ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 20, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி  : பா.ஜ.க.வை படுதோல்வியடையச் செய்து - காங்கிரசை ஆட்சியில் அமர்த்திய கருநாடக வாக்காளர்களின் தெளிவான நிலைப்பாட்டை வரவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் (2024) இந்திய வாக்காளர்கள் செயற்படுத்துவார்களா? வாய்ப்புகள் எந்த அளவிற்கு உள்ளன?

- சி.பாசுகர், ஓட்டேரி, சென்னை-12

பதில்  : நிச்சயமாக இதன் தாக்கம், பா.ஜ.கவின் - ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின் தோல்விப் படலம் தொடரும் என்பதற்கான முன்னோட்டமே!

வடபுலத்திலும், தென் மாநிலங்களில் தெலங்கானா போன்றவற்றிலும் தங்களது 'மறு எழுச்சி' வித்தையைக் காட்ட முழு வீச்சில் முயற்சி செய்து இத்தகைய வெற்றிகளை மக்கள் மறக்கும் படிச் செய்ய சில தந்திர உபாயங்களை, பா.ஜ.க.வினர் கைக்கொள்ளும் வாய்ப்பு இருந்தாலும், மக்கள் மனநிலை - மாறியே வருகிறது!

---

கேள்வி : பல்வேறு வழிகாட்டு முறைகள், சட்ட விதிகள் இருந்தும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முனையும் தொழிலாளர்கள் உயிரிழக்கும் கொடுமை தொடர்கிறதே - இதனைத் தடுத்து நிறுத்த வழிதான் என்ன?

- க.ச.க.இரணியன், புழல்

பதில்  : இது இயந்திர யுகம்; இதில் மனித உயிர்ப் பலிகளைத் தடுக்க அரசுகள் தீவிர முயற்சி எடுப்பது அவசியம் - அவசரம்.

---

கேள்வி  : "வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஆதரிப்போம்" என்று மம்தா அறிவித்துள்ளாரே - இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்ன?

- இரா.பூபாலன், மாதவரம்

பதில்  : தனது நிலைப்பாட்டில் பிடிவாதம் காட்டாமல், யதார்த்த நடைமுறைக்குத் திரும்பு கிறார் மம்தா என்ற சமிக்ஞை!

---

கேள்வி  : தமிழ்நாட்டில் தி.மு.க. அமைச்சரவையில் மிகச் சிறிய மாற்றம் செய்யப்பட்டிருப்பதை வைத்து ஜாதி, மத துவேசம் செய்தும், வாரிசு அரசியல் என்றும் 'பூதாகரமாக்கி' விஷமப் பிரச்சாரம் செய்து, தனித்தனியே தலைப்பிட்டு மூன்றுக்கும் மேற்பட்ட செய்திகளை ஒரே நாளில் வெளியிட்டுள்ளதே பூணூல் மலரான இனமலர் நாளிதழ்?

- மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில்  : 'அவாளின்' 'நிந்தாஸ்துதி'தான் திராவிட மாடல் ஆட்சி சரியான திக்கில் செல்லுகிறது என்பதற்கான நற்சாட்சிப் பத்திரம்! பெருகட்டும் தூற்றல்!!

---

கேள்வி  : கருநாடக காங்கிரசில், பா.ஜ.க. பிளவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதா?

- பாண்டுரங்கன், சென்னை

பதில்  : இண்டு, இடுக்கிலும் நுழைந்து பிளவு, பேதம் ஏற்படுத்துவது ஆரியத்தின் கைவந்த கலையாயிற்றே - எதுவும் நடக்காது என்ற 'மெத்தனம்' காங்கிரசாருக்கு இருக்கக் கூடாது!

---

கேள்வி  : கருநாடகாவில் பா,.ஜ.க. தோல்வி என்பது 2024இல் நடைபெறப்போகின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் எதிரொலி என்பதை அண்ணாமலை அண்மையில் மறுத்துள்ளாரே?

- ஓவியன், எம்.எம்.டி.ஏ., சென்னை 

பதில்  : வெற்றி வீரராக இல்லாமல் வெற்று (வாய்ச்சவடால்) வீரராக(?) உள்ள அவர் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார் போலும்; காரணம் மீசை இல்லையே எப்படி ஒட்டும் என்று கூறுவது போல!

---

கேள்வி  : விடுதலை சிறுத்தைகள் கட்சியை தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி, பா.ஜ.க. கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளாரே, வானதி சீனிவாசன், அதன் சூட்சுமம் என்ன?

- பா.முகிலன், வேலூர்

பதில் : பா.ஜ.க.வுக்கு அப்படியாவது உழைக்கும் தொண்டர்கள் கிடைப்பார்களா என்ற ஏக்கத்தின் எதிர்பார்ப்போ? பரிதாபத்திற்குரிய வானதி! புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது! நீலம் ஒருபோதும் காவியாகாது!

---

கேள்வி : கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதும், மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய ஒழிப்பில் ஈடுபடுகிறார்களே - அதற்குமுன் இப்பணியை செயல்படுத்தாததற்குக் காரணம் என்ன?

- பா.கண்மணி, பெங்களூரு

பதில் : காவல்துறையின் சில 'கறுப்பு ஆடுகள்' கடமை மறந்ததே காரணம்.

---

கேள்வி : இன்றைய தலைமுறையினரின் எதிர்கால வாழ்வு சிறக்க பட்டறிவு வேண்டுமா? பகுத்தறிவு வேண்டுமா?

- லோ.ஜெகதீஷ், திருநெல்வேலி

பதில் : பகுத்தறிவும், பட்டறிவும் இணைந்த கூர்நோக்கு மிகவும் தேவை.

---

கேள்வி : கல்விக்கு இணையாக தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்பவர்களால் மட்டுமே சாதிக்க முடியும் எனும் இக்காலகட்டத்தில், தொழில்நுட்ப வளர்ச்சி ஆக்கம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

- ச.ஜெயக்குமார், சென்னை-11

பதில் : உடனடி தேவை தொழில்நுட்ப அறிவைப் பெருக்கும் தொழில்நுட்ப கல்லூரிகள். பஞ்சாயத்து யூனியன்களில் தொழிற்சாலைகளின் தேவையோடு இணைந்த INDUSTRY - INSTITUTION LINKAGE-வுடன் செயல்படும் திட்டம்; கல்லூரிகளை விட இந்தத் தொழில்நுட்பக் கல்விப் பட்டயமும், மேற்படிப்பு நுழைவு வாயிலும் தேவை - தைவான் போன்ற சிறு நாடுகள் நமக்கு அதில் வழிகாட்டும்!

 

No comments:

Post a Comment