ராமன் கோயில் திறக்குமுன்பே அச்சுறுத்தலா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 12, 2024

ராமன் கோயில் திறக்குமுன்பே அச்சுறுத்தலா?

இந்தூரில் உள்ள மால் மற்றும் வியாபாரக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் ராமன் கோயிலின் மாதிரியை வைக்க வேண்டுமென இந்தூர் மேயர் புஷ்யமித்ர பார்கவ் கூறியுள்ளார்.
அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமன் கோயில் திறப்பு விழா மற்றும் குட முழுக்கு நடக்கவுள்ளது. இதைக் குறிக்கும் வகையில், இந்தூரில் உள்ள மால் மற்றும் வியாபாரக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் ராமன் கோயிலின் மாதிரியை வைக்க வேண்டுமென இந்தூர் மேயர் புஷ்யமித்ர பார்கவ் கூறியுள்ளார்.

“இதற்கு யாராவது ஒத்துழைக்க மறுத்தால் இந்தூர் மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் கற்பிப்பர்கள். இது ராமனுக்கும் ராம ராஜ்ஜியத்திற்குமான ஒன்று” என்று தெரிவித்துள்ளார். மேலும், “கிறிஸ்துமஸ் அன்று கிறிஸ்துமஸ் குடில் வைக்கிறார்கள். ரம்ஜான் அன்று நிலா அலங்காரம் செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது, ராமன் கோயிலின் மாதிரியை வைப்பதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கக் கூடாது” என்று எச்சரித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1750 ஆம் ஆண்டு இந்தூரை ஆண்ட அகில்பாய் ஹோல்கர் என்ற ராணி அந்த நகரெங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் வர தடைவிதித்தார். மேலும் நகர மக்கள் பார்ப்பனர்களை கேட்டுத்தான் எந்த சடங்கு சம்பிரதாயங்களையும் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் பார்ப்பனர்களின் கால்களைக் கழுவி அந்த நீரை அரண்மனையில் அனைத்துப் பாகங் களிலும் தெளித்த பிறகே அன்றைய பணிகளைத் தொடங்குவார். தற்போது 400 ஆண்டுகள் கழித்து மீண்டும் வரலாறு திரும்பி உள்ளது.
450 ஆண்டு கால வரலாறு படைத்த அயோத்தி பாபர் மசூதியை இடித்துத் தள்ளி அந்த இடத்திலேயே ராமன் கோயில் கட்டுவது என்பது எத்தகைய மூர்க்கத்தனம்!

இதைவிட அதிர்ச்சிக்குரியது – ஒரு பட்டப் பகலில் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., சங்பரிவார் வட்டாரங்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் ஒருவர் கூடத் தண்டிக்கப்படவில்லை. (31 ஆண்டுகள் ஓடி விட்டன என்பது நினைவில் இருக்கட்டும்).
இதைவிட மகாக் கொடுமை மசூதியை இடிக்க முன்னின்ற பெருந் தலைவர்கள் ஒன்றிய அரசில் பிரதமர், துணைப் பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் போன்ற பெரும் பதவிகளில், கூச்ச நாச்சமின்றி அமர்ந்து துரைத்தனம் செய்தார்கள் என்பதுதான்.
இப்பொழுது அடுத்த கட்டத்திற்குத் தாவி ராமன் கோயில் திறக்கின்ற நாளன்று எந்த மதத்தையும் சார்ந்தவர் களாக இருந்தாலும் அவர்கள் வீட்டிலோ, வியாபார நிறுவனங்களிலோ ராமன் சின்னம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்கிற அராஜகம்தான்!
நாம் ஒரு ஜனநாயக நாட்டில்தான் வாழுகிறோமா? அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்ற மதச் சார்பின்மைத் தன்மையை நார் நாராக உரித்துத் துவம்சம் செய்யும் துஷ்டர்களின் காலடிகளில்
140 கோடி மக்கள் விழிப்பிதுங்கிக் கிடக்கத்தான் வேண்டுமா?
ராமன் கோயில் திறப்பு விழாவை அமைதிக்குப் பங்கம் இல்லாமல் நடத்துவார்களா? என்பது முக்கிய கேள்வி!

No comments:

Post a Comment