செய்திச் சிதறல்கள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

செய்திச் சிதறல்கள்....

கருநாடகத்தில் தமிழ்மொழிக்கு அவமரியாதை!

பா.ஜ.க. அண்ணாமலையும், ஈஸ்வரப்பாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும்: வைகோ அறிக்கை

சென்னை, ஏப்.29 மதிமுக பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

கருநாடக மாநிலம், சிவமோகாவில் நடைபெற்ற தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில், தமிழர்களே பெரும்பாலானவர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டார்.  கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

அப்போது, கருநாடக மாநில பா.ஜ.க.வின் 

மூத்த தலைவரும், மேனாள் துணை முதலமைச்சருமான ஈஸ்வரப்பா திடீரென்று குறுக்கிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். அத்தோடு கன்னட மொழி பாடலையும் இசைக்கச் செய்யுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எவருக்கும் கன்னட மொழி தெரியவில்லை என்பதை அவர்களே வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்டச் சூழலில் அங்குள்ள தமிழ் மக்களிடம் தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பாவும், அவரது பா.ஜ.க.வும் இழிவு செய்துள்ள போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியது.

இதனைக் கண்டித்து தமிழ்நாட்டின் தலைவர்கள் உள்ளம் குமுறி அறிக்கை வெளியிட்டதை அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக பொறுப்பில்லாமல் உளறிக் கொட்டி அறிக்கை என்ற பெயரில் தன் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழி என்பது மட்டுமல்ல, உலகின் மூத்த மொழிகளில் ஒன்று, கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய திராவிட மொழிகளின் தாய் தமிழ்மொழி என்னும் வரலாறு அண்ணாமலைக்கும், ஈஸ்வரப்பாவுக்கும் அறவே தெரியாது என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

தமிழ்மொழியை இழிவு செய்யும் வகையிலும், தமிழர் - கன்னடர் பகையை வளர்க்கும் வகையிலும் தேச ஒற்றுமையை சிதைக்கும் வகையிலும் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட ஈஸ்வரப்பாவும், அண்ணாமலையும் பா.ஜ.க. நிர்வாகிகளும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

-இவ்வாறு அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

கருநாடக பா.ஜ.க.வின் அடாவடி

தமிழ்த்தாய் வாழ்த்து இடையில் நிறுத்தப்பட்ட அவலம்

கவிப்பேரரசு வைரமுத்து கண்டனம்

சென்னை, ஏப்.29 கவிப்பேரரசு வைரமுத்து தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

“கருநாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது கண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது. ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம். பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம். கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது; திராவிடத்திற்குள் 

கன்னடமும் இருக்கிறது. மறக்கவேண்டாம்” என்றிருக்கிறார்.


No comments:

Post a Comment