சமஸ்கிருதம் குறித்த பொய்ப் பிரச்சாரம் செத்த மொழிக்கு செலவு பல நூறு கோடிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 15, 2023

சமஸ்கிருதம் குறித்த பொய்ப் பிரச்சாரம் செத்த மொழிக்கு செலவு பல நூறு கோடிகள்

ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ கல்வி தொடர்பான உயரதிகாரிகள் கூட கம்ப்யூட்டரில் கோடிங் செய்ய ஏற்ற மொழி, எளிய மொழி, உகந்த மொழி சமஸ்கிருதம் மட்டுமே என்று கூறி வருகின்றனர். 

அதிகாரப்பூர்வமான இந்த அறிக்கையைப் பிடித்துகொண்டு சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்து வருகிறது. 

உண்மையில் சமஸ்கிருதத்திற்கும் கம்ப்யூட்டர் கோடிங்கிற்கும் என்ன தொடர்பு என்று யாருமே கேட்பதில்லை. 2018ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் தேவநகரி எழுத்துரு யுனிகோடில் அதிகம் பரவலாக பயன்படுத்தப்பட்டது. 

ஆனால் தமிழ் யுனிகோட் 1999ஆம் ஆண்டே உருவாகி 2001ஆம் ஆண்டு ஆங்கிலம், பிரெஞ்சு, சீன மொழிகளுக்கு அடுத்து இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மொழி தமிழ். இணையத்தில் தமிழைக் கொண்டுவந்ததற்கு பலருக்கு நன்றி கூறவேண்டும். 

முரசு நெடுமாறன் முதல் மிகவும் இளம் வயதில் இறந்த கணினிப் பொறியாளர் தகடூர்  கோபி மற்றும் இதர எண்ணற்ற கணினிப் பொறியாளர்களின் பங்கு உள்ளது. தமிழ் கணினி எழுத்துரு குறித்து அதனை உருவாக்கியவர்கள் பெயரை எழுதத் துவங்கினால் ஒரு குறு நூலே எழுதலாம். இன்றுவரை தமிழை இணையத்தில் மேன்மைப்படுத்த தொடர் பணிகளை பலர் தன்னலம் கருதாமல் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், தேவ நகரி என்னும் வடமொழி அப்படி அல்ல.. அது குறித்த வரலாறு கூட கிடையாது. 1980களிலேயா தமிழில் இணைய எழுத்துருக்களை உருவாக்கி அதனைப் பயன்படுத்தி அதனை எளிமையாக்கும் பணிகள் சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளிலும் இதர இலங்கை புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் மேம்பாட்டுப்பணிகள் நடந்துகொண்டு இருக்கும் போது 20 ஆண்டுகள் கழித்து முதல் முதலாக அதவது 1999-ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்று ஹிந்தி மொழியை இணையத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது. ஆனாலும் அது பொதுப் பயன்பாட்டிற்கு வர 25 ஆண்டுகள் ஆனது. 

ஹிந்தி சமஸ்கிருதம் வேறு வேறு அல்ல,  அப்படி இருக்க சமஸ்கிருதம் கம்ப்யூட்டர் கோடிங் செய்ய ஏற்ற மொழி என்பது சுத்த ஹ்ம்பக்

கணிப்பொறியின் செயற்பாட்டு மென்பொருள்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியினைக் கொண்டு வடிவமைக்கப்படுவதால், கணிப்பொறியின் செயல்பாடுகள், மற்றும் இணையச் செயல்பாடுகள் ஆங்கில மொழியைச் சார்ந்து அமைந்துள்ளன. “பிரெஞ்சு, செருமானிய, சப்பானிய, சீன நாட்டினர் இது பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். அவர்களது ஆழ்ந்த தாய்மொழிப் பற்றின் விளைவாகக் கணிப்பொறிப் பயன்பாட்டிலும், இணையத்திலும் இந்த மொழிகள் இடம் பெறத் தொடங்கின.

ஒரு கணிப்பொறி பூஜ்யம், ஒன்று (0,1) எண்கள் அடங்கிய இரும (Binary) எண் குறியீடுகளைக் கொண்டுதான் செயல்படுகிறது. அதற்கு ஆங்கிலமோ, தமிழோ அல்லது வேறெந்த மொழியும் தெரியாது. கணிப்பொறியை நாம் எந்தத் துறையில் பயன்படுத்தினாலும், அந்தத் துறைக்குத் தேவையான தகவல்களை அதாவது தரவுகளை எண்களாகத்தான் சேமிக்க வேண்டும். கணிப்பொறியின் செயல்பாட்டுக்குத் தேவையின்படி நாம் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு எண்களாக மாற்றித்தான் சேமிக்க முடியும்.

“கணிப்பொறி, நாம் கொடுக்கின்ற கட்டளைகளுக்கேற்பச் செயல்படுகின்ற, சிந்திக்கும் திறனற்ற ஒரு பொறியாகும். கணிப்பொறி பல்லாயிரக்கணக்கான மின்சுற்றுகள் இயக்கப்படுவதால் செயல்படும் ஒரு திறன்மிக்க கருவி. இந்த மின்சுற்றுகள் 0.1 என்ற இரும எண் குறியீடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பொறிமொழியின் (Machine Language) கட்டளைகளால் இயக்கப்படுகின்றன.”

ஒரு மொழியை நாம் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமானால், அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கும் முறையை நாம் குறியீட்டு முறை என்று அழைக்கிறோம். ஒரு மொழியைக் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமென்றால், அந்த மொழிக்கு ஒரு குறியீட்டு முறையும் அதற்கு ஏற்ற ஓர் எழுத்துருவும் இருந்தால் போதும். அந்த மொழியைக் கணிப்பொறியில் பயன்படுத்தலாம் மற்றும் ஒரு மொழிக்கு கணிதப்பண்பு இருப்பின் எளிதில் கணிப்பொறியில் பயன்படுத்த முடியும்.

“கணிப்பொறியில் ஆங்கிலம் போன்று எந்த மொழியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் கணிப்பொறி கணித அடிப்படையில் செயல்படக்கூடிய ஒரு கருவியாகும். அவ்வகையில் தமிழ்மொழி கணிதப் பண்புடைய மொழியாகும். எனவே கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்துவது சுலபம்.”

கணிப்பொறிகளைக் கையாள்வது பற்றிய அறிவு பரவப் பரவ, அது பற்றிய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பலவும் பரவத் தொடங்கின.

சமஸ்கிருதம்தான் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது.மென்பொருட்கள் கணினிக்காக உருவாக்கப்பட்ட நிரல் மொழிகளின்(programming languages) குறியீடுகள் மூலமே உருவாக்கப்படுகின்றன என்றும் சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்றும் புரளிகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால், சமஸ்கிருத மொழியின் குறியீடுகள் மூலம் உருவாக்கப்பட்ட மென்பொருள் என்றோ, சமஸ்கிருதச் சொற்களைக் கொண்டு மென்பொருட்கள் நிரல் செய்யப்படுவதற்கான வழிமுறை என்னவென்றோ இதுவரை யாரும் தெளிவுபடுத்தவில்லை.நிரல் மொழிகளுக்கு பதிலாக சமஸ்கிருதம் மூலமாகவோ, வேறு ஏதேனும் மொழிகளின் மூலமாகவோ மென்பொருட்களை உருவாக்க முடியும் என்பது இதுவரை சாத்தியப்படவில்லை.இந்தப் புரளி எப்படித் தொடங்கியது?

ஆனால், இப்போது தமிழ், ஆங்கிலம், மலையாளம் என எந்த மொழியில் உள்ள வாக்கியத்தை உள்ளீடாகக் கொடுத்தாலும் அதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் முடிவுகளை வழங்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

உண்மையில் சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் கட்டமைப்பு செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற வகையில் இல்லை. எல்லா மொழிகளின் கட்டமைப்பையும் கணினிகள் தற்போது புரிந்து கொள்கின்றன.உதாரணமாக ‘ஜப்பானின் தலைநகரம் எது’ அல்லது  ‘What is the capital of Japan’ என்று எந்த மொழியில் நீங்கள் கூகுள், யாஹூ போன்ற தேடு பொறியில் தேடினாலும் டோக்கியோ நகரம் பற்றிய தகவல்கள் உங்கள் கணினியின் திரையில் பட்டியலிடப்படும். காரணம் இரு மொழிகளையும், அவற்றின் வாக்கியக் கட்டமைப்புகளையும் தேடு பொறிகள் புரிந்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

இப்போது மனிதர்களுடன் உரையாடும் அளவுக்கு திறன் உள்ள ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த அடிப்படையில் பார்த்தாலும் மென்பொருட்களை உருவாக்க மட்டுமல்லாது, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் சமஸ்கிருதம் அல்லது வேறு எந்த ஒரு மொழியைச் சார்ந்தும் இல்லை என்றும், மனிதர்கள் பேசும் எந்த ஒரு மொழியையும் உள்ளீடாகக் கொடுத்து அதே மொழியில் கணினி அல்லது ரோபோ போன்ற இயந்திரத்திடம் இருந்து பதிலைப் பெறும் வகையில் நிரல்மொழிக் குறியீடுகள் மூலம் செய்ய முடியும் என்பதும் தெளிவாகிறது.

மனித மொழி - இயந்திர மொழி

கையாள்பவர் பிறப்பிக்கும் உத்தரவுகளை கணினி நிறைவேற்றச் செய்யும் மென்பொருட்களை உருவாக்க நிரல்மொழிக் (programming language) குறியீடுகள் (coding)  பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிரல் மொழிகள் பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன எனும்போதிலும், தமிழ், வங்கம் போன்ற வேறு மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக சி அல்லது சி++ போன்ற நிரல் மொழிகளில் ‘Print’ என்று வழங்கப்படும் கட்டளை, ‘எழில்’ என்ற பெயரில் தமிழில் உருவாக்கப்பட்டுள்ள நிரல் மொழியில் ‘பதிப்பி’ என்று வழங்கப்படுகிறது.

நிரல்மொழிக் குறியீடுகள் மனிதர்கள் பேசும் எந்த மொழியில் இருந்தாலும் அந்தக் குறியீடுகள் பணிக்கும் வேலையைப் புரிந்துகொண்டு அவற்றைக் கணினிகள் மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்கள் நிறைவேற்றியே வருகின்றன.

ஆங்கிலம் தவிர்த்த மொழிகளில் கணிப்பொறி ஆராய்ச்சி அதிவேகத்தில் நடந்து, அதே வேகத்தில் பயன்பாட்டில் மாற்றங்களும் நடந்துவரும் சூழலில் உலகில் எழுத்து வடிவம் உள்ள அனைத்து மொழிகளிலும் நிரல்மொழிகள் உருவாக்கப்படவில்லை என்றாலும் பெரும்பான்மையாக தொழில்நுட்பம் புழக்கத்தில் இருக்கும் மொழிகளில் கணினிகளுக்கான நிரல் மொழிகள் எதிர்வரும் ஆண்டுகளில் உருவாக வாய்ப்புண்டு.

அது நிகழும்போது கணினிக்கு ஏற்ற மொழி என்று குறிப்பிட்ட எந்த ஒரு மொழியும் இருக்காது.

நிரல்மொழிக் குறியீடுகளை கணினி இயந்திர மொழியாக மாற்றி (machine language), எந்தச் செயலைச் செய்யுமாறு பணிக்கப்படுகிறதோ அதைக் கணினி செய்கிறது.

அது கூகுளில் எதையாவது தேடுவதாக இருக்கலாம், கூட்டல் கணக்குக்கு விடை சொல்வதாக இருக்கலாம், உங்களுக்குப் பிடித்த பாடலை இசைக்கச் செய்வதாகவும் இருக்கலாம்.

இந்தக் கட்டளைகளை கணினிக்கு புரிந்துகொள்ள வைக்க நிரல் மொழிகளால் மட்டுமே முடியும். கணினி அல்லது ரோபோ போன்ற வேறு இயந்திரம் எதையும் மனிதர்கள் பேசும் மொழிகளைப் பேசவோ, எழுதவோ வைக்க வேண்டுமானாலும் நிரல்மொழிகளே தேவை.

ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், மாண்டரின் என மனிதர்கள் பேசும் மொழிகளின் சொற்களைக் கொண்டு நிரல் மொழிக் குறியீடுகள் உருவாக்கப்படாவிட்டால் எவ்வளவு இனிமையான, கவித்துவமான மனித மொழியில் சொன்னாலும் அது இயந்திரத்துக்குப் புரியாது.

ஒரு மொழி பழைமையானது அல்லது தெய்வீகமானது என்று கூறிக்கொண்டு அந்த மொழிதான் கணினிப் பயன்பாட்டிற்கு கோடிங்கிற்கு ஏற்ற மொழி என்று கூறுவது எல்லாம் வெற்று வார்த்தைகள்.

 சமீப காலமாக ஒன்றிய அரசு சமஸ்கிருதத்தை வளர்க்க அதிகம் செலவிட்டு வருகிறது, அதாவது மற்ற மொழிகளை விட பல நூறு மடங்கு பணத்தை செலவிட்டு வருகிறது. அப்படி செலவிடும் பணத்தில் வதந்திகள் பரப்பவும் பொய்ப் பிரச்சாரம் செய்யவும் அதிகம் செலவிடுகிறார்களோ என்ற எண்ணம்தான் எழுகிறது.

No comments:

Post a Comment