பயணிகளின் வயிற்றில் அடிக்கலாமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 5, 2024

பயணிகளின் வயிற்றில் அடிக்கலாமா?

ரயிலில் உணவு வழங்கும் பெட்டியை நிறுத்தி தனியார் நிறுவனங்களுக்கு உணவு பரிமாறும் உரிமையை வழங்கிட முடிவு செய்துள்ளதாம் ஒன்றிய அரசு.
இந்திய ரயில்வே வாரியம் ரயில் பெட்டிகளில் பயணிகளின் வசதிக்காக உணவு பெட்டியை ‘பான்ட்ரிகார்’ (Pantry Car) நடத்தி வருகிறது. இதில் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது நடைமுறை!
இந்நிலையில், இரயில் பயணிகளுக்கான உணவு விற்பனையில் இந்திய ரயில்வே வாரியம் புதிய விதியை செய்ய உள்ளது. புதிய விதிமுறைகளின்படி இரயில்களில் உள்ள “பான்ட்ரிகார்” பெட்டிகளில் இனி பயணிகளுக்கான உணவு தயாரிக்கப்படாது.
இரயில் நிலையங்களில் உள்ள சமையல் அறைகளும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவை அடுத்து வருகிற ஜூலை மாதம் முதல் ரயில்களில் சமையல் முறை முற்றிலும் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
சமையல் வேலைகளை நிர்வகிக்கும் பொறுப்பு இனி தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
ஒரே வழித்தடத்தில் அய்ந்து முதல் ஏழு ரயில்களுக்கு அந்தந்த தனியார் நிறுவனங்கள் பொறுப்பாக இருக்கும்; சம்பந்தப்பட்ட நிறுவனம் ரயில் நிலையத்தில் அடிப்படை சமையலறையைத் தொடங்கும். பின்னர் அங்கிருந்து பயணிகளுக்கு உணவு மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.

இதில் சோதனை ஓட்டமாக முதலில் வடகிழக்கு ரயில்வே சேவையைத் தொடங்கியுள்ளது. இதற்காக குறிப்பிட்ட தேதி வரை பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது
கடந்த ஆண்டு “அதானி புட் கார்ப்பரேசனு”டன் இங்கிலாந்து மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த உணவு நிறுவனங்கள் ஒப்பந்தம் ஒன்றை மேற் கொண்டன. அது இந்தியாவில் “அதானி புட்” நிறுவனத்தோடு இணைந்து பயணிகளுக்கான உணவை தயாரித்து விற்பனை செய்யும் திட்டம் அதானியிடம் விடப்படும் என்று எதிர்பார்க்கப் பட்டது
ஆனால் உணவிற்கு என்று வழங்கப்படும் பெட் டியையே நீக்கிவிட்டு ஒட்டுமொத்தமாக வெளியிலிருந்தே வாங்கும் கடின நிலைக்கு பொது மக்கள், தள்ளப்படும் நிலை!

இதன்படி இனிமேல் ரயில் பயணம் சாமானியர் களுக்கு மிகவும் கடினமானதாகவே இருக்கப் போகிறது.
ஏற்கெனவே சாதாரண இரயிலுக்கு வெள்ளை நிறத்தை அடித்து சிறிது மாற்றம் செய்து “வந்தே பாரத்” என்ற பெயரில் கட்டணத்தை 40 மடங்கு உயர்த்திவிட்டார்கள் இனி உணவும் பலமடங்கு அதிக கட்டணத்தில் தான் கிடைக்கும்.
2015 ஆம் ஆண்டு விமான நிலையங்களில் உள்ள உணவகங்கள் அனைத்தும் அதானியின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு 40 ரூபாய்க்கு விற்ற ஒரு கோப்பைத் தேனீர் ஜிஎஸ்டியோடு சேர்த்து 117 ரூபாய் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.இனி ரயிலிலும் இதே நிலைதான் உருவாகும்.

மோடி ஆட்சி என்றால், அது அதானி, அம்பானி ஆட்சி என்று பொருள்!
மக்கள் நல அரசு (Welfare State) என்று சொல் லப்படுவது எல்லாம் பிஜேபி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபின் தலைகீழாக மாறி விட்டது.
முதியோருக்கு இரயில் பயணத்தில் இருந்து வந்த கட்டண சலுகை மோடி ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது.
இப்பொழுது இரயிலிலேயே பயணிகள் இருக்கைக்கு வந்து சேரும் வசதியும் நீக்கப்பட்டு குறிப்பிட்ட நிலையங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும் இரயில் நிற்கும் ஊர்களில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு வாங்கும் அவல நிலை.
இதில் முதியோர்களின் நிலை என்ன? தனியே பயணிக்கும் தாய்மார்களின் நிலை என்ன? இந்த இலட்சணத்தில் இரயில்வேயையும் தனியார்க்குத் தாரை வார்க்கும் காய் நகர்த்தலும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது – எத்தகைய விபரீதம்!
மக்கள் விரோத அரசாகவே இருந்து தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஒன்றிய பிஜேபி அரசு கோர ஆட்டம் போடுகிறது.
இதற்கு முடிவு கட்டுவீர் -வரும் மக்களவைத் தேர்தலில்!

No comments:

Post a Comment