கோவையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 3, 2024

கோவையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

featured image

‘உத்தர் பாரதிய ஏக்தாமன்ச்’ என்ற அமைப்பு கோவையில் பல இடங்களில் ஹிந்தியில் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளது. அதில் உள்ளதாவது:
“சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் ஆணையிடப்படுவது என்னவென்றால், இம்முறை வட இந்தியக் கட்சிக்கு மட்டுமே நீங்கள் ஓட்டுப் போட வேண்டும்.
அண்ணாமலை நம் மோடி அவர்களின் உண்மையான விசுவாசி. பா.ஜ.க.வை வெற்றி பெற வைத்தால் சில நாள்களிலேயே கோவை மற்றும் திருப்பூரை குஜராத்தோடு இணைத்து ஆணையிடுவார் நமது மோடி அவர்கள்.
மோடி இதைச் செய்வார், அவர் நினைத்தால் நடத்திக் காட்டுவார்.
இம்முறை 400 இடங்களைத் தாண்டப் போகிறோம். தவறவிட வேண்டாம்!
இது ஒரு பொன்னான தருணம், தவற விடாதீர்கள்!
இந்தியாவிலிருந்து திராவிடக் கட்சிகளை ஒழிப்போம். அண்ணாமலைக்கு நீங்கள் போடும் ஓட்டு – மோடிக்கு போடும் ஓட்டு ஆகும். நமது குஜராத்தின் ஓட்டு, உத்தரப்பிரதேசத்தின் ஓட்டு ஆகும்.
ஜெய் சிறீராம் பாரத் மாதாகி ஜே!”
என்று ‘உத்தர் பாரதிய ஏக்தா மன்ச்’ அதாவது ‘வட இந்திய ஒற்றுமை அமைப்பு’ என்ற பெயரில் ஹிந்தியில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் கோயம்புத்தூரில் ஒட்டப்பட்டுள்ளன.
நாடு எந்தத் திசையில் போய்க் கொண்டு இருக்கிறது? எந்தத் திசையில் தமிழ்நாட்டைத் தள்ள வேண்டும் என்று திட்டம் போட்டுள்ளார்கள் என்பதற்கு இதைவிட வேறு சாட்சியம் என்ன வேண்டும்?
தமிழ்நாட்டிற்கு வட மாநிலங்களிலிருந்து இளைஞர்கள் நாள்தோறும் வேலை வாய்ப்புக்காகக் குவிந்து கொண்டு இருக்கிறார்கள்.
கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஹிந்தி பேசுவோரே காணப்படுகின்றனர். தமிழ்நாட்டில் உணவு விடுதிகள், கட்டட வேலை, விவசாயம் உள்பட வேலை வாய்ப்புகளில் வட மாநிலத்தவர்கள் குவிந்து கொண்டு இருந்தாலும் அவற்றை வேறு கண்ணோட்டத்தில் பார்க்காமல் தமிழ்நாட்டு மக்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறார்கள்.
‘குஜராத் மாடல்’, என்று குரல் கொடுப்பவர்கள், “பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் செழிப்பாக இருக்கின்றன – வளர்ச்சி வேகமெடுத்து இருக்கிறது” என்று திட்டமிட்டுப் பிரச்சாரம் அவர்களால் செய்யப் படுவது உண்மையென்றால், வேலையைத் தேடி வடமாநிலங்களி லிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து அம்மாநில மக்கள் குவிந்து கொண்டிருக்கும் நிலை ஏற்படுமா?
தமிழ்நாடுதான் வளர்ச்சி அடைந்த மாநிலம், மக்கள் நல வளர்ச்சி சிறப்பாகக் காணப்படும் மாநிலம், தொழில் வளர்ச்சியில் முன்னேறிய மாநிலம் என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையா?
வேலை வாய்ப்பைத் தேடி வந்த மக்கள் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தலை எடுக்க வேண்டும் என்ற உத்தியின் பின்னணி என்ன?
பச்சையாக ஹிந்தியில் சுவரொட்டி ஒட்டி, பா.ஜ.க.வுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் கோவை, திருப்பூர், குஜராத்தோடு இணைக்கப்படும் என்றெல்லாம் விளம்பரம் செய்வது சரியா?
எல்லோரையும் சகோதரத் தன்மையில் அணுகும் அமைதித் தென்றல் வீசும் பூங்காவான தமிழ் மண்ணை நாசப்படுத்த வேண்டாம்! விஷம விதைகளைத் தூவ வேண்டாம்! வந்த வேலை என்ன? அதோடு நிற்பதுதான் நல்லது!

No comments:

Post a Comment