பிரதமர் மோடிக்கு இரண்டு பேர்தான் சிம்ம சொப்பனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 7, 2024

பிரதமர் மோடிக்கு இரண்டு பேர்தான் சிம்ம சொப்பனம்!

featured image

கோவை, ஏப்.7 ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றாரே மோடி, வாக்குறுதியை நிறைவேற்றினாரா? ஒன்றிய அரசு துறைகளில் 30 லட்சம் இடங்கள் காலியாக இருக்கின்றன. புதிதாக வாக்களிக்கப் போகும் இளைஞர் களே, உங்கள் எதிர்காலத்தை எண்ணிப் பார்த்து இந்தியா கூட்டணிக்கே வாக்களிப்பீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார்

நேற்று (6.4.2024) மாலை 7 மணியளவில் கோயம் புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு வரு கின்ற 19 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கக் கூடிய பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக – இந்தியா கூட்டணியினுடைய வேட்பாளராக நம்முடைய ஒப்பற்ற தலைவர் – இந்தியாவில் மட்டுமல்ல, பன்னாட்டு அளவில் பெரிய நாடுகள் எல்லாம் பாராட்டி பேசக்கூடிய அளவிற்கு, ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய ஒப்பற்ற திராவிட நாயகன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு, நம்முடைய அற்புதமான செயல்வீரர், கொள்கை வீரர் என்று இந்தத் தொகுதிக்குத் தேர்தல் பொறுப்பாளர்களாக இருக்கக் கூடிய அமைச்சர்கள் மாண்புமிகு அய்யா முத்துசாமி, டி.ஆர்.பி.இராஜா ஆகியோர் சொன்னார்கள் அல்லவா – அத்தனை பேராலும் தேர்வு செய்யப்பட்டு, அருமையான வெற்றி வேட்பாளர் அருமைச் சகோதரர் கணபதி ப.ராஜ்குமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஏன் வாக்களிக்கவேண்டும்? ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தை உள்ளடக்கிய இந்தியா கூட் டணி வெற்றி பெறவேண்டும்? யாருக்காக என்று சொன் னால், அதற்குரிய காரண காரியங்களை விளக்குவதற் காகத்தான் இந்தத் தேர்தல் பரப்புரைக்
கூட்டமாகும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையும் –
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும்
என்னே சிறப்பு!

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையும், நேற்று வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் பார்த்தீர்களேயானால், இணைந்த ஒரு தேர்தல் அறிக்கை என்று சொன்னால், இந்தியா கூட்டணி எப்படி கொள்கைக் கூட்டணி என்பதற்கு ஓர் அடையாளம்.
ஆகவேதான், காங்கிரஸ் கட்சியும், திராவிட இயக்க மும் இரண்டு தண்டவாளங்கள் போன்று சேர்ந்தே செல்கின்றன.
மேடையில் சகோதரிகள் அமர்ந்திருக்கிறார்கள். எதிரே பார்த்தாலும் ஏராளமான மகளிர்கள் அமர்ந் திருக்கின்றார்கள். மேடையில் பேசும்பொழுது என்ன சொல்வோம் என்றால், ‘‘பெரியோர்களே, தாய்மார்களே” என்று வழக்கமாக சொல்வோம். அங்கே தாய்மார்களே இருக்கமாட்டார்கள். இருந்தாலும், அதை நாங்கள் சொல்லி சொல்லிப் பழக்கப்பட்டதால், அதனைச் சொல்வோம். ஆனால், இன்றைக்கு அப்படி அல்ல. மகிழ்ச்சியோடு நிறைய தாய்மார்கள் அமர்ந்திருக் கின்றீர்கள். இதுதான் திராவிட இயக்கத்தினுடைய சாதனையாகும்.
மணிப்பூரில் பெண்களுக்கு இழைத்த அவமானம் – பெண்களே மறவாதீர்!
மணிப்பூரில் பார்த்தீர்களேயானால், தாய்மார்கள் தவித்துப் போயிருக்கிறார்கள். இதுதான், திராவிடத்திற் கும் – காவிக்கும் இருக்கின்ற வேறுபாடாகும்.
இன்று உற்சாகத்தோடு உங்களையெல்லாம் நான் சந்திக்கின்றேன். தாய்மார்களைப் பார்த்தீர்களேயானால், நிச்சயமாக 50 சதவிகிதம் இருக்கிறார்கள்.
உங்களைப் பார்த்து உண்மையிலேயே வாக்குக் கேட்க வந்திருக்கின்றோம். உங்களுடைய தொண்டர்கள் நாங்கள். எங்களுக்காக அல்ல! ஏன் பாசிச ஆட்சி – ஒன்றியத்தில் 10 ஆண்டுகாலமாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற, உறுதிமொழிகளை நிறைவேற்றாத ஒரு மோசடி ஆட்சி இருக்கிறதே – அதுதான் காவி ஆட்சி – அதுதான் பிரதமர் மோடி தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி.

தனிப்பட்ட முறையில் நமக்கும், மோடிக்கும் என்ன வாய்க்கால் தகராறா? என்றால், இல்லை. அல்லது தனிப்பட்ட முறையில் அவர்மீது வெறுப்பா? என்றால், கிடையவே கிடையாது.
அதிகாரம் இருப்பது மக்களிடம்தான்!

நம்முடைய நாடு ஜனநாயக நாடு. புரட்சியாளர் அம்பேத்கர் அரும்பாடுபட்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தினை வகுத்துக் கொடுத்தார்.
அப்படிப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில், ஆட்சி அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்றால், அமைச்ச ரிடமோ, பிரதமரிடமோ, நாடாளுமன்ற உறுப்பினர் களிடமோ இல்லை. மக்களிடம்தான் இருக்கிறது.
வாக்குரிமையைப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான்
அந்த மக்கள் வாழவேண்டும்; அந்த மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகத் தான் நண்பர்களே, மிக முக்கியமாக இருக்கக்கூடிய செய்தி என்னவென்றால், தேர்தல் ஜனநாயகம். அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஏன் தேர்தல் வருகிறது? மக்கள் அவர்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான்.
அதுமட்டுமல்ல, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள், இந்தியப் பிரதமராக இருந்த காலகட்டத்தில், வாக்களிக்கும் வயது 21 ஆக இருந்ததை, 18 ஆக குறைத்தார். ஏனென்றால், இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்; மாணவர்கள் பங்கேற்கவேண்டும். அதே போன்று, மகளிர் பங்கேற்கவேண்டும் என்பதற்காக அதனை செய்தார்.
நம்முடைய பிரதமர் மோடி நல்ல வித்தைக்காரர்; அவர் போன்று வித்தை செய்வதற்கு ஆளே கிடையாது.
எங்கேயாவது வயதான பெண்மணிகளைப் பார்த் தால், அவர்களின் காலைத் தொட்டுக் கும்பிடுவார். அதைப் பார்ப்பவர்கள் ‘‘ஆகா, இப்படி ஒரு பிரதமரா?” என்று ஆச்சரியப்படுவார்கள்.
ஆனால், அப்படிப்பட்ட பிரதமர், சிறிது நாள்களுக்கு முன்பு எப்படி நடந்துகொண்டார் என்பதை படத்துடன் விளக்கியிருக்கிறார்கள்.
பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ பட்டம் கொடுக்கப்பட்டது. அந்தப் பட்டத்தை யார் யாருக்கெல்லாம் கொடுக்கவேண்டும் என்று கணக்குப் போட்டுக் கொடுத்தார் பிரதமர் மோடி.

அந்தப் பட்டத்தை வாங்குவதற்கு அத்வானி வர வில்லை என்பதால், அவருடைய வீட்டிற்குக் குடியரசுத் தலைவரும், பிரதமரும் சென்றனர்.
அங்கே, அத்வானி அவர்களுக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்கப்பட்டது. அத்வானி அமர்ந்து கொண்டிருக்கின்றார்; அவருக்குப் பக்கத்தில் பிரதமர் மோடி அமர்ந்திருக்கின்றார். ஆனால், குடியரசுத் தலை வராக இருக்கின்ற அம்மையார் நின்று கொண்டிருக்கின்றார்.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் மணியை எங்கள் ஆட்சியில் குடியரசுத் தலைவராக ஆக்கிவிட்டோம் என்று வாய்ப் பெருமை பேசினார்கள்.

இந்தப் படத்தைப் பாருங்கள், குடியரசுத் தலைவரான அம்மையார் நின்று கொண்டிருக்கின்றார்.
இதுதான் பா.ஜ.க.வினுடைய பண்பாடு. அவர்கள் எந்த அளவிற்குப் பெண்களை மதிக்கின்றார்கள் என்பதற்கு இதுவே ஒரு தக்க சான்றாகும்.
ஆனால், சொன்னதை செய்வது; செய்வதையே சொல்வது என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகத் தினுடைய கொள்கையாகும்.

எதேச்சதிகார பி.ஜே.பி. வெற்றி பெற்றால்
நாடே சிறைச்சாலையாகிவிடும்!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு 50 சதவிகிதம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், திராவிட மாடல் ஆட்சியினுடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதனை வாயால் சொல்லவில்லை; அதனை நடைமுறைப்படுத் தினார். மேயர்களாக பெண்கள் இருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலைப் பொருத்தவரையில், மிக முக்கிய மான தேர்தலாகும். வெற்றி பெற போவது இந்த வேட் பாளர், அந்த வேட்பாளர் என்பது அடையாளம்தான். ஆனால், அதனுடைய தத்துவம் என்னவென்றால், வெற்றி பெறப் போவது ஜனநாயகமா? எதேச்சதிகாரமா?
எதேச்சதிகாரம் வெற்றி பெற்றால், நாடே சிறைச் சாலையாகிவிடும். மீண்டும் மனுதர்மம்தான் கோலோச் சுமே தவிர, சமதர்மம் வராது. மனுதர்மம்தான் இருக்கும், மனித தர்மம் இருக்காது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அவற்றைத் தெளிவாக உங்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகத்தான் நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம்.
அய்ந்தாண்டு காலத்திற்கு ஒருமுறை ஏன் தேர்தல் நடத்துகிறார்கள்? ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள் தங்களுடைய திட்டங்களைச் சொல்லி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதையெல்லாம் செய்வோம் என்று சொல்வார்கள்.
அடுத்த தேர்தல் வரும்பொழுது அவர்கள் போட்டி யிட்டால், நாங்கள் அறிவித்த திட்டங்களை செய்திருக் கின்றோம் அல்லவா! எங்கள் சாதனைகளைப் பார்த்து நீங்கள் வாக்களியுங்கள் என்று கேட்பதற்காகத்தான் அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படு கிறது.
ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி தவறு செய்தால், மக்கள் நிச்சயமாக அவர்களுக்குத் தேர்தலில் தோல்வியை பரிசாகத் தருவார்கள்.

புதிதாக வாக்களிக்கப் போகும் 11 லட்சம் இளைஞர்களின் சிந்தனைக்கு…!

இன்றைய காலகட்டத்தில் 11 லட்சம் இளைஞர்கள் புதிதாக வாக்களிக்கவிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தெளிவாக சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.
ஒன்றியத்தில் இருந்த காங்கிரஸ் ஆட்சியை 2014 இல் மாற்றம் வரவேண்டும் என்று சொல்லி, பா.ஜ.க.விடம் கொடுத்தார்கள். ஆனால், மக்கள் எதிபார்த்த மாற்றம் வரவில்லை; ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஏமாற்றத் தெரிந் தவர்கள்தான் ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தார்கள்.
ஆட்சிக்கு வந்தால், நாங்கள் அதை செய்வோம், இதை செய்வோம் என்றார்கள். வளர்ச்சி, வளர்ச்சி குஜராத் மாடல் வளர்ச்சி என்று சொன்னார்கள். சப்கா சாத், சப்கா விகாஸ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். ‘அச்சேதீன்‘ என்று சொல்வார் மோடி. அந்த வளர்ச்சி வந்ததா? என்றால், இல்லை என்பதுதான் பதில்.
தேர்தல் பரப்புரைக்காக நான்கு புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டு வந்திருக்கின்றோம்.
அவர்கள் பதவிக்கு வரும்பொழுது, நல்ல காலம் பிறக்குது, வளர்ச்சியை நோக்கிப் போகிறோம், குஜராத் மாடல், டபுள் இன்ஜின் என்றெல்லாம் பேசினார்கள்.
நாட்டின் முதுகெலும்பாகத் திகழுகின்ற விவசாயி களுடைய வருமானத்தை இரட்டிப்பு மடங்காக உயர்த்து வோம் என்று சொன்னார்கள்.
ஒன்றிய அரசு அலுவலகங்களில்
30 லட்சம் இடங்கள் காலி!
அடுத்து இளைஞர்களைப் பார்த்துச் சொன்னார்கள், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்கள். ஓராண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை என்றால், கடந்த 10 ஆண்டுகாலத்தில் 20 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்கவேண்டும் அல்லவா, கிடைத்ததா?
அதுமட்டுமல்ல, ஒன்றிய அரசு அலுவலகங்களில் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களானா லும், இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களானாலும் என்ன சொல்கிறார்கள் என்றால், இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அந்த 30 லட்சம் பணியிடங்களும் உடனே நிரப்பப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்கள்.
இன்னொன்றையும் பா.ஜ.க. வாக்குறுதியாகக் கொடுத் தது. அது என்னவென்றால், ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றார்கள். அதற்காக நம் மக்கள் சேமிப்புப் பணத்தை யெல்லாம் திரட்டி, வங்கியில் கணக்குத் தொடங்கினார் கள். 15 லட்சம் ரூபாய் அந்தக் கணக்கில் போடப்பட்டதா? என்றால், இல்லை என்பதே பதில். ஆனால், அந்தக் கணக்கிற்காக மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதற்காக அபராதமாக 21 ஆயிரம் கோடி ரூபாய்களை கொள்ளை யடித்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. கடந்த 14 ஆண்டு களுக்கு முன்பாக பெட்ரோல், டீசல் என்ன விலை? இப்பொழுது என்ன விலை?

குறைந்ததா? உயர்ந்ததா? என்பதை சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே!

அதற்கடுத்ததாக பெண்களுக்குப் பாதுகாப்பு என்று சொன்னார்கள். பெண்களை நாரிசக்தி என்பார் பிரதமர் மோடி.
மணிப்பூரில், எங்கள் பழங்குடியின சகோதரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, தெருத் தெருவாக ஓட ஓட விரட்டி கொடுமைப்படுத்தப்பட்டனர்.
தமிழ்நாட்டிற்கு வரும்பொழுதெல்லாம் மிக வேக மாகப் பேசுவார். 140 கோடி மக்களும் என் குடும்பம் என்று சொல்வார். உண்மையிலேயே அப்படி அவர் நினைத்திருந்தால், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட சமூக மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினாரா?
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குறைந்தபட்சம் ஆறுதல் வார்த்தை சொன்னாரா, பிரதமர் மோடி?
தென்னாட்டிற்கு இப்பொழுது வருவோம் – சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை , குமரி மாவட்டங்கள் மழை, புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. 146 ஆண்டுகளில் இல்லாத மழை ஒரேயடியாகக் கொட்டித் தீர்த்ததே – அதனால் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த அவதிக்குள்ளா யினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி என்பது பிறகு – அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாரா பிரதமர் மோடி?
தேர்தல் நேரத்தில் மட்டும் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறாரே? ரோடு ஷோ நடத்துகிறாரே, ஏன்? தமிழ் நாட்டு மக்களின் வாக்குகளைப் பெறவேண்டும் என்பதற்காகத்தானே.
ஒன்றை தெளிவாக நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – தமிழ்நாட்டிலேயே நீங்கள் வந்து குடியேறினாலும், தமிழ்நாட்டு மண்ணை அசைத்துப் பார்க்க முடியாது; காவி மயமாக்க முடியாது.

ராகுல் காந்திக்குத் தண்டனை
எந்த நோக்கத்திற்காக?

ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்றத்திலேயே நேரிடையாக மோடியைப் பார்த்துச் சொன்னார், ‘‘மோடி ஜி, நீங்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்குச் செல்கிறீர்கள். ஆனால், நீங்கள் என்னதான் செய்தாலும், நூறாண்டு களானாலும் உங்களால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது. காரணம், அது பெரியார் மண், சமூகநீதி மண்” என்று சொன்னார்.
அப்படி அவர் சொன்னவுடன், நாடாளுமன்றத்திற்கு வரக்கூடாது என்பதற்காக ஏதேதோ காரணம் சொல்லி, வழக்குத் தொடுத்து, தண்டனை கொடுத்தார்கள். பிறகு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததினால், உச்சநீதிமன்றம் கொடுத்த நியாயமான தீர்ப்பினால், அவ்வழக்கிலிருந்து விடுபட்டு, இன்றைக்குத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
வாதத்தால் வெல்ல முடியவில்லை என்றால், அவர் கள் திரிசூலத்தால் வெல்லலாம் என்று நினைக்கிறார்கள்.
ஒருமுனை சி.பி.அய். இன்னொன்று வருமான வரித் துறை; மூன்றாவது அமலாக்கத் துறை.
இந்த மூன்றையும் வைத்து, எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார்கள்.
ஊழலை ஒழிக்கத்தான் நான் வந்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

ஊழல் இல்லாத ஆட்சியா –
பா.ஜ.க. மோடி ஆட்சி?

கடந்த 10 ஆண்டுகாலத்தில் உங்களுடைய ஆட்சி யில் ஊழல் இல்லை என்று சொல்ல முடியுமா? பகிரங்க மாக நான் கேட்கிறேன்.
ஊழலிலே புதிய வகை ஊழலைக் கண்டுபிடித்தவர் கள் பா.ஜ.க.வினர். ப்ரீ பெய்டு ஊழல் – போஸ்ட் பெய்டு ஊழல்.
தேர்தல் நன்கொடை பெறுவதற்காக ஆறு நிறுவனங் களுக்காக சட்டத்தையே மாற்றியிருக்கிறார்கள்.
தேர்தல் பத்திர திட்டத்தின்மூலமாக, யார் யாரை மிரட்டி நன்கொடை வாங்கினார்கள் என்கிற விவரங்கள் வெட்ட வெளிச்சமானது.
ஊழலை ஒழிக்க வந்த அவதாரங்களுடைய ஆட்சி யின் முகமூடி எப்படிப்பட்டது என்பதைப் பாருங்கள்.
இங்கே பா.ஜ.க. சார்பில் நிற்கின்ற வேட்பாளர், உண்மையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பேசுவார்.
‘இந்து’ பத்திரிகையும், ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ஆய்வு நடத்தியதில், 48 நிறுவனங்களை கணக்கெடுத்திருக்கிறார்கள். அதில் 33 நிறுவனங்களும் நட்டத்தில் நடந்திருக்கின்றன. அவற்றை மிரட்டி நன்கொடையை பா.ஜ.க. பெற்றிருக்கிறது.
இப்படிப்பட்ட ஊழலை செய்தவர்கள், அடுத்தவர் களைப் பார்த்து ஊழல் செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

திசை திருப்ப கச்சத்தீவு பிரச்சினை!

அவர்கள் செய்த ஊழல்கள் இப்பொழுது வெளியில் தெரிந்துவிட்டது என்பதற்காகத்தான், திசை திருப்புவதற் காகத்தான் கச்சத்தீவு பிரச்சினையை திடீரென்று கையிலெடுக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரச்சினையை கையில் எடுத்து, காங்கிரஸ் கச்சத் தீவை மீட்டதா? தி.மு.க. மீட்டதா? என்று கேட்கிறார்கள்.
சரி, அவர்கள்தான் மீட்கவில்லை. நீங்கள்தான் கடந்த 10 ஆண்டுகாலமாக ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தீர் களே, நீங்கள் மீட்கவேண்டியதுதானே!
இலங்கைக்கு, உங்கள் ஆட்சி கடன் கொடுத்ததினால் தான் பொருளாதார சீரழிவிலிருந்து மீண்டது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கச்சத்தீவை மீட்டு இருக்க லாமே, மீட்டார்களா?
அப்படி கச்சத்தீவை மீட்டிருந்தால், ‘‘தி.மு.க.வும், காங்கிரசும் கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்துவிட்டு, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார்கள். நாங்கள்தான் அதனை மீட்டோம்” என்று சொல்லியிருக்கலாமே!
அப்படி செய்திருந்தால், அது நியாயம்! ஆனால், அப்படி செய்யாமல், சம்பந்தமில்லாத விஷயத்தை யெல்லாம் இப்போது சொல்வதா?

தேர்தல் பத்திர ஊழலை மறைக்கவே
கச்சத்தீவு பிரச்சினை!

உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், அப்போது, கச்சத்தீவு கண்டன நாள் என்ற தலைப்பில், தமிழ்நாடு முழுவதும் கூட்டத்தை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். அதுமட்டுமல்ல, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
நானும், சகோதரர் கண்ணப்பன் அவர்களும் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன நாள் கூட்டத்தில் உரையாற்றினோம்.
எதற்காக இப்பொழுது கச்சத்தீவுப் பிரச்சினையைப் பற்றி பேசுகிறார்கள் என்றால், இதுபோன்று மேலும் மேலும் பேசினால், தேர்தல் பத்திரத் திட்ட ஊழலை மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதற்காகத்தான்.
இவர்களுடைய ஆட்சி மீண்டும் வந்தால், நாடு என் னாகும்? என்பதை தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.
மரியாதைக்குரிய பா.ஜ.க. வேட்பாளர் அவர்களே, நான் சொல்வதை நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் ஓரிடத்தில்கூட நீங்கள் டெபாசிட் வாங்க முடியாது.
மோடி ஜி ஏன் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார் என்று சொன்னால், நோட்டாவைவிட வாக்குகள் வாங்கவேண்டும் என்பதற்காகத்தான்.
இரண்டாம் இடத்தை யார் பிடிப்பது என்பதில்தான் அவர்களுக்கிடையே உள்ள போட்டியாகும்.
எங்கள் கட்சி தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்டது, வளர்ந்துவிட்டது என்று சொல்கிறார்களே, கால் இருந்தால்தானே வளரும். உங்கள் கட்சி பெயரே மிஸ்டு கால் கட்சிதானே! மற்றவர்களுக்கெல்லாம் பொய்க்கால்களாவது இருக்கிறது.
கூட்டணிக்காக கதவைத் திறந்து வைத்திருந்தார்களே, ஒருவரும் வரவில்லையே! கதவையே கழற்றி வைத்திருந்தார்கள், அப்பொழுதும் யாரும் வருவதற்குத் தயாராக இல்லை.

இந்தியா கூட்டணிதான்
ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போகிறது!

தேர்தல் கருத்துக் கணிப்பு எல்லாவற்றையும் தாண்டி, மக்கள் கணிப்பு எப்படி இருக்கின்றது என்றால், காஷ்மீர்முதல் கன்னியாகுமரிவரை பார்த்தீர்களேயானால், ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் அமையப் போகின்ற ஆட்சி மிக முக்கியமான ஆட்சியாகும். என்ன அந்த முக்கியமான ஆட்சி என்றால், அதுதான் இந்தியா கூட்டணியினுடைய ஆட்சியாகும். அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதி பாஜக வேட்பாளர் புருஷோத்தம் ரூபாலா ‘‘ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக’’ பேசியிருந்தார்.
அவருடைய சர்ச்சை பேச்சால், சத்ரிய சமூக மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து, அந்த வேட்பாளரை மாற்றக் கோரினர்.
கம்பாலியா என்ற இடத்தில் மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க வந்த குஜராத் மாநில பாஜக தலைவரை முற்றுகையிட்டனர். பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் பங்கேற்ற கூட்டத்தில் நாற்காலிகளை அடித்து நொறுக்கி சத்ரிய சமூகத்தினர் ஆவேசம் அடைந்தனர்.
ரூபாலாவை மன்னிக்கும்படி குஜராத் முதலமைச்சர் விடுத்த கோரிக்கையையும் சத்ரிய சமூக மக்கள் நிராகரித்தனர். ராஜபுத்திர சமூகத்தை அவமதித்த ரூபாலாவை ராஜ்கோட் தொகுதி வேட்பாளராக நிறுத்தக் கூடாது என எதிர்ப்பு வலுக்கிறது. ரூபாலாவை மாற்றாவிடில் நாடு முழுவதும் பாஜகவை புறக்கணிப்போம் என்று சத்ரிய சமூகத்தினர் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். சத்ரிய சமூகத்தினரை சமாதானப்படுத்தும் வகையில் பாஜக தலைவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் குஜராத் முழுவதும் ரூபாலாவை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பட்டிதார் சமூகத்தை சேர்ந்த புருஷோத்தம் ரூபாலாவை மாற்றினால் அந்த சமூகத்தின் வாக்குகள் பறிபோகும் என பாஜக அச்சம் அடைந்துள்ளது. ரூபாலாவை மாற்றும் வரை ஓயப்போவதில்லை என்று சத்ரிய சமூக மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கடந்த ஒருவாரமாக ரூபாலாவுக்கு எதிராக குஜராத்தில் போராட்டம் வெடிப்பதால் பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்தது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே பாஜகவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருவதால் அக்கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதி பாஜக வேட்பாளர் புருஷோத்தம் ரூபாலாவை கண்டித்து சத்ரிய சமூகத்தினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். ராஜபுத்திர சமூகத்தை இழிவுப்படுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ரூபாலா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜ்கோட் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஏன் இதைச் சொல்லுகிறோம் என்று சொன்னால், ராகுல் காந்தி அவர்கள், மோடி என்கிற ஒரு சாதாரண வார்த்தையைத்தான் – அவர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொன்னார். அதற்காக அவசர அவசரமாக வழக்குத் தொடுக்கப்பட்டு, ராகுல் காந்தி அவர்களுக்கு மூன்றாண்டு தண்டனை விதிக்கப்பட்டு, நாடாளுமன்றத்திற்குள் செல்லவிடாமல், அவருடைய எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. 24 மணிநேரத்திற்குள் ராகுல் காந்தி வசிக்கும் வீட்டை காலி செய்யவேண்டும் என்று சொல்லி உத்தரவு போடுகிறார்கள். அதைப்பற்றி அவர் கவலைப்படவே இல்லை. உச்சநீதிமன்றம்தான் அதற்குரிய நியாயமான தீர்ப்பை வழங்கியது.

பிரதமர் மோடிக்கு இரண்டு பேர்தான்
சிம்ம சொப்பனம்!

பிரதமர் மோடி அவர்களுக்கு இரண்டு பேர்தான் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள். ஒன்று, ராகுல் காந்தி; இன்னொன்று நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
கடந்த 5 ஆண்டுகால பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு வழங்கவேண்டும். அதற்காகவே அந்தப் பதவி காலியாகவே வைத்திருந்தது ஆளும் பா.ஜ.க.
இதைவிட ஜனநாயகப் படுகொலையை செய்த இப்படிப்பட்ட ஆட்சி மீண்டும் வரவேண்டுமா என்பதுதான் இப்போது உங்கள்முன் இருக்கின்ற கேள்வி.
எப்படி பழிவாங்கும் நடவடிக்கையை ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி மேற்கொள்கிறது என்றால், 1995 இல், லாலுபிரசாத் அவர்கள்மீது எலிப் பொறி வாங்கியது தொடர்பாக பொய் வழக்குப் போடப்பட்டது.
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத்திற்கு எதிராக மத்தியப் பிரதேச நீதிமன்றம் நிரந்தரமாக கைது செய்ய ஆணை. இதுதான் அந்த செய்தி!
லாலு அவர்களுடைய திறமை எப்படிப்பட்டது என்றால், அவர் இரயில்வே அமைச்சராக இருந்தபொழுது, பொது பட்ஜெட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் 90 லட்சம் கோடி ரூபாய் கொடுத்தவர்.

லாலுபிரசாத்தை கைது செய்தது ஏன்?

ஹார்வேடு பல்கலைக் கழகத்திற்கு அவரை அழைத்து, நட்டத்தில் இருந்த ரயில்வே துறையை எப்படி உங்களால் லாபம் கொழிக்கின்ற துறையாக மாற்ற முடிந்தது என்று கேட்டார்கள்.
அப்படிப்பட்ட லாலுபிரசாத் அவர்கள்மீது 29 ஆண்டுகளுக்குமுன் போடப்பட்ட வழக்கில், இப்பொழுது கைது செய்கிறார்கள்.
ஆகவேதான், தோல்வி பயம் மோடி அவர்களை உலுக்குகிறது. நிதானத்தை இழந்துதான் அவர் தி.மு.க.வை ஒழித்தே தீருவேன் என்று சொல்கிறார். இதுபோன்ற சொற்களைக் கேட்டு கேட்டு எங்களுக்குப் பழகிப் போய்விட்டது.
இராஜகோபாலாச்சாரியார் எவ்வளவு கெட்டிக்காரர் – அவரும் சொன்னார், தி.மு.க.வை ஒழிப்பேன் என்று. பிற்காலத்தில் அவர்தான் தி.மு.க. மேடையில் அமர்ந்து, ‘‘இந்தி நெவர்; இங்கிலீஷ் எவர்” என்றார்.
ஆகவே, இந்த இயக்கத்தை அசைக்க முடியாது, ஆட்ட முடியாது, நெருங்க முடியாது எந்தக் கொம்பனாலும்.
மீண்டும் ஜனநாயகமா? சர்வாதிகாரமா?
மீண்டும் மனித தர்மமா? குலதர்மமா?
என்று கேள்வி கேட்பதற்கு, இது ஒரு மிக முக்கியமான தேர்தலாகும்.
எனவே, நடைபெறப் போவது வெறும் வாக்குச் சீட்டுத் தேர்தல் அல்ல.
இது மக்களுடைய உரிமைக்கான தேர்தல்.
மாதாமாதம் பெண்களுக்குக் கொடுக்கும் ஆயிரம் ரூபாயைக் கூட பிச்சைக் காசு என்று சொல்கிறார்கள்.

உதயசூரியன் பொத்தானை அழுத்துங்கள் – பச்சை விளக்கு எரியும் – உங்கள் வீட்டிலும் விளக்கு எரியும்!

அதுபோன்று யாரும் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான், அந்தத் திட்டத்திற்கு என்ன பெயர் தெரியுமா? இது சுயமரியாதை இயக்கம். ஆகவே, அது சலுகையல்ல, பிச்சையல்ல, மாறாக மகளிர் உரிமைத் தொகை என்று பெயர் வைத்தார்.
எனவேதான் நண்பர்களே, நம்முடைய அருமையான வேட்பாளரான முனைவர் ராஜ்குமார் அவர்களைக் கண்டெடுத்திருக்கிறார்கள்.
எனவே மறந்துவிடாதீர்கள், 19 ஆம் தேதி வாக்குச் சாவடிக்கு நீங்கள் சென்றவுடன், உதயசூரியன் எங்கே இருக்கிறது? கணபதி ராஜ்குமார் பெயர் எங்கே இருக்கிறது? என்று தேடுங்கள்; மூன்றாவதாக இருக்கிறது – ஆனால், அவர்தான் வெற்றி பெற்று முதலாவதாக வரப் போகிறார்.
வாக்குச் சாவடிக்குள் நுழைந்து, உதயசூரியன் எங்கே உள்ளது என்று பார்த்து, அந்தப் பொத்தானை அழுத்துங்கள்; பச்சை விளக்கு எரிகிறதா என்று பாருங்கள்; அங்கே விளக்கு எரிந்தால், உங்கள் வீட்டில் விளக்கு எரியும்; நாட்டில் விளக்கு எரியும்; வெளிச்சம் வரும்; இருட்டு போகும்; அதற்குப் பிறகு வரப் போவது புதிய ஆட்சி – அதுதான் இந்தியா கூட்டணி ஆட்சி – ஜனநாயகத்தைக் காப்பாற்றக் கூடிய ஆட்சி!
எனவே, நம்முடைய வேட்பாளர் அவர்கள் வாக்கு கேட்பார். நம்முடைய சின்னம் உதயசூரியன், மறவாதீர். வெற்றி நமக்கே என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

 

ஒரு நூற்றாண்டுக்குமுன்பே பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது திராவிட இயக்கம் – ஆர்.எஸ்.எஸில் பெண்களைச் சேர்த்தது 1935-க்குப் பிறகுதான்!

ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த இயக்கம் நீதிக்கட்சி என்ற நம்முடைய திராவிடர் இயக்கமாகும்.
அப்பொழுதெல்லாம் அமெரிக்காவில்கூட பெண் களுக்கு வாக்குரிமை கிடையாது. இங்கிலாந்தில் உள்ள பெண்களுக்குக்கூட அன்றைய காலகட்டத்தில் வாக் குரிமை கிடையாது. முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது திராவிட இயக்கம்தான்.
காரணம், எப்படி இந்த இயக்கம் மக்களிடையே ஜாதி பேதம் கூடாது என்கிறதோ, அதேபோன்று ஆண் – பெண் என்கிற பேதமும் கூடாது.
பிறவிப் பேதம் என்று சொன்னால், உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்பதும் பிறவி பேதம்; ஆண் உயர்ந்தவர்- பெண் தாழ்ந்தவர் என்று சொல்வதும் பிறவி பேதம்தான்.
இன்றைக்கு நாற்காலிகளில் தாய்மார்கள் அமர்ந் திருக்கின்றீர்கள். அதுதான் புரட்சி! எதேச்சதிகாரர்கள் என்ன நினைக்கிறார்கள்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தத்துவப்படி, பெண்களுக்கு எந்தவிதமான உத்தியோகத் தையும் கொடுக்கக் கூடாது என்பதுதான்.
ஆனால், பெண்களை மதிப்பது திராவிடர் இயக்கம். பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பது.
இந்தியாவில் யாரும் கேள்விப்படாத நேரத்தில், அன்னை நாகம்மையாரும், பெரியாரின் தங்கை கண்ணம்மாள் அம்மையாரும் வைக்கம் போராட்டக் களத்தில் நின்றவர்கள்.
ஆனால், இன்றைக்கும்கூட ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைமைப் பொறுப்பில் பெண்களை நியமிக்கமாட் டார்கள். அந்த இயக்கத்தில் பெண்களையே சேர்க்காமல் வைத்திருந்தார்கள்.
1935 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான், அந்த இயக்கத்தில் பெண்களை சேர்த்தார்கள்.
ஆகவே, இரண்டு தத்துவங்களுக்கிடையில்தான் போட்டி.
ஜனநாயகமா? சர்வாதிகாரமா?
வருணாசிரம தர்மமா? ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்று சொல்கிற மனித தர்மமா?

No comments:

Post a Comment