ஆதியில் மனிதனுக்கு ஆடைகள் தந்ததும் மரமே! ஜாதிகள் அற்ற சமத்துவ ஜீவனும் மரமே! இயற்கை கற்றுக் கொடுக்கும் பாடத்தை, கற்பித்த பழகு முகாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

ஆதியில் மனிதனுக்கு ஆடைகள் தந்ததும் மரமே! ஜாதிகள் அற்ற சமத்துவ ஜீவனும் மரமே! இயற்கை கற்றுக் கொடுக்கும் பாடத்தை, கற்பித்த பழகு முகாம்!

வல்லம்.மே,8- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்திய பழகு முகாம் நீச்சல், கலை நிகழ்ச்சிகள் என, நான்காம் நாள், பெரியார் பிஞ்சுகள் உற்சாகத்தில் திளைத்தனர்.

பழகு முகாம் வரலாறு!

பெரியார் பிஞ்சுகளுக்கு விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளோடு, பகுத்தறிவுக் கருத்துகளை கற்றுத்தர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், தமிழர் தலை வர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால், ’பெரியார் பொறியியல் மகளிர் கல்லூரி’ வளாகத்தில் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1995 ஆம் ஆண்டு வரை நடந்து தவிர்க்க முடியாத காரணங்களால் நின்றுபோன ’பழகு முகாம்’ நிகழ்ச்சி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களின் முன்னெடுப்பில், 2010ஆம் ஆண்டு மறுபடியும் தொடங்கப்பட்டு, 2011ஆம் ஆண்டு தவிர, இன்றுவரை தொடர்ந்து சிறப் பாக நடத்தப்பட்டு வருகிறது. இடையில் கரோனா காரணமாக 2020, 2021ஆம் ஆண்டுகள் நடைபெற வில்லை. 2023ஆம் ஆண்டு பழகு முகாமின் 14 ஆம் ஆண்டு நிகழ்வாகும்!

இப்படிப்பட்ட சிறப்புக்குரிய பழகு முகாம் இந்த ஆண்டு, மே 2, முதல் மே 6 வரை நடத்தத் திட்டமிட்டு, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடத்தப் பட்டது. இதன் நான்காம் நாளான 5-5-2023 அன்று, மனநல ஆலோசகர் லில்லி புஷ்பம் அவர்களின் ’அனைவரும் சமம்’, குந்தவைக் குளத்தில் ’நீச்சல்’, பொம்மலாட்டக் கலைஞர் கலை வாணன் நிகழ்த்திய, ’கலை நிகழ்ச்சிகள்’, இயற்கையை புரிந்து கொள்ளுவதை ’கலை’யின் மூலமாகவே செய்து காட்டிய தோழர் மதியழகன் வகுப்பு என நான்காம் நாள் வகுப்புகள் பிஞ்சுகளை தொடர் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

அய்ன்ஸ்டீன் என்ன சொன்னார்?

காலை வழக்கம் போல அதிகாலை நடை ஓட்டப் பயிற்சி, தற்காப்புக் கலைகள் கற்றல், காலை உணவு என அன்றாடப் பணிகள் முடிந்து பிஞ்சுகள் அனை வரும் தனி வாகனத்தில் அய்ன்ஸ்டீன் அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர். முதல் வகுப்பு மனநல ஆலோசகரின், அனைவரும் சமம்! எனும் கருத்தமைந்த இரு பக்க உரையாடல் வகுப்பு. அவர், ஒரு கழுதை குதிரை கதையின் ஒலி,ஒளிப் படக்காட்சியை திரை யிட்டு, அதன் கருத்து என்ன என்பதை பிஞ்சுகளையே சொல்லச் சொல்லி கேட்டு மகிழ்ந்தார். ஜாதி எப்படிப் பட்ட கொடூரமானது என்பதை எளிமையாக புரிய வைத்தார்.

தொடர்ந்து அனைவரும் அமர்ந்திருக்கும் அய்ன்ஸ் டீன் அரங்கம் தாங்கி நிற்கும் அறிவியல் அறிஞர் என்ன சொன்னார்? என்று கேட்டு, வந்த பதில்களோடு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அறிவாளிகள் தான் என்ற, அய்ன்ஸ்டீன் சொன்ன கருத்தையும் சொல்லி, வகுப்பில் நடத்திய கருத்தின் சாரத்தை சொல்கிற பிஞ்சுகளுக்கு பரிசு என்று அறிவித்தார். அந்த அறிவிப்பை ஏற்று, தண்மதி, தமிழினி, அறிவுச் சுடரொளி, அகரா, சாரல், கிருஷ்ண ரட்சிதா ஆகியோர் கலந்துகொண்டு தாங்கள் உள்வாங்கிய கருத்துகளை மேடையேறி வெளிப்படுத்தினர். அனைவருக்கும் பரிசளித்து சிறப்பித்தார்.

குந்தவை நீச்சல் குளம் பட்டபாடு!

சுழற்சி முறையில் ஆண். பெண் என்று நீச்சல் வகுப் பிற்கு பிஞ்சுகள் அழைத்துச் செல்லப்பட்டனர். முதலில் சிறுவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் திரும்பியவுடன், மனநல ஆலோசகர் லில்லி புஷ்பம் வகுப்பு முடிந்த பெண் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இருபாலருக்குமே நீச்சல் வகுப்பு என்றாலே மகிழ்ச்சி பீறிட்டு விடுகிறது. பயணத்தின் போது ஆட்டம், பாட்டு என்று பேருந்தே கலகலத்துப் போய் விடுகிறது. இந்த உற்சாகம் உடன் செல்பவர் களையும் தொற்றிக் கொள்கிறது. அந்த நீச்சல் குளம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தின் பராமரிப்பில் நடைபெற்று வரும், கணபதி நகர் அன்னை சத்யா விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள குந்தவை நீச்சல் குளம்! 

ஆக்கப் பொறுத்தவர்களுக்கு ஆறப்பொறுக்காது என்பதுபோல, உள்ளே நுழைந்ததுமே குளத்தில் குதித்து விட வேண்டும் என்றுதான் பிஞ்சுகளின் உள் ளம் பறக்கிறது. ஆனால் ஒருங்கிணைப்பாளர்கள், நீச்சல் குளத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைப்படி நிதானமாக அவர்கள் இறக்கிவிடப்படுவர்!  

பிஞ்சுகளுக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி விடுவர். அதில் அவர்கள் நின்ற இடத்திலிருந்தே எகிறிக் குத்திப்பதும், நின்ற இடத்திலேயே தண்ணீரில் முங்கி எழுவதும், இரண்டு கைகளை வீசி வீசி நீச்சலிடு வதும், பக்கத்தில் விளையாடும் பிஞ்சின் முகத்தில் தெறிக்கும்படி கைகளால் தண்ணீரை அடிப்பதும், அந்தத் தொல்லையை விரும்பி மற்றவர்கள் ஆய்.. உய்.. என்று கூச்சலிடுவதும் குந்தவை நீச்சல் குளத்திற்கு மட்டும் வாயிருந்தால் சொல்லி மாளாது! ஒருவழியாக அவர்களை வெளியேற்றி அழைத்து வரப்பட்டனர்.

நெருக்கடியில் எப்படி முடிவெடுப்பது?

மதிய உணவுக்குப் பிறகு பிஞ்சுகளின் மனம் கவர்ந்த அரங்கமான பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில், பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணன், அவசரமான நேரங்களில் முடிவெடுப்பது, மதியை கூர்மைப் படுத்துவது என்பதை மய்யப்படுத்தி கூடி விளையாடிய படியே கருத்துகளைக் கற்றுத்தர வேண்டும் என்கிற நோக்கில் ஒரு வகுப்பு நடைபெற்றது. இதில் இருபாலரும் வட்ட வடிவமாக நிறுத்தப்பட்டு, கலைவாணன் பாடப் பாட, பிஞ்சுகள் அதைப் பின்பற்றி பாடியபடி அவரது ஆணையையும் செயல்படுத்த வேண்டும். இது விளையாட்டின் விதி! கலைவாணன், ‘தோப்பிருக்கு மரமிருக்கு எத்தனை மரம்? எத்தனை மரம்?’ என்று பாடினால், பிஞ்சுகள் ‘எத்தனை மரம்? எத்தனை மரம்?’ என்று பாடுவார்கள்.

இப்படியே கிளை, இலை என்று செல்லும். திடீ ரென்று, கலைவாணன் ’10’ என்று ஆணையிடுவார். உடனடியாக 10 பேர் கொண்ட குழுக்களாக 5 மணித் துளிகளில் சேர வேண்டும். இதில் முக்கியமான ஒரு சூட்சுமம் இருந்தது. இயல்பாக பிஞ்சுகளுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன சிக்கல்கள் கூட, மறக்கடிக்கப் பட்டு, ஆண், பெண் பேதம் இல்லாமல் அனைவரும் தேவை கருதி ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு, அப்படி  ஏதாவது சிக்கல்கள் இருந்தாலும் மறக்கடிக்கப்பட்ட கூடிய வாய்ப்பை, அந்த விளையாட்டு அமைத்துக் கொடுத்தது. 

கருப்பு நிறத்தினிலே எங்கள் பெரியார்!

மாலை பிஞ்சுகள் சிறிது நேரம் விளையாட அனுமதிக்கப்பட்டனர். சிற்றுண்டிக்குப் பிறகு, அனை வரும் முத்தமிழ் அரங்கிற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு தோழர் மதியழகன், அறிவியல் வளர்ச்சி எப்படி மனித வாழ்க்கையை சுலபமாக்கி யிருக்கிறது என்பதை எளிய உரையாடல், ‘பறவையைக் கண்டான் விமானம் படத்தான்’ போன்ற பாடல்கள் மூலம் கற்றுக் கொடுத்தார். அப்படி அறிவி யலை பயன்படுத்திக்கொண்டே இயற்கையை எப்படிப் பேண வேண்டும் என்பதையும் பாடல்கள் மூலமாகவே கற்றுக்கொடுத்தார்.

அதிலொரு பாடல்தான், ‘ஆதியில் மனிதனுக்கு ஆடைகள் தந்ததும் மரமே! ஜாதிகள் அற்ற சமத்துவ ஜீவனும் மரமே!’ என்ற பாடலாகும். அத்தோடு வண்ணத்துப் பூச்சியை பாருங்கள்! வருத்தம் கவலை போக்குங்கள்!’ என்றும் பாடியும் ஆடியும் பிஞ்சுகளைக் கவர்ந்தார். தொடர்ந்து ஒரு சின்ன இடைவெளியில் காக்காய வேடமிட்டு வந்தார். ‘நாங்கள் மசூதியில் அமர்வோம்! கோயில் கோபுரத்தில் இருப்போம்! ஆலயத்தின் உச்சியில் அமர்வோம்! எங்களுக்கு அழகு நிறமல்ல, ஒற்றுமை! உங்க நிறத்தை நீங்களே வெறுக்காதீங்க!’ என்று பாடி பிஞ்சுகளைக் கவர்ந்தார். 

அப்படியே சிறிய இடைவெளியில் கோமாளி வேடமிட்டு வந்தும் பிஞ்சுகளை உற்சாகப்படுத்தினார். இடைவெளிகளில் கலைவாணனின் ஒருங்கிணைப்பில் இசைப்பிரியா, சுதந்திரச் செம்மொழி, ஆரா மூவரும், ‘ஏஞ்சாமி ஏஞ்சாமி’ எனும் இயற்கையை நேசிக்கும் பாடலைப் பாடி அனைவரின் கைதட்டல்களைப் பெற்றனர். அதே போல் அறிவுமதி, கவின்மலர், பறை - யாழினி, ’கருப்பு நிறத்தினிலே எங்க பெரியார்’ என்ற பாடலைப் பாடி அசத்திய நாகப்பட்டினம் அறிவாளன், அமுதினி ஆகியோர் மேடையேறிப் பாடி மேடைக் கூச்சம் போக்கிக் கொண்டனர்.

மழை காரணமாக விரைந்து விடுதிக்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்ததால், பெரியார் திரைப் படம் மூன்றாம் நாள் அரை மணி நேரம் இருக்கும் போது நிறுத்தப்பட்டது. பிஞ்சுகளின் வேண்டுகோளுக் கிணங்க, நான்காம் நாளில் மீதியும் திரையிடப்பட்டது. பின்னர் இரவு உணவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரவர் அறைகளுக்கு அனுப்பட்டனர். நாளையுடன் இந்த பழகு முகாம் முடிந்துவிடுமே, புதிய நண்பர்களை சந்திக்க முடியாதே என்ற கவலையும், வீட்டுக்குச் செல்லப்போகிறோம் என்கிற மகிழ்ச்சியும் ஒருசேர பிஞ்சுகளை அலைக்கழித்தது. ஒருவழியாக தூங்கச் சென்றனர்.

No comments:

Post a Comment