கடும் மழை, புயல் வெள்ளப் பாதிப்பிற்கு ‘‘தேசியப் பேரிடர்’’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் தேசிய பேரிடரே, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிதான் - அந்தப் பேரிடரை அகற்றுவதற்காகத்தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 9, 2024

கடும் மழை, புயல் வெள்ளப் பாதிப்பிற்கு ‘‘தேசியப் பேரிடர்’’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் தேசிய பேரிடரே, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிதான் - அந்தப் பேரிடரை அகற்றுவதற்காகத்தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்!

featured image

கடும் மழை, புயல் வெள்ளப் பாதிப்பிற்கு ‘‘தேசியப் பேரிடர்’’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்
தேசிய பேரிடரே, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிதான் – அந்தப் பேரிடரை அகற்றுவதற்காகத்தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்!
ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் அமையப் போவது இந்தியா கூட்டணி ஆட்சிதான்!
தருமபுரி தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி அவர்களை ஆதரித்து
அரூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை

தருமபுரி, ஏப்.9 – கடும் மழை, புயல் வெள்ளப் பாதிப்பிற்கு ‘‘தேசியப் பேரிடர்’’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் – ஆனால், தேசிய பேரிடரே, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி தான். அந்தப் பேரிடரை அகற்றுவதற்காகத்தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல். ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் அமையப் போவது இந்தியா கூட்டணி ஆட்சிதான். அதிலொன்றும் சந்தேக மேயில்லை. அதற்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்டீர்களேயானால், மோடியின் நிலைகுலைந்த பேச்சு – ஆவேசமான பேச்சு – வெறுப்பு கலந்த பேச்சுதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தருமபுரி: அரூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தேர்தல் பரப்புரை
நேற்று (8.4.2024) இரவு 8 மணியளவில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி அவர்களை ஆதரித்து அரூரில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:

தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் ஆ.மணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்!

உங்களையெல்லாம் சந்திப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி! நம்முடைய வேட்பாளர், இந்தியா கூட்டணி யின் – தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் ஆ.மணி அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதற்காக இன்று வந்திருக்கின்றோம்.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற சாதனைகளை தாய்மார்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறீர்கள். நான் அதைச் சொல்லித்தான் தெரியவேண் டும் என்பதில்லை; நீங்கள் நிம்மதியாக அமர்ந்திருப்ப திலேயே தெளிவாகத் தெரிகிறது.

ஒவ்வொரு நாளும் இரண்டு தொகுதிகளுக்குச் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறோம்!

ஆனால், மோடி ஆட்சியினுடைய வேதனை இருக் கிறதே, அது இப்பொழுது இந்தியா முழுவதும் தெரியத் தொடங்கியிருக்கிறது. அவர் நல்ல வித்தைக்காரர். வித்தை செய்கின்ற ஆட்சி இது.
அதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற் காக நாங்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு தொகுதி களுக்குச் சென்று தேர்தல் பரப்புரையை செய்துகொண் டிருக்கின்றோம்.
குறைந்த நேரத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது என்பதற்காகத்தான் நான்கு சிறிய புத்தகங்களை வெளியிட்டு இருக்கின்றோம்.

இந்தியா மட்டுமல்ல, உலகமே பாராட்டக்கூடிய ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி!

இந்நிலையில், சாதனையைச் செய்தவர்கள் வரு கிறார்கள். ‘‘நாங்கள் எதைச் சொன்னோமோ அதைச் செய்து காட்டினோம். எதைச் செய்கிறோமோ, அதை மட்டும்தான் சொல்லுகின்றோம்” என்று காட்டுகின்ற ஆட்சிதான் ஒப்பற்ற நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி –
இந்தியா மட்டுமல்ல, உலகமே பாராட்டக்கூடிய ஆட்சி யினுடைய சாதனைகளைப்பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்கின்றோம்.
அதேபோன்று நண்பர்களே, ஊழலை ஒழிக்கின் றோம் என்று சொல்லித்தான் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தார் மோடி. சொன்னதைச் செய்தாரா?
‘‘மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்” என்ற புத்தகத்தை புள்ளி விவரத்தோடு வெளியிட்டு இருக்கின்றோம்.
‘‘பிரதமர் மோடிக்குக் கருஞ்சட்டைக்காரனின் திறந்த மடல்” என்ற தலைப்பில் மற்றொரு புத்தகம்.

எதிர்க்கட்சிக்காரர்களின் கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கிறாரா, பிரதமர் மோடி?

இதுவரையில் மக்கள் கேட்கின்ற கேள்விக்கோ, எதிர்க்கட்சிக்காரர்கள் கேட்கின்ற கேள்விக்கோ பிரதம ராக இருக்கக்கூடிய மோடி பதில் சொல்லவில்லை. அதுகுறித்த தகவல்கள் எல்லாம் இந்தப் புத்தகத்தில் உள்ளது.
ஊழலை ஒழிக்கிறேன், ஊழலை ஒழிக்கிறேன் என்று சொன்னவர்கள், ஊழலுக்கே மகாமகா ஊழலாக இருக்கக்கூடிய தேர்தல் பத்திரத் திட்ட ஊழலை செய்திருக்கிறார்கள்.
தேர்தல் பத்திரத் திட்டத்தால், நன்கொடை என்ற பெயரால் எத்தனை ஆயிரம் கோடியைப் பெற்றிருக் கிறார்கள் தெரியுமா?
பழைய கிரிமினல்கள், தேடப்படும் குற்றவாளிகளை எல்லாம் கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்திகளை அன்றாடம் தொலைக்காட்சியில் நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள்.

பா.ஜ.க.வின் தேர்தல் பத்திரத் திட்ட ஊழல்!

பா.ஜ.க.வின் தேர்தல் பத்திரத் திட்ட ஊழல் வெளியில் வரக்கூடாது என்பதற்காக எவ்வளவோ முயற்சிகளை செய்து பார்த்தனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டதன் காரணமாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு, அதற்குரிய ஆவணங்களையெல்லாம் மார்ச் 6 ஆம் தேதி கொடுக்கவேண்டும் என்று கெடு விதித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

காதைப் பிடித்துத் திருகிய உச்சநீதிமன்றம்

ஆனால், மார்ச் 5 ஆம் தேதியன்று உச்சநீதிமன் றத்திற்குச் சென்ற ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரிகள், ஜூன் 30 ஆம் தேதிவரை தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று வாய்தா கேட்டனர்.
அவர்களின் காதைப் பிடித்துத் திருகிய உச்சநீதி மன்றம், உடனே அதற்குரிய ஆவணங்களைக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவுப் போட்டது.
பிறகுதான், ஆவணங்களை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தது.
பிறகுதான் தேர்தல் பத்திரத் திட்டத்தில் எப்படிப்பட்ட ஊழல்கள் நடந்துள்ளன என்பதுபற்றி நாட்டிற்கே வெட்ட வெளிச்சமானது.

தேர்தலை ‘‘பத்திரம்‘’மூலம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்!

நம்மைப் பொறுத்தவரையில், எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியைப் பொறுத்தவரையில், இந்தியா கூட்டணி யைப் பொறுத்தவரையில் நடைபெறப் போகின்ற தேர்தல் ‘‘பத்திரமாக” நடக்கவேண்டும் என்று நினைக் கின்றோம். ஆனால், அவர்கள் தேர்தலை ‘‘பத்திரம்” மூலம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
அதற்குரிய தகவல்கள் எல்லாம் தெரியவேண்டும் என்றால், ‘‘பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ஊழல்கள் தேர்தல் பத்திர முறைகேடுகள்’’ என்ற புத்தகத் தைப் படித்தால் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
கடந்த 10 ஆண்டுகாலத்திற்கு முன்பாக, என்ன சொல்லி அவர்கள் பதவிக்கு வந்தார்கள். ஆனால், அவர்கள் செய்தது என்ன?
அதே நிலையில், ‘‘சொன்னதை செய்வோம் ”என்று சொன்ன தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘திராவிட மாடல்’ ஆட்சிப் பொறுப்பேற்றதும் அப்படியே செய்தார் அல்லவா!

தாய்மார்களின் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன?

தாய்மார்கள் எல்லாம் இவ்வளவு மகிழ்ச்சியாக இங்கே அமர்ந்திருக்கிறீர்களே, அதற்குக் காரணம் யார்? ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்.
காலையில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக் குச் சிற்றுண்டி தயார் செய்துகொடுக்கவேண்டும் என்கிற கவலையில்லை தாய்மார்களுக்கு. ஏனென்றால், நம்மு டைய திராவிட மாடல் அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத் தொடங்கி சிறப்புற செய்துவருகிறார்.

சொன்னதையும் செய்து, சொல்லாததையும் செய்கின்ற ஆட்சிதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி!

இந்தத் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சொன்னாரா, என்றால், கிடையாது; சொன்னதையும் செய்து, சொல்லாததையும் செய்கின்ற ஆட்சிதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள், தமிழ்நாட்டைப் பார்த்து பின்பற்றுகின்ற நிலைதான். மற்றவர்களுக்கு வழிகாட்டக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. தென்னாட்டில் மட்டுமல்ல, வடநாட்டிலும் இதனைப் பின்பற்றுகிறார்கள்.
பா.ஜ.க.வினரைப் பார்த்து நாம், ‘‘ஏங்க, குஜராத் மாடல், குஜராத் மாடல் என்று சொல்கிறீர்களே, இங்கே ‘திராவிட மாடல்’ அரசு கொடுக்கின்ற காலைச் சிற்றுண் டித் திட்டத்தை, குஜராத் மாடல் அரசு கொடுக்கிறதா?” என்று கேட்கவேண்டும்.

வெளிநாடுகளும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியைப் பின்பற்றுகின்றன!

அதுமட்டுமல்ல, நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு செய்த இந்தத் திட்டத்தை இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்கள் மட்டுமல்ல, அமெரிக்காவிற்குப் பக்கத்தில் உள்ள பெரிய நாடு கனடா. அந்தக் கனடா நாட்டில், தமிழ்நாட்டில் கொடுப்பது போன்று, பிள்ளைகளுக்குக் காலையில் நாமும் உணவு கொடுக்கவேண்டும் என்று நம்மைப் பார்த்து அவர்கள் செய்கிறார்கள். நாம் வளர்ந்த வர்களாக இருக்கின்றோம், வழிகாட்டக் கூடியவர்களாக இருக்கின்றோம். இது கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்த செய்தி!
அமெரிக்காவில் பல மாநிலங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான நான்கு மாநிலங்களில், தமிழ்நாட்டில் இருப்பதுபோன்று, பள்ளி மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி அளிப்பதற்கு முடிவெடுத்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறாரா, பிரதமர் மோடி?

தமிழ்நாட்டில், மழை, புயல், வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை சந்திப்பதற்கு வரவில்லை. மணிப்பூரில் பழங்குடியின பெண்களை, நம்முடைய சகோதரிகளை – ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள், மற்றவர்கள், உயர்ஜாதியினர் எல்லோரும் சேர்ந்து, அந்தப் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி, தெருத் தெருவாக ஓட வைத்தனர் என்றால், இதைவிடக் கொடுமை வேறு இருக்க முடியுமா?
இதுவரையில் அங்கே சென்று, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாரா, பிரதமர் மோடி.
ஆனால், பிரதமர் மோடி சொல்கிறார், ‘‘140 கோடி மக்களும் என் குடும்பம்” என்கிறார். மணிப்பூர் மக்கள் அந்த 140 கோடி மக்களில் வரவில்லையா? இந்தியாவில், மணிப்பூர் இல்லையா?

400 நாள்கள் நீங்கள் வந்தாலும், தமிழ்நாட்டில் உங்கள் பாச்சா பலிக்காது!

தமிழ்நாட்டிற்கு அடிக்கடி படையெடுத்து வருகிறார். நாளைக்கு வருகிறார், தொடர்ந்து இரண்டு நாள்கள் இருக்கிறார். நீங்கள் இரண்டு நாள்கள் அல்ல, 400 நாள் கள் நீங்கள் வந்தாலும், தமிழ்நாட்டில் உங்கள் பாச்சா பலிக்காது! இது பெரியார் மண் – சமூகநீதி மண்ணாகும்.
இதை நான் சொல்லவில்லை, மிக அழகாக நாடாளு மன்றத்திலேயே பதிவு செய்திருக்கிறார் ராகுல் காந்தி அவர்கள்.
இதுவரை 10 ஆண்டுகாலம் பிரதமராக மோடி இருந்திருக்கிறாரே, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேட்ட கேள்விக்கு, இதுவரை அங்கே பதில் சொல்லி யிருக்கிறாரா, என்பதை தயவு செய்து எண்ணிப்பாருங்கள் தோழர்களே!

தமிழ்நாட்டில், 146 ஆண்டுகால வரலாற்றில் பெய் யாத மழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்களும் பாதிக்கப் பட்டனர்.

இடுப்பளவு தண்ணீரில் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியினரும், இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்களும், கவிஞர் கனிமொழி அவர்களும், தமிழ்நாட்டு அமைச்சர்களும் நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லி, தேவையான உதவிகளைச் செய்தனர்.

ஒரு பைசா கூட நிவாரண நிதியாக ஒன்றிய அரசு தரவில்லை!

தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதியாக , ஒன்றிய அரசிடம் 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
பிரதமர் மோடி என்ன சொன்னார், ராணுவத் துறை அமைச்சரை தமிழ்நாட்டிற்கு அனுப்பினார்; நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் வந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்தார். பிறகு, ஒன்றிய அரசின் நிவாரணக் குழுவினர் வந்து பார்த்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து விட்டு, அறிக்கையை ஒன்றிய அரசிடம் அளித்தனர்.
பிறகு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, நம்மு டைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமர் மோடியை, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சந்தித்து நிவாரண நிதியைக் கேட்டனர்.

தேசியப் பேரிடர் நிதி என்கிற ஒன்று இருக்கிறது. ஒரு பைசா கூட நிவாரண நிதியாகக் கொடுக்கவில்லை ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி!
தேசிய பேரிடரே, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிதான்!

கடும் மழை, புயல் வெள்ளப் பாதிப்பிற்கு‘‘தேசியப் பேரிடர்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள் – ஆனால், தேசிய பேரிடரே, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிதான். அந்தப் பேரிடரை அகற்றுவதற்காகத்தான் வருகின்ற நாடாளு மன்றத் தேர்தல். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் அமையப் போவது இந்தியா கூட்டணி ஆட்சிதான். அதிலொன்றும் சந்தேகமேயில்லை. அதற்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்டீர்களேயானால், மோடியின் நிலைகுலைந்த பேச்சு – ஆவேசமான பேச்சு – வெறுப்பு கலந்த பேச்சு!
எதிர்க்கட்சி முதலமைச்சர்களையெல்லாம் சிறைச் சாலைக்கு அனுப்புகிறேன், ஏதாவது குற்றம்சாட்டி – ஏனென்றால், எங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்கிறார்.
‘‘ஏன் என்றால் சிறைவாசம்; இம் என்றால் வனவாசம்” என்று சொல்வதுபோன்று அவர்கள் எதேச்சதிகார ஆட்சியை நடத்துகின்றனர்.
‘மிசா’ காலத்தில், தூக்கிப் பிடித்து, அவருக்குத் தைரியம் சொன்ன ஒரே கரம் இந்தக் கரம்தான்
நெருக்கடி காலத்தில், நாங்கள் எல்லாம் மிசா கைதிகளாக சிறைச்சாலையில் இருந்தோம். மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறைக் கைதியாக அடிபட்ட நேரத்தில், தூக்கிப் பிடித்து, அவருக்குத் தைரியம் சொன்ன ஒரே கரம் இந்தக் கரம்தான்.

எங்கள் வாழ்நாளே முடிந்து போய்விட்டது; இதற்கு மேல் நீங்கள் வெளியே போக முடியாது என்று மிரட்டப்பட்டோம் சிறைத்துறை அதிகாரிகள் மூலமாக.
காவல்துறையினரிடமிருந்து

மாறு வேடம் அணிந்து தப்பித்துக் கொண்டிருந்தார் மோடி!

மிசா கைதிகளாக ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், வாஜ்பேயி, அத்வானி ஆகியோர் சிறைச்சாலையில் இருந்தனர். அந்த நேரத்தில் இன்றைய பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள், மாறு வேடம் அணிந்து தப்பித்துக் கொண்டிருந்தார்.
நெருக்கடி காலத்திலேயே என்னென்ன வேடம் போட்டார்? என்பதெல்லாம் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
ஆனால், இன்றைய ஒன்றிய ஆட்சி என்பது, அறிவிக்கப்படாத நெருக்கடி காலகட்டமாக இருக்கிறது.
சற்று நேரத்திற்கு முன்பு நான் சொன்னேன், தமிழ்நாட் டின் ‘திராவிட மாடல்’ அரசை அமெரிக்கா பாராட்டுகிறது, கனடா பாராட்டுகிறது என்று.

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை உலக நாடுகள் கண்டிக்கின்றன!

ஆனால், அதே அமெரிக்கா, அய்க்கிய நாடுகள் சபை, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்தியா வில் நடைபெறுகின்ற ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில், மனித உரிமைகள் பறிக்கப்படுகிறது; பேச்சுரிமை, எழுத் துரிமைக்குத் தடை விதிக்கப்படுகிறது என்று கண்டித்துள்ளன.
காரணம் என்னவென்றால், ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய பா.ஜ.க. எதை வேண்டுமானாலும் செய் வோம், யாரை வேண்டுமானாலும் கைது செய்வோம் என்கிற பாசிச நடவடிக்கையில் ஈடுபடுவதால்தான்.

புதிதாக வேலை வாய்ப்புகளைக் கொடுக்கவில்லை – காலியாக இருக்கின்ற பணியிடங்களையும் நிரப்பவில்லை!

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குமுன் மோடி கொடுத்த வாக்குறுதி என்ன?
ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னார்.
கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்கவேண்டும் அல்லவா! கொடுத்தாரா, என்றால் இல்லை.
அதுமட்டுல்ல, ஒன்றிய அரசில் காலியாக இருக்கின்ற பணியிடங்களையாவது நிரப்பினார்களா, என்றால், அதுவும் இல்லை.
கரோனா தொற்று காலகட்டத்தில், சிறுகுறு தொழி லாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த னர். இன்னும் அவர்கள் பழைய நிலைக்கு வரவில்லை. ‘‘கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை.”
பெண்களைப் பார்த்து ‘‘நாரிசக்தி” என்று சொல்வார் பிரதமர் மோடி.
எல்லோரும் வங்கிக் கணக்கைத் தொடங்குங்கள். அப்படி தொடங்கிவிட்டீர்கள் என்றால், ஒவ்வொருவரின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றார்.
கிராமத்தில் உள்ள தாய்மார்கள் சிறுக சிறுக சேமித்து வைத்தப் பணத்தை சுருக்குப் பையிலும், அரிசிப் பானை யிலும் வைத்திருப்பார்கள். அந்தப் பணத்தையெல்லாம் கொண்டு சென்று வங்கியில் கணக்குத் தொடங்கினார்கள்.
அப்படி வங்கிக் கணக்குத் தொடங்கியவர்களின் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடப்பட்டதா? என்றால், இல்லை.

மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதற்காக அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை
ரூ.21 ஆயிரம் கோடி!

இரண்டு நாள்களுக்கு முன்பு நம்முடைய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார், கிராமப் பெண்கள் உள்பட தொடங்கிய வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதற்காக போடப்பட்ட தொகை மட்டும் 21 ஆயிரம் கோடி ரூபாய்.
நம்மூர் கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு ‘‘நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? மேலே விழுந்து பிறண்டாமல் இருந்தால் போதும்” என்று. இப்பொழுது தாய்மார்களின் நிலை என்ன? 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவில்லை.
மாநில முதலமைச்சர் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார் – பிரதமர் வாக்குறுதிகளை
காற்றில் பறக்கவிடுகிறார்!
அதுகுறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா விடம் கேள்வி கேட்கப்பட்டது – ‘‘ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுகிறேன் என்று சொன்னீர்களே, போட்டீர்களா?” என்று.
அது ‘‘ஜூம்லா” (சும்மா) என்று பதில் சொன்னார்.
நன்றாக எண்ணிப் பாருங்கள் தோழர்களே, ஓர் ஒன்றிய அரசு, நாட்டின் பிரதமர், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவேண்டாமா?
ஒரு முதலமைச்சர் சொன்ன வாக்குறுதியையும் நிறைவேற்றுகிறார்; சொல்லாத வாக்குறுதிகளையும் செய்கிறார்.
ஜி.எஸ்.டி. வரியாக தமிழ்நாடு அரசு கொடுக்கின்ற ஒரு ரூபாயில், ஒன்றிய அரசு நமக்குக் கொடுப்பது வெறும் 29 பைசாதான்.

கடுமையான நிதி நெருக்கடியிலும் ‘மகளிர் உரிமைத் தொகை!’

இவ்வளவு நிதி நெருக்கடியிலும் தாய்மார்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையாகக் கொடுக்கிறது ‘திராவிட மாடல்’ அரசு.
தாய் வீட்டு சீதனமாக ஆண்டிற்கு ஒருமுறையோ, இரண்டு முறைதான் கிடைக்கும். ஆனால், மாதம் தவறாமல் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இதுபோன்ற நிலை வேறு எந்த மாநிலத்திலாவது இருக்கிறதா?
ஆனால், இந்தத் திட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக ‘‘அது என்ன பிச்சைக் காசு” என்கிறார்கள்.
எங்கள் தமிழ்நாட்டுப் பெண்கள் என்ன பிச்சைக் காரிகளா? அப்படி சொல்லி அவமானப்படுத்துகிறார்கள்.
நமக்கெல்லாம் சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்தது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தயாரிக்கப் பட்டவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். நம்மு டைய இயக்கம் சுயமரியாதை இயக்கம். தந்தை பெரியார் அவர்கள், நமக்கெல்லாம் சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்து, அவர் தொடங்கிய இயக்கத்திற்குப் பெயர் சுயமரியாதை இயக்கம்.
அந்த சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆயிரம் ரூபாய் வாங்குகின்ற பெண் களை அவமானப்படுத்துவது போன்று யாரும் பேசி விடக் கூடாது என்பதற்காக – அந்தத் திட்டத்திற்கு என்ன பெயர் வைத்தார் தெரியுமா? ‘‘மகளிர் உரிமைத் தொகை” என்று. அதனால், பெண்களின் வறுமை மட்டும் போக்கப்படவில்லை; அவர்களின் சுயமரியாதையும் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.
பெண்கள் பெறுவது சலுகையோ, பிச்சையோ அல்ல; அவர்களுடைய உரிமை!

அரசாங்கத்திடம் பெண்கள் பெறுவது சலுகையோ, பிச்சையோ அல்ல. அவர்களுடைய உரிமை- அவர்களு டைய சுயமரியாதை காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்’ ஆட்சி.
ஆனால், ஊழலை ஒழிக்கிறோம், ஊழலை ஒழிக்கி றோம் என்று சொல்லி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வின் ஆட்சியைப்பற்றி சி.ஏ.ஜி. அறிக்கை என்ன சொல்கிறது?
ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு சாலை போடுவதற்கு 18 கோடி ரூபாய் என்று ஒப்பந்தம் போடப்பட்டு, அதற்குக் கணக்குக் காட்டப்பட்டதோ அதே ஒரு கிலோ மீட்டர் சாலை போடுவதற்கு 250 கோடி ரூபாய் என்று.

ஒன்றிய அரசின் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் – சி.ஏ.ஜி. அறிக்கை!

இதில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந் திருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது சி.ஏ.ஜி. அறிக்கை.
அதுமட்டுமல்ல, நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் என்று சொல்லப்படும் நிலையில், அவர்களுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அதனை எதிர்த்து ஓராண்டிற்கு மேல் கொளுத்தும் வெயில், மிரட்டும் மழை, கொட்டும் பனியில் பல மாநில விவசாயிகள் டில்லியில் திரண்டு போராட்டம் நடத்தி னார்கள். அவர்களை அழைத்து என்றைக்காவது மோடி பேச்சுவார்த்தை நடத்தியது உண்டா? பிறகு, விவசாயி களின் போராட்டத்தினால் மிரண்டு போன ஒன்றிய பா.ஜ.க. அரசு, அந்த சட்டங்களைத் திரும்பப் பெற்றது.
அப்பொழுது ஒரு சில வாக்குறுதிகளை விவசாயி களுக்குக் கொடுத்தது.

நியாயம் கேட்கும் விவசாயிகள்மீது துப்பாக்கிச் சூடு!

விவசாயப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்போம்; விவசாயிகளின்மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவோம் என்று சொன் னார்கள்.
அந்த வாக்குறுதிகளை நம்பி, விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர்.
வாக்குறுதி கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆனது. கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று என்று கேட்பதற்காக, ‘‘டில்லி சலோ” எனும் போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர்.
பல மாநிலங்களிலிருந்து விவசாயிகள் டில்லிக்குப் படையெடுக்க ஆரம்பித்தனர். அவர்களைத் தடுப்பதற் காக சாலையில் முள்வேலி, தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை டில்லியில் நுழைய விடாமல் செய்தனர்.

இதுதான் நீங்கள் விசாயிகளைக் காப்பாற்றுகின்ற லட்சணமா?

இப்பொழுது தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பார்த்தால், மோடி அவர்களின் கேரண்டீகளைப் பார்க்க லாம். அதைப் பார்க்கும்பொழுது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
பிரதமர் மோடி முன்பு கொடுத்தது குஜராத் டீ; இப்பொழுது கொடுப்பது கேரண்‘டீ’!
ஏற்கெனவே அவர் கொடுத்தது குஜராத் டீ; இப்பொழுது அவர் புதிதாகக் கொடுப்பது ‘கேரண்டீ’. இதைத் தவிர நீங்கள் வேறு என்ன செய்திருக்கிறீர்கள்?
தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, ‘‘தி.மு.க.வை அழிப்பேன், ஒழிப்பேன்” என்று சொல்கிறார்.

இதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றில், இதுபோன்று சொன்னவர்கள் பலரைப் பார்த்திருக்கிறது. அப்படி சொன்னவர்கள்தான் காணாமல் போயிருக்கிறார்கள்.
நிச்சயமாக அப்படி சொன்னவர்கள் காணாமல் போவார்கள் – எப்பொழுது? ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு. அதற்காக இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
வீரமணி வாதாடவில்லை என்றால், இட ஒதுக்கீடு 69 சதவிகிதமாக கிடைத்திருக்குமா?
ஜாதியை நம்பித்தான் பா.ஜ.க. கூட்டணி இருக் கிறது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை – இதை முதலமைச்சர் ஸ்டாலின் செய்தாரா? வீரமணி எங்களுக்காக வாதாடினாரா? என்கிறார் களே, இந்த வீரமணி வாதாடவில்லை என்றால், 9 ஆவது அட்டவணை பாதுகாப்போடு இட ஒதுக்கீடு 69 சதவிகிதமாக கிடைத்திருக்குமா? அதை வரலாறு சொல்லுமே!
எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, நாங்கள் போராடியதால்,ஓபிசிக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்தது. அதற்குப் பிறகு முதலமைச்சராக கலைஞர் வந்தார். அவர் வந்தவு டன், 30% – 20% என்று இட ஒதுக்கீடு சதவிகிதத் தைப் பிரித்துக் கொடுத்தார். அப்பொழுதுதானே நாற்காலியைத் தூக்கிக் கொண்டு போனார் மருத்துவர் அய்யா, மறந்துவிட்டதா?

கோனேரி குப்பத்தில் என்ன பேசினீர்கள்?

‘‘நீங்கள் மட்டும் இதை செய்யவில்லையானால், எங்கள் சமூகமே இறந்து போயிருக்கும்” என்று கோனேரிகுப்பத்தில் அவர் பேசியதை, நம்முடைய முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வேண்டும் என்று சொன்னார். மிகவும் மகிழ்ச்சிதான். அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூகநீதி.
நீங்கள் கூட்டணி சேர்ந்திருக்கிறீர்களே பா.ஜ.க. கூட்டணியில், அவர்களுடைய கொள்கை என்ன? மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார்களே, அதைப்பற்றி ஒரு வார்த்தை கண்டித்திருக்கிறீர்களா, நீங்கள் என்று பிரமதரிடம் கேள்வி கேட்கட்டும்.
தமிழ்நாட்டிற்கு மோடி வரும்பொழுது, மேடையில் மோடியைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறீர்களே, நீங்கள் கட்டிப் பிடிக்காத பிரதமரே கிடையாது. அதனால் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.

‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்னாயிற்று?’’ என்று பிரதமர் மோடியிடம் கேளுங்கள்!

ஆனால், கொள்கை ரீதியாக ஒரே ஒரு கேள்வி கேட்கிறோம் – பிரதமரை, இவ்வளவு நெருக்கமாக கட்டிப் பிடிக்கிறீர்களே, அப்படியே சத்தமாகக் கூட கேட்கவேண்டாம்; காதோடு காதாக ஒரு கேள்வி கேளுங்கள், ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்னா யிற்று?” என்று. அதைச் செய்வோம் என்று சொல்லச் சொல்லுங்கள்!
தமிழ்நாட்டிற்கு வருகின்ற பிரதமர் மோடி பதில் சொல் லட்டும். அப்படி சொன்னால், எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
10.5 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை அ.தி.மு.க. சரியாக நிறைவேற்றவில்லை. அப்பொழுதே நாங்கள் என்ன சொன்னோம்? செய்வதைத் திருந்த செய்ய வேண்டும்.

30 ஆண்டுகாலமாக ஒருவராலும் கைவைக்க முடியவில்லையே!

69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை எழுதி னோமே, 30 ஆண்டுகாலமாக ஒருவராலும் கைவைக்க முடியவில்லையே!
அதனால்தான், சட்டத்தில் ஓட்டை இல்லாமல் செய்யவேண்டும். அந்த ஓட்டை இருப்பதினால் தான், 10.5 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை சரி செய்யுங்கள் என்று உச்சநீதிமன்றம் சொன்னது.

நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர் களும் சட்ட ரீதியாக திருத்தம் செய்து கொண்டு வரவேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சியின்

தேர்தல் அறிக்கை கூறுவது என்ன?

நீட் நுழைவுத் தேர்வுபற்றி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது தெரியுமா?
நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்குக் கேட்கின்ற மாநிலங்களுக்கு விலக்குக் கொடுப்போம் என்கிறது.
இதுபோன்று சொல்வதற்கு உங்களது கூட்டணியில் பிரதமரோ அல்லது நீங்களோ தயாரா?
ஆகவே, ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் அமையப் போவது இந்தியா கூட்டணி ஆட்சிதான். அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

பா.ஜ.க.விற்கும் – நோட்டாவிற்கும்தான் போட்டி!

அவர்களுக்குள் என்ன போட்டி தெரியுமா? யார் இரண்டாம் இடத்திற்கு வருவது என்பதில்தான்.
அதிலும் பா.ஜ.க.வைப் பொறுத்தவரையில் அவர் களுக்கு என்ன கவலை என்றால், ‘‘நோட்டாவை தாண்டு வது யார்?” என்பதுதான் மிகவும் முக்கியம்.
உங்கள் வீட்டில் விளக்கு எரியும் – நாட்டில் விளக்கு எரியும் – இருட்டு விலகும் – வெளிச்சம் வரும்!
ஆகவே, அறிவார்ந்த மக்களாகிய நீங்கள், வருகின்ற 19 ஆம் தேதி வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள் – உங்கள் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் ஆ.மணி – தேர்தல் வாக்கு இயந்திரத்தில் மூன்றாம் இடத்தில் பெயர் இருக்கும். உதயசூரியன் சின்னம் இருக்கும். அதற்கு நேரே இருக்கின்ற பொத்தானை அழுத்துங்கள் – உடனே கையை எடுத்துவிடாதீர்கள் – பச்சை விளக்கு எரிகிறதா? என்று பாருங்கள்.
பச்சை விளக்கு எரிந்தால், அங்கே மட்டும் விளக்கு எரியாது – உங்கள் வீட்டில் விளக்கு எரியும் – நாட்டில் விளக்கு எரியும் – இருட்டு விலகும் – வெளிச்சம் வரும்.
வெற்றி நமதே!

ஒன்றியத்தில் அமையப் போவது இந்தியா கூட்டணி ஆட்சிதான்!
நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தேர்தல் பரப்புரையில் சிறப்புரையாற்றினார்.

ஜாதி, மதப் பிளவை ஏற்படுத்தும் பி.ஜே.பி. அவர்களது குஜராத்திலேயே ராஜ்புத் – பட்டிதார் மோதல் வெடித்துவிட்டதே!

குஜராத் மாநிலத்திலும் ஓர் அண்ணாமலை!

‘‘குஜராத் மாடல், குஜராத் மாடல்” என்று சொன் னார்களே, அப்படிப்பட்ட குஜராத் மாநிலத்தில், அங்கே ஓர் அண்ணாமலை இருக்கிறார் போலும் – அவர் என்ன சொன்னார் தெரியுமா?
குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதி பாஜக வேட் பாளர் புருஷோத்தம் ரூபாலா ‘‘ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக’’ பேசியிருந்தார்.

அவருடைய சர்ச்சை பேச்சால், சத்ரிய சமூக மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து, அந்த வேட் பாளரை மாற்றக் கோரினர். கம்பாலியா என்ற இடத்தில் மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க வந்த குஜராத் மாநில பாஜக தலைவரை முற்றுகையிட்டனர். பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் பங்கேற்ற கூட்டத்தில் நாற்காலிகளை அடித்து நொறுக்கி சத்ரிய சமூகத்தினர் ஆவேசம் அடைந்தனர்.

இருதலைக் கொள்ளி எறும்புபோல தவிக்கும் பிரதமர் மோடி!

ரூபாலாவை மன்னிக்கும்படி குஜராத் முதலமைச்சர் விடுத்த கோரிக்கையையும் சத்ரிய சமூக மக்கள் நிராகரித்தனர். ராஜபுத்திர சமூகத்தை அவமதித்த ரூபாலாவை ராஜ்கோட் தொகுதி வேட்பாளராக நிறுத்தக் கூடாது என எதிர்ப்பு வலுக்கிறது. ரூபாலாவை மாற்றாவிடில் நாடு முழுவதும் பாஜகவை புறக்கணிப் போம் என்று சத்ரிய சமூகத்தினர் ஏற்கெனவே எச் சரிக்கை விடுத்துள்ளனர். சத்ரிய சமூகத்தினரை சமாதானப்படுத்தும் வகையில் பாஜக தலைவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந் தது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் குஜராத் முழுவதும் ரூபாலாவை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பட்டிதார் சமூகத்தை சேர்ந்த புருஷோத்தம் ரூபாலாவை மாற்றினால் அந்த சமூகத்தின் வாக்குகள் பறிபோகும் என பாஜக அச்சம் அடைந்துள்ளது. ரூபாலாவுக்கு எதிராக குஜராத்தில் போராட்டம் வெடிப்பதால் பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்தது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தி லேயே பாஜகவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருவதால் அக்கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். இதனால், இருதலைக் கொள்ளி எறும்புபோல தவிக்கின்றார் பிரதமர் மோடி.

 

No comments:

Post a Comment