ஜூன் மாதம்வரை கெடு கேட்பதன் பின்னணி என்ன? அதற்குள் மக்களவைத் தேர்தல் முடிந்துவிடும் என்ற தந்திரம்தானே? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 9, 2024

ஜூன் மாதம்வரை கெடு கேட்பதன் பின்னணி என்ன? அதற்குள் மக்களவைத் தேர்தல் முடிந்துவிடும் என்ற தந்திரம்தானே? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

featured image

தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் – ஸ்டேட் வங்கி மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரப் பட்டியலை வெளியிடாதது ஏன்?
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வெளியிடவேண்டும் என்று உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டும், அந்தத் தேதிக்குள் பட்டியலை வெளியிடாமல், ஜூன் மாதம் வரை கெடு கேட்பது – அதற்குள் தேர்தல் முடிந்து, நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம் என்ற தந்திரமும், சூழ்ச்சியும்தானே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தேர்தல் பாண்டு – தேர்தல் பத்திரம் என்ற ஒரு தந்திர முறைமூலம் பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு பதவியேற்ற காலத்தின் முதல் கட்டத்திலேயே தேர்தல் நிதி நன்கொடைகளை எப்படி சட்ட முகமூடியுடன் பெறும் வழிக்காக –
1. நிதித்துறை – ரிசர்வ் வங்கிச் சட்டம்
2. தேர்தல் ஆணையச் சட்டம்
3. வருமான வரித் துறைச் சட்டம்
4. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்
– இவற்றையெல்லாம், அத்துறையில் தொடக்ககால ஆட்சேபனைகளையும் அலட்சியப்படுத்திவிட்டு, நிறைவேற்றத் தொடங்கி, 2023 ஆம் ஆண்டுவரை தேர்தல் பத்திரங்கள்மூலம் பெற்ற நன்கொடைகளைப் பட்டியலிட்டு உச்சநீதிமன்றத்தில் அதை வழங்கும் அதிகாரம் பெற்ற ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியாவிடம் கேட்டுப் பெற்றபோது, ஒரு முக்கிய தகவல் – வசூலிக்கப் பட்ட நன்கொடை 57 விழுக்காடு – 6 ஆயிரம் கோடிக்கு மேல் ஆளும் பா.ஜ.க.வுக்கே கிடைத்தது என்பது.
இத்தொகையில் ஒரு பகுதி சி.பி.அய்., அமலாக்கத் துறையின் படையெடுப்பு, மிரட்டலுக்குப்பின் பாதிக் கப்பட்ட அக்கம்பெனிகளிடமிருந்து ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக (சுமார் 30 கம்பெனிகள்) கடந்த 5 நிதியாண்டுகளில் தங்கள் நிறுவனம் அந்த நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கவே சுமார் 335 கோடி ரூபாய் அளித்திருப்பதாக ஓர் அமைப்பின் (Newslaundry and The News Minute) ஆய்வு கூறுகிறது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் –
ஸ்டேட் வங்கி கெடு கேட்பது ஏன்?
உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரச மைப்புச் சட்ட அமர்வு- தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் அமைந்தது; மார்ச் 6 ஆம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி நன்கொடை விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டுமென தனது ஆணையைப் பிறப்பித்த நிலையில், மூன்று வாரங்கள் ஓடிய நிலையில், குறிப்பிட்ட மார்ச் 6 ஆம் தேதி நெருங் கும் 4 ஆம் தேதியன்று, அந்த வங்கி- வாய்தா கேட்டு, அதுவும் ஜூன் மாதம் வரை தள்ளி – உச்சநீதிமன்றத்திடம் வாய்தா கேட்கும்போது ஒன்று ‘‘பளிச்”சென்று நாட் டோருக்கு விளங்கி விட்டது!
2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் மே மாதத்துடன் முடிந்த பிறகே, இதுபற்றி தகவல் தாக்கல் செய்ய முடியும் என்று அலட்சியமாய், உச்சநீதிமன்ற ஆணையை மதிக்காது, ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாது, அசமந்தமாக இப்படி வாய்தா மனு போடுவது எதைக் காட்டுகிறது?
ஸ்டேட் வங்கி ஒன்றிய அரசு நிதித் துறையின்கீழ் இயங்கும் ஒரு வங்கி. அது இப்படி உச்சநீதிமன்றத்தில் கோருவது யாருடைய பின்புலத்தில்?

நிதியமைச்சகம் கண்ஜாடை காட்டாமல்
ஸ்டேட் வங்கி இப்படி நடந்துகொள்ளுமா?
நிதியமைச்சகம், ஒன்றிய அரசின் கண்ஜாடை, மறைமுக கருத்துத் தூண்டல் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பு உண்டா?
‘‘இந்தக் கணினி யுகத்தில், அதுவும் ஸ்டேட் வங்கி தொழில்நுட்ப வளர்ச்சிக்காக சுமார் 112 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு டிஜிட்டல் வசதி செய்யப்பட்டும், ஸ்டேட் வங்கியின் 22,217 பத்திரங்களைக் கணக்கிட 21 நாள் போதாதா?” என்று சி.பி.எம். ஏடு ‘பீப்பிள்ஸ் டெமாக்கிரசி” (Peoples Democracy) தலையங்கம் கேட்பது நியாயம்தானே!

பலி பீடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது ஸ்டேட் வங்கியும் – அதன் அதிகாரிகளும்!
தேர்தல் பத்திரத்தில் எப்படி பல கார்ப்பரேட்டுகள் ஒன்றிய ஆளும் பா.ஜ.க.விற்கு பெரும் நிதி வழங்கியதால், அவர்களுக்குப் பல வகையில் ஆட்சியின் சலுகைகள் கிடைத்திருக்கும் நிலை ஏற்படுகிறது என்ற தில்லுமுல்லு, திருகுதாளங்கள் குட்டு வெளியாகி, ‘பூனைக்குட்டி வெளியே வந்துவிடுமோ’ என்று கருதி, பொதுத் துறை நிறுவனமான ஸ்டேட் வங்கி, அதன் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் கைகட்டி நின்று பதில் சொன்னால், விளைவுகளை அவர்களையே அனுபவிக்க வைக்கும் வித்தியாசமான ஒரு ‘‘வித்தை”தானே – இந்த வாய்தா மனு.
அவர்கள்மீது போடப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், வேஷம் கலைந்தாலும் விளைவுகளால் பலி பீடத்தில் நிறுத்தப்பட்டிருப்பது ஸ்டேட் வங்கியும், அதன் அதிகாரிகளும்தானே!

உண்மை ஒரு நாள் வெளிவரும் –
பொய்யும் புரட்டும் அதில் பலியாகும்!
இதுதான் காவிக் கட்சியின் உள்ளொன்று; புறமொன்று என்ற இரு வேட நடவடிக்கை.
உண்மை ஒரு நாள் வெளிவரும். பொய்யும் புரட்டும் பலியாகும்.
2024 இல் ஊழலை ஒழிக்கும் உத்தமர் யார் என்பது புரியும்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
9-3-2024

No comments:

Post a Comment