சென்னை மாகாண ஷெட்யூல் ஜாதிக் கட்சி: தேர்தல் போர்டு அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 10, 2024

சென்னை மாகாண ஷெட்யூல் ஜாதிக் கட்சி: தேர்தல் போர்டு அமைப்பு

வரப்போகும் சென்னை அசெம்பிளி தேர்தல்கள் சம்பந்தமாக விவாதிப்பதற்காக பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு மெம்பர்களின் கூட்டம் ஒன்று சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை திவான் பகதூர் ஆர்.சீனிவாசன் அவர்கள் தலைமையில் அவரது வீட்டில் நடைபெற்றது.
திவான் பகதூர் ஆர். சீனிவாசன் எம்.எல்.சி., ராவ் பகதூர் எம்.சி.ராஜா எம்.எல்.ஏ., ராஜகோபால் பிள்ளை எம்.எல்.சி., ராவுசாகிப் வீ.தர்மலிங்கம் பிள்ளை, எம்.எல்.சி, ராமசாமி, எல்.சி.குருசாமி, பண்டிட் பி.எம். பழனிச்சாமி பிள்ளை, திரு வாளர்கள் வக்கீல் பி.கே. புஷ்பராஜ், முனிசிபல் கவுரவ கவுன்சிலர் ஜே. சிவசண்முகம் பிள்ளை, பி.எம். பரசுபாணி பிள்ளை, பி. பரமேஸ்வரன், பி.எம். வேங்கடபதி, நாவலர் எம். கங்காதரன், எஸ்.பி.அய். குரு பாலகுரு சிவம், பி. செல்வநாதன், டி. சின்னையா, சி.ஆர். பலராமன் ஜி.ஒய். பொன் னையா, என். ரங்கராஜ், எச்.பி. பெருமாள், ஆர்.பி. சாமி, பி.ஆர். பத்மநாபன், ஏ.பி. கோபால் பிள்ளை, டி.எம். அருணாச்சலம், ஆர். ராஜகோபால் முதலியோரும் மற்றும் பலரும் விஜயம் செய்திருந்தனர்.

தலைவர் பேசுகையில் ஷெட்யூல்ட் ஜாதிக்கு என ஏற்படுத்தப்பட்டிருக்கும் தனி ஸ்தானங் களுக்கு தக்க அபேட்சகர்களை நிறுத்தும் விதமாகவும் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் பிற ஜாதியினரை போல் கட்டுப்பாட்டுடன் வேலை செய்து தங்களுடைய உரிமைகளைப் பாதுகாத் துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பிறகு சென்னை மாகாண ஷெட்யூல்ட் ஜாதி கட்சி ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும், இக்கட்சி தேர்தல் போர்டில் இதுவரை தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக இருந்து வரும் தேர்தல் போர்டுகளில் மறைந்து விட வேண்டும் என்றும், இக்கட்சியில் அங்கத்தினராகச் சேர விரும்புவர்கள் பிற கட்சி ஸ்தாபனங்களில் அங்கத்தினராக இருந்தால் அதை ராஜினாமா செய்து விட வேண்டும் என்றும், கட்சியின் சார்பாக தேர்தலுக்கு நிற்க விரும்புவோர் இக் கட்சிக்கென தனி பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், கட்சியில் சேர வரும்போது வருஷம் நாலு பேர் சந்தா முன்பணமாக தங்கள் விண்ணப்பத்துடன் அனுப்பி விட வேண்டும் என்றும், அமைச்சர்களாக நிற்க விரும்புவோர் தங்கள் விண்ணப்பங்களை கடைசி தேர்தல் போர்டுக்கு நவம்பர் 20ஆம் தேதிக்குள் அனுப்பி விட வேண்டும் என்றும், தவிர ஒவ்வொரு அமைச்சகரும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டு 15 ரூபாயுடன் தங்கள் விண்ணப்பங்களை கூட்டுக் காரியதரிசி திரு. புஷ்பராஜ், அட்வகேட், நம்பர் 38, ஏபி ஜன் ரோடு ராயப்பேட்டை அனுப்ப வேண்டும் என்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய கட்சியின் அறிக்கை ஒன்றை கூடிய சீக்கி ரத்தில் வெளியிட வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது.
புது கட்சிக்கு திவான் பகதூர் ஆர்.சீனிவாசன் தலைவராகவும், ராவ் பகதூர் எம்.சி.ராஜா ராவ்சாகிப் என். சிவராஜ் உப தலைவர்களாகவும், பி.கே. புஷ்பராஜன், ஜெ. சிவசண்முகம் பிள்ளை கூட்டுக் காரியதரிசிகளாகவும், ராவ்சாகிப் எல்.சி. குருசாமி பொக்கிஷதாரராகவும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
– ‘விடுதலை’ – 11.11.1936

No comments:

Post a Comment