நிலவிலிருந்து மண் மாதிரி எடுக்கும் - சந்திராயன் 4 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 14, 2024

நிலவிலிருந்து மண் மாதிரி எடுக்கும் - சந்திராயன் 4

featured image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2008ஆம் ஆண்டு சத்திரயான் – திட்டம் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தது.
தொடர்ந்து 2019ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலம் நிலவில் மென்மையாக தரையிறங்க முயற்சித்த முதல் இந்தியத் திட்டமாகும். ஆனால் தொழில்நுட்பக் கோளாறால் தோல்வியடைந்தது.
தொடர்ந்து 2023ஆம் ஆண்டு சந்திரயான்-3 திட்டம் மூலம் நிலவின் தென்துருவத்தில் ரோவரை வெற்றிகரமாக இறக்கி சாதனை படைத்தது – தொடர்ந்து சந்திரயான்-4 திட்டம் மூலம் நிலவின் மாதிரிகளை எடுத்து வருவதற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

4ஆவது நாடு இந்தியா
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது ‘சந்திரயான்-4 திட்டத்தில் அதிக எடையைத் தாங்கி செல்லும் எல்.வி.எம்-3 ராக்கெட் மற்றும் பி.எஸ்.எல்.வி. ஆகிய 2 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகிறது. தனித்தனி ராக்கெட்டுகளான இந்த 2 ராக்கெட்டுகளும் ஒரே நிலவு பயணத்திற்காக வெவ்வேறு கருவிகளை சுமந்து கொண்டு வெவ்வேறு நாட்களில் விண்ணில் ஏவப்படுகின்றன. வருகிற 2028ஆம் ஆண்டுக்கு முன் ஏவப்பட உள்ள சந்திரயான் -4 திட்டம் வெற்றி பெற்றால், நிலவின் மேற்பரப்பில் இருந்து மண், பாறைகளின் மாதிரிகளை மீண்டும் கொண்டு வரும் திறன் கொண்ட 4ஆவது நாடாக இந்தியா மாறும்.
இந்த பணியின் நோக்கம், நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து அறிவியல் ஆய்வுகளுக்காக மாதிரிகளை பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப கொண்டு வருவதாகும்.

நிலவின் ஈர்ப்பு விசை
சந்திரயான்-4 திட்டம் 5 விண்கலத் தொகுதிகளைக் கொண்டிருக்கும். இவை உந்து விசை தொகுதி. இறங்கு தொகுதி, ஏறுவரிசை தொகுதி, பரிமாற்ற தொகுதி மற்றும் மறுநுழைவு தொகுதிகள் அடங்கும் அதிக எடை கொண்டு செல்லும் எல்.வி.எம்.-3 ராக்கெட் 4 டன் எடையில் 3 தொகுதிக் கூறுகளுக்கான கருவிகளை கொண்டு செல்ல உள்ளது. 2 ராக்கெட்டுகளும் வெவ்வேறு நேர இடைவெளியில் விண்ணில் ஏவப்படுகிறது. நிலவின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி நிலவுக்குள் செல்லலாம். எரிபொருள் செலவைக் குறைக்க சுமார் 40 நாட்களில் நிலவு சுற்றுப்பாதைக்கு நேராக பயணிக்க வாய்ப்புள்ளது.

விண்கலத்தில் 5 கருவிகள்
பின்னர் நிலவுச் சுற்றுப்பாதையில் பிரிக்கப்பட்டு,சந்திரயான்-3இன் விக்ரம் லேண்டரைப் போலவே, இறங்கு தளம் நிலவில் தரையிறங்கும். இந்தியாவின் நிலவு பயணத்தில் முதன்முறையாக நிலவு மேற்பரப்பில் இருந்து பாறை மற்றும் மணல் உள்ளிட்டவற்றுக்கான மாதிரிகளை சேகரித்து கொண்டு, நிலவில் இருந்து புறப்பட்டு நிலவு சுற்றுப்பாதையை அடையும். பின்னர் நிலவு மாதிரிகளுடன், பூமியின் சுற்றுப்பாதைக்கு மாதிரிகளை எடுத்துச் சென்று, அங்கிருந்து பூமியில் நிலவின் மாதிரிகளுடன் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. விண்கலத்தை நிலவு சுற்றுப்பாதைக்கு வழிகாட்டும் உந்துவிசை தொகுதி உள்பட 5கருவிகள் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் கூறினர்.

No comments:

Post a Comment