கிடுகிடுக்கப் போகும் கிருஷ்ணகிரி! கிடைச் சிங்கங்காள் புறப்படுவீர் - மின்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 25, 2023

கிடுகிடுக்கப் போகும் கிருஷ்ணகிரி! கிடைச் சிங்கங்காள் புறப்படுவீர் - மின்சாரம்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களுள் ஒன்று கிருஷ்ணகிரி. கிருஷ்ணவென்றால் - கருப்பு, கிரி என்றால் - மலை,  கருப்பு கிரானைட் மலைகள் நிறைந்ததால் கிருஷ்ணகிரி என்னும் பெயர். 18,79,809 மக்கள் தொகை - எழுத்தறிவு 71.46 விழுக்காடு.

பாறை ஓவியங்கள், பாறை சித்திரங்கள் இதன் தனிச் சிறப்பு.

கிருஷ்ணகிரி ஒரு காலத்தில் "எயில் நாடு" என்றும், ஓசூர் "முரசுநாடு" என்றும், ஊத்தங் கரை "கோவூர் நாடு" என்றும் அழைக்கப் பட்டன.

கொடை வள்ளலான அதியமான் ஆண்ட பூமி! 

ஒரு கால கட்டத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் மைசூர் பகுதிகள் சங்க காலத்தில் தகடூர் அல்லது "அதியமான் நாடு" என்று அழைக்கப்பட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கிருஷ்ணகிரியில் அதாவது கருப்பு மலையில் வரும் 28.8.2023 கருஞ்சட்டைக் கடலின் சங்கமம்!

நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமை மிக்க கிருஷ்ணகிரியில் வரலாற்றை மாற்றியமைத்த புரட்சிகர இயக்கமாம் திராவிடர் கழகத்தின் புதிய வரலாறு படைக்கும் விழா!

பள்ளத்தாக்குகளும், மலைகளும், குன்றுகளும், பசுமை போர்த்திக் குலுங்கும் இவ்வூரில், பாறை சித்திரங்களும், பாறை ஓவியங்களும் ஒய்யாரமாக நடனமாடும் இவ்வூரில் பகுத்தறிவுப் பாசறையின் தனிப் பெரும் விழா!

பழைய வரலாற்றைப் பேசும் கிருஷ்ணகிரி, புதிய வரலாற்றைப் பேசிட ஒரு கொத்தளம்.

கிருஷ்ணகிரி மய்யப் பகுதியில் (கார்னேசன் திடல்) மூன்றடுக்கு மாளிகை! அதன் திறப்பு விழாதான் வரும் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு.

600 சதுர அடியில் மூன்றடுக்கு மாளிகை தலை நிமிர்ந்து நின்று 'இதோ, பார், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பாசறைக் கோட்டையாக நிமிர்ந்து நிற்கிறேன்!" என்று வரலாற்றில் பொறிக்கப்படும் நினைவுச் சின்னம்.

தரைத் தளத்தின் முகப்பில் (கட்டடத்தின் உள்பகுதி யில்) தன்மான இயக்கத்தின் தனிப் பெரும் தலைவர் தந்தை பெரியாரின் மார்பளவு வெண்கலச் சிலை.

தொடர்ந்து "தகைசால் தமிழர்" - தலைவர் பெயரால் "ஆசிரியர் வீரமணி படிப்பகம்!"

முதல் தளத்தில் - தந்தை பெரியாரை 95 ஆண்டு காலம் வாழ வைத்து, அவர் மறைவிற்குப் பிறகு இயக்கத்தையும் வழி நடத்திச் சென்ற அன்னை மணியம்மையார் பெயரில் நூறு பேர் அமரும் அரங்கம் என்று சுயமரியாதை - பகுத்தறிவு - சமூகநீதி- சமத்துவம் - பெண்ணுரிமை முழங்கும் மாளிகையாக வானை நோக்கி நிமிர்ந்து நிற்கிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர், மாநாடு என்றால் அது மானமிகு நேருதான் என்று முதலமைச்சரால் அடையாளங் காட்டப்படும் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் பெரு மக்கள் அர. சக்கரபாணி, ஆர். காந்தி, கழகப் பொறுப்பாளர்கள், பெரு மக்கள் பங்கேற்கும் பகுத்தறிவு மணம் பரப்பும் திருவிழா - பெருவிழா!

எந்தக் கால கட்டத்தில் இந்தக் கொத்தளம் திறக்கப் படுகிறது என்பது முக்கியம்.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று  காவிகள் கர்ச்சிக்கும் கால கட்டத்தில் இந்தப் பெரியார் மாளிகை!

"விஸ்வகர்மா யோஜனா" என்ற பெயரில் குலத் தொழிலை, பாரம்பரிய ஜாதித் தொழிலைத் திணிக்கும் நவீன குலக் கல்வி திட்டத்தை தந்தை பெரியார் பிறந்த நாளாம் செப்டம்பர் 17அய் தேர்வு செய்து அதனை செயல்படுத்தத் துடிக்கும் நரிகளின் நாட்டாண்மை ஆட்சிக் காலத்தில் அதன் வாலை ஒட்ட நறுக்கும் பாசறையின் திறப்பு விழா!

'நீட்' என்ற கொடுவாள் நம் ஒடுக்கப்பட்டவர்களின் கல்விக் கழுத்தை நோக்கி வீசப்பட்ட விபரீதமான கால கட்டத்தில் கருஞ்சட்டைக் கோட்டம் அதியமான் கோட்டத்தில் திறக்கப்படுகிறது.

இப்பொழுது எங்கு நோக்கினும் இயக்கச் செயல்பாடுகள்! செயல்பாடுகள்!! பயிற்சிப் பட்டறைகள்! பட்டறைகள்!! ஆர்ப்பாட்டப் பேரிகை முழக்கங்கள்! முழக் கங்கள்!!

மகளிர் போர் முரசு கொட்டு கின்றனர். இளைஞர்கள் எழுச்சிப் புயலாய் சுழன்று சுழன்று வீசுகிறார்கள்; மாணவர் பட்டாளத்தின் மாபெரும் எழுச்சி எங்கும் -

காப்பாளர்களும் களம் காணத் துடிக்கிறார்கள்.

ஈரோடு பொதுக் குழுவுக்கு முன் - பின் என்பது போல - கிருஷ்ணகிரி பெரு விழாவுக்கு முன் - பின் என்ற புதியத் திருப்பத்தைக் காணப் போகிறோம் - வாரீர்! வாரீர்!! கருஞ்சட்டைக் குடும்பத்தினரே, கருங் கடலாய் பொங்கி வாரீர்!

நீதிக்கட்சி காலந்தொட்டு கழகப் பாசறைப் பாய்ச்சல் பகுதி இது!

இன்று இளைஞர்களின் இன எழுச்சிக் கோட்டமாக உருவெடுத்துள்ளது.

கழகம் இல்லாத ஆட்சி என்று கனவு காணும் காவிகளின் கூடாரம் சலசலத்துப் போகட்டும்! கருஞ்சட்டைச் சிங்கம் கூட்டம் காட் டாறாய்ப் பாயட்டும்! பாயட்டும்!!

"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே" என்று பாடினாரே புரட்சிக் கவிஞர் - அதற்கொரு புது புற நானூற்றைப் படைப்போம்! படைப்போம்!! வாரீர்! வாரீர்!!

நினைவில் நிறுத்துங்கள் - வரும் 28ஆம் தேதி காலை நீங்கள் சங்கமிக்குமிடம் கிருஷ்ணகிரி! கிருஷ்ணகிரி!! கிருஷ்ணகிரி!!

நம் இயக்கக் கண்மணிகள் தூங்கிப் பல நாளாயிற்று. அல்லும் பகலும் பறந்து பறந்து உழைக்கிறார்கள் - திட்டமிடுகிறார்கள்.

"ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்போரே, ஒரே ஜாதி என்று சொல்லத் தயாரா?" என்று நமது 'தகைசால் தமிழர்' தலைவர் ஆசிரியர் எழுப்பிய வினாவுக்கு விடையளிக்க முடியாமல் விலா ஒடிந்து கிடக்கிறார்கள்.

வெற்றிச் சங்கம் ஊதுவோம்! கிருஷ்ணகிரி என்றாலே - கருப்பு மலை என்றுதானே பொருள்!

அதனைச் செயலில் காட்ட வேண்டாமா?

கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்! ஆம் தமிழ் நாட்டின் காவல் அரண்களே கையில் கொடியேந்தி கடல் அலையாய் வாரீர்!

நமது தலைவருக்குத் "தகைசால் தமிழர்" விருது அளிக்கப்பட்ட பின் நடக்கும் மிகப் பெரிய முதல் நிகழ்ச்சி இது என்பதை எண்ணினால், எப்படி உங்களால் வீட்டில் தரிக்க முடியும்?

சந்திப்போம் - கிருஷ்ணகிரியில் - சாதிப்போம் -சரித்திரத்தில்! வாரீர்! வாரீர்!!


No comments:

Post a Comment