அண்ணா பிறந்த நாளில் குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்கும் அருமையான பெருந்திட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 14, 2023

அண்ணா பிறந்த நாளில் குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்கும் அருமையான பெருந்திட்டம்!

காலை சிற்றுண்டி மாணவர்களுக்கு வழங்குவதன்மூலம் வயிற்றுப் பசி, அறிவுப் பசியைப் போக்கும் ‘திராவிட மாடல்' அரசு!

வாழ்க நமது முதலமைச்சர் - வளர்க ஆட்சியின் சாதனைகள்!

அறிஞர் அண்ணா பிறந்த 115 ஆம் ஆண்டு பிறந்த நாளில் (செப்டம்பர் 15) குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டம் பொருத்தமானதும், வரவேற்கத்தக்கது மாகும்   என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

நாளை (15.9.2023) அறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாள். தந்தை பெரியாரின் தலைமாணாக்கர் அறிஞர் அண்ணா - நூற்றாண்டு விழா நாயகர் முத்தமி ழறிஞர் கலைஞரின் அரசியல் வழிகாட்டி அறிஞர் அண்ணா. அவர்தம் பிறந்த நாளில் ‘திராவிட மாடல்' ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலினின் இரண்டாண்டு ஆட்சி நிறைவில், அதன் மகுடத்தில் மற்றுமோர் சாதனை முத்து, தகத்தகாய ஒளியுடன் பதிக்கப்படுகிறது திராவிடர் ஆட்சியின் திராவிட நாயகரால்.

நீதிக்கட்சியின் சாதனை!

திராவிடர் இயக்கம், நீதிக்கட்சியாக மக்களால் அழைக்கப்பட்ட, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) கூட்டமைப்பு இயக்கம்  1916 இல் தொடங்கப்பட்டு, மூன்றே ஆண்டு களில் ஆட்சியைப் பிடித்து, பொறுப்பேற்றபோது, அதற்குள்ள குறுகிய அதிகார வரம்புக்குள்ளேயே, ஒடுக்கப்பட்ட சமூகத்தவரின் ‘கல்வி, உத்தியோகம்' இவற்றிற்கு முன்னுரிமை தந்து வருண தர்மத்தின் வேரறுத்தனர்!

பெண்களும் ‘நமோ சூத்திரர்கள்' என்று ஆரியத்தால் ‘நாம கரணம்' சூட்டப்பட்டு, கல்வி, உத்தியோகம், சமத் துவம், சம வாய்ப்பு மறுக்கப்பட்டு, ‘‘நல்ல அடிமைகளாக'' வைக்கப்பட்டு வந்த கொடுமை தொடர்ந்தது!

அத்தகையவர்களுக்கு சமூகநீதியைத் தங்களது ஆட்சியில் ஆண் - பெண் பேதமின்றி கல்வி, உத்தியோக வாய்ப்பில் தந்ததோடு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் இல்லாத அளவுக்கு முதன்முதலில் 21 வயது வந்த பெண்களுக்கு வாக்குரிமை தந்து, அதிகாரப் பங்களிப்பு (Empowerment) ஏற்படுத்தினர்.

பெண்களுக்குப் பொருளாதாரத்திலும் சுதந்திரம்!

பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரமும் ஏற்பட் டால்தான் அவர்தம் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, தன்மானத்தோடு, தன்னிறைவும் ஏற்படும் என்றார் தந்தை பெரியார்!

தனது சுயமரியாதை இயக்கத்தின் முதலாம் மாகாண மாநாடு 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடை பெற்றபோது, ‘‘மகளிருக்கு சமத்துவமும், சம வாய்ப்பும், சம உரிமையும் கல்வி, வேலை வாய்ப்பில் ஏற்படுத் துவதோடு, தகப்பன் சொத்தில் மகனைப் போலவே, மகளுக்கும் சம உரிமையும், பாத்தியதையும் தர வேண்டும்'' என்றார்!

1989 இல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, முத்தமிழறிஞர் கலைஞர் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குவதை சட்டமாக்கினார் (1989). படிப்புரிமை, அரசுப் பணி உரிமை இப்படி எல்லாம் திராவிடர் ஆட்சியின் தெவிட்டாத தேன்கனி போன்ற சாதனைகள். அவ்வாட்சி வரும்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்துக் கொண்டே உள்ளது!

தி.மு.க. கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னதைச் செய்வதோடு, சொல்லாத பல சாதனைகளையும் செய்து ‘‘மலைமீது வைக்கப்பட்ட மகர விளக்காய்'' ஒளியூட் டுகிறது - நிதி நெருக்கடி - நிதி நெருக்குதல் இடையிலும் இப்படி ஒரு மகத்தான சாதனை!

நமது முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள் அன்றே, மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்று கொடுத்து, இன்ப அதிர்ச்சியைத் தந்தார்; அன்றாட வேலைக்குச் செல்லும் ஏழை மகளிருக்கு இது ஒரு பொருள் சேமிப்புத் திட்டமாகியது!

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 

50 விழுக்காடு இட ஒதுக்கீடு!

உள்ளாட்சிகளில் அவர்கள் கேட்காமலேயே மகளி ருக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு தரப்பட்டது.

அந்த சாதனை வரிசையில் நாளை (15.9.2023) முதல் வீடுதோறும் இல்லத்தரசிகளைத் தேடி, மாதம் ஆயிரம் ரூபாய் அவர்தம் வங்கிக் கணக்கில் தானாகவே சென்று ‘பொத்'தென்று விழும் திட்டம் செயல் வடிவம் பெற்று, அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சியில் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை'' வழங்கும் விழா நடைபெற விருக்கிறது. இது சாதாரண நிகழ்வல்ல; சரித்திரம் காணா அரிய சாதனை!!

மாதம் 1000 ரூபாய் திட்டத்தில் பயனடையும் குடும்பத் தலைவிகள் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர். இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு 12 ஆயிரம் கோடி ரூபாய் - மெகா திட்டம்!

மற்ற மாநிலங்கள் வாய் பிளந்து பார்ப்பதோடு, இதையே இனி தேர்தல் வாக்குறுதியாக ஆக்க முனைப் புடன் யோசிக்கின்றன!

ஏற்கெனவே குடும்பத்தில் கல்லூரியில் படிக்கும் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் சென்று கதவைத் தட்டுகிறது!

இப்படி தாயும், மகளும் பெறும் மகிழ்ச்சியைத் தருவது ஒப்பற்ற ‘திராவிட மாடல்' ஆட்சியல்லவா?

அதன் ஆளுமைமிகு மானமிகு மாண்புமிகு முதல மைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அல்லவா?

காலைச் சிற்றுண்டிமூலம் பள்ளியில் படிக்கும் குழந் தைகள் - குடும்பத்துத் தாயின் பளுவைக் குறைத்து விட்டது.

வயிற்றுப் பசி, அறிவுப்பசி போக்கிய

‘திராவிட மாடல்' அரசு

தலை வாரிப் பூச்சூட்டி குழந்தைகளைப் பாட சாலைக்கு அனுப்பினால் போதும். காலைச் சிற்றுண்டி நம் குழந்தை மாணவர்களை குதூகலத்துடன் வர வேற்றுப் பசி போக்கிட, ஆயத்தமாகி அறிவுப் பசி போக்கும்முன் வயிற்றுப் பசி போக்கவும் முனைந்து விட்டது.

‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை'' - இது வறுமை ஒழிப்புத் திட்டம் மட்டுமல்ல, ஆணாதிக்க சமூகத்தையே மாற்றி அமைக்கும் அமைதிப் புரட்சித் திட்டமுமாகும்!

வாழ்க நமது முதலமைச்சர்!

வளர்க அவரது ஆட்சியும், சாதனைகளும்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.9.2023

No comments:

Post a Comment