மற்ற மாநிலங்களும் பீகாரைப் பின்பற்றட்டும்! விகிதாசார அடிப்படையில் சமூகநீதி கிடைக்கட்டும்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

மற்ற மாநிலங்களும் பீகாரைப் பின்பற்றட்டும்! விகிதாசார அடிப்படையில் சமூகநீதி கிடைக்கட்டும்!!

*   ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி பீகார் மாநிலம் முன்னுதாரணமாகி, ஒளிவீசுகிறது!

* எந்தெந்த பிரிவினருக்கு கல்வி, உத்தியோகங்களில் எத்தனை விழுக்காடு கிடைக்கிறது என்பது இதன்மூலம் வெளியாகிவிட்டது!

இந்தியாவிலேயே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி சாதனை படைத்துள்ளது பீகார் மாநில அரசு. இதன்மூலம் எந்தெந்த பிரிவினருக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் எத்தனை விழுக்காடு கிடைத் துள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்துவோம் - பீகாரைப் பின்பற்றி மற்ற மாநிலங்களிலும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு  எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

பீகார் மாநிலம் அசோகரின் அமைதிப் புரட்சி மண். இன்று  சமூகநீதி ஒளி வீசி இந்தியாவிற்கு வழிகாட்டி யுள்ளது!

சமூகநீதி - இட ஒதுக்கீடு என்பது காலங்காலமாய் கல்வி, அரசுப் பணிகளில், தனியார்த் துறைகளில் ஒடுக் கப்பட்ட மக்களான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., என்ற பெரும் பான்மையோருக்கு வாய்ப்புக் கதவுகளை மூடியே வைத்த சமூக அநீதிக்கு விடை கொடுக்கவே ஏற்பட்ட ஏணியேயாகும்.

மண்டல் என்ற மாமனிதர் கொண்டுவந்த கலங்கரை வெளிச்சம்!

‘பி.பி.மண்டல்' என்ற மாமனிதரின் பரிந்துரைகள், பள்ளத்தில் வீழ்ந்திருந்த ஒடுக்கப்பட்டோருக்கு விழி பெற்று பதவி கொள்ளச் செய்ய சரியான கலங்கரை வெளிச்சமாகியது!

‘சமூகநீதிக்காவலர்'  மேனாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு பிற்படுத் தப்பட்டோர் என்றென்றும் கடமைப்பட்டவர்கள்.

தமிழ்நாடு - திராவிட பூமி - பெரியார்தம் வகுப்புரிமை மண் முதலாவது சட்டத் திருத்தத்தின்மூலம் 1951 லேயே புது வழியைக் காட்டியது.

தமிழ்நாட்டில் அதன் பரிணாம வளர்ச்சியே, விழிப் புணர்வு காரணமாக ஏற்பட்ட வெற்றியின் வெளிச்சமே, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாது, கல்வி, உத்தியோக, வேலை வாய்ப்புகளில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகி யோருக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு - அதுவும் 9 ஆவது அட்டவணை பாதுகாப்புடன் கூடிய அர சமைப்புச் சட்டத்தின் 76 ஆவது திருத்தமாக ‘பெருஉரு' (விஸ்வரூபம்) எடுத்தது!

மற்ற மாநிலங்களில் இந்த உணர்வுத் தீ மெல்ல மெல்ல - ஆனால், உறுதியாகப் பரவத் தொடங்கியது!

அதைத் தடுக்க நீதிமன்றங்களில் உள்ள முன்னேறிய பிரிவைச் சார்ந்த உயர்ஜாதியினரான நீதிபதிகள் சில வழிமுறைகளை மிக லாவகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்!

நீதிமன்றங்களின் இரட்டை நாக்கு!

‘‘இத்தனை சதவிகித இட ஒதுக்கீடு கேட்கிறீர்களே, சட்டம் அல்லது ஆணை பிறப்பிக்கக் கேட்கிறீர்களே, அதனை நியாயப்படுத்த போதிய முறையான கணக் கெடுக்கப்பட்ட புள்ளி விவரத் தொகுப்பு உங்களிடம் உள்ளதா?'' (‘Have you got quantifiable Data?') என்று கேட்டனர்.

(ஆனால், EWSஎன்ற ‘‘உயர்ஜாதி ஏழைகள்'' என்ற நாள் ஒன்றுக்கு 2,222 ரூபாய் சம்பாதிக்கும் ஏழை(?)களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்குரிய அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு முன் எந்த Quantifiable Data  கணக்கெடுப்பு புள்ளி விவர அடிப்படைபற்றி உச்சநீதி மன்ற வழக்கில் வாதாடியபோதுகூட கேள்வி எழுப்பவே இல்லை - காரணம் வெளிப்படையாக எல்லோரும் அறிந்ததே!)

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி அவர்களும் அங்குள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி பா.ஜ.க.வினர் உள்பட பிரதமரை நேரில் ஒரு தூதுக்குழுவாகச் சந்தித்து ஜாதி வாரிக் கணக்கெடுப்புத் தேவை என்று கேட்ட பிறகும்கூட, பிரதமர் மோடி அதற்கு இணக்கமான நடவடிக்கை ஏதும் எடுக்காமல் புறக்கணித்தார்!

பீகார் மாநிலம் நடத்திக் காட்டிய 

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு

நீதிமன்ற வழக்குகளையும் தாண்டி, பீகார் அரசு உறுதியாக நின்று, சமூகநீதிக்கான இட ஒதுக்கீடு கேட்பது எவ்வளவு தேவையானது? எவ்வவு நியாயமானது? என்பதை உலகோருக்கும், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் திற்கும் புரிய வைக்க இப்படி ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், பீகாரில் ஜாதிவாரிக் கணக் கெடுப்பை சிறப்பாக முடித்து, புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

மிகப்பெரிய அரிய சாதனை - மோடி அரசின் இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்திடும் சாதனை இது!

பீகாரில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவரம் வருமாறு:

1.  பிற்படுத்தப்பட்டோர்

   (மிகவும் பிற்படுத்தப்பட்டோரையும்

  சேர்த்து) - 63.14%

2. எஸ்.சி., மக்கள் - 19.65%

3. எஸ்.டி., மக்கள் - 1.68%

4. இட ஒதுக்கீடு இல்லாத

    பொதுப் பிரிவினர் - 15.52%

பீகாரில் மத வாரியாக....

1. ஹிந்து - 81.99%

2. முஸ்லிம் - 17.70%

3. கிறிஸ்துவர் - 0.05%

4. சீக்கியர் - 0.011%

5. பவுத்தர்கள் - 0.085%

6. சமணர்கள் (ஜெயின்) - 0.0096%

7.  மற்றவர்கள் - 0.1274%

8. மதமற்றவர்கள் - 0.0016%

இதன்மூலம் 63 சதவிகித பிற்படுத்தப்பட்டோரையும், 21 சதவிகித எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரையும் இணைத்துப் பார்த்தால், 84 சதவிகிதம் பேர் உள்ள பெரும்பாலானோரில் எத்தனை சதவிகிதத்தினர் கல்வி, அரசுப் பணிகளில், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் மற்றும் ஊடகத் துறைகளில், தனியார்த் தொழில் நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளனர்? என்ற கேள்வி ஒடுக்கப்பட்ட மக்களி டையே கேட்கப்பட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தான் உண்மையான சமூகநீதி ‘அனைவருக்கும் அனைத்தும்' கிட்ட முடியும்? அதற்கு இது ஒரு சிறந்த ஆயுதம் ஆகும்.

EWS இட ஒதுக்கீடு சட்டப்படி சரியானதுதானா?

உயர்ஜாதியினர் மற்றவர்களது பங்கை பல்லாண்டு காலம் அனுபவித்து வருகின்றனர். ஏற்கெனவே கொழுத்த அவர்களுக்கே புதிய 10 சதவிகித EWS இட ஒதுக்கீடு என்றால், அதைவிட நிர்வாணமான சமூக அநீதி வேறு உண்டா? இது களைந்தெறியப்பட வேண்டாமா?

50 சதவிகிதம் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது - எதிலும் இல்லாத ஒன்றை உச்சநீதிமன்றமே ஒரு வழக் கில் அதுவும் Obiter Dicta போது வழக்கிற்கு சம்பந்த மில்லாத கருத்தாக சொன்னதை சட்டம்போல ஆக்கி வைத்து ஒடுக்கப்பட்டோர் உரிமையைப் பறித்திருக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டாமா?

நாடு தழுவிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதி சட்டப் படி கிட்ட, ஒரே வழி, ‘இந்தியா' கூட்டணியை தேர்தலில் வெற்றி பெற வைத்து, ஒன்றியத்தில் உள்ள 

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மோடி தலைமையிலான அரசை 2024 இல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர் தலில் தோற்கடிக்க ஒடுக்கப்பட்டோர் ஓரணியில் திரளவேண்டும்.

மற்ற மற்ற மாநிலங்களும் 

பீகாரைப் பின்பற்றட்டும்!

தமிழ்நாடு உள்பட எல்லா மாநிலங்களும் பீகாரைப் பின்பற்றி, மாநிலக் குழுக்களை காலதாமதமின்றி அமைத்து செயல்படட்டும்.

ஒன்றிய ஆட்சி மாற்றத்திற்கு இதுவே எளிய வழி - உடன் செய்க!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதல மைச்சர் தேஜஸ்வி ஆகியோருக்கு நமது பாராட்டும், வாழ்த்தும்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.10.2023


No comments:

Post a Comment