இந்து தமிழ் திசை பார்வையில்... ரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 26, 2020

இந்து தமிழ் திசை பார்வையில்... ரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது

ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன்



பெரும்பான்மையான உலக நாடுகள் அவற்றின் ஜிடிபியில் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 10% முதல் 20% வரை கோவிட் நிவாரணமாக அறிவித்திருந்த நிலையில், இந்தியாவிலும் அனைத்துத் தரப்பினரும் அரசின் நிவாரண அறிவிப்பை எதிர்நோக்கிக் காத் திருந்தார்கள். ஏராளமான எதிர்பார்ப்புகளுக்கிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.


தனது உரையில் இந்தியாவை சுயசார்பான பாரதம் ஆகமாற்ற இந்த தருணத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்றும் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மீட்பு திட்டத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அய்ந்து பகுதிகளாக நிவாரணம், உதவி மற்றும் சீர மைப்பு சம்பந்தப்பட்ட அறிவிப்புகளை செய்தார்.


முதல் பகுதி (மொத்த மதிப்பு ரூ.5,94,550 கோடி): முதல் பகுதியில் அறிவிக்கப்பட்ட 16 முக்கிய அறிவிப்பு களில் நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், மின் விநியோகம் மற்றும் ஊதியம் பெறும் மக்கள் ஆகியோருக்கான நலத்திட்ட உதவிகள் அடங்கும்.


இரண்டாம் பகுதி (மொத்த மதிப்பு ரூ.3,10,000 கோடி): புலம் பெயர் தொழிலாளர்களுக்கான நலத்திட் டங்களான தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்


“ஒரே நாடு ஒரே ரேசன்” போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.


மூன்றாம் பகுதி ( மொத்த மதிப்பு ரூ.1,50,000 கோடி): இதில் அறிவிக்கப்பட்ட 11 திட்டங்களில் நிர்வாகச் சீர் திருத்தம், விவசாய உள்கட்டமைப்பு, நிதி, குறு உணவு உற்பத்தி, கால்நடைகளுக்கான தடுப்பூசி, தக்காளி, உருளை, வெங்காயம் வரிசையில் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் போக்குவரத்து மானியம், மீன் உற் பத்திக்கான உதவி, மூலிகை விவசாயம், தேனி வளர்ப்பு ஆகியவை அடங்கும்.


நான்காம் பகுதி (மற்றும் அய்ந்தாம் பகுதிகளின் மொத்த மதிப்பு : ரூ. 48,100 கோடி): இந்தப் பகுதியில் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்கம், நிலக்கரி எரிவாயு திட்டங்கள், விமான பழுது பார்த்தல், பராமரிப்புக்கான தொழிலகம் தொடங்குதல், விமான நிலைய தனியார் மயம், இந்திய விண்வெளி பயன்பாடு ஆகியவை அடங்கும்.


அய்ந்தாம் பகுதி: இவற்றில் மாநிலங்களுக்கான நிதி உதவிகள், கடன் வரம்பு நீட்டிப்பு கல்வித் துறையில் மாற்றங்கள், கம்பெனி சட்ட மாற்றங்கள், திவால் சட்ட சீரமைப்பு ஆகியவை அடங்கும். இது தவிர, பிரதமர் வறுமை ஒழிப்பு நிவாரண திட்டத்தின் உதவிகள் ரூ.1,92,800 கோடி மற்றும் ரிசர்வ் வங்கி மூலம் நிவாரண திட்டங்கள் மதிப்பு ரூ. 8.01,603 கோடி ஆக மொத்தம் ரூ.20,97,053 கோடி என்று நிதி அமைச்சர் கணக்குக் கூறியுள்ளார்.


தொழில்களுக்கு ஆக்சிஜன்


இந்தியாவின் ஏற்றுமதியில் 40% பங்கு வகிப்பதோடு, 11 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்து வரும் எம்எஸ்எம்இ (MSME) தொழில்களுக்கு கூடுதல் கடன் வசதி வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட ரூ 3 லட்சம் கோடி 45 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறு வனங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இத்திட்டப்படி, நிறுவனங்கள் 29 பிப்ரவரி 2020இல் இருக்கும் கடன் தொகையில் கூடுதலாக 20% கூடுதல் பிணையமின்றி வங்கிகளிடமிருந்து பெறலாம்.


9.25% வட்டி கொண்ட இந்த கடன் தொகையை ஒரு ஆண்டு விடுமுறைக்குப்பின், நான்கு ஆண்டு களில் திருப்பிச் செலுத்தலாம். விடுமுறைக்காலத்தில் வட்டி மட்டும் செலுத்தினால் போதுமானது. இது ஏற் கெனவே கடன் வசதி பெற்றிருக்கும் நிறுவனங்களுக்குத் தான் பொருந்தும். உதாரணமாக கடன் வாங்காமல் நல்ல முறையில் செயல்படும் நிறுவனங்கள் தற்போது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனில், இந்த கோவிட் திட்டம் அவர்களுக்கு கை கொடுக்காது. அவர்களுக்கு உபரி கடன் கிடைக்காது என்பது இதில் உள்ள சிக்கல்.


பொதுவாக, நடைமுறை மூலதனக்கடன், விற் பனை, ஸ்டாக் போன்றவற்றின் அடிப்படையில் கணக் கிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டில் பெரும்பாலான நிறுவனங்களுக்கு விற்பனையில் தொய்வு ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் எப்படி இருக்கும் என்பதை உதாரணத்தோடு பார்ப்போம். பத்து கோடி விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு ரூ.2 கோடி நடைமுறை மூல தனக் கடன் அளவில் கொடுக்கப்படுகிறது. தற்போது கூடுதல் 20 சதவீதம் அதாவது ரூ.40 லட்சத்துடன் மொத்தமாக ரூ2.4 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.


அடுத்த ஆண்டில் விற்பனை ரூ.6 கோடி என்று வைத்துக்கொண்டால், அவர்களுக்கு கடனுக்கான தகு தித் தொகை ரூ.1.2 கோடி. ஏற்கெனவே உள்ள ரூ 2.4 கோடிக்கான வட்டி செலுத்த நிலைமை ஏற்படும்போது வட்டி மற்றும் அசல் கட்டுவதில் சிரமம் ஏற்படும். இதனால் வாராக்கடன் வரையறையின் மாற்றங்கள் கொண்டுவர வேண்டிய கட்டாயம் அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் ஏற்படலாம். இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் அறிவிப்புகளை அரசு எதன் அடிப் படையில் வெளியிடுகிறது என்ற சந்தேகம் எழுகிறது. நடைமுறையில் தொழில்துறையின் எதிர்பார்ப்பும், மக்களின் எதிர்பார்ப்பும் வேறாக இருக்கிறது.


தொழில்துறையின் எதிர்பார்ப்பு என்ன?


இந்தியாவின் ஜிடிபியில் சுமார் 10 சதவீதம் அளவு கோவிட் நிவாரண மற்றும் உதவிகள் வழங்கியதாக அரசு அறிவித்தாலும் பண உதவியாக (fiscal stimulus) 0.9% மட்டுமே வழங்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் எந்த அரசாங்கமும் திட்டங்கள் அளிப்பது இயலாத ஒன்று. ஆனால் மற்ற நாடுகளில் அறிவித்தது போல ஊரடங்கு நாட்களில் பணியாளர்களுக்கான சம்பளத்திற்காக குறைந்த வட்டி கடன், அனைத்து தொழில்களுக்கும் நீண்டகாலக் கடன், ஜிஎஸ்டி, டிடிஎஸ், இஎஸ்அய், பிஎஃப் போன்ற வற்றை தாமதமாக நீட்டித்து வட்டி இல்லாமல் செலுத் தும் வாய்ப்பு ஆகியவற்றை எதிர்பார்த்தனர்.


தற்போதைய தேவையில் நுகர்வை அதிகரிக்கும் திட்டங்கள்தான் முதன்மையானது. தொழில் அமைப்பு களை கடனாளியாக ஆக்குவதற்கான திட்டங்கள்தான் அரசின் அறிவிப்பில் பிரதானமாக உள்ளன என்று கூறுகின்றனர். ஜிஎஸ்டி வரியை ஆறு மாதத்திற்குக் குறைக்கும் பட்சத்தில் நுகர்வு அதிகரிக்கும். தவிர தற்போது அறிவித்திருக்கும் பெரும்பாலான திட்டங்கள் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையிலிருந்து மீண்டுவர உதவாது என்றும் கருதுகின்றனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் ஊர்களிலேயே தங்கிவிடும் பட்சத்தில் கட்டுமானம், ஜவுளி, காஸ்டிங்க்ஸ் போன்ற பல்வேறு துறைகளின் உற்பத்தியில் பாதிப்பு உண்டா கும். இதுபோன்ற பல சிக்கல்கள் நாட்டில் உள்ளன.


கோவிட் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் அரசின் உதவிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மக்களுக்கு நேரடியாக சென்றடையும் நிதி மானியம் (fiscal stimulus). மற்றது வங்கிகள் மூலம் தொழில், விவசாயம் போன்ற துறைகளுக்கு சென்று உயிர்ப் பிக்கும் monetary stimulus. உதாரணத்தோடு பார்க்க வேண்டுமானால், நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக மருந்து ஏற்ற ஊசி மூலம் நரம்பில் குளுக்கோஸ் செலுத்துதல் போன்றது - நிதி மானியம். சத்தான உணவு, புரதச்சத்து, வைட்டமின் மூலம் கிடைக்கும் சத்து உடனடியாக இல்லாவிட்டாலும் குறுகிய காலத்தில் இது உயிர்பிழைத்திருக்க உதவியாக இருக்கும். இது தவிர தசை எலும்பு போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் பிசியோதெரபி போன்றது தான் மற்ற கட்டமைப்பு சீரமைப்பு அறிவிப்புகள். அரசு இரண்டாவது வகையை மட்டுமே செய்துள்ளது. முதல் வகையைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை. உடல் உறுதி பெறும் முன் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பதை அரசு எப்போது புரிந்துகொள்ளப் போகிறது?


- 'இந்து தமிழ் திசை' இணைப்பிதழ் வணிகவீதி (25.5.2020)


 


No comments:

Post a Comment