புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்'' தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்'' தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

 பகுத்தறிவுப் பணியை நாம் மட்டும்தான் செய்கிறோம் -இது ஒரு சறுக்குமர பணி போன்றது!

மகிழ்ச்சியான பணி - ஓர் அறிவியல் பணி - சமூகத்திற்கான பணி இன்றைக்கு எல்லோரும் ஏற்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது!

புதுச்சேரி, நவ.30 பகுத்தறிவுப் பணியை நாம் மட்டும்தான் செய்கிறோம். இது ஒரு சறுக்குமர பணி போன்றதாகும். ஆனால், மகிழ்ச்சியான பணி - ஓர் அறிவியல் பணி - சமூகத்திற்கான பணி - இந்தப் பணி இன்றைக்கு இவ் வளவு சிறப்பாக வளர்ச்சி பெற்று வந்ததினால்தான், இன்றைக்கு எல்லோரும் ஏற்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழக 

மாநில கலந்துரையாடல்

கடந்த 19.11.2023 அன்று காலை புதுச்சேரியில் நடை பெற்ற பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப் பிரிவு, பகுத்தறிவு கலைத் துறை அமைப்புகளின் மாநில, மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

நம்முடைய அறிவுச் சுதந்திரத்தால் யாரும் பாதிக் கப்படுவதில்லை. அது நம்மை உயர்த்துவதற்குரியதாகும்.

யாருக்காக?

கேட்கின்றவர்களை உயர்த்துவதற்கு, கேட்கின்ற வர்களை முன்னேற்றுவதற்குத்தான் அறிவுச்சுதந்திரம்.

‘‘யார் சொன்னாலும் நம்பாதே! 

உங்களுடைய அறிவைப் பயன்படுத்துங்கள்!’’

ஒருமுறை குடியாத்தத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார், ‘‘யார் சொன்னாலும் நம்பாதே! உங்களுடைய அறிவைப் பயன்படுத்துங்கள்!'' என்றார்.

மாணவர்கள் அவருடைய உரையை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மாணவன் எழுந்து, ‘‘அய்யா, யார் சொன்னாலும் நம்பாதீர்கள் என்று சொல்கிறீர்கள், சரி! நீங்கள் சொல் வதை நம்புவதா? வேண்டாமா?'' என்றார்.

மற்றவர்களாக இருந்தால், ஒரு நிமிடம் ஆடிப் போயிருப்பார்கள்.

ஆனால், தந்தை பெரியார் அவர்கள் மிகவும் அமைதியாக, ‘‘நான் சொல்வதையும் நம்பாதே!'' என்றார். அவர்தான் பெரியார்!

‘‘பிறகு எதை நம்புவது'' என்றார் அந்த மாணவர்.

‘‘உன் அறிவு என்ன சொல்லுகிறது என்று சிந்தித்துப் பார்! அதை நம்பு, அதை ஏற்றுக்கொள்!'' என்றார் தந்தை பெரியார்.

அப்படி ஓர் அறிவுச் சுதந்திரத்தைக் கொடுக்கின்ற இயக்கம்; அந்த அறிவுச் சுதந்திரம் வந்ததினால்தான், இவ்வளவு வளர்ச்சி. அந்த அறிவுச் சுதந்திரம் வந்த தினால்தான், வேட்டிக் கட்டிக் கொண்டிருக்கின்றோம்; அந்த அறிவுச் சுதந்திரம் வந்ததினால்தான், நாம் உடையை உடுத்திக் கொண்டிருக்கின்றோம். அந்த அறிவுச் சுதந்திரம் வந்ததினால்தான், கண் பார்வைக்கு கண்ணாடியை அணிந்துகொண்டிருக்கின்றோம். அந்த அறிவுச் சுதந்திரம் வந்ததினால்தான், எழுத்தாணிக்குப் பதிலாக, இப்போது பேனாவை வைத்து எழுதிக் கொண்டிருக்கின்றோம்.

அறிவுச் சுதந்திரத்தை வளர்க்கக் கூடிய ஓர் அமைப்பு 

பகுத்தறிவாளர் கழகம்!

ஆகவே, அந்த அறிவுச் சுதந்திரத்தை வளர்க் கக் கூடிய ஓர் அமைப்பு பகுத்தறிவாளர் கழகம். இது இயல்பானது, அறிவியல் ரீதியானதாகும்.

இங்கே கழகப் பொருளாளரும், பொதுச்செயலாளர் களும், மற்றவர்களும் சொன்னார்கள்.

நாம் கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம்; இக்கூட்டத்திற்கு இவ்வளவு பேர் வருவார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் நினைக்கவில்லை. உட்காருவதற்கு இடமில்லாமல் இருக்கிறது, ஏராளமான தோழர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.

ஒரு வேடிக்கை என்னவென்றால், இயற்கையையும் தாண்டி நாம் வெல்லக்கூடியவர்கள் என்பதற்கு அடை யாளம் - இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தை அறிவித்த வுடன், தமிழ்ச்செல்வன் போன்றோரை அழைத்துக் கேட்டேன்.

இயற்கையோடு போட்டி போட்டு வெல்வதுதான் பகுத்தறிவு!

புயல் வரும், அடைமழை பெய்யும் என்றெல்லாம் செய்தி வருகிறதே - அந்தத் தேதியில் கூட்டம் நடைபெறும் நிலையில், எல்லோருக்கும் கஷ்டமாக இருக்குமே என்றேன்.

‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம்  மடிசெய்து

மானம் கருதக் கெடும்!''

இயற்கையோடு நாம் போட்டி போட்டு வெல்வதுதான் பகுத்தறிவு. இயற்கையோடு போட்டி போட்டுத்தான் மனிதன் வென்றான்.

தீயணைப்புத் துறையின் 

அதிகாரப்பூர்வமான பணி!

‘அக்னி பகவான்' என்றார்கள் - இன்றைக்குத் தீயணைப்பு நிலையம் இருக்கிறது. ‘அக்னி பகவான்' வந்தால், உடனே அவனைத் துரத்திக் கொண்டு போய் விரட்டுவதுதான் தீயணைப்புத் துறையின் அதிகாரப் பூர்வமான பணியாகும்.

ஒரு காலத்தில் ‘வாயு பகவான்' என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். மின்விசிறி சுற்றுகிறது இப் போது. அதைக் கண்ட்ரோல் செய்வதற்கு ரெகுலேட்டர் வந்தாகிவிட்டது. மெதுவாக மின்விசிறி சுற்றவேண்டும் என்றால், அதற்கேற்றாற்போல் வைத்துக்கொள்ளலாம். நம்மை மீறி வேகமாக ஓடினால், மின்விசிறி நிறுவனத் தாரை நாம் சும்மா விடமாட்டோம்; வாயு பகவான் இப்பொழுது நமக்கு வேலைக்காரனாக ஆகிவிட்டான்.

அறிவுப் புரியாத காலத்தில் அன்றைக்கு அப்படி இருந்தது - அது தவறில்லை. இன்றைக்கு விளங்கிவிட்டது - இதுதான் பகுத்தறிவு.

பகுத்தறிவு என்றால், வேப்பெண்ணெய் குடிப்ப தில்லை; விளக்கெண்ணெய் குடிப்பதில்லை; தண்டால் எடுப்பதில்லை. 

தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவுப்பற்றி அழ காக எடுத்துச் சொல்வார். அதனால்தான் இந்த இயக்கம் மக்கள் இயக்கமாக இருக்கிறது.

உலகத்தில் உள்ள எந்த நாட்டிலும், பகுத்தறிவு சார்ந்த ஓர் இயக்கம், மக்கள் இயக்கமாக இல்லை. அந்த மக்கள் இயக்கத்தினுடைய கொள்கைப் பிரச்சாரத்தைச் செய் கின்றபொழுது, நாம் பொதுவெளியில் போய்விடுகிறோம்.

இந்த அமைப்பில் கவர்ச்சிகரமான படங்கள் கிடையாது; இந்த இயக்கத்திற்கு வந்தால், ‘முக்தி' அடையலாம்; அது கிடைக்கும், இது கிடைக்கும் என்பதெல்லாம் கிடையாது - இது அறிவியல் இயக்கம்.

‘விடுதலை’ உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு!

இவ்வியக்கத்தில் மிக முக்கியமாக இருக்கக்கூடியது - சிலர் மேலோட்டமாகத்தான் பார்த்திருப்பார்கள் - ‘விடுதலை' நாளிதழினுடைய ஒவ்வொரு எழுத்தையும் பார்த்தீர்களேயானால், அந்த எழுத்துக்கும், புள்ளிக்கும்கூட பொருள் புரியும்.

‘விடுதலை' உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு!

World’s only Rationalist Daily

இது யார் சொன்னது?

நம்முடைய மொழியில் நாம் தம்பட்டமடித்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லவில்லை.

நார்வே நாட்டைச் சேர்ந்த லெவி ஃபிராகல்!

நார்வே நாட்டைச் சேர்ந்த லெவி ஃபிராகல் என்பவர் தான். அவர் உலக பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவராக இருந்தவர்.

அவரை நாம் சென்னைக்கு அழைத்திருந்தோம். அப்போது அவர் சொன்னார், ‘‘நார்வே நாட்டில் உள்ள மிகப்பெரும்பாலான மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். சுவீடனிலும் அதேபோன்றுதான். ஆனால், எங்களால் ஒரு மாதப் பத்திரிகையை நடத்த முடியவில்லை. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வெளிவரும் பத்திரிகையைத்தான் நடத்துகின்றோம். அதேபோன்று தான் ஆஸ்திரேலியாவிலும் வெளிவருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் நாளிதழாக வருகிறது. இது பாராட்டத்தக்கது'' என்றார்.

நார்வேயிலும், ஆஸ்திரேலியாவிலும் வெளிவரும் ஆறு மாத பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளைப் படித்துப் புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமாக இருக் கிறது. ஏனென்றால், பகுத்தறிவு, அறிவியல் சம்பந்தமாகத் தான் எழுதுகிறார்கள், ஆனால், அது ஒரு வறட்டுத் தத்துவத்தினுடைய ஆய்வாக இருக்கிறது - நான்கு விஞ்ஞானிகள் அமர்ந்து பேசினால், அது நமக்கு எப்படி புரியும்? 

டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை

டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை பேசுவது நம்மை ஈர்க்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது என்றால், அவர் இங்கே இருந்து கிளம்பியவர். அதனால், அவர் சொல்வது அனைவருக்கும் புரியும்.

‘‘நிலவில் தண்ணீர் இல்லை என்று ரஷ்யா, அமெரிக் காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால், அவர்கள் சொன்னால் என்ன? உன்னுடைய அறிவு என்ன சொல்லுகிறது என்று மட்டும் பார் என்று யோசனை செய்ததினால்தான், அந்தத் துணிவு எனக்கு வந்த காரணத்தினால்தான், நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது'' என்றார். எளிமையான முறையில் விளக்கினார். 

அப்படி எளிமையைக் கலந்து, மக்களுக்காக, மக்கள் தலைவராக இருந்து, மக்கள் பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு பேசுவதுதான் பகுத்தறிவாளர் கழகத்தின் பணி. மக்கள் இயக்கமாக ஆகியிருப்பதனுடைய ரகசியம் அதுதான்.

வேப்பிலை அடித்தால் போய்விடும், மாரியாத்தா, காளியாத்தா என்றார்கள். அதைக் கண்டு பயந்தார்கள்.

ஊசி மட்டும் போட்டால் போதும் என்று சொன் னார்கள். ஊசி போடுவதற்குப் பயந்தார்கள். 

காளியாத்தா, மாரியாத்தா வந்தாள் என்று சொன்னது எல்லாம் இப்பொழுது நின்று போய்விட்டதே!

பகுத்தறிவாளர் கழகம் அறிவியலோடு சம்பந்தப் பட்டதால், நேரிடையாக இந்த இயக்கத்திற்கு வரு கிறார்கள். பகுத்தறிவாளர் கழகத்தால், அது உணர்த்து கின்ற அறிவியல் விளைவுகளால் நான் பயன்பட்டேன் என்று மதவாதிகள் சொல்லமாட்டார்கள்; அடையாறு ஆனந்தபவன் நிறுவனர் போன்று சொல்லுவார்களா? சொல்லமாட்டார்கள்.

ஆனால், அதேநேரத்தில், மிகப்பெரிய பயன் என்னவென்றால், ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளுக்குள் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்று உங்களுக்கெல்லாம் தெரியும்.

‘‘கருத்தரிப்பு நிலையங்கள்'' வந்ததினால் பகவானுக்கு வேலையில்லை!

அது என்னவென்றால், எங்கே பார்த்தாலும் பெரிய பெரிய விளம்பரப் பதாகைகளை வைத்திருக்கிறார்கள். ‘‘கருத்தரிப்பு நிலையம்'' - ஃபெர்ட்டிலிட்டி சென்டர் என்று.

20, 30 ஆண்டுகளுக்குமுன்பு இந்த விஷயத்தைப் பேசுவதற்கே பயப்படுவார்கள். தாய்மார்களே பேச மாட்டார்கள்.

திருமணம் ஆன பெண்களைப் படுத்துகிறபாடு இருக்கிறதே, ‘‘இன்னும் வயத்துல ஒன்றும் பூச்சுப் பொட்டு இல்லையா?'' என்று கேட்பார்கள்.

வயிற்றில் பூச்சி, பொட்டு வந்தால் வியாதிதான் வரும்.

‘‘கல்யாணம் ஆகி 10 மாசம் ஆகிறதே, வயத்துல ஒன்றும் பூச்சிப் பொட்டு இல்லையா?'' என்று பாடாய்ப்படுத்துவார்கள்.

‘‘அவன் பார்த்து செய்யணுங்க; எல்லாம் நம் கையிலா இருக்கு?'' என்பார்கள்.

‘‘அடுத்த வீட்டுக்காரன் கைகளிலா இருக்கும்?’’

அப்பொழுது பெரியார் கொச்சையாக கேட்டார்; ‘‘ஏண்டா, உன் கைகளில் இல்லாமல், அடுத்த வீட்டுக் காரன் கைகளிலா இருக்கும்?'' என்று பச்சையாகக் கேட்டார்.

அதைக் கேட்கும்பொழுதே ஒரு மாதிரியாக இருக்கும்; ஆனால், அவன் மண்டையில் அடித்தது போன்று கேட்டார். ஏனென்றால், சிலர் அவ்வளவு சீக்கிரத்தில் எழுந்திருக்கமாட்டார்கள்; அவர்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தால்தான் எழுந்திருப்பார்கள்.

ஆனால்,  இப்பொழுது எங்கே பார்த்தாலும், கருத்தரிப்பு மய்யம்; கருத்தரிப்பு மய்யம்! அப்படி என்றால் என்ன அர்த்தம், பகவானுக்கு அவுட்டாப் எம்ப்ளாயிண்ட்மெண்ட். அவருக்கு வேலையே இல்லை - அவருக்கு நோ எம்ப்ளாயிண்ட்மெண்ட்.

பகவான் பிண்டம் பிடித்துப் போடுகிறார் என்று சொல்வார்கள்; அதற்குப் பதில் நான் முடிச்சுப் போடு கிறேன் என்று மருத்துவர் சொல்கிறார். எப்பொழுது முடிச்சுப் போடவேண்டுமோ போடுவோம்; எப்பொழுது முடிச்சை அவிழ்க்கவேண்டுமோ அதை அவிழ்த்து விடுவோம் என்று.

அய்யா அவர்கள் எப்படி பிரச்சாரம் செய்தார் என்பதை உங்களுக்கு விளக்கிச் சொல்கிறேன்.

‘‘இனிவரும் உலகம்!’’

‘‘இனிவரும் உலகம்'' புத்தகத்தில் 1938 ஆம் ஆண்டு எவ்வளவு அழகாக சொல்கிறார் பாருங்கள்.

‘‘ஒரு ரூபாய் சில்லறை கொடுத்தால், அது சரியாக இருக்கிறதா, என்று எண்ணிப் பார்த்துதான், ஜோபியில் போடுகிறார்கள். ஒரு ரூபாய்க்கே எண்ணிப் பார்த்து போடுகிறான். ஆனால், சில விஷயங்களில் அவன் பகுத்தறிவைப் பயன்படுத்த மறுக்கிறான்; பயன்படுத்த பயப்படுகிறான். 

முழு முட்டாள் - அரை முட்டாள் - 

கால்வாசி முட்டாள் - முழு பகுத்தறிவுவாதி!

ஒரு விஷயத்தை சொல்லுகிறேன். ஒன்று, சிலர் நோய் வந்தால், டாக்டரிடம் போவான்.  ஆனால், முழு முட்டாள், டாக்டரிடம் செல்லாமல், கோவிலுக்குள் போவான்.

இரண்டு, அரை முட்டாள், டாக்டரிடமும் செல்வான், சாமியிடமும் போவான்.

மூன்று, கால்வாசி முட்டாள், எனக்காக என் மனைவி கோவிலுக்குப் போகட்டும்; நான் டாக்டரிடம் போகிறேன் என்பான்.

முழுப் பகுத்தறிவுவாதி என்பவன், நோய் வந்தால் டாக்டரிடம்தான் போகவேண்டுமே தவிர, வேறு குழவிக் கல்லிடம் போய் என்ன பலன்?'' என்றார்.

நம்மைவிட தீவிரமான வேலையை செய்கிறவர்கள் கருத்தரிப்பு மய்யம் நடத்துபவர்கள்!

இதை முழுமையாக நினைத்ததால்தானே கருத்தரிப்பு மய்யம். எங்கே பார்த்தாலும் கருத் தரிப்பு மய்யம் வந்தாயிற்றே. அவர்கள் எல்லாம் நம் இயக்கத்தில் சேராதவர்கள்தான். ஆனால், நம்மைவிட தீவிரமான வேலையை செய்கிறார்கள் அல்லவா!

‘‘Anti-God, Anti-God'', வேலையை அல்லவா செய்கிறார்கள்.

அமெரிக்காவில் டார்வின் தியரியை இன்னும் ஒப்புக்கொள்ளமாட்டேன் என்கிறார்கள். ‘‘போடா, உன் வேலையைப் பார்த்து, நாங்கள் உண்டாக்கிக் காட்டு கிறோம்'' என்கிறார்கள்.

பகுத்தறிவு வளர, வளர, வளர புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் மாற்றங்கள் ஆகியன வளர்ச்சி பெறும். அவற்றை பகுத்தறிவுடைய மனிதன் மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும்.

ஊடகங்கள் அந்தப் பணிகளைச் செய்யாமல் மூடநம்பிக்கை நிகழ்வுகளை ஒளிபரப்புகின்றன!

ஆனால், நம்முடைய நாட்டில் அவற்றைச் சொல் லாமல், ஊடகங்கள் அந்தப் பணிகளைச் செய்யாமல், திரும்பத் திரும்ப ‘சூரசம்ஹாரம்' நிகழ்ச்சி என்று காட்டி அதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.

ஆகவே, பகுத்தறிவுப் பணியை நாம் மட்டும்தான் செய்கிறோம். இது ஒரு சறுக்குமர பணி போன்றதாகும். ஆனால், மகிழ்ச்சியான பணி - ஓர் அறிவியல் பணி - சமூகத்திற்கான பணி - இந்தப் பணி இன்றைக்கு இவ் வளவு சிறப்பாக வளர்ச்சி பெற்று வந்ததினால்தான், இன்றைக்கு எல்லோரும் ஏற்கக்கூடிய அளவிற்கு வந் திருக்கிறது.

அன்றைக்கு அய்யா அவர்கள் ‘‘இனிவரும் உலக''த்தில் சொன்னார் - எல்லோருடைய கைகளிலும், சட்டைப் பைகளிலும் தொலைப்பேசி இருக்கும்'' என்று சொன்னார். இன்றைக்கு எல்லோரும் அதேபோல வைத்திருக்கிறார்கள்.

80 ஆண்டுகளுக்கு முன்பே 

தந்தை பெரியார் சொன்னார்!

ஆனால், இப்பொழுது அந்த செல்போனைப் பயன் படுத்துகின்றவர்களுக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இப்படி சொன்னார் என்ற விஷயம் தெரியாது.

அப்படியெல்லாம் இன்றைக்கு சமூகத்தில் மாறுதல் வந்த பிறகும், மூடநம்பிக்கைகள் இன்னும் இருக்கிறது.

(தொடரும்)


No comments:

Post a Comment