தமிழர் தலைவரின் முதற்கட்ட சுற்றுப்பயணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 26, 2023

தமிழர் தலைவரின் முதற்கட்ட சுற்றுப்பயணம்!

ஜாதிதான் வர்ணாஸ்ரமத்தின் மூலாதாரம்; அதைப் புதுப்பிக்கத்தான் ‘‘மனுதர்ம யோஜனா!”

நாகப்பட்டினம், செம்பனார்கோவில் பகுதிகளில் ஆச்சாரியார், ஆர்.எஸ்.எஸ்.சை அம்பலப்படுத்தினார் ஆசிரியர்! 

நாகை, அக். 26 ஜாதிதான் வர்ணாஸ்ரமத்தின் மூலாதாரம்; அதைப் புதுப்பிக்கத்தான் “மனுதர்ம யோஜனா” என்று நாகப்பட்டினம், செம்பனார்கோவில் பகுதிகளில் ஆச் சாரியார், ஆர்.எஸ்.எஸ்.சை அம்பலப்படுத்தினார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

ஒன்றிய அரசின் “மனுதர்ம யோஜனா” திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற தொடர் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நாகப்பட்டினத்தில் முதல் கூட்டம்!

குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? என்று ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து நடைபெறும் தொடர் பரப்புரைக் கூட்டத்தின் தொடக்க விழா - நாகப்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு அரு கிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க அவுரித்திடலில் நேற்று (25.10.2023) மாலை 5.30 மணிக்கு முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையேற்க, செயலாளர் புபேஷ் குப்தா முன்னிலை வகித்தார். தி.மு.க. மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு அரசின் மீன் வளர்ச்சிக் கழகத் தலைவருமான நாகை என்.கவுதமன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சி.பி.அய். மாரிமுத்து, சி.பி.அய். மாவட்டச் செயலாளர் குரு பாண்டியன், தி.மு.க. தலை மைச் செயற்குழு உறுப்பினரும், பகுத்தறிவாளர் கழகத் தின் மாநில அமைப்பாளருமான இல. மேகநாதன், நாகை நகர்மன்றத் தலைவரும், தி.மு.க. நகரச் செயலாளருமான மாரிமுத்து, காங்கிரஸ் கட்சி மாவட்டத் துணைத் தலைவர் காதர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் இப்ராகிம், வழக்குரைஞர் நாகை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். 

தலைமைக் கழக அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கழகக் காப்பாளர் முருகையன், மாவட்டத் துணைத் தலைவர் பொன்.செல்வராசு, நாகை நகரத் தலைவர் செந்தில்குமார், மாநில விவசாய தொழிலாளரணிச் செய லாளர் வீரையன், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் சிவக்குமார், திருவாரூர் மாவட்டத் தலைவர் மோகன், செயலாளர் கோவிந்தராசு, பகுத்தறி வாளர் கழக மாவட்டத் தலைவர் மு.க. ஜீவா, திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண் கார்த்திக், ரெ.துரைசாமி, இரா.இராமலிங்கம், இரா.முத்துக் கிருஷ்ணன், ராச.முருகையன்,  நாத்திக பொன்முடி, மு.இளமாறன் சு.ராஜ்மோகன், மு.குட்டிமணி ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

ஆசிரியருக்கு முன்னதாக கழகத்தின் பொதுச்செய லாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார். நிறைவாக, தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். 

தமிழர் தலைவர் தமது உரையின் தொடக்கத்திலேயே, “மனுதர்ம ஆட்சியை ஒழித்து மனிததர்ம ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இக் குலக்கல்வித் திட்டம் வந்திருக்கிறது என்று நேரடியாக விசயத்திற்கு வந்தார். ‘‘கடித்தாலே சாகடிக்கிற பாம்புக்குப் பெயர் நல்ல பாம்பு? அதைப்போலத்தான் விஸ்வகர்மா யோஜனாவும் - இது மனுதர்ம யோஜானா தான்” என்று அதன் வீரியத்தை தொடக்கத்திலேயே பட்டென்று போட்டுடைத்தார். பிறகு, அவுரித் திடலின் வரலாற்றுச் சிறப்புகளையும், 10 வயதிலிருந்தே தான் அதில் சம்பந்தப் பட்டிருப்பதையும் சுருக்கமாக எடுத்துரைத்தார். 

ஒன்றிய அரசு கொண்டு வந்த மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தைப்பற்றி பேச்சின் இடையில் நினைவூட்டிப் பேசும் போது, “சீனி சக்கரை சித்தப்பா... எடுத்து சும்ம நக்கப்பா...” என்று முத்தமிழறிஞர் கலைஞர் குறிப்பிடும் பழமொழியை நகைச்சுவையுடன் எடுத்துக்காட்டி, மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, ‘இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த 33% மகளிர் இட ஒதுக்கீடு அமலுக்கு வரும்” என்பதை பலத்த கையொலிகளுக்கிடையே கூறினார். தொடர்ந்து பா.ஜ.க. மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக ஏன் கொண்டு வரவில்லை?” என்றொரு கேள்வி கேட்டு, ’ஹிந்து மதத்தில் உயர் ஜாதிப் பெண்களும் நமோ சூத்திரர்கள் தான்’. அதனால்தான் பா.ஜ.க. அரசு தேர்தலுக்காக ஒரு நாடகம் ஆடியிருக்கிறது'' எனும் பொருளில் எடுத்துரைத்து மக்களுக்கு விளங்க வைத்தார். 

இப்போது இல்லாவிட்டால் 

வேறு எப்போதும் இல்லை!

மேலும் அவர் இதன் தொடர்ச்சியாக, “இந்த மனுதர்ம ஆதிக்கத்தை எதிர்க்கத்தான் திராவிடர் இயக்கம் பிறந்தது; நீதிக்கட்சி பிறந்தது; சுயமரியாதை இயக்கம் பிறந்தது; திராவிடர் கழகம் பிறந்தது” என்று சரமாரியாக அடுக்கினார் பலத்த கைதட்டலுடன். உரையை முடிக்கும் தருவாயில், நீடாமங்கலம் ஆறுமுகம், பட்டுக்கோட்டை டி.வி.டேவிஸ் ஆகியோர் குலக்கல்வியை எதிர்த்து படைதிரட்டி சென்னையை நோக்கி வந்ததை நினைவூட்டி, ”ஆட்சி போகும் தருவாயிலும் ஏன் இதுபோன்ற மக்கள் விரோத திட்டங்கள் வருகின்றன?” என்றொரு கேள்வி கேட்டு, “இப்போது இல்லாவிட்டால் வேறு எப்போதும் இல்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள். நமது நிலையும் அதுதான். இப்போது இல்லாவிட்டால் வேறு எப்போதும் இல்லை. ஆகவே, புரட்சிக்கவிஞர் சொன்னது போல், ஓடப்பராக இல்லாமல் ஓட்டப்பராக மாறி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை விரட்டுங்கள்” என்று கூறி தமிழர் தலைவர் ஆசிரியர் தன் உரையை நிறைவு செய்தார். 

நாகை ஒன்றிய செயலாளர் சின்னதுரை நன்றியு கூறி நிறைவு செய்தார். அங்கிருந்து தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலுக்கு காவல் துறையின் வாகனங்கள் அணிவகுக்க ஆசிரியர் புறப்பட்டுச் சென்றார்.

செம்பனார்கோவிலில் இரண்டாவது கூட்டம்!

தொடர் பரப்புரைக் கூட்டத்தின் இரண்டாம் கூட்டம் செம்பனார்கோவில் மேல முக்கூட்டு, பேருந்து நிலையம் அருகில் மாலை 5 மணிமுதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாகப்பட்டினம் அவுரித்திடலிருந்து 8 மணிக்குப் புறப்பட்டு 9.15 மணிக்கு இரண்டாம் கூட்டத்திற்கு ஆசிரியர் தம் படையணியுடன் வந்து சேர்ந்தார். அப்போது பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பேசிக்கொண்டிருந்தார். பரப்புரை வாகனம் முன்னதாகவே, அவுரித்திடலில் பேசி முடித்திருந்த பொதுச்செயலாளருடன், பரப்புரைப் பயணத்திற்கு என்றே தயார் செய்யப்பட்டிருந்த, ‘ஆபத்து! ஆபத்து! மீண்டும் குலக்கல்வி திணிப்பா?’, ’ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை’, ‘ஸநாதன ஒழிப்பு ஹிந்துக்களுக்கு எதிரானதா?’, மகளிர் இட ஒதுக்கீடும், சமூகநீதியும்’ என்ற நான்கு புத்தகங்களுடன் புறப்பட்டு செம்பனார் கோவிலுக்கு வந்திருந்தது. 

நிகழ்வில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையேற்க, மாவட்டச் செயலாளர் கி. தளபதிராஜ் வரவேற்க, பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்கவுரையாற்ற, தி.மு.க. மாவட்டச் செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் பரப்புரைப் பயணம் வெற்றி பெற வாழ்த்திப் பேசினார். தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் பி.எம்.அன்பழகன், தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி தஞ்சை மண்டல பொறுப்பாளர் நந்தினி சிறீதர், தி.மு.க. செம்பை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம். அப்துல்மாலிக், தி.மு.க. மத்திய செம்பை ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் கொளஞ்சி சந்திரமோகன், தி.மு.க. குத்தாலம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மங்கை எம்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.

நிறைவாக ஆசிரியர் உரையாற்றினார். “ஜாதிதான் வர்ணாஸ்மரத்தின் மூலாதாரம். அதனால்தான் ஜாதியை புதுப்பிக்க வந்திருக்கிறது விஸ்வகர்மா யோஜானா” என்று கூறியே தொடங்கி, நேரமின்மையை சொல்லாமல் கவனப்படுத்தினார். சந்திர ராஜன், பரசலூர் எஸ்.பி.கே.கோதண்டபாணி, தியாக வர்ணம் காவேரியம்மாள், அண்மையில் மறைந்த கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி, ‘மிசா' மதிவாணன், கணேசன், தில்லையாடி சுப்பையன், கிடங்கல் சம்பந்தம் போன்றோரை நன்றியுடன் நினைவு கூர்ந்து பேசினார். உள்ளூர் மக்கள் ஆசிரியரின் நினைவாற்றலை வியந்து, வெளிப்படையாக சொல்லாமல் அதை புன்னகையுடனும், கைதட்டல்களுடனும் வெளிப்படுத்தினர். சிலரோ வாய்விட்டு, “ஆசிரியருக்குத்தான் எவ்...வளவு நினைவாற்றல்” என்று ஆனந்த புளகாங்கிதம் அடைந்தனர். மேலும் அவர், “இந்த குறுகிய நேரத்தில் எல்லா செய்திகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாது. ஆகவே, இந்த புத்தகங்களை வாங்கிப் படித்து பயன்பெறுங்கள்” என்று அந்த நான்கு புத்தகங்களையும் எடுத்துக்காட்டினார். அதே சமயம் தோழர்கள் அந்தப்புத்தகங்களுடன் மக்களிடையே சென்று அப்புத்தகங்களை விற்பனை செய்தனர். மேடையிலிருந்த முக்கிய பிரமுகர்களும் 25 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பை ரூ.1,000/- கொடுத்த தமிழர் தலைவர் கையால் பெற்றனர். 

தொடர்ந்து, “இப்புத்தகங்களை படித்தால், மதவெறித் தீ..., ஜாதிவெறித் தீ..., ஆதிக்கத் தீ... ஹிந் தீ... போன்றவை உங்களைத் தாக்காது” என்று சிலேடையுடன் பேசியதும், உன்னதமான கொள்கையை சிரிக்க, சிரிக்க பேச கேட்க மக்களுக்கு கசக்கவா செய்யும்? இல்லை! சிரித்து ரசித்தனர். தொடர்ந்து மனுதர்மத்துடன் தொடர்புபடுத்தி இந்திய அரசமைப்புச் சட்டம் விவாதம் - அம்பேத்கரின் அரிய பணிகள் - பெரியாரின் போராட்டங்கள் - ராஜாஜியின் குலக்கல்வி போன்றவற்றை தொடர்புபடுத்திப் பேசினார். முக்கியமாக ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம், ஏன்? என்பதை கூற வந்தவர், ராகுல் காந்தி பத்திரிகையாளர்களிடமும், நாடாளுமன்றத்திலும் பேசியதையும் சுட்டிக்காட்டிப் பேசி, ஜாதியை ஒழிக்கத்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதை மக்களுக்குப் புரியும்படி எண்பித்தார். 

“இப்படி பா.ஜ.க. கொண்டு வரும் ஒவ்வொரு பிரச்சினையையும் நம்மால் தீர்க்க முடியாது. ஆகவே, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்து அவர்களை அதிகாரத்திலிருந்து கீழே இறக்குங்கள்” என்று வேண்டுகோள் வைத்து உரையை நிறைவு செய்தார். 

மாவட்ட இளைஞரணிச் செயலாளர் அருள்தாஸ் நன்றியுரை கூறி நிகழ்வை நிறைவு செய்தார். 

பங்கேற்றோர்

நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், கழகச் சொற்பொழிவாளர் என்னாரெசு பிராட்லா ஆகியோர் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுப்பட்டனர். விடியற்காலை 3 மணிக்கு மேல் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆசிரியர் படையின் முகாம் வந்தடைந்தது.

தோழர்களுக்கு ஓர் அறிவிப்பு!

தமிழர் தலைவர் மேற்கொண்டுவரும் “குலத் தொழிலைத் திணிக்கும் ஒன்றிய அரசின் மனுதர்ம யோஜனா எதிர்ப்பு பரப்புரைப் பயணத்”தில் தலைவர் அவர்களை வரவேற்றும், மேடையிலும் சந்திக்கும் தோழர்கள் சால்வைகள், பொன்னாடைகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக இயக்க ஏடுகளுக்கு சந்தா, அல்லது விடுதலை வளர்ச்சி நிதி வழங்கலாம்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்



No comments:

Post a Comment