''ஊசிமிளகாய்'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

''ஊசிமிளகாய்''

பெரிய பெரிய (அ)வாள்களே, காசிக்குப் போனாலும் உம் ‘‘பாவங்கள் கரையாது!''

உ.பி.,யில் சாதுர்மாஸ்ய விரதம் 

பங்கேற்க பக்தர்களுக்கு அழைப்பு 

‘‘வியாச பூஜை, சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம் மற்றும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் ஜயந்தி உற்சவத்தில் பங்கேற்க, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடம் அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் சாதுர்மாஸ்ய விரதம், ஜூலை 3ம் தேதி, ஆஷாட பூர்ணிமையன்று உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், வியாச பூஜையுடன் துவங்குகிறது.

ஜூலை 7ல், வாரணாசியில், சாதுர்மாஸ்ய சங்கல்பம் செய்து, செப்., 29ல், விஸ்வரூப யாத்திரையுடன் நிறைவு பெற உள்ளது.

இத்தருணத்தில், கைலாயத்தில் இருந்து கொண்டு வந்த, ஸ்ரீமகா திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர யோக லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடக்கும்.

தினமும் மூன்று கால பூஜையுடன், காலை ஸ்ரீமத் சங்கர பாஷ்ய பாடம் நடக்க உள்ளது.

சதுர்வேத பாராயணம்,அக்னி ஹோத்திர ஸதஸ், பஞ்சாங்க ஸதஸ், உபன்யாஸங்கள், பக்தர்குழுவாக செய்யும் சமஷ்டி பிக் ஷாவந்தனம் மற்றும் சங்கீத வாத்ய நாமசங்கீர்த்தனம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

சாதுர்மாஸ்ய விரதத்துடன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின், 80வது ஜெயந்தி தின உற்சவமும், சிறப்பு பூஜை, ஹோமங்கள், பாராயணங்கள், இசை நிகழ்ச்சியுடன் ஆக., 3ல் அவிட்ட நட்சத்திரத்தில் நடக்க உள்ளது.

‘’பக்தர்கள், சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம் மற்றும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் ஜயந்தி உற்சவத்தில் பங்கேற்று அனுக்ரஹம் பெறலாம்,’’ என, காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீகார்யம் விஸ்வநாத சாஸ்திரிகள் அழைப்பு விடுத்துள்ளார்.''

மேலே கண்ட சர்வதேச முக்கிய செய்தி அவாள் ஏடான ‘பூணூல் மலரில்' இன்று (24.6.2023) வெளிவந்துள்ளது!

அங்கே என்னென்ன நடக்குது பார்த்தேளா?

ஷி சாதுர்மாஸ்ய விரதமாம்!

ஷி ஸ்ரீ ஜயேந்திர சுவாமிகள் ஜெயந்தியாம்!

இத்தியாதி! இத்தியாதி!

80 ஆவது ஜெயந்திதான் அது!

அதுபோது ‘‘கைலாயத்திலிருந்து கொண்டு வந்த(?) ஸ்ரீமகா திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர யோக லிங்கத்திற்கு'' வழிபாடும் நடைபெறுமாம்!

பலே, பலே!

இந்த 80 ஆவது ஜெயந்தி நடத்தும் ஜெயேந்திரர், சாதுர்மாஸ்ய விரத சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி - இவாள் பெருமையை அப்போது நினைவு படுத்துவாளா?

காஞ்சி சங்கரராமன் - வரதராஜப் பொருள் கோவில் - அதனால் ‘ஜெயில் வாசம்' - ‘பெயில்' வாங்கினது; 80 பிறழ் சாட்சியங்கள்மூலம் மாவட்ட நீதிமன்றத்தில் விடுதலை ஆனாலும், மேல்முறையீடு செய்யாத அன்றைய முதலமைச்சர் கலைஞரின் கருணை உள்ளத்தால் தப்பித்து, மீண்டும் பீடம் கிடைத்தது!

அதற்குமுன்பே, தண்டத்தைப் போட்டுவிட்டு, இரவோடு இரவாக காணாமற்போன ஜெயேந்திரரை, குடியரசுத் தலைவர் வெங்கட்ராம அய்யர்வாள் முயற்சியால் கருநாடக மாநிலம் தலைக்காவிரியில் கண்டுபிடித்து, மீண்டும் காஞ்சிக்குப் பட்டணப் பிரவேசம் செய்த பெரியவாள் - ‘புனித' ஜலத்தில் நீராடி - மீண்டும் பதவியில் அமர்ந்து -  வாஜ்பேயி பிரதமர், அத்வானி உள்துறை அமைச்சர் காலத்தில் ஏக சக்ரவர்த்தியாக இருந்து ராஜ்ய பரிபாலனம் செய்த போது, பக்தர்கள் அங்கு திரளவில்லை - காஞ்சி ‘மவுசு' பக்தர்களிடையே மங்கியது.

என்றாலும், எப்படி ‘‘பில்டப்'' பூணூல்களால் சிலாகித்து இன்றும் பேசப்படுகிறது!

அரசியல்வாதிகள் குற்றம் இழைத்தால் தண்டனை; குற்றமிழைக்காமலேயே இருந்தால்கூட பதவி நீக்க சூழ்ச்சித் திட்டம்.

ஆனால், இவாள் எந்த ‘இமாலயப் பாவம்' செய்தாலும் ‘அவாள்' என்றும் பெரியவாளாகவே வலம் வருவா!  அக்கிரகார குஞ்சு முதல் அதிஉயர பதவியில் உள்ள ‘சூத்திர' பிரமுகர்கள் உள்பட மண்டியிட்டு ‘‘ஆசி'' பெறுவதுதான் ‘ஆன்மிகத்தின் பெருமையோ பெருமை!' பூணூல் மகாத்மியம்தான் என்னே!

‘‘காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது'' என்பது சில பக்தர்களின் அருள்வாக்கு!

No comments:

Post a Comment