ஜாதி ஆணவக் கொலைகளுக்கு முடிவு என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 18, 2023

ஜாதி ஆணவக் கொலைகளுக்கு முடிவு என்ன?

திவ்யா, இளவரசன் பிரிக்கப்பட்டு, இளவரசன் கொல் லப்பட்டதும், உடுமலை சங்கர், சேலம் கோகுல் ராஜ், கரூர் ஹரிகரன், பொன்னேரி கவுதமன் எனப் பெற்ற பிள்ளையையே துடிதுடிக்க கொல்லும் ஜாதிய வன்மங்கள் தற்போது வளர்ந்திருப்பதே ஆபத்தானது.  

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் என்பவர் கொலை வழக்கில், தீரன் சின்னமலை பேரவையை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு சாகும் வரையில் ஆயுள் சிறை விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில், கொலையான கோகுல்ராஜுக்கும், யுவராஜுக்கும் தனிப்பட்ட முன்விரோதம் எதுவும் இல்லை எனவும், மாற்று ஜாதியை சேர்ந்த பெண்ணை, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் காதலித்தார் என்பதற்காகவே கொல்லப்பட்டதையும் நீதிபதி சம்பத் குமார் விவரித்திருந்தார்.

இதற்கு முன்னதாக, திருவாரூர் அபிராமி வழக்கு, நெல்லை கல்பனா வழக்கு, நாகப்பட்டினம் அமிர்தவள்ளி வழக்கு, கண்ணகி - முருகேசன் வழக்கு என ஆணவப் படுகொலை தொடர்பான வழக்குகளில் கீழமை நீதிமன் றங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் சில வழக்குகள் மேல்முறையீட்டின்போது நீர்த்துப் போன தையும் கண்டோம்.

கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஜாதி ஆணவக் கொலைகள் தொடர்பாக ஆறு தீர்ப்புகள் வந்துள்ளன.

இதில், நான்கு வழக்குகளில் செசன்ஸ் நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்தாலும் உயர் நீதிமன்றத்தில் தொடுக் கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் குற்றம் சுமத்தப்பட் டவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். கண்ணகி - முருகேசன் மற்றும் கோகுல்ராஜ் ஆகிய வழக்குகள் இன்னும் மேல்முறையீட்டுக்குச் செல்லவில்லை.

தனியார் அமைப்புகள் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரை எடுத்த புள்ளி விவரங்களின் படி, “தமிழ்நாட்டில் காதல் விவகாரத்தில் ஆண்டுக்கு 120 கொலைகள் நடக்கின்றன என்றால் உ.பி.யிலும், மத்திய பிரதேசத்திலும் எவ்வளவு நடக்கும்? ஒட்டுமொத்த இந்தி யாவையே எடுத்துக் கொண்டால் ஆண்டுக்கு மூன்றா யிரம் கொலைகளாவது நடக்கும் என்று உணர முடிகிறது.

அண்மையில் கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஜாதி ஆணவப் படுகொலைகள் தலை தூக்க ஆரம்பித்துள்ளன. 

கடந்த மாதம் கிருட்டினகிரி அருகே கிடாப்பட்டியைச் சேர்ந்த தொழிலாளியான ஜெகன் - சரண்யா காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.

சரண்யாவின் குடும்பத்தினர் ஜெகனை ஆணவப் படுகொலை செய்தனர். இதன் ஈரம் காய்வதற்கு முன் அதே மாவட்டத்தில் ஊற்றங்கரை அருணாதி கிரா மத்தைச் சேர்ந்த சுபாஷ், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அனுசூயாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

பெற்ற மகன் என்றும் பாராமல் சுபாஷை அவரது தந்தை தண்டபாணி என்பவர் வெட்டிக் கொன்றார். அனுசுயா படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். காதலர்களுக்குத் தன் தாய் உடந்தையாக இருந்தார் என்பதற்காக அந்தக் காதகன் தாயையும் கொலை செய்திருக்கிறான்.

அண்மைக் காலமாக ஜாதி ஆணவக் கொலைகள் பெருகி வருவது வேதனை அளிக்கிறது.

தந்தை பெரியாரின் கடும் உழைப்பால் ஜாதியின் கோரம் நசுக்கப்பட்ட இந்த மண்ணில் ஆணவக் கொலைகள், எந்த விலை கொடுத்தும் தடுக்கப்பட வேண்டும்.

நீண்ட காலமாகவே திராவிடர் கழகம் ஒன்றை வலியுறுத்தி வருகிறது. ஜாதிக் கலவரமாக இருந்தாலும் சரி, ஆணவக் கொலைகளாக இருந்தாலும் சரி, காவல்துறையில் தனியாகவே ஒரு பிரிவை ஏற்படுத்தி, நுட்பமாகக் கண்காணித்து - வருமுன்னர் காக்கும் ஒரு நிலையை ஏற்படுத்திட வேண்டும்.

ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்கள் இன்னொரு பக்கம் நாளும் வளர்ந்து வருவது மகிழ்ச்சி தரக் கூடியது என்றாலும் ஆணவக் கொலை புரிவோர், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்து விடாமல், கடுந் தண்டனை  அளிப்பது அவசியமாகும். ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெற்ற தருமபுரி, ஓசூர் போன்ற இடங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு மாநாடுகளை நடத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தியுள் ளோம் - மேலும் தீவிரமாக நமது பணிகள் தொடரும்!


 

No comments:

Post a Comment