இரயில்வே துறை தமிழ்நாட்டிற்கு இழைக்கும் வஞ்சனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 6, 2024

இரயில்வே துறை தமிழ்நாட்டிற்கு இழைக்கும் வஞ்சனை

மோடியின் உண்மை முகம் பெரியார் கண்ணாடி கொண்டு பார்த்தால்தான் தெரியும் – புரியும்.
தமிழ் – தமிழ் என்று கூறிக்கொண்டு இருக்கும் மோடி ஆட்சியில் அழகிய தமிழ் பெயர்களைக் கொண்ட இரயில்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி ஹிந்தி – சமஸ்கிருத பெயர் வைத்த இரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.
எடுத்துக்காட்டுக்கு இதோ சில:
‘வந்தே பாரத்’ – இந்த ரயில் வந்தபிறகு மதுரை, நெல்லை, கோவை என்று சென்றுகொண்டிருந்த அனைவரது ஆதரவையும் பெற்ற பல இரயில்களில் – அதன் நேரத்தில் பெரும் பாதிப்பு – இவர்கள் வைத்த சமஸ்கிருதப் பெயருக்கும் அழகிய தமிழ் பெயர்கள் உண்டே!
தேஜஸ் ஒளிமயம் என்று பொருள். ரயிலுக்கு தேஜஸ் என்று பெயர் வைத்து என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை!
மக்கள் மத்தியில் இந்த ஹிந்திப் பெயர் பரவலாக வேண்டும் என்பதே உள்நோக்கம்.
அந்தியோதயா (தாம்பரம் முதல் நாகர்கோயில் வரை), இதன் பொருள் மாலையில் உதயம்; மாலையில் புறப்பட்டு காலையில் வந்து சேரும் என்று பார்த்தாலும் அப்படி அல்ல, நள்ளிரவில் புறப்பட்டு நண்பகலில் தமிழ் நாட்டு நகரங்களை இணைக்கும் முன்பதிவு இல்லா இரயில்.
வந்தே பாரத் (கோவை முதல் சென்னை வரை) மோடியின் புல்லட் ரயில் என்று வடநாட்டு மக்களால் அழைக்கப்படும் இந்த ரயில் வேடிக்கைப் பார்க்க மட்டுமே.. இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சாதாரண பயணிகள் ரயில்களின் நேரங்களில் பாதிப்பு ஏற்பட்டு பல ரயில்கள் ரத்தாகி உள்ளன.
பிஜேபி ஆட்சிக் காலத்தில் கீழ்க்கண்ட இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
1) திருநெல்வேலி – மயிலாடுதுறை தினசரி தொடர்வண்டி ரத்து.
2) தூத்துக்குடி – கோயம்புத்தூர் தினசரி இரவு நேர தொடர்வண்டி ரத்து.
3) தூத்துக்குடி-சென்னை பகல்நேர தினசரி தொடர்வண்டி ரத்து.
4) நாகர்கோவில் – மங்களூர் ஏரநாடு தினசரி தொடர்வண்டி ரத்து.
5) கன்னியாகுமரி – மும்பை இடையே ஓடிய தொடர்வண்டி தற்போது கன்னியாகுமரி- புனே என்று மாற்றம்.
6) மதுரை-டேராடூன் – சண்டிகர் இடையே வாரம் இருமுறை ஓடிய தொடர்வண்டி தற்போது மதுரை-சண்டிகர் வரை மட்டும் வாரம் இருமுறை என்று மாற்றம்.
7) இரயில் கால அட்டவணையில் அறிவித்து இயக்கப்பட்ட சிறப்பு தொடர் வண்டி தாம்பரம்- செங்கோட்டை – அந்தியோதயா ரத்து.
8) கோவை வழியாக கத்ராவுக்கு வாரம் இருமுறை தொடர் வண்டி இயங்கிகொண்டிருந்தது – தற்போது ஒருமுறை மட்டுமே.
9) மதுரை – விழுப்புரம் தொடர்வண்டி திண்டுக் கலுடன் நிறுத்தம் – மதுரை-திண்டுக்கல் இடையே ரத்து.
10) திருச்சி-மானா மதுரை இரயில் காரைக்குடியுடன் நிறுத்தம், மானாமதுரை-காரைக்குடி இடையே ரத்து.
11) கோவை- சேலம் மெமு தொடர்வண்டி முழுவதும் ரத்து.
12) திருச்சி-காரைக்கால் தடத்தில் இயங்கிய மூன்று தொடர்வண்டிகளில் ஒரு தொடர்வண்டி தஞ்சாவூருடன் நிறுத்தம்.
13) மற்றொரு தொடர்வண்டியை திருச்சி-வேளாங் கண்ணி தொடர்வண்டியாக மாற்றி விட்டனர்.
14) செங்கோட்டை – கொல்லம் ஒரே ஒரு பயணிகள் தொடர்வண்டி முழுவதும் ரத்து.
15) திருநெல்வேலி – கத்ரா வாராந்திர தொடர்வண்டி ரத்து.
ஆனால் மோடி அரசின் உண்மை முகம் என்ன என்று பெரியார் கண்ணாடி கொண்டு பார்த்தால் தான் தெரியும் என்று சொன்னது இப்பொழுது புரிகிறதா?
இவர்களுக்கு தமிழ்மீதும் பற்று இல்லை, கறையான் போல் புகுந்து அரிக்கும் குணம் தான் ஹிந்துத்துவ சிந்தனை யாளர்களுக்கு!
இவர்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் இரயில்களின் பெயர்கள்:
1. முத்துநகர், 2. பொதிகை, 3. பல்லவன், 4. பாண்டியன், 5. வைகை, 6. சேரன், 7. உழவன், 8. சோழன், 9. சேது, 10. செம்மொழி, 11. சிலம்பு என்ற பெயர்களில் தமிழ்நாட்டில் ரயில்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. அதற்கு மாறாக ஹிந்தி, சமஸ்கிருதத்தில் பெயர்கள் : வந்தே பாரத், தேஜஸ் ஜன் சதாப்தி, அந்தியோதயா என்று இரயில்கள் மூலம் ஹிந்தி பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் ஹிந்தி – சமஸ்கிருதப் பெயர்கள் தான்; எதையும் தந்திரமாக வஞ்சகமாக செய்வது தானே ஹிந்துத்துவா பார்ப்பனீய பாணி! எச்சரிக்கை!

No comments:

Post a Comment