ஹிந்தித் திணிப்பு வெறும் மொழிப் பிரச்சினையல்ல; பண்பாட்டுத் திணிப்பே! கிளர்ச்சி வெடிக்கும் எச்சரிக்கை!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

ஹிந்தித் திணிப்பு வெறும் மொழிப் பிரச்சினையல்ல; பண்பாட்டுத் திணிப்பே! கிளர்ச்சி வெடிக்கும் எச்சரிக்கை!!

 முதலமைச்சர் அண்ணா காலத்திலேயே (1967-1968) 'ஆகாஷ்வாணி' பின்வாங்கச் செய்யப்பட்டது!

'ஆகாஷ்வாணி' என்பது பின்வாங்கப்பட்ட நிலையில், மீண்டும் ஆகாஷ்வாணியைக் கொண்டுவந்து ஹிந்தி மொழியைத் திணிக்கும் பண்பாட்டுப் படையெடுப்பைத் தொடுத்தால், நாடெங்கும் கிளர்ச்சி வெடிக்கும், எச்சரிக்கை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

அனைத்திந்திய வானொலியை - ‘ஆல் இண்டியா ரேடியோ' என்று முன்பு காலங்காலமாய் பயன்படுத்திய சொற்களுக்குப் பதில், ஹிந்தித் திணிப்பு வெறி காரணமாக - இனி ‘ஆகாஷ்வாணி' என்ற சொல்லால் மட்டும்தான் அழைக்கவேண்டும் என்ற ஹிந்தித் திணிப்பு ஆணையை  உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும். இன்றேல் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதிலும் தொடர் கிளர்ச்சிகள் வெடிக்கும் என்பது உறுதி.

ஹிந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வு என்பது ஓர் எதிர்மறையான இயக்கம் அல்ல; மாறாக ஒரு வடமொழி - சமஸ்கிருத கலாச்சாரப் பண்பாட்டைத் தடுத்து நிறுத்தும் உரிமைப் போர்; அறப்போராகும்!

ஹிந்தி எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டின் 

90 ஆண்டுகால வரலாறு

தமிழ்நாட்டில் இதன் வரலாறு சுமார் 90 ஆண்டுகள் பல கட்ட போராட்ட வரலாறு - ஆகும்!

1938 இல் ஹிந்தியைக் கட்டாய பாடமாக்கி, தந்தை பெரியாரையும், போராடிய தாய்மார்கள், குழந்தைகள், தமிழறிஞர்களையும் சிறையில் அடைத்து, ‘ஆள்வது நானா? இராமசாமி நாயக்கரா?' என்று அதிகார உச்சத்தில் கொக்கரித்த அதே ஆச்சாரியார் (ராஜாஜி) அவர்களே, 1965 ஆம் ஆண்டிற்குப் பின், 'Hindi Never; English Ever' என்றும், ‘ஹிந்தி ஏற்கப்படவே முடியாது - எப்போதும் ஆங்கிலம்தான்' என்று புது முழக்கம் போடவேண்டிய அளவுக்கு அவரையே மாறச் செய்தது போராட்டம்.

'ஆகாஷ்வாணி' என்பதை முதலமைச்சர் அண்ணா தடுத்து நிறுத்தினார்

1967 இல் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தபோது முதல் முறையாக ‘ஆகாஷ்வாணி'  என்றே அனைத்திந்திய வானொலியை அழைக்கவேண்டும் என்ற ஆணையை எதிர்த்து ஆல் இண்டியா ரேடியோ என்ற சொல்லாக்கமே  நீடிக்கவேண்டும் என்று மாநில அரசு சார்பில் எழுதி, ஒன்றிய அரசின் அந்த ‘ஆகாஷ்வாணி' திணிப்பைத் திரும்பப் பெற வைத்தார் முதலமைச்சர் அண்ணா.

தந்தை பெரியார் அவர்கள் அதற்காகவே ஓர் அறிக்கைமூலம் ‘அண்ணா அமைச்சரவையின் சாதனையாக' அதனை வரவேற்றுப் பாராட்டினார்; 1967 இல் நடைபெற்ற இதனை மறக்கலாமா ஒன்றிய அரசு? இப்போது உத்தரவு போடுவோர் அப்போதைய அரசியலில் குழந்தைகள்!

ஒன்றிய அரசுக்கும், இந்திய ஒன்றியத்தில் உள்ள ஹிந்தி பேசாத மற்ற மாநிலங்களுக்கும் ஆட்சிக்கு இணைப்பு மொழி ஆங்கிலம்தானே!

‘ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்பதுதானே தமிழ்நாட்டின் உறுதியான நிலைப்பாடு; அந்தப்படி இருக்கையில் இப்படி ஏன் திடீர் திணிப்பு முயற்சிகள்?

இவ்வாணையைத் திரும்பப் பெற மறுத்தால் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு அறப்போர் மீண்டும் (‘‘விஸ்வரூபம்'') பேருரு கொள்ளுவது உறுதி! உறுதி!!

தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு அவர்களும் கண்டன அறிக்கையைக் கொடுத்துள்ளார்.

ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட்டு, இந்தியாவில் உலகத் தொடர்பு கொள்ள முடியுமா?

ஆங்கிலத்தை அறவே புறக்கணித்துவிட்டு, வெறும் ஹிந்தியை மட்டுமே வைத்து ஒன்றிய அரசு ஆட்சியையும், உலகத் தொடர்பையும் தொடர்ந்துவிட முடியுமா?

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் கிளம்பும் எதிர்ப்பு என்று ஒன்றிய அரசின் ஹிந்தி வெறியர்கள் தப்புக் கணக்குப் போடக் கூடாது!

தென்மாநிலங்களிலும், அசாம், பஞ்சாப் போன்ற பல மாநிலங் களிலும்கூட இது ‘நீறுபூத்த நெருப்பாகவே' இருக்கிறது என்ற உண்மையை உணரத் தவறக்கூடாது!

தி.க., தி.மு.க., பிரச்சினையல்ல; 

பண்பாட்டு உரிமைப் பிரச்சினை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல; தி.க., தி.மு.க. மட்டுமல்ல, அனைத்து மக்களும் ஒரே அணியில் திரளும் உணர்வுப்பூர்வ மொழி உரிமை, பண்பாட்டு உரிமைப் பிரச்சினை என்பதை உணர்ந்து, வீண் வறட்டுப் பிடிவாதம் காட்டாமல் இந்த அடாவடித்தன ஆணையைத் திரும்பப் பெற முன்வரட்டும்!

மொழி உணர்வு நெருப்போடு விளையாடவேண்டாம் - ஒன்றிய ஆட்சியாளர்கள் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

8.5.2023


No comments:

Post a Comment