மீண்டும் மொழிப்புரட்சியை உருவாக்கி விடாதீர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

மீண்டும் மொழிப்புரட்சியை உருவாக்கி விடாதீர்கள்

அமித்ஷாவிற்கு முதலமைச்சர் எச்சரிக்கை

சென்னை, ஆக.5  ஹிந்தியை அனைவரும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறிய அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டமான பதில் அளித் துள்ளார்.

சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்  "1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்" என எழுதியுள்ளார்.  

அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் 38-ஆவது கூட்டம், தலைநகர் டில்லியில் நடைபெற்றது இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது "உள்ளூர் மொழி களுடன் ஹிந்தி போட்டியிடவில்லை. அனைத்து இந்திய மொழிகளை யும் ஊக்குவிப்பதன் மூலமே தேசம் அதிகம் வலுப் பெறும்.

 ஹிந்தி மொழி மீதான ஏற்புணர்வை, எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது -  மொழியை மதிக்காமல் பாரம்பரியத்தை மதிப்பது முழுமையடையாது. உள்ளூர் மொழிகளுக்கு அனைவரும் மதிப்பளிக்கும்போதுதான், ஹிந்தி மொழி மீதான ஏற்புணர்வு வரும். நல்லெண்ணம், உத்வேகம், ஊக்கம் ஆகியவற்றின் மூலமே இந்த உணர்வு வருமே அல்லாமல் சட்டம் அல்லது சுற்றறிக்கை பிறப்பிப்பதன் மூலம் வராது" என்றார்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சிற்கு முதலமைச்சர் கடுமையான கண்டனமும் எச்சரிக்கையும் தெரிவித் துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள சமுகவலைதளப் பதிவில் "எதிர்ப்பின்றி அனைவரும் ஹிந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் ஹிந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல! 

தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டில்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். ஹிந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கருநாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை அமைச்சர் அமித்ஷா உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக் கிறேன்!" இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment