காரைக்குடி, சிவகங்கை, நாகர்கோயில், கன்னியாகுமரி, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து எனக்கு அதிக அழைப்புகள் வந்தன.


பேசும்போது வேறென்ன பத்திரிகைகள் வருகிறது எனச் சில மாணவர்கள் கேட்டனர். விடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட் குறித் தும், இயக்க வலைத்தளம் குறித்து விளக்கமளிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்றார் தோழர் யாழ் திலீபன்.


இறுதிச் சுற்று!


182 மாணவர்களில் 23 மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். இந்நிகழ்ச்சி 24.05.2020 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்குக் கவிஞர் நந்தலாலா, உருமு தனலட்சுமி கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் மனோன்மணி, வழக்கறிஞர் பூவை புலிகேசி ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர்.


பரிசுத் தொகை 10 ஆயிரம்!


2, 3, 4, 5 ஆம் வகுப்பிற்கான போட்டியில் சென்னை விஷ்ணு துர்கா, காரைக்குடி சாய் பிரதிக்யா, பழனி அமிதவர்ஷினி முறையே 1, 2, 3 பரிசுகளை வென்றனர். இவர்களுக்குப் பரிசுத் தொகையாக 5000, 3000, 2000 வழங்கப்பட்டது. அதேபோன்று 6, 7, 8, 9 ஆம் வகுப்பிற்கான போட்டியில் திருச்சியைச் சேர்ந்த மாணவர்கள் ம.யாழினி, க.யாழினி, அழகுதரணி ஆகியோர் பரிசுகளை வென்றனர்.


இந்த இரு பிரிவுகளுக்குமான பரிசுத் தொகையை திருவெறும்பூர் ஒன்றியத் திராவிடர் கழகம் ஏற்றது. நிகழ்ச்சி சிறக்க திருச்சி மாவட்டத் திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு நல்கினர்.


இறுதிச் சுற்றில் பங்கேற்ற மாணவர்களைப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.


3 நாள் இடைவெளியில், 10 இளைஞர்கள் சேர்ந்து, அதுவும் அவரவர் ஊரில் இருந்து, 200 மாணவர்களை இணைத்தது பெரும் சாதனை தான்! பெரியாரின் வீச்சு எப்படிப்பட்டது என்பதை நிரூபித்தத் தருணமிது!


தோழர்களுக்குப் பாராட்டுகள்!


-   வி.சி.வில்வம்


No comments:

Post a Comment