பொருளாதார அபாய சிகப்புக் கொடியும் 'வந்தே பாரத்துக்கு'ப் பச்சைக் கொடியுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

பொருளாதார அபாய சிகப்புக் கொடியும் 'வந்தே பாரத்துக்கு'ப் பச்சைக் கொடியுமா?

மோடி வந்தே பாரத் ரயிலுக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு மாநிலத்திற்கு மாநிலம் சென்று கொண்டு இருக்கிறார். திட்டத்தை துவங்கி வைப்பது, அதற்கு தலைமை தாங்குவது என்பது அவரவர் விருப்பம், கட்டாயமில்லை.  

இதுவரை இந்தியாவில் அதிவேக ரயில்களான, சதாப்தி, துரந்தோ, இண்டர் சிட்டி, உள்ளிட்ட புதிய ரயில்களின் துவக்கவிழாவில் அன்றைய ரயில்வே அமைச்சர்கள் மம்தா,  லாலுபிரசாத். அல்லது பிரதமர்களாக இருந்த வாஜ்பாய், மன்மோகன் போன்றோர் கலந்து கொள்ள வில்லை. நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் திட்டம் முழுமை பெற்றதும், அதை நாளிதழ்களில் விளம்பரங்களோடு அந்த அந்த ரயில்வே கோட்ட தலைமை அதிகாரி அல்லது ரயில்வே நிலைய மேலாளர் பச்சைக்கொடி காட்டி துவக்கி வைப்பார், எடுத்துக்காட்டாக மும்பை புனே சதாப்தி அதிவிரைவு ரயிலை - மும்பை சி.எஸ்.டி ரயில்வே (நீண்ட தூர) - ரயில் நிலைய அன்றைய மேலாளர் பச்சைக் கொடிகாட்டி துவக்கி வைத்தார். இதற்கான செலவு ரயிலுக்கு மாலை, ஊழியர்களுக்கு தேனீர் சிற்றுண்டி என்று சில ஆயிரங்களில் முடிந்துவிடும். 

ஆனால்,  விரைவு வண்டிகளில் சிறிது மாற்றங்களை மட்டுமே செய்து பல முக்கிய நகரங்களை இணைக்கும் 'வந்தே பாரத்' என்ற பெயரில் இயங்கும் ரயிலாக நேரடியாக கடந்த 2 ஆண்டுகளாக மோடி ஆங்காங்கே சென்று பச்சைக்கொடி காட்டி வருகிறார். 

சமீபத்தில் கேரளாவில் மாநில அரசின் சார்பில் ரூ.3400 கோடிக்கான திட்டங்கள் முடிவிற்கு வந்தது, அது மாநில அரசின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகும். இதில் இந்தியாவின் முதல் நீரில் செல்லும் வாட்டர் மெட்ரோ என்ற படகுத்திட்டமும் அடங்கும்

ஆனால் இங்கும் வந்தே பாரத் ரயிலை பச்சைக் கொடி காட்டச் சென்றதோடு மாநில அரசின் திட்டங்களையும் துவக்கி வைத்து விட்டு மாநில அரசும் ஒன்றிய அரசும் இணைந்துதான் செயல்படவேண்டும் இதுதான் கூட்டாட்சி என்று பேசியுள்ளார்.  கொடி அசைத்து சில நிமிட பேச்சை கேரள மாநில மேடையில் பேசுவதற்கு குறைந்தது ரூ.15 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அவரது ஒரு நாள் பாதுகாப்புச்செலவு மட்டுமே 2 கோடி ரூபாய் ஆகும். அதனைத்தவிர அவரது சிறப்பு விமானப்பயணச்செலவு, அவர் செல்லும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட செலவுகள் அனைத்தையும் சேர்த்துப்பார்த்தால் ரூ.15 கோடி வரை செலவாகியிருக்கும்.

இதே போல் தான் தமிழ்நாட்டில் சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலுக்கு பச்சைக் கொடி காட்டியதோடு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் பலவற்றையும் துவக்கி வைத்தார். அதிலும் இதே போல் மக்கள் வரிப்பணம் பல கோடி ரூபாய் மோடியின் பயணத்திற்காக விரயமானது. 

கருநாடக தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு இவர் பெங்களுரு, சென்னை, மைசூர் போன்ற ஊர்களுக்கு புதிய திட்டங்களை அறிவிக்கவும் வந்தே பாரத் ரயிலுக்குப் பச்சைக்கொடி காட்டவும் வந்து சென்ற செலவு மட்டுமே பல நூறு கோடி ரூபாய்களைத் தாண்டும் இவர் தன்னுடைய அறையில் அமர்ந்து கொண்டு காணொலியில் பச்சைக்கொடி காட்டியிருந்தால். சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சமாகி இருக்கும். 

ஆனால் மோடியோ, ஒன்றிய அமைச்சர்கள்  மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் ஆடம்பர உணவு வகைகளை குறைத்துக் கொண்டு தேனீர் பிஸ்கட்டோடு முடித்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த வேகமாக திட்ட மிடுங்கள் என்கிறார்.

மற்றவர்களுக்கு இப்படி அறிவுரை வழங்கும் பிரதமர்தான் புதிய இரயில்களைப் பச்சைக் கொடி காட்டி துவக்கி வைப்பதற்கு மாநிலங்களுக்கு மாநிலம் தனி விமானத்தில் பறக்கிறார்.

இந்தியாவின் நிதி நெருக்கடி குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அபாயக் கொடியைக் காட்டுகிறது.

நமது பிரதமரோ பச்சைக் கொடி காட்டி நிதிச் சுமையை மேலும் ஏற்றுகிறார்.

இதுதான் மக்கள் நல அரசா? நாட்டுப் பொருளா தாரத்தின்மீது அக்கறை கொண்ட அரசா?

சிந்திப்பீர்! 2024 மக்களவைத் தேர்தலில் பாடம் கற்பிப்பீர்!

No comments:

Post a Comment