சமூக நீதியும் சமத்துவமும் உலகை ஊக்குவிக்கும் சக்திகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

சமூக நீதியும் சமத்துவமும் உலகை ஊக்குவிக்கும் சக்திகள்!

இன்றைய நிலைமைக்கு முதலாளித்துவ அமைப்பு பொருந்தாது.

தலைமையமைச்சர் நேருவின் கருத்து:

சமூகநீதியும் சமத்துவமுமே இன்று உலகை ஊக்குவிக்கும் பெரும் சக்திகளாகும் என்றும், முதலாளித்துவ அமைப்பு இன்றைய நிலைமைக்குப் பொருந்தாதென்பதே தம் சொந்த கருத்து என்றும் தலைமையமைச்சர் நேரு இங்கு இரண்டு நாள்களாக நிகழ்த்திய ‘ஆசாத் நினைவு’ உரைகளின்போது குறிப்பிட்டார்.

நமது பொருளாதார பிரச்சினைகளுக்கு சோஷலிசம் ஒன்றுதான் சரியான வழி என்பதாக அவர் குறிப்பிட்டுவிட்டு மேலும் பேசுகையில் கூறியதாவது:

ஜனநாயக முறைகளின் மூலம் வேகமான முன்னேற்றம் காண முடியாதென்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. தனித்தனி அந்தஸ்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. மற்றவர்களின் நலன்கள் பாதிக்கப்படக் கூடாதென்பதற்காகச் சில கட்டுப்பாடுகள் தேவையாயிருந்தாலும் பொதுவாகத் தனி ஆட்களுக்கு கூடிய வரையில் நிறைய உரிமைகள் இருக்க வேண்டும்.

பொருந்தாது

சமுக நீதியும், சமத்துவமும் இன்றைய உலகை ஊக்குவிக்கும் பெரும் சக்திகளாகும். முதலாளித்துவ அமைப்பு இன்றைய நிலைமைக்குப் பொருந்தாது என்பதே என் சொந்தக் கருத்து.

முதலாளித்துவத்தினால் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன என்பது உண்மையே. ஆனால், உலகம் இன்று அந்த நட்டத்தைத் தாண்டிவிட்டது.

ஆகையால், இன்றைய நிலைக்கேற்ப இவ்வளவு அதிகமான போட்டி இல்லாமல், ஆதிக்க கூட்டுறவுடன் கூடியதொரு அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். இறுதியில் இது ஓர் உலக ராஜ்யத்தில் கொண்டு போய் விட வேண்டும்.

வறுமையை ஒழிப்பதற்கு நாடு பல அய்ந்தாண்டு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

நிலச் சீர்திருத்தத்தின் விளைவாக ஏற்படக் கூடிய வர்க்க முரண்பாடுகளை அமைதியான முறைகளில் சமாளித்துவிடல் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

(‘விடுதலை’ - 24.2.1959)


No comments:

Post a Comment