காவி சிந்தனை உள்ளவர்களை இராணுவத்தில் நுழைப்பதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 31, 2019

காவி சிந்தனை உள்ளவர்களை இராணுவத்தில் நுழைப்பதா


செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்


திருச்சி,டிச.31    காவி சிந்தனை உள்ளவர்களை இராணுவத்தில் நுழைப்பது தவறு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


நேற்று  (30.12.2019) திருச்சிக்குச் சென்ற  திராவிடர் கழகத்  தலைவர்  ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள்  செய்தியாளர்களுக்குப்   பேட்டி அளித்தார்.


அப்பேட்டியின் விவரம் வருமாறு:


உள்நோக்கத்துடன் செய்கிறது


 


மத்திய பா.ஜ.க. அரசு


மத்திய பி.ஜே.பி. அரசு முப்படைகளுக்கும் தலைவர் ஒருவரை நியமித்திருக்கிறது. அவர் ஏற்கெனவே ராணுவத் துறையில் இருந்தவர் என்றாலும், அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டி ருப்பவர் ஏற்கெனவே அரசியல் பேசியவர் என்பதற்காக அந்தப் பதவி தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்பதை நினைக்கும்பொழுது, மத்திய அரசின் நோக்கம், உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது. உள்நோக்கோடு செய்யும்பொழுது, அது கேள்விக்குறியாகிறது.


ஒரு பிரச்சினை குறித்து மக்கள் எழுச்சி என்றால், ஒரு இராணுவ அதிகாரி அதைப்பற்றி கருத்துத் தெரிவிக்கக் கூடாது; அது அவருடைய வேலையும் அல்ல.


இராணுவத்திலும் காவி!


ஆனால், பொறுப்பிலிருந்து அவர் ஓய்வு பெற்றவர். அப்படி ஓய்வு பெற்றவருக்கு மறுபடியும் புதிய பதவியைக் கொடுப்பதற்காக, அவர்களுடைய கருத்துள்ளவர்களைக் கொண்டு வந்து ராணுவத்தில் நுழைக்கிறார்கள். காவி மய சிந்தனை உள்ளவர்களை, ராணுவத் துறையிலும் உள்ளே தள்ளுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.


இந்திய இஸ்லாமியர்களுக்கு


 


என்ன பாதிப்பு?


 


செய்தியாளர்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால், இந்திய இஸ்லாமியர்களுக்கு என்ன பாதிப்பு என்று தெரியாமல் குழப்பமாக இருக்கிறது; சமூக வலைத்தளங்களிலும் இந்தக் கேள்வியைத்தான் எழுப்புகின்றன; அதைப்பற்றி யாரும் இன்னும் தெளிவு படுத்தவில்லையே?


தமிழர் தலைவர்: எல்லாக் கூட்டங்களிலும் நாங்கள் தெளிவுபடுத்திக் கொண்டுதான் வருகிறோம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில்,


பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களா தேஷ் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வெளியே வரக்கூடியவர்கள் யாராக இருந் தாலும், அவர்கள் அகதிகள்; அவர்களுக் குத்தான்  தஞ்சம் அளிக்கிறோம்; குடியுரிமை கொடுக்கிறோம் என்று வரும்பொழுது, வெளிநாட்டிலிருந்து  பாதிக்கப்பட்டு வருகின்ற மக்களுக்கு -  இதுவரையில் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நியதி - அய்.நா.வில் இருக் கக்கூடிய நியதி என்னவென்றால், அப்படி அகதிகளாக வருகிறவர்களில், மதத்தை அடிப்படையாகக் கொண்டு மறுப்பதோ, கொடுப்பதோ கிடையாது.


முதல் முறையாக, இந்துக்கள், கிறிஸ்தவர் கள், பவுத்தர்கள், ஜைனர்களுக்கு உண்டு. இஸ்லாமியர்களுக்குக் கிடையாது என்று சொல்லி, இந்துராஷ்டிரத்தை அமைப்போம் என்கிறார்கள்.


இந்து நாடாக்கவேண்டுமாம்!


இராமகோபாலன்கள், மோகன் பாகவத் ஆகியோர் என்ன பேசுகிறார்கள் என்றால், ''பாகிஸ்தான் உள்பட இந்தியாவுடன் இணைத்து, அகண்ட இந்துஸ்தானத்தை உருவாக்கவேண்டும்; இந்துராஷ்டிரத்தை உருவாக்கவேண்டும்; இந்து நாடாக்க வேண்டும்'' என்று சொல்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதற்கு இது ஒரு முதல் கட்டம் என்பதுபோல, முஸ்லிம்களைத் தனிமைப் படுத்தி இருக்கிறார்கள்.


நம்முடைய நாட்டைப் பொருத்தவரையில், மதங்களால் மக்கள் அவர்களுடைய நம்பிக்கைக்கேற்ப இருக்கிறார்களே தவிர, நல்லிணக்கத்திற்கு இங்கே குறைவே கிடையாது. அவர்கள் எல்லாம் ஒரு 10 தலை முறைக்கு முன்பு, ஏற்கெனவே இந்துக்களாக இருந்தவர்கள்தான் என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். அப்படி இருக்கும்பொழுது, அவர்களை வேற்றுமைப்படுத்த வேண்டிய அவசியமேயில்லை.


அரசமைப்புச் சட்டத்திற்கு


 


முரணான கருத்து!


ஒன்றுபட்டிருக்கக் கூடிய ஒரு நாட்டில், மதச்சார்பின்மை என்ற ஒரு அடையாளத்தை அரசமைப்புச் சட்டம் தெளிவாகக் கொண் டிருக்கும்பொழுது, அந்த அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான கருத்து, இஸ்லாமியர் களை மட்டும் தனிமைப்படுத்தி, அவர்களை எதிரிகளாக ஆக்குவதென்பது, ஆர்.எஸ்.எஸி னுடைய கொள்கைகளில் ஒன்று.


அதைத்தான் இப்பொழுது அவர்கள், தங்களுக்குக் கிடைத்திருக்கின்ற மிருக பலத்தின்மூலம் நிலைநாட்டிக் கொண்டி ருக்கிறார்கள். அதில் குழப்பமேயில்லை.


நாடு கொந்தளிப்பான ஒரு சூழலுக்கு


 


ஆட்பட்டு இருக்கிறது


அதை அடிப்படையாகக் கொண்டுதான் குடிமக்கள் பதிவேடு என்பதையெல்லாம் உருவாக்குவோம் என்று வரக்கூடிய சூழல் இருப்பதினால்தான், நாடு கொந்தளிப்பான ஒரு சூழலுக்கு ஆட்பட்டு இருக்கிறது; இதை யாரும் தூண்டவில்லை. யார் தூண்டுகிறார்கள் என்றால், மத்தியில் ஆளக்கூடியவர்கள்தான்.


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.


No comments:

Post a Comment