தாம்பரம் - திராவிடர் தொழிலாளர் கழக மாநாட்டுச் சிந்தனை தொழிலாளர்கள் பிரச்சினை - பெரியாரின் சிந்தனை வெளிச்சம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 19, 2023

தாம்பரம் - திராவிடர் தொழிலாளர் கழக மாநாட்டுச் சிந்தனை தொழிலாளர்கள் பிரச்சினை - பெரியாரின் சிந்தனை வெளிச்சம்!

1.  பாட்டாளி மக்களே பெரிதும் சுரண்டப்படுகிறார்கள்; முதலாளி வர்க்கத்தாலும் புரோகித வர்க்கத்தாலும்.

2. தொழிலாளர் கிளர்ச்சிகளின்போது பொரு ளாதாரப் பிரச்சினையை மட்டுமே கவ னித்தால் போதும் என்று எண்ணுகிறார்க ளேயொழிய, புரோகிதப் பிடியிலிருந்து விடுபடும் முயற்சியைப் புறக்கணித்து விடுகின்றனர்.

3.திராவிட இனத்திலே, மிகமிகப் பெரும் பகுதியினர் பாட்டாளிகளே. ஆரிய இனமோ, பாடுபடாத பிறவி முதலாளி வர்க்கம். ஆகவே ஆரிய-திராவிடப் போர் என்பது, அடிப்படையிலே பார்த்தால், பொருளாதார பேத ஒழிப்புத் திட்டந்தான்,

4. ஜாதிமுறை, சடங்குமுறை என்பனவெல் லாம், தந்திரமாக அமைக்கப்பட்ட, பொரு ளாதாரச் சுரண்டல் திட்டமேயாகும். ஆகவே ஜாதி முறையை ஒழிப்பதும், சம தர்ம திட்டந்தான்.

5.தொழிலாளர்கள், ஆரிய ஆதிக்கத்தை அகற்றாமல், பொருளாதாரத் துறையிலே எவ்வளவு முன்னேறினாலும், அவர்களு டைய வாழ்வு மலரமுடியாது. ஆகவே, அவர்கள், ஆரிய ஆதிக்கத்தை அகற்ற வேண்டும்.

6.பாட்டாளிகள் என்றால், ஆலைத் தொழிலிலே ஈடுபட்டு, சங்கம் அமைத்துக் கொண்டு கூலி உயர்வு, குடி இருக்கும் வீட்டு வசதி, சுகாதார வசதிகள் ஆகியவை களுக்காகக் கிளர்ச்சிகள் நடத்துபவர்கள் மட்டுமல்ல, பண்ணை வேலை செய்பவன், கல் உடைப்பவன், கட்டை வெட்டு பவன், குப்பை கூட்டுபவன் போன்ற சங்கமோ, கிளர்ச்சி செய்யும் உணர்ச்சியோ கூடப் பெறாமல், சிதறி, வாழ்க்கையைச் சிதைத்துக் கொண்டுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களையே குறிப்பதாகும்.

7.தொழிலாளர்கள் அவல வாழ்வு பெற்றிருப்பதற்குப் பெரிதும் காரணமாக இருப்பதும், அவர்கள் எழுச்சி பெற்று, உரிமைப் போருக்கான வகை தேடிக்கொள்ளாமலி ருப்பதற்கும் காரணமாக இருப்பது, மதத்தின்பேரால் அவர்கள் மனதிலே திணிக்கப் பட்டுள்ள மூட நம்பிக்கைகளே ஆகும். ஆகவே, அவற்றினின்றும் விடுபடுவது தொழிலாளர்களின் விடுதலைக்கு முக்கிய மான முதற் காரியமாகும். இதனைச் செய் யாமற்போனால், இன்று தொழிலாளர்க ளின் மனதிலே குடி கொண்டுள்ள பழைய கால நம்பிக்கைகளை உபயோகப்படுத் திக் கொண்டு, தந்திரக்காரத் தன்னல அரசியல் கட்சிகள், புரோகித வகுப்பாரின் கூட் டுறவுடன் தொழிலாளரை நசுக்கி விட முடியும்.

8. ‘திராவிட நாடு திராவிடருக்கு’ ஆக வேண்டுமென்று கூறும்போது, பாடுபடும் இனத்தைப் பாடுபடாத இனம் சுரண்டும் கொடுமையும், பாடுபடும் இனம் தன்னுடைய மனதிலே பூட்டிக்கொண்ட தளைகளால், அடிமைப்பட்டுக் கிடக்கும் கேடும் ஒழிய வேண்டும் என்ற எண்ணத்தையேதான், வேறு வார்த்தைகளால் கூறுவதாகப் பொருள். சமதர்ம நாடு, சமூக சமதர்மம் என்ற அடிப்படைமீது கட்டப்பட்டால் தான் நிலைக்கும். இந்த ஒரு அம்சம் இந்நாட்டுக்கு மட்டுமே உள்ளது. வேறு இடங்களில் ஜாதியின் பேராலே, பொருளாதாரச் சுரண்டல் முறை ஏற்பட்டிருக்க வில்லை.

9.தன்னாட்சி பெற்ற திராவிட நாட்டிலே, ஆரிய ஆதிக்கம் இராது என்றால், தந்திரத் தால் ஏழைகளையும் உழைப்பாளரையும் ஏமாற்றி, உழைக்க வைத்து, மதத்தின்பே ரால் கட்டிவிடப்பட்ட கற்பனைகளைக் காட்டி ஏமாற்றித் தங்களை மேல்ஜாதி என்று காட்டிக் கொண்டு, பாடுபடாமல் வாழும் சுரண்டல்காரர்களின் கொட்டம் இராது என்றே பொருள்.

10. திராவிட நாட்டிலே உற்பத்திச் சாதனங்கள், பெரிய தொழிற்சாலைகள், போக்குவரத்துத் தொழில், இலாவா தேவி முதலிய பெரும் இலாபம் தரும் தொழில்கள், தனிப்பட்ட முதலாளிகளிடம் இராது சர்க்காரே நடத்தும். ஆகவே, முதலாளித்துவம் இராது.

-‘திராவிட நாடு’, 5.5.1946

20.5.2023 நாள் முழுவதும் திராவிடர் தொழிலாளர் கழக மாநாடு - வாரீர்! வாரீர்!!


No comments:

Post a Comment