தலைவர்கள்மீதான அவமதிப்பு தொடர்வதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 31, 2019

தலைவர்கள்மீதான அவமதிப்பு தொடர்வதா

சிறீவில்லிபுத்தூரில் காமராசர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.


தொடர்ந்து தமிழ்நாட்டில் தலைவர்களின் சிலைகளுக்கு அவமதிப்பு நடந்து வருகிறது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகள் அவமதிக்கப்பட்டுள்ளன.


"திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல தமிழ்நாட்டில் பெரியார் சிலையை உடைப்போம்" என்று ஒருகட்சியின் தேசிய செயலாளரே பட்டவர்த்தனமாகப் பேசுகிறார்.


இவர்கள்மீது எல்லாம் முறைப்படி - சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால், இதுபோன்ற அநாகரிக, காட்டு விலங்காண்டித்தன நிகழ்ச்சிகள் நடத்திருக்காது.


எந்தெந்த சிலைகள் உடைக்கப்படுகின்றன என்பது தான் முக்கியம். காலம் காலமாக சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த கூட்டத்தின் அஸ்திவாரத்தைநோக்கி சமூக நீதிக்கான போராட்டங்களை நடத்தியவர்கள், அத்தகு போராட்டங்களின் காரணமாக ஆண்டாண்டுக் காலமாக அடக்கப்பட்ட மக்கள் மேலே எழுந்து வரும் நிலையைக் கண்ட ஆதிக்க சக்திகள்தான் - இது போன்ற கீழ்த்தர வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.


இன்றைக்கு சிறீவில்லிபுத்தூரில் அவமதிக்கப்பட்டுள்ள காமராசர் யார்? அவர் எழுப்பிய சமூக நீதிக் குரல் எத்தகையது?


"பறையனை டாக்டர் ஆக்கினேன்; ஊசி போட்டான். எந்த பிள்ளை செத்தது சொல்! பறையனை என்ஜினியராக் கினேன் - பாலம் கட்டினான் எந்த பாலம் இடிந்தது சொல்" என்று பேசிய பெருமகன் தான்  பச்சைத் தமிழர் காமராசர்.


'இது யார் குரல்?' பெரியார் குரலா? காமராசர் குரலா?' என்று 'விடுதலை' தலைப்பு செய்தியாகவும்கூட வெளியிட்ட துண்டு.


பசுவதைத் தடை என்ற கோரிக்கையை எதிர்த்த அகில இந்திய தலைவராக இருந்த காமராசர் அவர்களை ஒரு பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரமான டில்லியில் உயிரோடு கொளுத்த முயன்ற சக்திகள் யாவை?


ஜனசங்கத்தினரும் (இன்றைய பிஜேபியின் முன்னோர்), நிர்வாண சாமியார்களும், சங்கராச்சாரியார்களும் ஈட்டிகளை ஏந்திக் கொண்டு - கேவலமான, கொச்சையான வார்த்தைகளை முழக்கமிட்டு, வன்முறையின் வடிவமாக ஆட்டம் போட்டதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.


பச்சைத் தமிழரென்றும், கல்வி வள்ளல் என்றும், கர்ம வீரர் என்றும் தந்தை பெரியாரால் ஏற்றிப் போற்றப்பட்ட தலைவர் காமராசர் மீதான காழ்ப்புணர்வு -ஆதிக்க சக்திகளுக்கு எப்பொழுதுமே உண்டு.


காமராசரை மனதில் கொண்டு, "இந்தக் கருப்புக் காக்கையைக் கல்லால் அடிக்க வேண்டும்" என்று சென்னைக் கடற்கரையில் உடலெல்லாம் மூளை உள்ளவர் என்று அக்கிரகாரத்தால் அர்ச்சிக்கப்படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) பேசவில்லையா?


தந்தை பெரியார், அண்ணல்  அம்பேத்கர் மீதும் இந்தக் கூட்டத்திற்கு எப்பொழுதுமே எரிச்சலும், பகைமையும், காழ்ப்பும், கைகோத்த வெறித்தனமும் உண்டு.


இப்பொழுது அவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது  என்கிற ஒரே காரணத்தால் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்.


தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறப்படும் ஆட்சியானது பிஜேபியின் தொங்கு சதையாக இருப்பதால், அவர்களின் பாதைதான் அண்ணா பாதை என்று கருதிக் கொண்டு செயல்படுகிறார்கள் போலும்!


இந்தத் தலைவர்களை அவமதிப்பு என்பது - சமூக நீதியின் எதிர்ப்புக்கான ஆவேசமே, அருவருப்பே!


இன்னும் சொல்லப் போனால் அவமதிக்கப்பட்டுள்ள தலைவர்கள் கட்சிகளைக் கடந்து வெகு மக்களால் பெரிதும் மதிக்கப்படக் கூடிய தலைவர்கள். அந்தத் தலைவர்களை அவமதிப்பது என்பது இந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்களையே அவமதிப்பதாகும்.


"ஆற்றில் அடித்துச் செல்லப்படும் நரியைக் காப்பாற்றச் சென்றவனையும் ஆறு அடித்துச் சென்றதுபோல" பிஜேபியைக் காப்பாற்ற நினைக்கும் அதிமுகவுக்கும் அதே(£) கதிதான்! எச்சரிக்கை!!


No comments:

Post a Comment