பாச உணர்வு ‘பளிச்சிட்ட' தஞ்சை விழா - ஆ.வந்தியத்தேவன் ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

பாச உணர்வு ‘பளிச்சிட்ட' தஞ்சை விழா - ஆ.வந்தியத்தேவன் ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர்

திராவிட இயக்க வரலாற்றில் பல பொன்னேடு களைக் கொண்ட புகழ்மிக்க நகரம்தான் தஞ்சை மாநகரம்! பெரியாரும் - அண்ணாவும் உருவாக்கிய திராவிட இயக்க உணர்வுகள் நீறு பூத்த நெருப்பாய் நூற்றாண்டுகளாக கனன்று கொண்டிருக்கும் மறு மலர்ச்சிப் பாசறைதான் - பகைக்கு அஞ்சா பாடி வீடுதான் தஞ்சை பெருநகரம்!

தராசுத் தட்டில் தந்தை பெரியாரை அமர வைத்து எடைக்கு எடை வெள்ளி நாணயங்களை அள்ளித் தந்து, சட்ட எரிப்பு போராட்டத்தில், எந்தத் தியாகத் திற்கும் தயார்! தயார்! என தோள்தட்டி தொடை தட்டி, போராட்ட வீரர்களின் பட்டியலைத் தந்து, சிறைக் கொடுமைகளை ஏற்றுக் கொண்டு உயிர்ப் பலியான தியாக வேங்கைகள் களமாடிய வீரம் செறிந்த மண்தான், தஞ்சை மண்!

தந்தை பெரியாருக்கு பிரச்சார ஊர்தி வழங்க முடிவெடுத்தபோது, தமிழ்நாட்டிலேயே அதிக அளவு நிதி தந்து, அந்த விழாவையும் எழுச்சியுடன் நடத்தி, முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தங்கச் சாவியை பெரியாரிடம் வழங்க, முத்துப் பல்லக் கில் தந்தை பெரியாரும், ஆசிரியர் வீரமணி அவர் களும் அமர்ந்து ஊர்வலத்தில் வலம் வர, ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு அய்யா பெரியார் கணையாழி அணிவித்துப் பாராட்ட கோலாகலமாய் விழா எடுத்து புதிய எழுச்சியை உருவாக்கியது தஞ்சை மாநகரம்!

ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கி, அந்த நிதி தலைநகர் டில்லியில் பெரியார் மய்யமாய் உருவாகி, இன எதிரி களால் அது தகர்க்கப்பட்டபோது, திராவிட இயக்கப் போர்வாள் தலைவர் வைகோ கொதித் தெழுந்து போராடி அதன் பயனாக புதிய பெரியார் மய்யம் பொலிவுடன் காட்சியளிக்க கடமையாற்றி இவைகளுக் கெல்லாம் அடித்தளம் போட்ட நகரம் தஞ்சை மாநகரம்!

இத்தகைய பெருமைகளின் பிறப்பிடமான தஞ்சையில் 06.10.2023 அன்று கலைஞரின் நூற்றாண்டு விழாவை எழுச்சியுடன் நடத்தி, புகழுக்கு புகழ் சேர்த் தது திராவிடர் கழகம்! 'தாய் வீட்டில் கலைஞர்' என்ற ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் தொகுக்கப்பட்ட நூல் வெளியீட்டு விழாவும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விருது வழங்கி பாராட்டப்பட்ட நிகழ்வும், கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு மகுடம் சூட்டப்பட்டதாய் பொலிவுடன் அமைந்தது!

"தேசிய ஜனநாயகக் கூட்டணியை அன்று கலை ஞர் உருவாக்கியதைப் போல, இந்தியா கூட்டணியை உருவாக்கி திராவிட ஏவுகணையாய் செயல்படும் நம் முதலமைச்சரைக் கண்டு பிரதமர் மோடி மிரட்சி அடைந்து ஆந்திராவின் தெனாலி நகரில் பிதற்றுகிறார். இந்தியா கூட்டணிதான் நாட்டை ஆளப் போகிறது! பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார் என்ற கலைஞரின் கவிதை வரிகளுக்கேற்ப இன்னும் இடிக்கப்பட வேண்டிய வைகளை தகர்த்தெறிய விழிப்புடன் செயல்படுவோம்” என்று தாய்க்கழகம் என்ற பாச உணர்வோடு - உறவோடு முதலமைச்சர் மாண்புமிகு - மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் புகழாரம் சூட்டினார் ஆசிரியர் கி.வீரமணி!

“இந்தியா கூட்டணி" என்பது தேர்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; வெற்றிக்குப் பின்னால் அமையப் போகும் ஆட்சியில் கோலோச்ச வேண்டிய கொள் கையை மனதில் வைத்தே நாங்கள் செயல் படுகிறோம்! கல்வி உரிமை, நிதி உரிமை, சமூக நீதி உரிமை, மொழி உரிமை, இன உரிமை, மாநில சுயாட்சி உரிமை ஆகிய அனைத்து உரிமைகளும் மீட்கப்படும், மீட்கப்பட்டே தீர வேண்டும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழாவில் முழங்கிய முழக்கம் போர்ப் பிரகடனமாக முரசொலித்தது!

*தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று அறிஞர் அண்ணா சொன்னார்; தி.க.வும், தி.மு.க.வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கலைஞர் சொன்னார்; என்னைப் பொறுத்த வரையில் தி.க.வும், தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல, உயிரும் உணர்வும் இணைந்து உடல் இயங்கு வதைப் போல நம் இனத்தின் உயர்வுக்காக தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும்; ஆட்சியை தந்தை பெரியாருக்கு காணிக்கை என்றார் அண்ணா; தமிழ்நாடு அரசுதான் பெரியார், பெரியார் தான் தமிழ்நாடு அரசு என்றார் கலைஞர், நானும் அதையே உங்கள் அனைவரின் சார்பில் வழிமொழிகிறேன். உங்களுடைய பலத்த கரவொலிக்கிடையே மீண்டும் அதை நான் வழிமொழிகிறேன்" என்றும் முதலமைச்சர் அவர்கள் அங்கே நிகழ்த்திய உணர்ச்சிமிகு சூளுரை, கருஞ்சட்டைத் தோழர்களை மட்டுமல்ல, திராவிட இயக்க உணர்வாளர்கள் அனைவரையும் குளிர வைத்துள்ளது!

“குடிஅரசு இதழின் துணை ஆசிரியராக 40 ரூபாய் ஊதியத்தில் வேலை பார்த்தது, அன்னை மணியம் மையார் கையாலே ஓராண்டு காலம் சாப்பிட்டது, தன்னுடைய குருதியைத் தொட்டு திராவிடர் கழக கொடியை உருவாக்கியது. புதுவையில் கலைஞர் தாக்கப்பட்ட நேரத்தில், தந்தை பெரியார் அவர்கள் ஓடோடிச் சென்று மடியில் படுக்க வைத்து மருந்து போட்டது. என்னுடைய அண்ணன் மு.க.முத்து பிறந்த போது, குழந்தையை பெரியார் கையில் கொடுத்து அழகு பார்த்தது. என் அண்ணன் அழகிரியின் திரு மணம் நடைபெற்றபோது, அந்த திருமணத்திற்கு பெரியார் வந்து வாழ்த்தியது, பெரியார் திடலில் திருமணம் நடந்து முடிந்த பிறகு, கோபாலபுரம் இல்லத் திற்கு பெரியாரை அழைத்து விருந்து உபசரித்தது. அப்போது பெரியாருக்கு நான் உணவு பரிமாறியது முதலான எத்தனையோ காட்சிகள் தாய் வீட்டில் கலை ஞர் என்ற இந்த நூலில் இடம்பெற்று இருக்கின்றன. இந்த நூலை உருவாக்கியுள்ள ஆசிரியர் அவர்களை நான் உள்ளபடியே நன்றி உணர்வோடு பாராட்டுகிறேன் என்று சொல்லக் கூடாது வணங்குகிறேன். வணங்குகி றேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டு முறை குறிப்பிட்டு நிகழ்த்திய உரை அனை வரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது!

*வீரமணியிடம் இருந்து விலகி நிற்கவும், பெரியார் திடலை சற்று ஒதுக்கி வைக்கவும்" என்று ராஜ ரிஷியாய் சிலர் நஞ்சு கலந்த பாலை, ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் சதி ஆலோசனையாய் வழங்கி வரும் குள்ளநரிக் கூட்டத்திற்கு இந்த விழாவில் தக்க பதிலை பக்குவமாய் சொல்லிவிட்டார் முதலமைச்சர்.

"தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் இல்லாத நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவர் ஆசிரியர் வீரமணி என்று தலைவர் கலைஞர் குறிப் பிட்டார். என்னைப் பொறுத்தவரையில், இவர்களோடு தலைவர் கலைஞர் அவர்களும் இல்லாத நேரத்தில், எனக்கு கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் அய்யா ஆசிரியர் அவர்கள்தான். அதனால்தான்நான் போக வேண்டிய பாதையை தீர்மானிப்பது பெரியார் திடல் தான் என்பதை நேற்றும் சொன்னேன் இன்றைக்கும் சொல்கிறேன் நாளைக்கும் சொல்வேன்" என்று நெஞ்சை நிமிர்த்தி இலட்சிய உறுதியோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிகழ்த்திய உணர்ச்சி உரை, தம் நிலைப்பாட்டை அறிவிக்கும் பிரகடனமாகவே அமைந்துவிட்டது.

'மிசா காலத்திலே, சிறைச்சாலை இருட்டறையில் எனக்கு தைரியம் கொடுத்தவர்தான் அய்யா ஆசிரியர் அவர்கள்! அவர் அழைத்தால் எங்கும் போவேன் எப்போதும் போவேன் எந்த நேரத்திலும் போவேன்! காரணம், என்னைக் காத்தவர் இன்றைக்கும் காத்துக் கொண்டு இருக்கக் கூடியவர் ஆசிரியர் வீரமணி" என்று உள்ளம் உருகி முதலமைச்சர் உரையாற்றிய போது, மேடையில் அமர்ந்திருந்த ஆசிரியர் கி.வீர மணி அவர்களும், எதிரே அமர்ந்திருந்த பெரியார் தொண்டர்களும், தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த கொள்கை உறவுகளும் பாசப் பிணைப் பால் நெகிழ்ந்து பரவசமான நிலையை எழுதுவதற்கு நமக்கு எழுத்துக்கள் கிடைக்கவில்லை!

"தமிழ்நாட்டு நாடாளுமன்ற, மக்களாட்சி உரிமை களுக்கு கேடு விளைவிக்க மோடி அரசு பார்க்கிறது. மக்கள் தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் சதிச்செயலை அவர்கள் அரங்கேற்றப் பார்க்கிறார்கள். குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை முறையாக செயல் படுத்தியதற்காக, தமிழ்நாட்டிற்குத் தண்டனையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கிறார்கள்.

39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்கள் என்றால், நம்முடைய உரி மையை எடுத்துச் சொல்ல உரிமையை நிலைநாட்டச் செல்கிறார்கள் என்று பொருள் - இந்த எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்று சொன்னால் அது பொருத்தம் - ஆனால் அது குறையக் கூடாது. குறையவிடக் கூடாது என்று கலைஞர் நூற்றாண்டு விழாவில், முதல மைச்சர் உரிமை முழக்கமிட்டபோது...

சென்னை காமராசர் அரங்கத்தில், காங்கிரஸ் கட்சி நடத்திய சிறப்புக் கூட்டத்தில், கலந்து கொண்டு உரையாற்றிய திராவிட இயக்கப் போர்வாள் தலைவர் வைகோ அவர்கள் மோடி அரசின் இந்த சதிச் செயல் அரங்கேறினால், சோவியத் யூனியன் சிதறியதைப் போல இந்தியா துண்டு துண்டாக தூள் தூளாக சிதறிப்போகும் - சின்னா பின்னமாகும் என்று எச்சரித்த காட்சி, நம் நெஞ்சில் நிழலாடியது!

"ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வந்துவிடும்; உங்களுக்கு பிடிக்காது! இருந்தாலும் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. ஓய்வெடுத்து பணியாற்றுங்கள். பெரியாரையும், கலைஞரையும் கடந்து நீங்கள் வாழ வேண்டும். பெரியாரின் ஆட்சிக்கு நாங்கள் காரணகர்த் தாக்கள்! பெரியாரின் மாட்சிக்கு வீரமணிதான் காரணம் என்று சொன்னார் தலைவர் கலைஞர். பெரியாரின் மாட்சி இன்னும் பரவ, நீண்ட காலம் நீங்கள் வாழ வேண்டும்'' என்று ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பார்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவாக நிகழ்த்திய உரையில், பாசமும் அன்பும் நிறைந்து நின்றதைக் கண்டு அனைவரும் நெகிழ்ச்சி அடைந் தார்கள்! 

பெரியாரும் அண்ணாவும் ஊட்டி வளர்த்த குடும் பப் பாச உணர்வு ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி -மென்மேலும் செழித்து, தழைத்து வற்றாத பசுமைமிகு பெரு வயலாய் பரவிக் கிடக்கிறது என்பதற்கு சான்றாக தஞ்சை கலைஞர் நூற்றாண்டு விழா அமைந்திருந்தது!

கலைஞர் நூற்றாண்டு விழாவை மட்டுமல்ல, பலவேறு நூற்றாண்டு விழாக்களையும் பெரியார் திடலில் நடத்தி அமைதிப் புரட்சியை நடத்திக் காட்டியிருக்கிறது திராவிடர் கழகம்!

பேராசிரியர் புலவர் மா.நன்னன், சிவகங்கைச் சீமையில் கழகம் வளர்த்த வழக்குரைஞர் இரா. சண் முகநாதன், வாலிபப் பெரியார் ஏ.வி.பி.ஆசைத் தம்பி, திராவிடர் கழக முதல் பொருளாளர் ‘தளபதி’ ந.அர்ச் சுனன் மன்றாடியார், அம்மையார் சத்தியவாணிமுத்து ஆகியோரின் நூற்றாண்டு விழாக்களை பெரியார் திடலில் நடத்தியதோடு, நூற்றாண்டு நாயகர்களின் குருதி வழி உறவுகளையும் அழைத்து, அவர்களுக்கும் சிறப்பு செய்து நூற்றாண்டு கண்டு நம் நினைவில் வாழும் அந்த பெருந்தகையாளர்களின் அளப்பரிய தொண்டிற்கு நன்றி செலுத்தியது திராவிடர் கழகம். நூற்றாண்டு நாயகர்களை மட்டுமல்ல, வைக்கம் போராட்டம், சேரன்மகாதேவி குரு குலப் போராட்டம், தோள்சீலைப் போராட்டம் முதலான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளையும் பெரியார் திடலில் விழா எடுத்து, உரிமைப் போரின் வீர வரலாற்றை பெருமை யுடன் நினைவு கூர்ந்தது திராவிடர் கழகம்!

தாய்க்கழகத்தின் தன்னிகரற்ற இப்பணிகளை, தி.மு. கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு அரசின் முததல மைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டி வாழ்த்தியதை திராவிட இயக்கப் போர்வாளாம் தலை வர் வைகோ அவர்களின் தலைமையிலான மறு மலர்ச்சி தி.மு.கழகமும் வழிமொழிந்து வாழ்த்துகிறது. 'முரசொலி'யின் ‘சங்கொலி'யின் முழக்கமும், சங்க நாதமும் இணைந்து 'விடுதலை'க்கு வாழ்த்துக் கூறு கிறது. 

திராவிடப் பெருங்குடும்பமாய் இணைந்து நிற்கும் நம்மால் இன எதிரிகளை வீழ்த்தவும், பெரியாரி யலின் துணை கொண்டு தமிழர் தம் உரிமைகளை வென் றெடுக்கவும் முடியும் என்பதை நாளைய வரலாறு சொல்லும்; திராவிடம் வெல்லும்!

- நன்றி: ‘சங்கொலி', 27.10.2023


No comments:

Post a Comment