தமிழ்நாடு முதலமைச்சரின் கணிப்புப்படி நாற்பதும் நமதே! யார் வரக்கூடாது என்பதில் தமிழ்நாடு ஆயத்தமாகவே உள்ளது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 12, 2023

தமிழ்நாடு முதலமைச்சரின் கணிப்புப்படி நாற்பதும் நமதே! யார் வரக்கூடாது என்பதில் தமிழ்நாடு ஆயத்தமாகவே உள்ளது!

*  ஒன்றிய அரசு - தமிழ்நாட்டிற்கு சாதித்தது என்ன?

* நமது முதலமைச்சரின் கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பதில் என்ன?

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெறுவோம் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. நாற்பதும் நமதே என்கிறார் நமது முதலமைச்சர். இது பெரியார் மண் - யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதில் தமிழ்நாட்டு மக்கள் ஆயத்தமாக உள்ளனர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸின் அரசியல் பிரிவான பா.ஜ.க. எப்படியாவது சில நாடாளுமன்றத் தொகுதி களையாவது கைப்பற்றி விடவேண்டும் - வருகிற 2024 இல் நடைபெறும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் என்று திட்டமிட்டு, தலைகீழ் பயிற்சிகளையும், ‘அரசியல் தண்டால்களையும்' அமித்ஷாக்கள், நட் டாக்கள், பிரதமர் மோடி முதலியவர்களையும், அவரது ரத கஜ துர பதாதைகளும் அவ்வப்பொழுது தமிழ்நாட்டிற்கு வந்து தி.மு.க.மீது அவதூறு பிரச்சாரத்தை அள்ளி வீசிவிட்டுச் செல்வதை ஒரு வேடிக்கையான அரசியல் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்!

வேலூருக்கு வந்தார் - சென்றார் 

உள்துறை அமைச்சர் அமித்ஷா!

நேற்று (11.6.2023) சென்னை, வேலூருக்கு வந்து சென்ற (நம்பர் 2 வித்தை வித்தகரான) உள்துறை அமைச்சர் அமித்ஷா, 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற வியூகம் வகுத்துப் பேசி திரும்பி யுள்ளார்!

தென்சென்னை, வேலூர், குமரி, ஈரோடு, கோவை, இராமநாதபுரம், திருப்பூர் போன்ற பல நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறி  வைத்து அங்கு ‘சகலவித வித்தைகளிலும்' ஈடுபட முடிவெடுத்துள்ளனர்!

அ.தி.மு.க.வினர் தங்களது ‘பல்லக்கு பவனி'க்குத் தேர்ந்தெடுப்பார்கள் - எத்தனைப் பிரிவுகளும், பிளவு களும் அவர்களுக்கு - இருப்பினும், காரணம் வெளிப் படையானது ‘மடியில் கனம்' எனவே கூட்டணியில் பயம் என்ற நிலையில், அரசியல் கூட்டணி அடிமை ஒப்பந்தம் மீண்டும் மீண்டும் அவ்வப்போது அவர்களி டையே ஒவ்வொரு தேர்தலின்போதும் புதுப்பிக்கப் பட்டே வருவது கண்கூடு!

தெருக்கூத்தில் ராஜா வேஷம் கட்டுகிறவர்கள்; ‘‘ஊருக்கே உண்மை ராஜா தாம்தான்'' என்று நினைத்துப் பேசினால், மக்கள் அத்தகையவர்களை எப்படி நோக்குவார்கள்?

அப்படித்தான் தமிழ்நாட்டு மக்கள் ‘மோடி வித்தை'க் காரர்களையும் பார்த்து ஒரு கேலிச் சிரிப்புடன் நகருகின்றனர்!

கூட்டணி வேறு - கூத்தணி வேறு!

‘நாற்பதும் நமதே!' என்று முழங்குகிறார் ‘திராவிட மாடல்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  கலைஞர் நூற் றாண்டு விழாவில் - கூட்டணித் தலைவர்களோடு இணைந்து அவர்களது கோர்த்த கைகளுடன்- கொண் டுள்ள பலமான கொள்கை உறவு பலத்துடன்!

அது போன்று இன்று தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கூத்தணியினர் கூற முடியாததால்தான் - 25 இடங்களைப் பிடிக்கவேண்டும் என்று அமித்ஷா பேசுகிறார்.

15 இடங்களை ‘பெரிய மனதுடன்' மற்ற அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளார்!

இதற்கிடையில், ‘கருநாடகா வெற்றி வீரரான' தமிழ் நாட்டு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இப்போதே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பகிரங்கமாய் அறிவித்துவிட்டார்! (அப்புறம் எப்படி ‘அரசியல் பல்டி அடிப்பாரோ' என்பதும் யாருக்கும் தெரியாது).

முதலமைச்சர் கேள்விக்குப் பதில் என்ன?

தமிழ்நாட்டில் என்னென்ன புதிய திட்டங்களை பா.ஜ.க. அரசு தந்தது என்று சேலத்தில் கலைஞர் சிலை திறப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்ட கேள்விக்கு இதோ நாங்கள் தந்த அடுக்கடுக்கான திட்டம் என்று பதில் கூறினார்களா? கூறுவார்களா? ஒன்றிய அரசின் மானிய வழங்கலைக் காட்டினால் போதுமா?

1. பல ஆண்டுகளுக்குமுன் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப் பெற்ற மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டனவா? அந்த மருத்துவக் கல்லூரி அங்கே அதில் இயங்குகிறதா? பதில் தருவார்களா?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்?

2. சுமார் 1,800 கோடி ரூபாய் செலவில் தொடங்கி, தி.மு.க. அய்க்கிய முன்னணி அரசால் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு 12 கிலோ மீட்டர் தூரமே பணிகள் இன்னும் மீதமுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் (மூன்று பார்ப்பனர்கள் திட்டமிட்டு அத்திட்டம் தொடங்கி நடந்தால், அது தி.மு.க.விற்கு, அதன் கூட்டணி கட்சிகளுக்குக் குறிப்பாக காங்கிரசுக்குப் பெருமை ஏற்பட்டுவிடும் என்பதற்காக) தடையாணை பெற்று நிறுத்திய நிலை - இன்று உண்மைகள் - இராமர் பாலம் இருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை என்று மோடி அரசின் மூத்த அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் (நாடாளு மன்றத்தில்) மூலம் வெளியாகி, பொய்த் திரையை அவர்களே கிழித்துவிட்டதற்குப் பிறகாவது, முன்பு அமைச்சர் நிதின்கட்காரி மக்களவையில் கொடுத்த உறுதிமொழி, ‘‘சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை மீண்டும் எடுத்து செயல்படுத்த முனைவோம்'' என்ற வாக்குறுதி நடைமுறைக்கு வந்ததா?

அவ்வளவு தூரம் ஏன்?

செங்கற்பட்டு அருகில் ஒன்றிய அரசின் பல கோடி ரூபாய் செலவில் திட்டமிட்டு, நடத்தி மூடிய மருந்தியல் தொழிற்கூடத்தை -  கரோனா தொற்று காலகட்டத்தில் - இரண்டு ஆண்டுகளுக்குமுன் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம்மூலம் (ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பு) நடத்திட மாநில அரசு வைத்த கோரிக்கை இன்னமும் கிடப்பில்தானே போடப்பட்டுள்ளது?

வெறும் வக்கணை வாய்ஜாலப் பேச்சு வித்தைக்கு மட்டும் பஞ்சமில்லை.

இது பெரியார் மண் - நினைவிருக்கட்டும்!

தமிழ்நாட்டு மக்கள், வாயில் வடை சுட்டு விருந்தளிக்கும்  இந்தக் காவிகளின் முகத்திரையைக் கழற்றிவிட்டு கட்டிய டெபாசிட்டைக்கூட திரும்பப் பெற முடியாமல் தோல்வியைத் தரப் போவது உறுதி!

கருநாடகத்தில் செலவழித்ததைப்போல, பல மடங்கு செலவழித்தாலும், தமிழ் மண் ஒருபோதும் காவி மண் ணாகாது! இது சர்வமும் அறிந்த பெரியாரின் பகுத்தறிவு மண் - புரிந்துகொள்வீர், வீண் கனவு காண வேண்டாம்!

25 இடங்கள் பிடிப்பது அப்புறம் இருக்கட்டும்; ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் தனியே நின்று, பா.ஜ.க. அதன் பலத்தைக் காட்டிய பிறகு, அரசியல் முண்டா தட்டிக் காட்டட்டுமே!

இந்தியாவின் இதர மாநில வெற்றிகள் உள்பட  - இதுவரை நடந்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தேர் தல்களில் வாக்களித்தவர்கள் 40 சதவிகிதம் - எதிராக வாக்களித்தவர்கள் 60 சதவிகிதம். அப்படியென்றால், அவர்களுக்கு வாக்களிக்காதவர்கள்தானே அதிகம்! வெற்றி பெற்றவர்களை விலைக்கு வாங்கும் அரசியல் தான்!

யார் வரக்கூடாது என்பதில் தமிழ்நாடு ஆயத்தமாகவே உள்ளது!

எனவே, ‘வித்தைகள்'மூலம் முன்பு வெற்றியைப் பெற்றார்கள். இப்போது அந்த வித்தைகள் செல்லாது - இன்றைய 2,000 ரூபாய் நோட்டுகள்போல என்ற உண்மை, வெளியாவது உறுதி!

யார் வரக்கூடாது என்பதில் தமிழ்நாடு ஆயத்தமாகி நிற்கிறது!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

12.6.2023


No comments:

Post a Comment