சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்-க்கு சிலை தமிழ்நாடு அரசின் அறிவிப்பு சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்-க்கு சிலை தமிழ்நாடு அரசின் அறிவிப்பு சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் தொடரும் சாதனை மகுடங்களில் மேலும் ஒரு வரலாற்று சாதனையான அறிவிப்பாக, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்ற செய்தி தேனினும் தேன் போன்ற செய்தியாகும். 

தந்தை பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாள், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாள் என்று வைரங்களாக மின்னிடும் சாதனைகளில் மேலும் ஒரு வைரமாக மின்னிடும் அறிவிப்பு தான் வி. பி. சிங் அவர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு. 

புகழ் மிக்க வணிகர் குடும்பத்தில் பிறந்து, வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக் காகப் போராடி உரிமை பெற்றுத் தந்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய தலைவர் அய்யா தந்தை பெரியார் அவர்கள். 

"அவர்களை அடிக்காதீர்கள், அவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள், அவர்களின் முயற்சிக்கு தடையாக இருக்காதீர்கள்" என்று ஒடுக்கப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றியவர் தந்தை பெரியார்.  ஜாதியைத் துறந்து மக்களின் மனித நேயத்திற்காக உழைத்தவர் பெரியார். உலகிலேயே தான் சார்ந்த ஜாதியினரால் ஒதுக்கப்பட்ட தலைவர் உண்டு என்றால் அது தந்தை பெரியார் ஒருவராகத் தான் இருக்க முடியும். 

தந்தை பெரியார் அவர்களைப் போன்று, அரச குடும்பத்தில் பிறந்து , சமூக நீதிக்காகப் போராடி, குறுகிய காலம் பதவியில் இருந்த போதிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 27 சதவீத இட ஒதுக்கீடான மண்டல் ஆணையத்தை அமல்படுத்தி, அதற்காகவே பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

எவ்வளவு காலம் பதவியில் இருந்தோம் என்ப தல்ல கேள்வி, பதவியின் போது என்ன செய்தோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு உதாரணமாக சமூகநீதிக்காவலர் வி. பி. சிங்  திகழ்ந்தார். 

அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி வென்ற இரு தலைவர்கள் தந்தை பெரியார் , வி. பி. சிங் அவர்கள் தான் என்று உரக்க சொல்லலாம். 

இந்தியாவின் விடுதலை வரலாற்றை எழுதத் துவங்கினால் தமிழ்நாட்டில் இருந்து தான் என்பது  போன்று சமூக நீதி வரலாறு என்று எழுதத் துவங் கினால் அது தமிழ்நாட்டில் இருந்து தான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை முதலில்திருத்தம்செய்தது தந்தை பெரியார் அவர்கள் தான், தமிழ் நாடு மண் தான் என்ற வரலாற்று பெருமை உடையது தமிழ்நாடு. 

சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர் களுக்கு பாரத ரத்னா விருது, நாடாளுமன்றத்தில் அவருடைய ஒளிப்படம் என்று புரட்சியாளர் அண்ணல் அவர்களுக்கு  மென்மேலும்  புகழ் சேர்த்தவர் சமூக நீதிக் காவலர் வி. பி. சிங் அவர்கள். காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர்,  சென்னை விமான நிலையத்திற்கு அறிஞர் அண்ணா, பச்சைத் தமிழர் காமராசர் பெயர் சூட்டி பெருமை தந்தவர். இப்படி தமிழ்நாட்டு மக்களுக்கும், நாட்டின் அனைத்து ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி வெற்றி கண்ட  'காரியம் வென்ற மேதை' வி. பி. சிங் அவர்களுக்கு சென்னையில் சிலை நிறுவப்படும் என்ற முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு போற்றி மகிழத்தக்கது. வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காக போராடிய தலைவருக்கு சென்னையில் சிலை என்பது மிகவும் பொருத்தமானது. வி. பி. சிங் அவர்களுக்கு மட்டும் அல்ல, சமூகநீதிக்கு தமிழ் நாட்டிற்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை.

எளிய மக்களின் தோழரான வி பி சிங் அவர்கள் ஒருமுறை மதுரை வருகையின் போது திராவிடர் கழகத்தின் சார்பில் மதுரை ரயிலடியில்  வி. பி. சிங் அவர்களுக்கு வரவேற்பு அளித்தபோது நான் வி. பி. சிங் அவர்களிடம் கை குலுக்கியது என் வாழ்க்கையில் அடைந்த பெரும் பேறு. இந்த எளியவனின் கரம் பற்றிய சமூகநீதிக்காவலரின் அந்த அன்பு அளப் பரியது. 

"அவர்களை அடிக்காதீர்கள், நாங்கள் இருக் கிறோம் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வென்ற தந்தை பெரியார் அவர்களும் வி. பி. சிங் அவர்களும், சமூக நீதி என்ற தராசின் இரு பக்கங்களாக என்றும் திகழ்கிறார்கள். 

தமிழ்நாட்டில் தலைவர்கள், தியாகிகள் , போராளிகள் என எண்ணற்ற தன்னலமற்றவர்களுக்கு சிலைகள், மணிமண்டபம் என வைத்து பெருமை தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். அந்த சிறப்பின் அருமையில் சமூ நீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின், அறிவிப்பான வி. பி. சிங் அவர்களுக்கு சிலை நிறுவப்படும் என்பது திராவிட மாடல் அரசின், காலத்தின் கட்டாயம். காலத்தின் பெருமை, காலத்தின் உரிமை. வாழ்க சமூநீதிக்காவலர் வி. பி. சிங். - வெல்க அவர் புகழ். 

மு. சு. அன்புமணி

மதிச்சியம்.


No comments:

Post a Comment