உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் 'நமத்துப் போக'ச் செய்யும் தந்திரம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 7, 2024

உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் 'நமத்துப் போக'ச் செய்யும் தந்திரம்?

கடந்த 2017-2018-ஆம் ஆண்டு ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கிக் கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்களும் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். இந்தப் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்கப் படும். தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது வெளிப்படை . இதன் மூலம் எந்தக் கட்சிக்கு இலாபம் – இதோ அதற்கான பட்டியல்:
பா.ஜ.க. – ரூ.6,570 கோடி
காங்கிரஸ் – ரூ.1,123 கோடி
பி.ஆர்.எஸ். – ரூ.912 கோடி
திரிணாமூல் காங். – ரூ.823
பிஜு ஜனதா தளம் – ரூ.774
தி.மு.க. – ரூ.616 கோடி
ஒய்.எஸ்.ஆர். காங். – ரூ.381 கோடி
தேசியவாத காங். – ரூ.231 கோடி
பகுஜன் சமாஜ் – ரூ.85 கோடி
இந்தியாவில் துணை நிறுவனங்களைக் கொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப் பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்டு) கட்சி உள்பட சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தன.
தேர்தல் பத்திரம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று – உச்சநீதிமன்ற 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு – சட்டம் செல்லாது என்று தீர்ப்புக் கூறி விட்டது (15.2.2024).
அதோடு நிற்கவில்லை உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரத்தின் வழியாக எந்தெந்தக் கட்சிகளுக்கு எவ்வளவுத் தொகை அளிக்கப்பட்டது என்ற விவரத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அளிக்க வேண்டும். தேர்தல் பத்திரம் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அறுதியிட்டுக் கூறிவிட்டது. தேர்தல் ஆணையத்திடம் 2024 மார்ச்சு 6ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். அந்த விவரத்தை தேர்தல் ஆணையம் மார்ச்சு 13க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறி விட்டது உச்சநீதிமன்றம்! – இது ஒரு சரியான கிடுக்கிப்பிடியாகும்.
திருடனைத் தேள் கொட்டியது போன்ற நிலை. ஆனாலும் வஞ்சகத்திலும், சூழ்ச்சியிலும் கைதேர்ந்த பி.ஜே.பி. அரசு கை கட்டி நின்று விடுமோ?
இணையத்தில் பட்டியலை வெளியிட ஜூன் 30ஆம் தேதி வரை கெடு கேட்டுள்ளது – ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா.
இன்றைக்கு வளர்ந்துள்ள மின்னணு (ணிறீமீநீtக்ஷீஷீஸீவீநீ) விஞ்ஞான மேம்பாட்டில் இந்தப் பட்டியலை வெளியிட 24 மணி நேரம் போதுமானது.
ஆனால் ஜூன் 30ஆம் தேதி வரை ஏன் கெடு கேட்கிறது? அந்தத் தேதிக்குள் தேர்தல் முடிந்து புதிய அமைச்சரவையே அமைந்து விடும் அல்லவா!
தேர்தல் பத்திரத்தின் மூலம் சுளை சுளையாகக் கிடைத்த – வெளிப்படைத் தன்மையற்ற கோடிக் கணக்கான ரூபாய்கள் மூலம் தேர்தலில் ‘திருவிளையாடலை’க் காட்டி – நினைத்ததை சாதித்து விடலாம் என்பதுதான் இதன் திரை மறைவில் உள்ளதாகும்.
5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு மனதாக அளித்த தீர்ப்பு இது – இதில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு அறவேயில்லை. மாற்றம் ஏற்படின் எல்லா மட்டத்திலும் நம்பகத்தன்மை சரணாகதி அடைந்து விட்டதாகவே உலகமே இந்தியாவைப் பார்த்து கை கொட்டி சிரிக்கும்.

No comments:

Post a Comment