இரக்கமற்ற "அரக்கர்கள்" யார்? யார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 8, 2023

இரக்கமற்ற "அரக்கர்கள்" யார்? யார்?

*மின்சாரம்

சென்னை நங்கநல்லூரில் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிர் இழந்தகொடுமையை இப்பொழுது நினைத் தாலும் பகீர் என்கிறது. மனிதாபிமானம் உள்ள எவரும் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

ஆனால், இந்தப் பாழாய்ப் போன பார்ப்பனப் புத்தி எந்த அளவிற்கு சீழ்பட்டு இருந்தால், இரக்கம் என்பதில் ஒரே ஒரு துளி இருந்தால்கூட - எழுத மனம் வராத நிலையில் - என்ன சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள் - கேளுங்கள்! கேளுங்கள்!!

"பங்குனி உத்திர நாளில் தீர்த்தவாரிக் குளத்தில் கைலாச கதி அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டாமோ? ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஓம்" என்று எழுதியுள்ளார்.

இப்படி எழுதி இருப்பவர் சொல்லியிருப்பவர் அத்திப்பட்டு சிறீநிவாசன் முரளிதரன் என்ற பார்ப்பனர். அவர் தனது சமூக வலைதளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

கடவுள் பக்தி மனித உயிரைக் காவு வாங்கி விட்டதே! மக்களுக்குக் கடவுள் மீதான பக்தி ஒழிந்து போய் விடுமே! கடவுள் என்ற பொய் முதலீட்டை வைத்துத்தானே நம் பொழப்பு ஜாம் ஜாம் என்று நடக்கிறது.

அதில் மண் விழுந்தால் நமது  அடுப்பில் பூனைக்குட்டி தூங்குமே என்ற அச்சத்தில் துடியாய்த் துடிக்கும் அய்யன்மார்களைப் பார்த்தீர்களா?

இது போன்ற துன்பக் காரியங்கள் நடந்தால் இன்னொரு கை கண்ட மருந்தை தயாராகவே வைத்திருப்பார்கள்.

ஏதோ கெட்ட சகுனத்தின் அறிகுறி - அதற்குப் பிராயச்சித்தமாக தீக்குண்டம் வளர்க்க வேண்டும் - யாகம் செய்ய வேண்டும் - பூஜை புனஷ்காரங்களைச் செய்ய வேண்டும் என்று கூறி காசு பறிக்கும் காரியத்தில் ஈடுபட்டு விடுவார்கள்.

தெருவில் பிணம் போனால்கூட - பரவாயில்லை கருமாதி, திவசம் 'சான்ஸ்' நமக்குக் கிடைத்திருக்கிறது என்று நாக்கில் எச்சில் ஒழுகும் சுரண்டல் கூட்டமாயிற்றே!

"கைப்பேசியில் குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) வந்தாலும் வந்தது - எது எதற்கெல்லாமோ பயன்பட ஆரம்பித்துவிட்டது - கடவுள் சமாச்சாரங்கள் உள்பட!

ஒரு செய்தி: கோவை மாவட்டம் காங்கயம் சிவன் மணிமுருகன் கோயில் கொடிமரம் சாய்ந்தது!

இன்னொரு செய்தி: இராமேசுவரம் ராமநாதசாமி கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு கலசம் இடிந்து விழுந்துவிட்டது!

மற்றும் ஒரு செய்தி: திருவண்ணாமலை, திருச் செந்தூர் கோயில்களில் ஏற்றப்பட்ட தீபங்கள் அணைந்துவிட்டன.

இந்தச் செய்திகள் காட்டுத்தீபோல் பரவின. பக்தர்கள் மருண்டனராம்.

அய்யய்யோ, ஆபத்து, ஆபத்து! ஏதோ நடக்கப் போகிறது என்று பக்தர்கள் நடுநடுங்கிப் போனார் களாம். வீட்டில் உள்ள ஆண்களின் ஆயுளுக்குக் கேடு என்று யாரோ சொல்ல, அப்படியே இடிந்துபோய் விட்டார்களாம்.

அடுத்து என்ன நடக்கும்? கோயில்களில் சிறப்புப் பூஜைகள், காணிக்கைகள் இன்னோரன்ன சுரண்டல் விசேஷங்கள் ஜோராக நடந்திருக்கின்றன.

சில ஆண்டுகளுக்குமுன் திருமானூர் தாயாரம்மாள் தாலி அவிழ்ந்து விழுந்துவிட்டதென்று கூறி, அடேயப்பா எவ்வளவு களேபரம்!

பெண்கள் தங்கள் தாலி கயிறுகளைப் புதிதாகக் கட்டிக் கொண்டார்களாம்.

மக்களின் மூடத்தனத்தை - பக்தியை எப்படியெல் லாம் ஒரு வணிகத் தன்மையில் மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

முதலில் ஒன்றை அவர்கள் சிந்திக்கவேண்டாமா?

சக்தி வாய்ந்தவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு அதன் கோபுரம் இடிந்தது, கலசம் விழுந்தது, கொடிமரம் சாய்ந்தது என்பதெல்லாம் நடக்கும்போது பக்தர்கள் சிந்தனையில் எத்தகைய எண்ணம் ஏற்படவேண்டும்?

சர்வசக்தி வாய்ந்தவர் கடவுள் என்றால், இவையெல்லாம் எப்படி நடக்கும் என்ற வினா எடுத்த எடுப்பிலேயே தோன்றியிருக்கவேண்டாமா?

அவனின்றி ஓரணுவும் அசையாது என்றால், கோபுரம் இடிந்ததற்கும், கலசங்கள் விழுந்ததற்கும், கொடிமரங்கள் சாய்ந்ததற்கும் கடவுள்தானே பொறுப்பு என்ற வினா இரண்டாவதாக ஏற்பட்டிருக்க வேண்டாமா?

மூன்றாவதாக இவை நடந்ததால் அதே கோயி லுக்குச் சென்று பூஜை போடுவதில், காணிக்கைகள் கொடுப்பதில் அர்த்தம் உண்டா?

நான்காவது முக்கியமாகக் கவனிக்கவேண்டியது - இந்த சிறப்பு வழிபாடுகளும், காணிக்கைகளும் யாருக்குப் போய்ச் சேர்கின்றன?

கடவுள் சக்தி கேள்விக்குறியாகும்போதுகூட, அதன் பலன் கடவுள் நம்பிக்கைக்கு எதிராகப் போகாமல் (நியாயமாக அப்படித்தானே போக வேண்டும்) அந்தக் கடவுள் சம்பந்தமான கூடாரத் துக்கே இலாபமாக வருமானமாகப் போவதன் தன்மையை - சூழ்ச்சியை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

இதற்குப் பெயர்தான் பக்தி மயக்கம் என்பது  - மூளையில் மாட்டப்பட்ட விலங்கு என்பது; கடவுள் நம்பிக்கை. பக்தி என்று வந்துவிட்டால் சிந்தனைக்கே சிறிதும் இடமில்லாமல் ஒரு வழிப்பாதை என்பது இதுதான்!

எது நடந்தாலும் அதனை சொந்த இலாபகரமாக, சுயநலமாக ஆக்கிக் கொள்ளும் ஒரு புரோகிதச் சுரண்டல் முறை இதற்குள் மிகவும் பத்திரமாக இருப்பதை மக்கள் என்றைக்கு உணரப் போகிறார்கள்?

இந்தப் பாதுகாப்பில்தான் பார்ப்பனியம் மிகக் கெட்டியாக பலத்த அஸ்திவாரத்துடன்  - மற்றவர் களைப் பார்த்து கேலி செய்யும் தன்மையில் அமர்ந்து கொண்டிருக்கிறது. பகுத்தறிவாளர்களுக்கு அதிக வேலைகள் இன்னும், இன்னும் ஏராளமாகவே இருக்கின்றன. கழகத் தோழர்கள் ஆங்காங்கே பரப்பப்படும் இதுபோன்ற செய்திகளை தோலுரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்களாக!"

நல்லது நடந்தாலும் அல்லது கெட்டது நடந்தாலும் அவர்கள் காட்டில் மழைதான் - பார்ப்பான் வயிற்றில் அறுத்துக் கட்டுவதுதான்!


No comments:

Post a Comment