குற்றாலம் பயிற்சி - நான்காம் நாள் செய்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 3, 2023

குற்றாலம் பயிற்சி - நான்காம் நாள் செய்தி

”மனிதநேயம்” என்பதற்கு மாற்றுச்சொல்தான், திராவிடம்; திராவிட மாடல்!

குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர் நடத்திய ”திராவிட மாடல்” வகுப்பு!

தென்காசி, ஜூலை 3 - குற்றாலம் பயிற்சிப் பட்டறையின் நான் காம் நாளில் 4 வகுப்புகள் நடைபெற்றன. அதில் ஆசிரியர், ’திராவிட மாடல்’ என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

குற்றாலத்தில் கடந்த ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை நடைபெற்று முடிந்துள்ள பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் நான்காம் நாள் வகுப்புகள் 1.6.2023, சனிக்கிழமை அன்று வீகேயென் கட்டட அரங்கத்தில் மிகச்சரியாக 9 மணிக்குத் தொடங்கின. இந்தக் கட்டுப்பாடை மாணவர்களுக்கு பழகுவ தற்கு மூன்று நாள்கள் தேவைப்பட்டிருக்கிறது. முகாம் ஒருங் கிணைப்பாளரான தஞ்சை இரா. ஜெயக்குமார் மாணவர்களி டையே ஓயாமல் முகாமுக்கான ஒழுக்கத்தைச் சொல்லிச் சொல்லி ஏற்கவைத்திருந்தார்.  

திருநெல்வேலி, கடலூர், விருத்தாசலம், மதுரை மாநகர், மதுரை புறநகர், பொள்ளாச்சி, தஞ்சாவூர், காரைக்கால், தூத்துக்குடி, பட்டுக்கோட்டை, கன்னியாகுமரி, தென்காசி, பெரம்பலூர், புதுச்சேரி, திருச்சி, லால்குடி, கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், தென்சென்னை, வடசென்னை, ஆவடி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, அரூர், திருவண்ணாமலை, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஙி.ஜிமீநீலீ., விஙிகி ஒருவரும்,  வி.கி., மூவரும், ஙி.ஞி.ஷி. ஒருவரும், ஙி.ணி., அய்வரும், வி.sநீ இருவரும், ஙி.ஜிமீநீலீ., நால்வரும், சட்டக் கல்வியில் மூவர் உள்ளிட்ட பட்டதாரிகள் 50 பேர், பட்டதாரி கள் 5 பேர், 10, 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த பள்ளிப்படிப்புகளில் 31 மாணவர்கள் என, 86 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். பார்வையாளர்களும் முகாம் கட்டுப்பாட்டுப்படி, இதில் பாதியளவில் கலந்துகொண்டனர். 

ஆளுநரை வெளியேற்றுங்கள்!

முதல் வகுப்பாக, ‘பெரியார் உலகமயம்’ எனும் தலைப்பில் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், இரண்டாம் வகுப்பாக, ‘திராவிட மாடல்’ எனும் தலைப்பில் தமிழர் தலைவரும், மூன்றாம் வகுப்பாக ‘பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு’ எனும் தலைப்பில் கவிஞர் கலி. பூங்குன்றன், நான்காம் வகுப் பாக, மாணவர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர் பதிலளிக்கும், ‘கேள்வியும்! கிளத்தலும்!’ நடைபெற்றது! திராவிட மாடல் வகுப்புக்குப் பிறகு ஆசிரியர், அதே அரங்கில் பத்திரிகையாளர் களை சந்தித்தார். அந்த சந்திப்பில், “ஆளுநரை வெளியேற்று! இல்லையேல் ஆளுநரை டிஸ்மிஸ் செய்!” என்கிற கோரிக்கை தமிழ்நாடு மக்களின் கோரிக்கையாக மலரும்! அதற்கான இயக்கத்தைக் கட்டுவோம்” என்று பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தார்.

மனிதநேயத்திற்கு மாற்றுச்சொல்தான் திராவிடம்!

முன்னதாக ஆசிரியர் தனது வகுப்பில், ’ஏன் திராவிட மாடல் தேவைப்படுகிறது?’ என்று கேள்வி எழுப்பி, பார்ப் பனர்களுக்குத்தான் கல்வியும், வேலை வாய்ப்பும் ஏக போக மாயிருந்தது. அந்த தத்துவத்தை உடைத்துத்தான் நாம் முன் னேறியிருக்கிறோம். இதுதான் திராவிட மாடல்! அதனால்தான் அது நமக்குத் தேவைப்படுகிறது’ என்று பதில் அளித்தார். 

தொடர்ந்து திராவிட மாடலுக்கு இலக்கணம் வகுப்பது போல சில கருத்துகளைக் கூறினார். அதாவது, ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இந்த மூன்றும் இணைந்ததுதான் ‘மனித நேயம்’ இந்த மனித நேயம் என்பதற்கு மாற்றுச் சொல்தான் ‘திராவிடம்; திராவிட மாடல்!’ தொடர்ந்து ஒரு புதிய கோணத்தில் இதை விளக்கினார். 

அதாவது, குற்றம் செய்துவிட்டு உள்ளே போவதுதான் சிறையா? என்றொரு கேள்விகேட்டு, ஜாதிக்குக் கட்டுப்பட்டு இருக்கிறோமே, அது சிறையில்லையா? மதத்திற்கு அடிமைப் பட்டுள்ளோமே, அது சிறையில்லையா? மூடநம்பிக்கை களுக்கு ஆட்பட்டு நமது அறிவை பாழ் செய்துகொண்டிருக் கிறோமே, அது சிறையில்லையா?’ என்று அடுக்கி, இத்தகைய சிறைகளை உடைத்து நொறுக்குவதும் திராவிடம்தான்; திராவிட மாடல்தான் என்றார்.  பெரியார் சொன்ன ஒரு விளக்கமான, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதுதான் திராவிட மாடல்’ என்பதையும் சேர்த்துச் சொன்னார். 

நடப்பு அரசியலை தொட எண்ணிய ஆசிரியர், ‘ஆளுநர் உத்தரவு போட்ட 4 மணி நேரத்திலேயே திரும்பப் பெற்றாரல் லவா? அது திராவிட மாடல் அரசில்தான் நடக்கும்’ என்று திராவிட மாடலுக்கு பல்வேறு பரிமாணங்களில் பொருள் சொன்னார். 

பேராசிரியர் பெருந்தகை, “தமிழர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்! ஆனால் திராவிடன் என்பதில் நான் உரிமை பெறுகிறேன்! என்று சொன்னதையும் மாணவர் களுக்கு நினைவூட்டினார். ‘நான் தான் திராவிடன் என்று நவில்கையில் தேன் தான் நாவெல்லாம்’ என்று புரட்சிக்கவிஞர் பாடியதையும் சொல்லி, தனது வாதத்திற்கு வலுசேர்த்துவிட்டு தனது வகுப்பை நிறைவு செய்துகொண்டார்.

மரபுகளை உடைப்பவள்!

அதன்பிறகு கேள்வியும், கிளத்தலும் பகுதியில், எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக, ‘மரபுகளை உடைப்பவள்’ எனும் தலைப்பிலான புத்தகத்தை எழுதிய, கவுதமி தமிழரசன் அவர்களை மேடைக்கு வரவழைத்து, அந்தப் புத்தகத்தின் அருமை, பெருமைகளை மாணவர்களுக்கு, சான்றாக இரண்டு கருத்துகளை படித்துக்காட்டி, இதுபோன்ற சமூகத் திற்கு பயன்படக்கூடிய படைப்புகளை நீங்களும் படைக்க வேண்டும் என்று மாணவர்களின் ஏகோபித்த ஏற்போடு ஆலோசானை சொன்னார்.

நூலாசிரியருக்கு மாணவர்கள் முன்னிலையில் பயனாடை போர்த்தி மரியாதை செய்தார். கேள்வியும், கிளத்தலும் பகுதியிலேயே, ‘சமீபத்தில் உங்களை கவர்ந்த புத்தகம் எது?’ என்றொரு கேள்வி மாணவர்கள் சார்பில் கேட்கப்பட்டது. ஆசிரியர், ’12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சுபா போஸ் என்றொருவர் எழுதிய ‘மனிதி’ என்ற புத்தகம்தான் என்று சொல்லி, அதிலிருக்கும் கருத்துகளை சாரமாக சொல்லி, மாணவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்தார்.

மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகள்!

தொடர்ந்து, மாணவர்கள் சார்பில், தேவராஜ் பாண்டியன், ஆஷா ஆகியோர், முகாம் பற்றி தங்கள் கருத்துகளை ஆசிரியர் முன்பு பகிர்ந்துகொண்டனர். அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்துச் சிறப்பித்தார்.

அடுத்து, நான்கு நாட்களிலும் சிறப்பாக பாடக்குறிப்பு எழு தியவர்களை, முகாம் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மா.பால்ராசேந்திரம், தேர்வு செய்து கொடுத்திருந்தார். 

முதல் பரிசாக பொ.இ.தமிழிசை, இரண்டாம் பரிசாக இ.சமரசம், மூன்றாம் பரிசாக சீ.தேவராஜ பாண்டியன், நான்காம் பரிசாக பா.ஆஷா ஆகியோரும், ஆறுதல் பரிசாக ப. வெங்கடேஷ், த.சே.தமிழ் முரசு, க.ராகுல் ஆகியோரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கையால் விருது பெற்றனர். 

அதே போல் பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு, இன நலமே என்ற தலைப்பில் சிறப்பாக வாதாடிய ஆஷா, க.கோகுல்ராஜ், ப.வெங்கடேஷ் ஆகியோருக்கும், பகுத் தறிவே என்ற தலைப்பில் சிறப்பாக வாதிட்ட, தேவராஜ் பாண்டியன், சமிக்சா, மோகன்ராஜ், தமிழிசை ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பரிசுக்காக வீகேயென் குற்றாலம் நிர்வாகி வைத்தியலிங்கம் ரூ. 1000/- மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கிக் கொடுத் திருந்தார். 

தமிழர் தலைவரிடம் நன்கொடைகள்

இரா. தமிழ்ச்சுடர் - வி. அம்மணி இணையர் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட 53 ஆம் ஆண்டு (1.7.2023) மகிழ்வாக விடுதலை ஒரு ஆண்டு சந்தா ரூ.2,000, உண்மை ஒரு ஆண்டு சந்தா ரூ.900, பெரியார் பிஞ்சு ஒரு ஆண்டு சந்தா ரூ.600 என மொத்தம் 3,500 அய் தமிழர் தலைவரிடம் வழங்கினர். 

இவர்கள் சிறப்பாக குறிப்புகள் எடுத்த மாணவச் செல்வங்கள் 8 பேருக்கும் தலா ரூ. 250 மதிப்புள்ள ரூ. 3,000 க்கான புத்தகங்களை வாங்கிக்கொடுத்து மகிழ்ந்தன. அப்புத் தகங்கள் உரிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு மாணவர்களுக்கு துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சான்றிதழ் வழங்கினார். நான்கு நாட்களில் ரூ. 85,778 மதிப்புள்ள புத்தகங்கள் முகாம் வழக்கப்படி பாதி விலைக்கு, ஒருங்கிணைப்பாளர்களின் பரிந்துரையின் பேரில் 50% தள்ளுபடியில் ரூ. 42,889க்கு வழங்கப்பட்டது. மொத்தத்தில் எல்லா ஆண்டுகளையும் போலவே இந்த ஆண்டும் குற் றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை ஆக்கபூர்வமாக நடந்து முடிந்துள்ளது.

குற்றாலம் பயிற்சிப் பட்டறையின் செம்மாந்த வரலாறு!

1975-1976 இல் அவசர கால கட்டம். 1977 ஆம் ஆண்டு குற்றாலத்தில் உள்ள கேரளா பேலசில் (அப்போது அதனு டைய பொறுப்பாளர் தாமோதர பாண்டியன்), இன்றைய முக அறுவைச் சிகிச்சை மருத்துவரும், செங்கோட்டை அரசு மருத்துவருமான கவுதமன் பொறுப்பேற்று, பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நெல்லை மாவட்டத் தலைவர் டி.ஏ.தியாகரசன்,  வழக்குரைஞர் பாண்டி வளவன், ஆசிரியர் கோதண்டராமன், வள்ளியூர் நட்சத்திர மய்யா, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சிவனணைந்த பெருமாள், பொறியாளர் மனோகரன் (சிவனணைந்த பெருமாள் மகன்), பேரா.அறிவரசன், ஆசிரியர் சின்னு, ஆசிரியர் சாகுல் அமீது, திராவிடர் கழகத்தின் மேனாள் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி ஆகியோர் ஒத்துழைப்போடு ஆறு ஆண்டுகள் நடத்தியிருக்கிறார். 

அப்போதெல்லாம் 7 நாட்கள் பயிற்சி நடந்தது. ஆசிரியர் மிசா கொடுமையால் சிறையிலிருந்த போது, மணியம் மையார் தலைமையில் ஒரு ஆண்டு நடந்திருக்கிறது. 1983 க்கு பிறகு கவுதமன் பி.ஜி. படிப்பதற்காக சென்றுவிட்டதால், 1984, 1985, 1986 ஆகிய மூன்று ஆண்டுகள் நடைபெற வில்லை. அதன்பிறகு ஆசிரியரின் தூண்டுதல் காரணமாக மாவட்டக் கழகத் தோழர்கள் அதே கேரளா பொதுப்பணித் துறை மாளிகையில் மூன்று ஆண்டுகள் நடத்தினார்கள்.

அதன்பிறகு ஆசிரியர் தலைமையில் இன்றைக்கு வரையிலும் நடந்து கொண்டிருக்கிறது. ஒருமுறை கேரளா மாளிகையில் வேறு நிகழ்ச்சி இருந்ததால், அங்கு நடத்த முடியவில்லை. அசரவில்லை நமது தோழர்கள். அவசர அவரசமாக குற்றாலம் முதன்மை அருவிக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சின்ன அரங்கில் கடுமையான நெருக்கடிக் கிடையில் நடத்தி விட்டார்கள். அதைக் கேள்விப்பட்ட வள்ளல் வீகேயென், “இவ்வளவு உயர்வான தொண்டுக்கு, இத்தனை இடையூறா?” என்று, 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு, வீகேயென் மாளிகையிலேயே நடத்திக்கொள்ள தானாக இசைந்தார். 

அதற்குப் பிறகு, பயிற்சி முகாமின் அருமை, பெருமை களை நேரிலேயே கூடுதலாக அறிந்துகொண்டு, 2008 க்குப் பிறகு இதற்கெனவே தனியாக 5 மாடிக் கட்டடத்தை கட்டிக்கொடுத்து, வள்ளல் தன்மையில் வரலாறு படைத்தார் வீகேயென். அதன்படி இன்றும் வீகேயென் மாளிகையில் தான் நடைபெற்று வருகிறது. 

அவர் காலமான பிறகும் அவரது மகன் வீகேயென் கேப்டன் ராஜா அதே ஒத்துழைப்பைக் கொடுத்து தமது தொண்டறத்தைத் தொடர்ந்து வருகிறார். இந்தக் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் தான், ஒவ்வொரு மாநாட்டிலும் “பார்ப்பன எதிர்ப்பு மாநாடு” நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, நடத்தப்பட்டது! இதில்தான் பெரியாரியல் தொண்டர்களின் பெயர்களின் முன்னோட் டாக, ’மாண்புமிகு’ போல், ‘மானமிகு’ என்ற மதிப்பு மிகுந்த, ஒவ்வொரு பெரியார் தொண்டரும் பெருமை கொள்ளத்தக்க அடையாளச் சொல், ஆசிரியரால் வழங்கப்பட்டது. 

இதில் பட்டை தீட்டப்படுகிற தோழர்கள் தான், திராவிடர் இயக்கம் சார்ந்தும், சாராமலும் பெரியாரியலைப் பரப்புகின்ற தூதுவர்களாக உலகெங்கிலும் இருந்து வருகிறார்கள்! ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி.சிவம் கூட இங்கு பயிற்சியில் கலந்து கொண்டவர் தான்! 28 ஜூன் 2023 முதல் 1 ஜூலை 2023 வரையிலான 44 ஆம் ஆண்டாக இந்த ஆண்டும் அதே வீகேயென் மாளிகையில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக் கிறது! 

44 ஆண்டு பயிற்சிப் பட்டறைகளிலும் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பங்கேற்று வருகிறார்.

No comments:

Post a Comment