விளம்பரம் விரும்பா தலைவர்! விளம்பரம் செய்யப்பட வேண்டிய தலைவர்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 10, 2024

விளம்பரம் விரும்பா தலைவர்! விளம்பரம் செய்யப்பட வேண்டிய தலைவர்!!

featured image

தன் வாழ்க்கையையே..
இந்த மானுட சமூகத்தை மேம்படுத்த மனிதர்கள் அனை வரும் எல்லா நிலைகளிலும் சமத்துவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் தொண்டற வாழ்க்கையை வாழ்ந்த தந்தை பெரியார்.
அந்த மாமனிதருடன் இணைந்து தொண்டற வாழ்க்கை வாழ்ந்து, தொண்டறச் செம்மலாக தமிழ் சமூகத்திற்காக தொண்டு செய்து மறைந்த , என்றும் நம் நினைவில் வாழும், தன்னை எவ்விதத்திலும் விளம்பர படுத்திக் கொள்ளாத திராவிடர் கழகத்தின் அன்னையை,
அவருடைய வாழ்வியல் முறையை அவரின் தாயுள்ளத்தை இன்றைய பெண்களிடம் இச் தமிழ்ச் சமூகத்திடமும் விளம்பரபடுத்தியே ஆக வேண்டும். இது காலத்தின் தேவை.
அன்னை ஈ. வெ. ரா. மணியம்மையார்..
விளம்பரமே விரும்பாத ஒரு மாபெரும் இயக்கத் தலைவர் உலகிலேயே ஒருவர் உளர் என்றால் அவர் அன்னை மணியம்மையாரே !
எப்போதும் தன் படம் வேண்டும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் ஆசையும் கர்வமும் கொள்ளாதவர். தந்தை பெரியார் மறைவுக்கு பின்னும் தன் படம் எங்கும் வெளிவர வேண்டும் என விரும்பியதே இல்லை. அய்யா மறைந்த பின் தன் பிளாக்குகள் எல்லாவற்றையும் கொண்டு வரச் செய்து அவற்றை எல்லாம் நொறுக்கி விடச் செய்தவர்.
தன் முகம் முக்கியமில்லை நான் செய்யும் செயல் தான் முக்கியம் என்று தந்தை பெரியார் என்னும் மெழுகுவத்திக்கு திரியாக இருந்து திராவிடம் என்ற தத்துவத்தை இந்த சமூகத்தின் மீது வெளிச்சமாக பாய்ச்சியவர் அன்னையார்.
உலகில் எவரும் எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் சமுதாயத் தொண்டாற்றிய தந்தை பெரியாருக்குத் தொண்டு புரிவதே தன் ஒரே பணி என்று இளமையைத், தன் வாழ்வைத் துறந்த ஒரே பெண்மணி அன்னையார்.
ஒரு குழந்தைக்கு ஈ, எறும்பு மொய்க்கும். பால் நினைந்து ஊட்டிப் பேணிக் காக்கும் தாய் போலப் பெரியாரின் உடல்நலனைக் காத்து, அதன் பயனாய் பொது வாழ்வில் தந்தை பெரியாரின் தொண்டுகள் 95 ஆண்டுகள் நீட்டிக்க வழி வகை செய்தவர் அன்னையார்.
“தந்தை பெரியார் அவர்கள் அன்னை யாரை பற்றி கூறும் போது. வயதிலும் சாகாமல் இருக்கிறேன் என்றால் இந்த அம்மாவால் தான் என்பது யாருக்கும் தெரியாது. என் உடம்புக்கு ஏற்ற உணவைப் பக்குவப்படி கொடுப்பது. உடை மாற்றுவது எல்லாம் இந்த அம்மா தான் . இவர் தான் என் அம்மா” என்பார்.
“தந்தை பெரியாருக்கு அம்மா எனில் நம் அனைவருக்கும் அம்மா தானே!”
அறிஞர் அண்ணா அம்மையாரை பற்றி. “அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது இப்போது எனக்கு என்ன வயதோ அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்போது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன.அப்படியிருந்த அய்யாவை கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரே சேரும்”. இப்படியான அம்மையாரின் தியாக வாழ்க்கை.
தன் முகத்தை பராமரிக்க சில ஆயிரங்கள், கூந்தலை பராமரிக்க ஆயிரங்கள். ஏன்? தன் நகத்தை பராமரிக்கக்கூட ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் பெண்கள் மத்தியில் , நகை அணிகலன்களை காது ,மூக்கு, கழுத்து என எதிலுமே அணியாமல், விலை உயர்ந்த பட்டாடை அணியாமலும் தன் இளமை பருவத்திலும், வாழ் நாள் முழுவதும் கருப்பு சேலை வெள்ளை ரவிக்கை அணிந்து மிக மிக எளிமையாக, எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் அன்னையார்.
தந்தை பெரியார் அவர்களின் தொண்டுக்கு முழுக்க முழுக்க என்னை ஆளாக்கி அவர் நலத்தைக் கண் எனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு அவரை ஒரு சிறு குழந்தையாகவே என் மனதில் இருத்தி அக்குழந்தைக்கு ஊறு நேரா வண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கண்டேன் என்பார் அன்னையார்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர் தாயாக விளங்கியவர் . அவ் விஷயத்தில் அன்னை தெரசா அம்மையாரின் முன்னோடி எனலாம். தந்தை பெரியாருக்கு அவர் தாய்தான் தாரம் அல்ல.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியருக்கும் தாய் அவர். அதனை அவரே , “தாயற்ற சேய்களுக்குத் தாயாக விளங்கினார் அன்னையார். அதில் நானும் ஒருவன்” என்று உணர்ச்சி மிகுந்து குறிப்பிடுவார் ஆசிரியர் அவர்கள். அவர் பெற்ற தாயை மிகச் சிறிய வயதில் இழந்தவர். அவரை போன்ற தாய் அன்பிற்கு ஏங்கியவர்களுக்குத் தாய் என தரிசனம் அளித்தவர் அன்னையார்.
தியாக சுடர் அன்னையார் குறித்து
புரட்சிக் கவிஞரின் புகழுரை இது.
“காற்றிறங்கிய பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு. அது பெரியாரின் பெருந்தொண்டுக்கு அருமருந்து. இப்படி பெரியாருக்கு அருமருந்தாக அய்யா வாழ தன் துடிக்கும் இளமையைப் ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை. அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்? என்று புகழுரைக்கிறார்.
அன்னை மறைவின் போது
கவிஞர் கலி. பூங்குன்றன் அய்யா அவர்களின் கவிதை வரிகள்.
அம்மா மறையவில்லை – அய்யா
இலட்சியம் சாகவில்லை
அம்புவிமீதினிலே அவர்
பாதையை நாம் தொடர்வோம்
அம்மா என்ற சொல்லினிலே – அன்பின்
ஆறுபாயுதடா
அம்மா என்ற சொல்லினிலே – அய்யா
உருவம் தெரியுதடா
தியாகத் திரு உருவம் – தந்தை
ஆயுளின் இரகசியம்
தீயில் மெழுகாம் – இந்தத்
தாயின் கதையடா!
போராட்ட குணமடா – நெஞ்சம்
புலி வாழும் குகையடா
ஈரோட்டு எரிமலையில் – பூத்த
எழுச்சியின் சின்னமடா!
அம்மா மறையவில்லை
ஆம் அம்மா மறையவில்லை
உடல் மறைந்தாலும் அவர் சிந்தனைகள்
என்றும் மறையாது.
அன்னையார் 01.01.1978 ஆங்கில புத்தாண்டு அன்று தனது கடைசி வாழ்த்தினை விடுத்தார். அது என்னவென்றால் சென்ற 1977 ஆம் ஆண்டு பல அரசியல் முதன்மை மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த 1978 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தம் நூற்றாண்டு காணும் ஆண்டு. எனவே முக்கிய சமுதாய மாற்றங்கள் நிகழும் ஆண்டாக அமையட்டும். அரசியல் புயல் ஓய்ந்து ஜாதியற்ற, மூடநம்பிக்கையற்ற அறிவுள்ளம் பொருந்தி, புது சமுதாயத்தை உருவாக்கும் ஆண்டாக இவ்வாண்டு அமைய வேண்டும் என விரும்பி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
புதிய சமுதாயம் உருவாக்கும் அன்னையின் நோக்கில் பிறவி பேதம் என்கிற போது உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதிப் பிரிவை மட்டும் அதில் அடங்கவில்லை. ஆண் உயர்ந்தவர், பெண் தாழ்ந்தவர் என்ற பிறவி பேதமும் ஒழிக்கப்பட வேண்டும் என்றார் தந்தை பெரியார்.
அந்த வகையில் புதிய சமுதாயத்தை உருவாக்கும் பல்வேறு தளங்களில் ஆண் – பெண் என்ற பாலின பாகுபாடு, அதனால் உருவாகும் சமத்துவமின்மை, காலம் காலமாக பின்பற்றி வரும் அடிமை வாழ்க்கை முறை. அதில் குறிப்பாக பெரியார் அவர்கள் குறிப்பிடுவது பெண்களுக்கு சமையல் அறையிலிருந்து விடுதலை.
காலங்கள் மாறினாலும், சிந்தனைகள் மாறினாலும் பெண்கள் சமைக்கும் பழக்கம் மட்டும் மாறவில்லை.
இதற்கு அடிப்படியாக பெண்ணடிமைக்கு வலு சேர்க்கும் விதமாக இருக்கும் மதங்கள். அதன் போதனைகள், தத்துவங்கள் அனைத்தையும் பெண்களை ஆண்களுக்கு கட்டுபட்டவர்களாக, அவர்களுக்கு கீழ்படிந்தவர்களாக இருக்க செய்பவனாகவே இருக்கின்றன என்கிறார் பெரியார்.
தந்தை பெரியார் என்ற மாபெரும் சமூக புரட்சியாளர் அவர் வழியில் அண்ணை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் , அவர்கள் கண்ட போராட்டங்களால், சமூகத்தில் சமத்துவம் காக்கும் முயற்சியால் சமூகத்தில் சிறுக சிறுக பெண்கள் கல்வி கற்று, அவர்களும் வேலை செய்ய, அவர்களுக்கு உண்டான பொருளாதாரத்தை அவர்களே உருவாக்கி கொள்ள வெளி உலகத்தில் கால் பதிக்கும் சூழ்நிலை வாய்த்தது.
இந்த அறிவியல் யுகத்தில் அறிவு தான் மூலதனம். இதில் ஆண், பெண் என்ற பாலினம் வேறுபாடுகள் எல்லாம் தகர்ந்துள்ளது.
இச்சூழலில் பெண்கள் அதிகம் பேர் வீட்டை விட்டு வெயில் சென்று பொருள் ஈட்டும் சூழல் மிக அதிகமாக குறிப்பாக தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது.
இருந்தாலும் சமையல் என்பது பெண்களுக்கானது என்ற நிலையில் மாற்றம் இல்லாத காரணத்தால் பெண்களின் பணிச்சுமை, அடிமைத்தனம் குறையவில்லை.பெண்களின் பணிச்சுமை மேலும் மோசமானதாக , கூடுதல் சுமையாக மாறிய நிலை தான் இன்றைய நிலை.
ஆம், முதலில் வீட்டு பணி என்று ஒரு பணி தான் இருந்தது. ஆனால் இப்போது வீட்டு பணியையும் சேர்த்து வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டிய இரட்டை பணிச் சுமை ஏற்றப்பட்டுள்ளது.
நாம் என்ன தான் பெண் சுதந்திரம் பேசினாலும் நம் வீட்டிலும் அதே நிலை தான்.
இதற்கு காரணம் சமையல் என்பது பெண்களுக்கு உரியது என்ற ஆணாதிக்க மனப்பான்மை ஒன்று. மற்றொன்று ஆண்கள் சமைக்க கற்றுக் கொள்ளாதது. இதனால் பெரியார் அவர்கள் வீட்டில் சமையலறை ஒழிக்க வேண்டும். பொது சமையல் அறை கொண்டு வரவேண்டும் என்கிறார்.
அப்படி ஒரு சில இல்லங்களில் சமைக்காமல் வெளி உணவகங்களில் உண்ணும் போது ,ஆசிரியர் அவர்கள் தனது வாழ்வியல் சிந்தனையில் குறிப்பிடுவது போல இன் றைய இளம் தலைமுறையினரின் துரித உணவு பழக்கங்கள். நொறுக்கு தின்பண்டங்கள் என்று, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் உண்டாகும் நோய்கள்.
குறிப்பாக இக்கால இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் உடல் பருமன்,அதன் விளைவாக வரும் சர்க்கரை நோய்கள், இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்கள் அதிகரிப்பு.
அதன் விளைவாக இளமை பருவத்திலே ஏற்படும் துற்மரணங்கள்.
இத்தகைய சூழ்நிலையில் அவரவர் உடலை பாதுகாப் பதும் அவசியமாகிறது, உணவு உண்பதில் விழிப்புணர்வு தேவை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
உணவு முறைகளிலிருந்து உடலில் ஏற்படும் நோய்களி லிருந்து நம் உடலை காக்க, வெளியில் உணவு உண்பது ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் செல்ல இயலவில்லை. அதனால்,மறுபடியும் வீட்டின் சமையலறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது.
வீட்டிற்குள் சென்றால் பெண்கள் என்ன தான் உயர் பதவிகளில் , பொறுப்புகளில் இருந்தாலும் , அவர்கள் தான் சமைக்க வேண்டும் என்ற சூழல்.
இதை எப்படி தான் மாற்றுவது,
தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுவது போல வீட்டில் சமையல் செய்யும் சூழலில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பணிகளை பகிர்ந்து சமைக்க வேண்டும் என்று. ஆனால் தற்போது வரை வீட்டில் பெண்கள் தான் சமைக்கும் சூழல்.
காலங்காலமாக நம் மூளையில் பதியப்பட்ட பழக்க வழக்கங்களில் ஒன்றாக பெண் தான் சமைக்க வேண்டும் என்று. அதன் பொருட்டு சமையல் பெண்களுக்கு மட்டும் பழக்கப்படுத்தி சொல்லி கொடுத்து வருகிறோம். ஆனால் ஆண்களுக்கு சமையலை சொல்லி கொடுப்பதே கிடையாது . சமையலறை பக்கமே ஆண்கள் சென்றது கூட இல்லை.
இப்படியான நிலையை மாற வேண்டும் என்று தான் தந்தை பெரியார் போராடினார். ஆனால் இது நாள் வரையில் அது முழுமை அடையவில்லை.
பல்வேறு சமூக அநீதிகளை தந்தை பெரியாரும் அவரின் வழிக்காட்டுதலில் அன்னையும், ஆசிரியரும் போராடி பெற்று தந்துள்ளார்கள்.
ஆனால் இவை போராடி பெற முடியாது.நம் எல்லோர் மனதிலும் ஏற்பட வேண்டிய மாற்றம். இந்த சமூகத்தில் உருவாக்க வேண்டிய , பழக்கப்படுத்த வேண்டிய ஒன்று மாற்றம் என்கிறார் ஆசிரியர்.
அந்த வகையில் இளம் வயதிலிருந்தே ஆண்களுக்கு சமையல் செய்யும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
இதை அனைத்து குடும்பங்களும் ஏற்று செயல்படுத்துவார்களா என்பது கேள்வி குறிதான். (நம் கழக தோழர்கள் குடும்பங்களின் நிலை என்ன? அவரவர்களுக்கு தான் தெரியும்)
ஆனால், திராவிட மாடல் ஆட்சியை செய்யும் நம் அரசாங்கத்தால் இதை செயல் படுத்த முடியும். அனைத்து பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும், மாணவ பருவத்திலிருந்தே சமையலை கற்றுக் கொடுக்கலாம். இதுவும் சமூக அறிவியல் பாடம் தான்.
விளையாட்டு,இசை, நடனம், என்று அனைத்திற்கும் ஒரு வகுப்பு ஒரு சொல்லி தருவது போல, இயற்பியல் பரிசோதனை கூடம், வேதியியல் பரிசோதனை கூடம் இருப்பது போல, சமையல் கூடம் அமைத்து அணைத்து மாணவர்களுக்கும் சமையல் கலையை பயிற்றுவிக்க வேண்டும். இதை மேல் நிலை, உயர் நிலை கால கட்டங்களில் சொல்லி தரலாம்.(அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏற்கெனவே சமையல் கூடங்கள் உள்ளது புதிதாக உருவாக்கப்பட்ட தேவையில்லை)
மற்ற பாடங்கள் போன்று சமையலையும் பாடமாக வைத்து மதிப்பெண் கொடுத்தால் அதன் மீதான முக்கியத்துவம் மாணவர்களுக்கும் புரியும்.
இத்தகைய பயிற்சிகள் ஆண் மாணவர்களுக்கு மட்டுமே.
மாணவிகளை தவிர்க்க வேண்டும்.
(வீட்டில் தான் அவர்களுக்கு சொல்லி தருகிறார்களே )
இப்படி பள்ளி பருவத்திலிருந்தே மாணவர்களுக்கு பழக்கப்படுத்தி வந்தால், சமையல் என்பது பெண்களுக்கானது என்ற நிலை மாறும். வீட்டில் ஆண்கள் சமையல் செய்யும் நிலை தன்னாலே உருவாகும். இக்கால இளைஞர்கள் இதற்கெல்லாம் தயாராகத் தான் இருக்கிறார்கள். கால காலமாக பழக்கப்படுத்தப்பட்ட பழக்கம் . ஆண்களுக்கு சமையல்கட்டில் என்ன வேலை என்று அவர்களை ஒதுக்கி, வருமானம் தரும் பணி தான் அவர்கள் பணி என்று இது நாள் வரை அதையே பழக்கமாக கொண்டுள்ளோம்.
இதை மாற்ற வேண்டும். இதை மாற்ற பள்ளிகளில் கற்ற சமையல் கலை ஆண்களுக்கு உதவும். இதுவும் பெரியார் அவர்களும் அவர் வழியில் அன்னை மணியம்மையார் உணர்த்தும் பெண்களுக்கான சமூக நீதி தான்.
இதை செய்தால் , சமையலறையில் சமத்துவத்தை அனைத்து இல்லங்களிலும் கொண்டு வரும் சூழல் தன்னால் உருவாகும்.
அந்த வகையில் , சமூகநீதி சமத்துவத்திற்கு முன்னு தாரணமாக இருக்கும் தமிழ்நாடு – அதன் அரசு.
இந்த சமத்துவ சமையல் திட்டம் கொண்டு வந்தால் சமூக நீதி, சமத்துவத்தை பேணி காக்கின்ற திராவிட மாடல் ஆட் சிக்கு மேலும் மகுடமாக ஒரு மையில் கல்லாக அமையும்.
திராவிட மாடல் ஆட்சி செய்யும் சமூக நீதி காத்த சரித்திர நாயகர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்கள் நினைத்தால் முடியும்.
இந்த ஆட்சி தந்தை பெரியார் ஆட்சி, எங்கள் வழிகாட்டி திராவிடர் கழகமும், தமிழனத் தலைவர் ஆசிரியர் அவர்கள் என்று சொல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் முன் அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் இதை வேண்டுகோளாக வைப்போம். இத் திட்டம் அன்னை மணியம்மையார் பெயரில் அமைந்தால் சிறப்பு.
சமூக மாற்றம் ஏதாவது ஒரு புள்ளியில் இருந்து தான் துவங்க வேண்டும். பள்ளிகளில் உலக அறிவியல் பாடத் தோடு, இந்த சமுக அறிவியல் பாடமும் தொடங்கட்டும்.
மாற்றம் ஒன்றே மாறாதது!
இத்தகைய மாற்றங்கள் மூலம் நம் தந்தை வாழ்கிறார், நம் அன்னை வாழ்கிறார்.
மாற்றங்களை நோக்கி பயனிப்போம்!
மேலும், அன்னையாரின் பிறந்த நாளில் ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுவது போல தமிழ்ச் சமுதாயம் என்னும் குழந்தையை மடியிலே தூக்கிப் போட்டு மருந்தைப் பாலாடையில் குழைத்து வாயிலே புகட்டிய அன்னை மணியம்மையார் இன்றில்லை. அம்மையாரவர்கள் இன்று உருவத்தால் நம்மிடையே இல்லை என்றாலும் உள்ளத்தால், இலட்சியத்தால் குறிக்கோளால், கோட்பாட்டால், கொள்கை யால் நம்மிடையே வாழ்கிறார்கள் என்று ஆறுதல் பெற்று பெரியார் வழியில் அன்னை மணியம்மையார் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர்ந்து நிறைவேற்றுவோம்.
10.03.2024 அன்னை மணியம்மையார் அவர்களின் 105 வது பிறந்தநாள் இல்லமெங்கும், வீதியெங்கும் கொண்டாடி மகிழ்வோம்.
அன்னையை விளம்பரப்படுத்துவோம்!
தமிழ்ச் சமூகத்தை மேலும் விழிப்படைய செய்வோம்!
சமத்துவத்தை காப்போம்!
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க அன்னை மணியம்மையார் !

 

பெ. கலைவாணன்
மாவட்ட செயலாளர், திருப்பத்தூர்

No comments:

Post a Comment