ஆளுநருக்கழகல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

ஆளுநருக்கழகல்ல!

'மே தகு' என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரரான ஆளுநர் ஆர்.என். ரவி தன்னுடைய அன்றாட நடவடிக்கைகளால், பேச்சுகளால், அந்த அடைமொழிக்கு உரியவர் அல்லர் என்று வெகு மக்கள் அளவில் அன்றாடம் பேசும் அளவுக்கானது கெட்ட வாய்ப்பே!

இவ்வளவுக்கும் ஆளுநர் என்பது ஓர் அலங்கார பதவியே தவிர, அதிகாரம் படைத்த ஒன்றல்ல; அமைச்சரவையின் ஆலோசனையின்படி நடந்தே தீர வேண்டியவர் என்பதுதான் சட்டத்தின் நிலைப்பாடு.

இதைப் புரிந்து கொள்ளாமல், தப்பும் தவறுமாக தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வது கடைந்தெடுத்த நகைச்சுவையே! 

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையாகக் கூறப் பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு நேர் விரோதமாக, அசல் ஆஷாடபூதியாக நடந்து கொள்வது அவர் பயிற்சி பெற்ற அமைப்பையும் இடத்தையும் பொறுத்ததாகவே இருப் பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஸநாதனத்தைப் பற்றிப் பேசுகிறார். ஸநாதனம் என்பது ஜாதி, தர்மம், வர்ணதருமம் என்று காஞ்சி சங்கராச்சாரியாராக இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி தனது தெய்வத்தின் குரலில் குறிப்பிட்டதற்குப் பிறகு வேறு எந்த ஆதாரத்தைத் தேட வேண்டும்? அந்த அடிப்படையில் பார்த்தால், அனைவருக்கும் பொதுவாக - மதிக்கத்தக்க இடத்தில் இருந்து தீர வேண்டியவர், பிறப்பின் அடிப் படையில் பேதம் கற்பிக்கும் ஜாதியைக் கட்டிக் கொண்டு மாரடிப்பது ஒருவகையான மடிசஞ்சி மனப்பான்மை தானே!

ஆளுநர் மாளிகையில் ஒடுக்கப்பட்ட மக்களைக் கூட்டி பூணூல் போடுவதுதான் ஆளுநர் வேலையா?

அவர்கள் சொல்லும் சாஸ்திரப்படியேகூட அது விரோதமானது என்பது ஒரு பக்கம் என்றாலும், ஏதாவது வித்தை காட்டி தன் பக்கம் மக்களை ஈர்ப்பது என்ற மலிவான யுக்தியே இதில் அடங்கியுள்ளது.

ஆரியர் - திராவிடர் பற்றிப் பேசுகிறார். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் பேசுகின்றார். 

வரலாற்று அறிஞர்களால் அறுதியிட்டுக் கூறப்பட்ட ஒன்றை ஏளனம் செய்கிறார். 

தனக்கு இல்லாத அதிகாரத்தைத் தனக்கு இருப்பதாக நினைக்கிறார். அதன் பின்விளைவைத் தான் மதுரையில் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அடைந்த அவமானம் சாதாரண மானதல்ல!

ஆளுநர் நடவடிக்கைகளை எடுத்துக்காட்டி பல்கலைக் கழகத்தின் இணைவேந்தரான உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி விழாவில் பங்கேற் காமல் புறக்கணித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், பொதுவுடைமை இயக்கத்தில் இளம் பருவந்தொட்டு ஈடுபட்டு சிறைச் சாலையில் பல்லாண்டு இருந்து வந்து 102 வயது நடை பெறும் தோழர் சங்கரய்யாவுக்கு மதிப்புறு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்ததையும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவியின் கையால் பட்டங்களை வாங்க விரும்பாது 15க்கும் மேற்பட்டவர்கள் புறக்கணித் துள்ளனர்.

தியாகி சங்கரய்யாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்க மறுக்கும் ஆளுநரை எதிர்த்து மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியினர் ஆளுநருக்குக் கறுப்புக் கொடியும் காட்டியுள்ளனர்.

இவ்வளவுக்கும் பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு பல்கலைக் கழக வேந்தர் என்ற முறையில் மதுரைப் பல்கலைக் கழகத்துக்குச் செல்லுகிறார்?

தமிழ்நாட்டில் எத்தனையோ ஆளுநர்கள் இருந்திருக் கிறார்கள். ஆனால் ஆளுநர் ரவியைப் போல மக்கள் வெறுப்புக்கு ஆளானவரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை.

ஆளுநரின் சுதந்திர தின விருந்தினை அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், ஆளும் கட்சியையும் கடந்து எதிர்க்கட்சியினரும் புறக்கணித்தனர் என்பது ஆளுநருக்கு எத்தகைய கறை படிந்த அத்தியாயம்!

வேறு வழியின்றி அந்த விருந்து நிகழ்ச்சியையே ஆளுநர் ரத்து செய்தார் என்றால், நிலைமையைப் புரிந்து கொள்ளலாம்.

இதற்கு மேலும் ஆளுநராக ஆர்.என். ரவி தொடர்வது கவுரவம்தானா? என்ற கேள்வியை அவர் முடிவுக்கே விட்டு விடுவதைத் தவிர வேறு வழியே இல்லை.


No comments:

Post a Comment