பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 1, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

"என்னம்மா கண்ணு சவுக்கியமா?"

மின்சாரம்

'இவ்வளவு அறிவியல் ஆய்வாளர்கள் இருக் கிறார்கள் . ஒரே ஒரு சொட்டு ரத்தம் உருவாக்க முடியுமா இவங்களால்? அப்படி இருந்தும் "கடவுள் இல்லை"ன்னு சில பேர் பேசிக்கிட்டு இருக்காங்க. அதை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரி யலை!' இது நடிகர் ரஜினி காந்த் பேசியது:

ரஜினிகாந்த் சார் அழவேண்டாம். அவர் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே நமது அவா?

என்ன சொல்ல வருகிறார்? மனிதனால் ரத்தத்தை உருவாக்க இயலாது என்பதால் கடவுள் இருப்பது உண்மை. இதுதான் அவர் முன்வைக்கும் வாதம்.  ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதை கடவுளைக் காட்டித்தானே நிரூபிக்க வேண்டும்? கடவுளின் லீலைகளாக  நேரடியாக சிலவற்றைச் செய்வதுதானே கடவுளின் இருப்பை உறுதிசெய்யும் முறை? அறிவியல் அப்படித்தானே செய்கிறது? தான் முன்வைக்கும் காரணிகளுக்கு அறிவியல்பூர்வமான தீர்வைக் கொடுக்கும் முயற்சியை அறிவியலாளர்கள்தானே மேற்கொள்கிறார்கள்?  அதை விட்டு விட்டு 'உன்னால் அது செய்ய முடியுமா, இது செய்ய முடியுமா? முடியாது இல்லையா? எனவே கடவுள் இருக்கிறார்!' என்பது என்ன வகையான வாதம்? 

சரி, அவர் கேட்டதற்கே வருவோம். மனிதனால் ரத்தம் உருவாக்க முடியுமா என்று கேட்கிறார். அதற்குப் பதில் - முடியும்.

செயற்கை ரத்தம் குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகின்றன. இவற்றில் சில ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றமும் வந்திருக்கிறது. ஏற்கெனவே விலங்குகளுக்கு வழங்கும் ரத்தத்தில் செயற்கை ரத்தம் அனுமதி பெற்று பயன்பாட்டில் இருக்கிறது.  Oxyglobins என்று இதனை அழைக் கிறார்கள்.

[1] மனிதர்களுக்கு பயன்படும் செயற்கை ரத்தத்தை Hemoglobin-Based Oxygen Carriers அல்லது Perfluorocarbon (PFC) என்று வகைப்படுத்து கிறார்கள். 

[2] எண்பதுகளில் இருந்து இந்த செயற்கை ரத்த ஆராய்ச்சிகள் பல்வேறு கட்டங்களில் நடந்து வரு கின்றன. Perftoran, Hemopure போன்றவை ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் அனுமதியும் கூடப் பெற்றுள்ளன. பத்துக்கும் மேற்பட்ட செயற்கை ரத்த தயாரிப்புகள் ஆய்வின் இறுதிக் கட்டங்களில் உள்ளன.  

[3] இதே வேகத்தில் இன்னும் 5 முதல் 15 ஆண்டு களில் இவற்றில் பல தயாரிப்புகள் அனுமதி பெற்று விடும். இந்தியாவிலும் கூட அவை பயன்பாட்டுக்கு வந்து விடும்.  ரஜினிகாந்த் போன்ற ஆன்மிகவாதி களுக்கும் கூட அப்போது ஒருவேளை ரத்தம் தேவைப்பட்டால் அவருக்கு Oxycyte  அல்லது  Engineered Hemoglobin-அய் மருத்துவர்கள் செலுத்த வாய்ப்பிருக்கிறது. அப்படி நடக்கும் போது தனது இந்த உரையை அவர் நினைவுபடுத்திக் கொள்வார் 

 ஆனால் அப்படி செயற்கை ரத்தம் சந்தைக்கு வந்த பின்னும் கடவுள் குறித்து எதையும் அது நிரூபிக்கவோ, மறுதலிக்கவோ செய்யாது. காரணம், ரஜினி போன்ற வர்கள் அப்போதும் கடவுள் இல்லை என்று சொல்லப் போவதில்லை.   'சரி, ரத்தத்தை விடுங்கள். செயற்கை இதயத்தை உருவாக்கினாயா?', 'செயற்கை நகத்தை செய்தாயா?' என்று கேள்வியை மாற்றிக் கேட்டுக் கொண்டுதான் கடக்கப் போகிறார்கள். 

இப்படித்தான், கடந்த 200 ஆண்டுகளாக - மாட்டிறைச்சி சாப்பிடும் அய்ரோப்பியர்கள் அறிவியல் துணைகொண்டு  மதங்களின் ஒவ்வொரு புரட்டுத் தனத்தையும் உடைத்துக் காண்பித்தனர்.  மதவாதிகளும் சலிக்காமல் அந்தக் கால கட்டத்தில் அறிவியலுக்குக் கைவராத விடயம் எதையாவது சுட்டிக் காட்டிக் கொண்டு, 'பார்த்தீர்களா  கடவுள் இருக்கிறார் ' என்று கடவுளை நிறுவிக் கொண்டுதான் இருக்கப் போகிறார் கள். 

கடைசியாக, அறிவியல் இதை செய்ததா, அதைச் செய்ததா என்று கேட்பவர்களிடம் - கடவுள் என்ன செய்தார் என்று நீங்கள் சொல்லுங்கள்: மானுட ஆயுளை நீட்டிக்க ஏதாவது செய்தாரா? வறுமையை ஒழிக்க ஏதாவது செய்தாரா? ஜாதி, மத, இன பேதங்க ளைக் களைய கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் என்னென்ன செய்தார்? பஞ்சங்கள் போக கலப்பு விதை எதையாவது தனது தூதர்கள் மூலம் அனுப்பி வைத்தாரா?

பெண்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கை கள் போன்றோர் ஒடுக்கப்படுவதை தடுக்க ஏதாவது திட்டங்கள் கொடுத்து அனுப்பினாரா? கல்வியைப் பரவலாக்க ஏதாவது சிந்தனைகளை புனித நூல்களில் விட்டுச் சென்றாரா? தகவல் தொழில் நுட்பங்களை பரவலாக்க, மனிதர்களின் பயணங்களை எளிதாக்க ஏதாவது கருவிகளை கொடுத்து அனுப்பினாரா? 

இவற்றை எல்லாம் சாதித்துக் காட்டியது நவீன அறிவியல் மற்றும் சமூகசீர்திருத்த சிந்தனைகள் மட்டுமே! 

இன்றைக்குக் கூட உலகம் வெப்பமயமாதலுக்கு கடவுளிடம் ஏதாவது தீர்வுகள் உள்ளனவா? இன்றள வும் விடை புரிபடாமல் திணறிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு கடவுளிடம் அல்லது மதகுருமார் களிடம் ஏதாவது விடைகள், சமன்பாடுகள் உள்ள னவா? இல்லை.  இவற்றையும் தீர்க்கப் போவது அறிவியல்தானே. 

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஆப்பிரிக சவானா புல்வெளிகளில் இருந்து நிமிர்ந்து நடக்கத்துவங்கி இன்று உலகெல்லாம் பரவி இருக்கும் மனித குலத்திற்கு அந்தக் கடவுள் செய்த ஒரு நன்மை என்ன என்று அந்த ரஜினி சொல்வாரா?? சவால் விடுகிறோம்.

கடவுள் மதத்தின் பெயரால் சண்டைகள் நடந்ததைத் தவிர வேறு என்ன நடந்தது?

இரத்தம் இருக்கட்டும்  ரஜினி - இறைச்சித் தட்டுப்பாட்டை போக்க தற்போது சந்தையில் ஆய் வகத்தில் உருவாக்கப்பட்ட இறைச்சிகள் வந்துவிட்டன என்பது தெரியுமா? அமேசானில் விற்கின்றனர்.   ஆய்வகத்தில் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இறைச்சியை உருவாக்கி சந்தைக்குக் கொண்டு வந்தாயிற்று! மனிதனுக்கு ரத்தம் உருவாக் குவது பெரிய சிக்கலானது அல்ல.  பக்திப் பாடலை கேட்பதை விட்டுவிட்டு கொஞ்சம் அறிவியல் தொலைக்காட்சிகளையும் பார்க்கட்டும் ரஜினிஜி!

சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்துகொண்டு நலமுடன் வாழ்கிறார் ரஜினி - மிகவும் மகிழ்ச்சியே! 

அதுகூட அறிவியல் சாதனையே தவிர கடவுள் கடாட்சம் அல்லவே! என்ன ரஜினி சார் புரிகிறதா?

ரஜினிகாந்த் சொன்னதுதான்!

"எல்லாம் தெய்வச் செயல் - கடவுள் எல்லாம் பார்த்துப்பாருன்னு விட்டிருந்தா நான் இன்னும் கண்டக்டராகவே இருந்திருப்பேன்.

அந்தச் சூழ்நிலையில் உத்தியோகத்தை விட்டு, தைரியமாக சென்னைக்கு வந்து ஒரு வாசல்ல காத் திருந்தது என் முயற்சிதான்!"

- ரஜினிகாந்த்

ரஜினியின் மறுபக்கம் என்ற தலைப்பில் ராணி (20.7.2008) இதழில் ரஜினி சார் - சொன்னாரே!

இதனை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

 

No comments:

Post a Comment