செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

செய்திச் சுருக்கம்

விடுமுறை

தமிழ்நாட்டில் கரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) பள்ளிகள் சற்று தாமதமாக கடந்த 2022 ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட்டன. எனினும், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடத்தி முடிக்கப்பட்டன. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (29.4.2023) முதல் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.

வருமான வரி

வருமான வரி செலுத்தாதவர்களுக்கு வட்டி, அபராதம் வசூலிப்பதுடன் வழக்கு தொடர்ந்து சிறைத் தண்டனையும் பெற்றுத் தரப்படும் என வருமான வரித் துறை மண்டல முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி எச்சரித்துள்ளார்.

உயர்கல்வி

பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு மே 2ஆவது வாரத்தில் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கனமழை

தமிழ்நாட்டில் வரும் 30 மற்றும் மே 1ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தகவல்.

ஒப்பந்தம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சென்னை சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை உயர்மட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலைய பணிகளுக்கு ரூ.1,134 கோடி மதிப்பில் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

கோதுமை

தமிழ்நாட்டில் கோதுமை தட்டுப்பாட்டைப் போக்க, வரும் ஆண்டுகளில் 15 ஆயிரம் டன் கோதுமையை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்.

அனுமதி

தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 2014 முதல் நாடு முழுவதும் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகில் ரூ.1.570 கோடி செலவில் 157 செவிலியர் கல்லூரிகளை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கொடை

உறுப்புக் கொடை வழங்கும் ஊழியர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரவு

பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முறைகளில் தற்போது தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து உள்ளதால், குற்றம் மற்றும் சிவில் வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் மாவட்ட நீதிமன்றங்கள் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.

யுரேனியம்

இந்திய-ரஷ்ய ஒப்பந்தத்தின்படி மின் உற்பத்திக்காக ரஷ்யாவில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத் திற்கு செறிவூட்டப்பட்ட 12 பண்டல்கள் யுரேனியம் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வந்தடைந்தது.

அரசாணை

மதுரையில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட நூலகத்துக்கு ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என பெயர் சூட்டி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வகம்

சென்னை அய்.அய்.டி.யில் கட்டடக் கலை, டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த நவீன ஆராய்ச்சி மய்யம் அமைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment