(அ)சிங்கக் கதை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 26, 2024

(அ)சிங்கக் கதை!

திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12ஆம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. ஆண் சிங்கத்தின் பெயர் அக்பர். பெண் சிங்கத்தின் பெயர் சீதா. ராமனின் மனைவி பெயரைக் கொண்டுள்ள சீதா சிங்கத்தை, முகலாய மன்னரின் பெயர்கொண்ட அக்பர் சிங்கத்துடன் சேர்த்து வைக்கக் கூடாது எனக் கிளம்பியிருக்கிறது ஓர் ஹிந்துத்துவ அமைப்பு. இந்த 2 சிங்கங்களையும் ஒரே இடத்தில் அடைப்பது ஹிந்து மதத்தை அவமதிக்கும் செயல், எனவே, தனித்தனியே பிரிக்க வேண்டுமென்று நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள்.
‘அக்பர், சீதா என்ற பெயர் கொண்ட சிங்கங்கள் அருகருகே இருக்கக்கூடாது’ என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தொடுத்த வழக்கே கேலிக்கூத்தானது. அதனால்தான் அது சமூகவலைத்தளங்களில் பரவலாகக் கிண்டலடிக்கப்பட்டது. ஆனால் அந்த வழக்கைவிட கேலிக்கூத்தானது – கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் எதிர்ப்பை ஏற்று அங்கீகரித்த நீதிபதி, ‘சிங்கங்களின் பெயர்களை மாற்ற வேண்டும்’ என்று உத்தர விட்டுள்ளார். மேலும் “உங்களது செல்லப் பிராணிக்கு ஹிந்துக் கடவுள் அல்லது நபிகள் பெயரைச் சூட்டுவீர்களா?” என்று மேற்கு வங்க மாநில அரசின் வழக்குரைஞரிடம் வினோதமான கேள்வி யையும் எழுப்பியுள்ளார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் தொடுத்த வழக்கின் முக்கியமான அம்சம் ‘விலங்குகளுக்குக் கடவுள் பெயர் சூட்டக்கூடாது’ என்பதல்ல. ‘ஹிந்துப்பெயர் கொண்ட சிங்கம் இஸ்லாமியப் பெயர் கொண்ட இன்னொரு சிங்கத்துடன் இணைந்து இருக்கக்கூடாது’ என்பதுதான். இது எவ்வளவு அபத்தமான வாதம் என்பது குறைந்தபட்ச பொது அறிவுள்ளவருக்குக்கூட தெரியும். மேலும் இது மதவெறி நோக்கம் கொண்டது என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். நியாயமாகப் பார்த்தால் இப்படிப்பட்ட அற்ப வழக்கைத் தொடுத்த விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு ‘நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக’ அபராதம்தான் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிபதியோ விசித்திரமான தீர்ப்பை வழங்கி வினோதமான கேள்வியைக் கேட்டிருக்கிறார்.
‘ஹிந்துக்கள் நம்பிக்கையின்படி அக்பரும் சீதாவும் இணைந் திருக்கக்கூடாது’ என்ற இந்த அபத்தமான வாதத்தை நீட்டித்தால் சிங்கங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்குக்கூட பெயரிட முடியாது.

பரமசிவம் என்பவரின் மனைவி வள்ளி என்று வைத்துக் கொள்வோம். ‘புராணக்கதைகளின்படி பரமசிவத்தின் மருமகள்தான் வள்ளி. எனவே இந்தத் திருமணத்தையே ரத்து செய்ய வேண்டும்’ என்று வழக்கு தொடுக்கப்பட்டால் அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? ‘ராமர், ராமு, ராமச்சந்திரன் என்ற பெயர் கொண்ட வருக்கு சீதா, ஜானகி என்ற பெயர் கொண்டவர்தான் மனைவியாக அமைய முடியும்’ என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமா?
பார்வதியும் கணேசனும் திருமணம் செய்து கொண்டால், அம்மா – மகன் உறவாயிற்றே – விவாகரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதி கூறுவாரா?
அடுத்து ‘செல்லப்பிராணிகளுக்குக் கடவுள் பெயரை வைப்பீர்களா?’ என்ற அபத்தக்கேள்விக்கு வருவோம்.
பசுமாடு என்பதே லெட்சுமியின் அம்சம் என்பதுதான் ஹிந்துமத வைதீக நம்பிக்கை. காமதேனு என்னும் பசுமாட்டின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள் என்பதும் வைதீக நம்பிக்கைதான். வெவ்வேறு விலங்குகளின் முகம் கொண்ட கடவுள்கள் ஹிந்து மதத்தில்தான் உண்டு. விலங்குகளுக்கு கடவுள்களின் பெயர் வைப்பதே கடவுளை அவமதிப்பது என்றால் கடவுள்கள் விலங்குகளின் உருவம் கொண்டிருப்பது எந்தக் கணக்கில் வரும்?
கோயில்களில் உள்ள யானைகளுக்கு எல்லாம் கடவுள் பெயர்தானே வைக்கப்பட்டிருக்கிறது. அது இழிவுபடுத்துவது ஆகாதா?
செல்லப்பிராணிகளுக்குத் தங்களுக்குப் பிடித்த கடவுள் களின் பெயர் வைக்கப்பட்டிருப்பது மிகச்சாதாரணமான நடைமுறை என்பது இந்த நீதிபதிக்குத் தெரியவே தெரியாதா?

‘மூன்றாம் பிறை’ திரைப்படத்தில் நாய்க்குட்டியின் பெயர் சுப்பிரமணி. கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தில் கழுதைப்புலிக்கு ‘சுப்பிரமணி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். யாராவது ‘முருகப்பெருமான் பெயரை எப்படி வைக்கலாம்?’ என்று வழக்கு தொடுத்தால் அதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா? ஒரு விலங்குக்கு சூட்டப்படும் பெயர் கடவுளை இழிவுபடுத்துகிறது என்றால் குஜராத்தில் ஒரு வனவிலங்கு பூங்காவுக்கே சர்தார் வல்லபாய் படேல் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதே, 2020இல் அதைத் திறந்து வைத்ததே பிரதமர் மோடிதானே, அப்படி யானால் அது படேலை அவமானப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளலாமா?

சரி, ‘சீதை’ சிங்கத்திற்கு மாட்டுக் கறி போட மாட்டார்களா? அப்படிப் போட்டால் விஸ்வ ஹிந்து பரிஷத் கூட்டம் மறியல் செய்யுமோ!
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் – பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் – மீண்டும் மனிதன் மிருகம் ஆகிறானே வெட்கக் கேடு!
இந்தப் பாழாய்ப் போன ஆர்.எஸ்.எஸ்., சங்கப் பரிவார் அமைப்புகள் தோன்றினாலும் தோன்றியது – எல்லாவற்றிலும் மதக் குரூரப் புத்தியை நுழைத்து, மனித அறிவை வெறியாக்கி விட்டதே – வெட்கக்கேடு!

No comments:

Post a Comment