கருநாடக வெற்றி என்ற மணியோசை - வரும் மக்களவைத் தேர்தலிலும் ஒலித்திட அனைவரும் தன்முனைப்பின்றி ஒன்றிணைவது அவசியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 19, 2023

கருநாடக வெற்றி என்ற மணியோசை - வரும் மக்களவைத் தேர்தலிலும் ஒலித்திட அனைவரும் தன்முனைப்பின்றி ஒன்றிணைவது அவசியம்!

 ‘‘தொங்கும் சட்டமன்ற''மாக கருநாடகாவில் அமையும் என்று கனவு கண்ட பி.ஜே.பி.,க்குப் பெருந்தோல்வி!

மதவெறி விலகட்டும்; சமூகநீதி - சமதர்மம் மலரட்டும்!

கருநாடகத்தில் காங்கிரசுக்கான வெற்றி - வரவிருக்கும் 2024  மக்கள வைத் தேர்தலிலும் அனைவரும் தன் முனைப்பின்றி - மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து சாதித்துக் காட்ட வேண்டும்  என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிக்கை `விடுத்துள் ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

கருநாடக மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, 5 நாள்கள் இடைவெளிக்குப் பின், காங்கிரஸ் தலைவர்களின் கடும் முயற்சி, ஒருங்கிணைப்புமூலம், மக்கள் விரும்பத்தக்க வகையில் முதலமைச்சராக திரு.சித்தராமையா அவர்களும், துணை முதலமைச்சராக திரு.டி.கே.சிவக்குமார் அவர்களும் ஒருமன தாக முடிவு செய்யப்பட்டு, நாளை (20.5.2023) கருநாடகத் தலைநகர் பெங்களூருவில் தமது அமைச்சரவை சகாக்களுடன் பதவிப் பொறுப் பேற்கவிருக்கிறார்கள் என்ற செய்தி, காங் கிரசுக்கு வாக்களித்து, அந்த ஆட்சி மீண்டும் மலர விரும்பிய கருநாடக வாக்காளப் பெரு மக்களுக்கு பெரும் நிம்மதியையும், மகிழ்ச்சி யையும் நிச்சயம் ஏற்படுத்தும் என்பது உறுதி.

கருநாடக வெற்றி - 

வரும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்!

அதைவிட வரவிருக்கும் சில மாநில சட்ட மன்றத் தேர்தல்கள், 2024 இல் வரவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தற்போது ஜனநாயக உரிமைகளுக்கும், அரசமைப்புச் சட்ட மரபுகள், விதிகளுக்கும் நேர்முரணாகவும், அரசியலில் அறநெறியற்ற ஒரு மதவெறி ஹிந் துத்துவ ஆட்சியாகவும் மத்தியில் நடத்திவரும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சியின் கடைசி அத்தியாயத்தை எழுதவதற்கு முன்னே, முதல் மணி அடிப்பே அந்த முடிவுகளின் முரசொலி யாக ஒலித்திருக்கிறது என்பதைப் புரிந்து, இந்தியாவின் இதர முற்போக்கு ஜனநாயக, மதச்சார்பற்ற சமூகநீதிக்காக போராடும் சக்தி களுக்கும் மிகவும் புது நம்பிக்கையை அளிக்கும். 

‘ஆயாராம் காயாரம்' போய் சித்த‘ராமை'யா வெற்றி!

‘‘தொங்கும் சட்டமன்றமாக'' முடிவுகள் அமையும்; அதை வைத்து குதிரை பேரம், ‘ஆயாராம் காயாராம்'மூலம் (அந்த ராம் கைகொடுக்காவிட்டாலும், இந்த ராம்களை நம்பியாவது) கருநாடகத்தில் மீண்டும் ஹிந் துத்துவ அரசியல் பரிசோதனைக் கூடத்தினை தங்கு தடையின்றி நடத்திடலாம்'' என்று நினைத்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பி.ஜே.பி. தலைவர் ஜே.பி.நட்டா, ஆர்.எஸ்.எஸ். தலைமை - அனைவருக்கும் கருநாடக வாக்காளர்கள் ‘‘தண்ணீர் காட்டினர்'' - ‘‘அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றம்'' என்ற பாடத்தையும் புகட்டியுள்ளனர் - அங்கு தங்கு சட்டசபை நீடிக்கும் - நிலைத்த ஆட்சி (Stable Government) வரும்படித் தீர்ப்பு அளித்ததன்மூலம்!

ஹிந்துத்துவத்தின் இடுப்பை ஜனநாயகத் தீர்ப்பு என்ற வாக்குத் தடியின்மூலம் உடைத் தனர்!

அவர்கள் நம்பிக்கையை மேலும் உயர்த் திட இந்தத் தேர்வுகள் பெரிதும் கட்டியம் கூறுகின்றன!

யார் இந்த சித்தராமையா தெரியுமா?

8 முறை சட்டப்பேரவை அனுபவம்பெற்ற சித்தராமையா அவர்கள், சமூகநீதிப் போராளி யாவார். அவரது ‘அகிண்டா' (Akinda)  அமைப்பே அதைப் பறைசாற்றும்.

பல முக்கிய ஆளுமைப் பொறுப்பில் இருந்து தன்னைச் செதுக்கி, உயர்ந்த ஒருவரை, 6 விழுக்காடு மட்டுமே கொண்ட ‘குரும்பர்' என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பூத்த புதுமலர் - அவர் துணை முதலமைச்சர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் போன்ற அத்துணைப் பொறுப்புகளையும் திறம்படச் செய்த நேர்மையாளர். அரசியலில் கைதேர்ந்த மாபெரும் வித்தகர்!

அதுபோலவே, துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் கருநாடக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.டி.கே.சிவகுமார் (‘ஒக்கலிகா'-பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினர்) - அவர்கள் கடந்த சில சோதனையான கால கட்டங்களில் - அவை காங்கிரஸ் கட்சிக்கும், தனிப்பட்ட முறையில் அமலாக்கப் பிரிவு வல்லடி வழக்குகளில் அவர் சிக்க வைக்கப் பட்டு, திகார் சிறையிலும் அவரை வைத்தனர் - அவரோ மலைகுலையா உறுதியுடன் உழைத்து, காங்கிரஸ் ஆட்சி வருவதை வெறும் கனவாக்காமல், நனவாக, நடப்பு உண்மையாக ஆக்க உழைத்தார்!

மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு நல்லதோர் எதிர்காலம் உண்டு!

அரசியலில் அவருக்கு இனியும் நல்ல எதிர்காலம் இருக்கும்.

கொண்ட கொள்கையில் உறுதி, கட்சி மாறாத மனப்போக்கு - இப்பொறுப்பினை ஏற்பது, அதுவும் பெரும் எதிர்பார்ப்புக்குப் பின்னரும் - மன உறுதியும், அரசியல் தெளி வும் உள்ளவர் என்பதை நிரூபித்துவிட்டார்.

அனைத்திந்திய காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே அவர்களது தலைமைக் கிரீடத்திற்கு இந்த சாதனை ஒரு ஒளிமுத்து!

இவை எல்லாவற்றையும்விட வியூகத் தாலும், வினைத்திட்பத்தாலும் சாதித்து சரித் திரம் படைத்த காங்கிரஸ் மூத்த தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும், புரட்சிகர இளைய தலைவர் - இளைஞர்களின் உள்ளங்கவர் நாயகர் ராகுல் காந்தி அவர் களுக்கும் இது ஒரு பெரும் சாதனைச் சரித்திரம்!

பா.ஜ.க. இல்லாத தென்னாடு!

‘‘காங்கிரசில்லா இந்தியா''வை நிறுவ பேராசை கொண்ட பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு ‘திராவிட பூமி'யில் ‘‘பா.ஜ.க. இல்லாத தென்னாட்டைத்தான்'' காணும் அரசியல் யதார்த்தமும் அவர்களுக்குப் பாடம் கற்பித்துள்ளது- வரலாற்றில் இது ஒரு வேடிக்கையான - முக்கியமான திருப்பம் ஆகும்!

சிறுபான்மையினருக்குச் சிறந்த ஆறுதல் தருவதும் இந்த வெற்றியில் உள்ளடக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் முன்னோட்டமும், ‘திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகளும் கருநாடகத் தேர்தலுக்குக் கலங்கரை வெளிச்ச மாய்ப் பயன்பட்டன - இது உலகறிந்த உண்மை!

இதே ஒற்றுமை உணர்வு 2024 இல் நடைபெறப் போகும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி களாக, மதச்சார்பின்மை ஜனநாயகக் காப்புறுதி யாளர்களாகத் தொடர்ந்திருந்து, மத்தியிலும் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கி, மதவெறி - வெறுப்பு இருட்டிலிருந்து சமதர்ம, சமூகநீதி, வெளிச்சத்தினை வாரி வழங்கிட, சரியான அச்சாரமாகவும் முன்னெடுத்துக்காட்டாகவும், ‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என்பதுபோல், 2024 இல் யார் வரக்கூடாது என்ற உறுதியே இறுதி இலக்காக ஆக்கப்படுவதற்கு முகவுரையே இன்று கருநாடக மாநிலத்தில் காங்கிரசின் ஆட்சி!

வெற்றிக்கு உழைத்த 

அனைவருக்கும் பாராட்டு!

முதலமைச்சர், துணை முதலமைச்சர், காங் கிரஸ் கட்சியின் மூத்த முன்னோடித் தலைவர் திருமதி சோனியா காந்தி, இளந்தலைவர் ராகுல் காந்தி, தேசிய தலைவர் திரு.மல்லி கார்ஜூன கார்கே, மற்றும் உழைத்த காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு உளம் நிறைந்த வாழ்த்துகள்!

ஒற்றுமை ஓங்கட்டும்!

பொது எதிரி மட்டுமே கவனத்தில் இருக்கட்டும்!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

19.5.2023


No comments:

Post a Comment