பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

ஹிந்தி-சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு - ஏன்?

சமஸ்கிருதத்தையும், ஹிந்தியையும் தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?

எந்த மொழியையும் விரும்பிப் படிப்பது வேறு - கட்டாயத்தின் பெயரில் திணிக்கப்படுவதை எதிர்ப்பது என்பது வேறு!

ஹிந்தி மொழி திணிக்கப்படுவதால் தமிழ்நாடு அவற்றை எதிர்க்கிறது.

இன்று நேற்றல்ல - 1926ஆம் ஆண்டிலேயே ‘குடிஅரசு' இதழில் (7.3.1926) "தமிழிற்குத் துரோகமும் இந்தியாவின் இரகசியமும்" எனும் தலைப்பில் கட்டுரையைத் தீட்டியவர் தந்தை பெரியார்.

ஒரு காலகட்டம் இருந்தது. சமஸ்கிருதம் படித் திருந்தால் தான் மருத்துவக் கல்லூரியில் இடம் என்றிருந்த கொடுமை! இதன் பின்னணியில் இருந்தது பார்ப்பன சதி என்பது வெளிப்படை!

தந்தை பெரியார் போர்க்குரல் கொடுத்தார். நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் (இராமராயநிங்கர்) முதல் அமைச்சராக (PREMIER) இருந்தபோது அந்த முட்டுக்கட்டையை உடைத்தெறிந்தார்.

அந்தத் தடை தகர்க்கப்படாமல் இருந்தால், பார்ப் பனரல்லாதார் மருத்துவர் ஆகியிருக்க முடியுமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

சக்ரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநில முதல் அமைச்சராக இருந்த போது பள்ளிகளில் ஹிந்தியைக் கொண்டு வந்தார்.

தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே பொங்கி எழுந்தது. முதல் அமைச்சர் வீட்டுமுன் கூட மறியல் நடைபெற்றதுண்டு.

முதல் அமைச்சர் ஆச்சாரியார் இலயோலா கல்லூ ரியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது பச்சையாகத் தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தினார் (24.7.1937).

"சமஸ்கிருதத்தைப் படிப்படியாகக் கொண்டு வரவே முதற் கட்டமாக ஹிந்தியைப் பள்ளிகளில் கொண்டு வந்திருக்கிறேன்" என்று கூறவில்லையா?

வாயாடி சத்தியமூர்த்தி அய்யர் என்று கூறப்படும் அவர் சொன்னதுண்டு.

‘என் கையில் ஆட்சி அதிகாரம் வருமேயானால், சமஸ்கிருதத்தையும், ஹிந்தியையும் கட்டாயப்படுத்து வேன்!‘ என்று கூறியதுண்டே!

ஆர்.எஸ்.எஸ்.சின் குருநாதர் என்று கூறப்படும் எம்.எஸ்.கோல்வால்கர் தனது Bunch of Thoughts  நூலில் (தமிழில் ‘ஞான கங்கை') எழுதுகிறார்.

இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதமே என்று கூறியுள்ளார் (நூல்: பக். 48). திருக்குறள் ஓர் ஹிந்து நூல் என்றும் கூறுகிறார்.

திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் பரிமேல ழகர் உரையைத்தான் உச்சியில் வைத்துப் போற்று வார்கள்.

அவர் என்ன எழுதுகிறார்?

"அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம்" (மனுதர் மத்தில் எவை எல்லாம் கூறப்படுகிறதோ, அவற்றை ஏற்றும், எவையெல்லாம் விலக்கப்படுகின்றனவோ அவற்றை எல்லாம் நீக்கி எழுதப்பட்டதுதான் திருக்குறளில் கூறப்படும் அறத்துப்பால்) என்கிறார்.

"திருக்குறளில் உள்ள அறத்துப்பாலை அதிலும் முதலில் பத்து குறட்பாக்களை மட்டும் மாணவர் களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு, பொருட்பாலை, காமத்துப்பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை" என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறிய கருத்தினைக் கண்டித்து 2.4.1982 அன்று ஈரோட்டில் திருக்குறளார் வீ.முனுசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருக்குறள் பேரவை நான்காம் ஆண்டு விழாவில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

மறைந்த மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி திருக்குறள் பற்றிக் கூறியது என்ன?

ஆண்டாள் எழுதிய திருப்பாவையில் வரும் பாடல் வரியான  ‘தீக்குறளைச் சென்றோதோம்!' என்பதற்கு தீய திருக்குறளை ஓதமாட்டோம் என்று கூறவில்லையா?

குறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருளாகும்.

ஒன்று சங்கராச்சாரியாரின் அறியாமையைக் காட்டும், அல்லது தமிழ் மீதான திருக்குறள் மீதான அவரது  வெறுப்பைத் தான் வெளிப்படுத்தும்.

அதேபோல சங்கராச்சாரியார்கள் பூஜை வேளை யில் தமிழில் பேசமாட்டார்கள், காரணம் தமிழ் நீஷப் பாஷையாம். ஆட்சி மொழிக்காவலர் கீ.இராமலிங் கனார், அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச் சாரியார் ஆகியோர்களே இதனை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள். (கீ.இராமலிங்கனார் பேட்டி ‘உண்மை', 15.12.1980)

திருக்குறளை முதன் முதலில் நூலாக அச்சிட்டு வழங்கியவர் சென்னை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய வெள்ளைக்காரரான பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்பவர்தாம். (1796)

தமிழ் மொழியைப் பயின்று தமிழ் ஓலைச் சுவடி களை சேகரிக்கும் பணியை அவர் மேற்கொண்டார்.

இந்த இடத்தில் தமிழ் ஓலைச் சுவடிகளை அழிக்கப் பார்ப்பனர்கள் மதம் - பக்தியின் பெயரால் ஒரு தந்திரம் செய்தனர். ஓலைச் சுவடிகளை ஆற்றில் கொண்டு போய் விட்டால், அப்படி அனுப்புபவர் களுக்குப் புண்ணியமும், சொர்க்கமும் கிடைக்கும் என்று கதை கட்டினர்.

அதனை நம்பிய பக்தியில் மூழ்கிய நமது தமிழர் களும் ஆற்றில் கொண்டு போய் நமது அரிய தமிழ்ச் சுவடிகளை விட்டக் கொடுமையை என்னவென்று சொல்ல!

தமிழ்ச் சுவடிகளை ஆற்றில் விடுவது, எரிப்பது என்ற நிலையைத் தடுத்து நிறுத்திடவும், பாதுகாத் திடவும் கொலின் மெக்கன்சி என்ற அதிகாரியை நியமனம் செய்தார் மாவட்ட ஆட்சியரான எல்லிஸ்.

அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பாட்டனா ரான கந்தசாமி என்பவர் மூலம் மூன்று தமிழ் ஓலைச் சுவடிகள் எல்லிசுக்குக் கிடைத்தன. அது - திருக்குறள், நாலடியார், திருவள்ளுவமாலை யாகும்.

இதனைக் கேள்வியுற்ற பார்ப்பனர்கள், கந்தசாமி தீண்டத்தகாதவர், அவர் கொடுப்பதை ஏற்க வேண்டாம் என்று தடுக்க முயன்றனர். ஆனால் எல்லிஸ் அதனை ஏற்கவில்லை.

தமிழ்ப்பணியை மேற்கொண்டு, மதுரை, இராம நாதபுரம் சென்றபோது உணவில் விஷம் வைத்து அவர் கொல்லப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு. அப்பொழுது அவரின் வயது 41 மட்டுமே! அவரின் கல்லறை இராமநாதபுரத்தில் இருக்கிறது.

(ஆதாரம் "போலிகளோடு ஒரு போர் - ஆ.மலைக் கொழுந்தன்).

ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டம் என்பது என்ன?

ஹிந்து சமூகத்தில் பல்வேறு வகைகளில் பிரிந்து கிடக்கும் குழுக்களை ஒன்று சேர்த்து, அவர்களுக்கு எழுச்சியூட்டி, இளமை ரத்தம் பாய்ச்ச வேண்டும். ஹிந்து தர்மம் மற்றும் சமஸ்கிருத அடிப்படையில் இது செய்யப்பட வேண்டும். இதன் மூலம் பாரதத்தின் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி பெற முடியும். இதுதான் இந்த அமைப்பின் நோக்கமும், கிளர்ச்சியும் ஆகும்.

அதன் அடிப்படையில் வகுக்கப்பட்டதுதான் தேசிய புதிய கல்வித் திட்டமாகும்.

இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும், மேம்பாட் டிற்கும் சமஸ்கிருதத்தின் சிறப்பான முதன்மையினைக் கருத்தில் கொண்டும், நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக் கும் அதன் தனித்தன்மை வாய்ந்த பங்களிப்பைக் கருதியும், பள்ளிக் கூடங்களில், அதனைக் கற்பிப்ப தற்கே வசதி செய்யப்படும் பல்கலைக்கழக நிலையில் சமஸ்கிருதத்தைக் கற்பதற்கு மிகவும் தாராளமான வசதிகள் அளிக்கப்படும்" என்கிறது தேசிய புதிய கல்வித் திட்டம்.

ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிஜேபி 2014 முதல் 2023 வரை செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ரூ.1487.9 கோடியாகும். செம்மொழியான தமிழுக்கு ஒதுக்கப்பட்ட தொகையோ இந்தக் காலகட்டத்தில் வெறும் ரூ.74.1 கோடியாகும்.

ஒன்றிய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்ச ராக முரளி மனோகர் ஜோஷி இருந்தபோது ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்து கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி அழவில் லையா?

சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படவில்லையா?

சமஸ்கிருதம் என்பது ஏதோ ஒரு மொழியல்ல. பார்ப்பனப் பண்பாட்டைத் திணிப்பதற்கான வஞ்சக ஆயுதம்.

தமிழ்மொழி தெலுங்கு என்றும், கன்னடம் என்றும், மலையாளம் என்றும், துளு என்றும் பிளவுபட்டதற்கே காரணம் சமஸ்கிருத ஊடுருவல்தானே!

தமிழரின் ஊர்ப் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத மயம் ஆக்கப்படவில்லையா?

திருமுதுகுன்றம் விருத்தாசலமாகவும், திருமரைக் காடு வேதாரண்யமாகவும், குடமூக்கு கும்பகோண மாகவும், குரங்காடுதுறை கபிஸ்தலமாகவும், புளியந் தோப்பு திண்டிவனமாகவும் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு விட்டதே! (நீண்ட பட்டியல் உண்டு).

தமிழன் கட்டிய கோயில்களில் தமிழ் வழிபாடு உண்டா? தமிழன் வீட்டு நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்க ளைக் கொண்டு நடத்துவதும், சமஸ்கிருத மந்திரங் களை அனுமதிப்பதும் எந்த வகையில் சரி. (பெட்டிச் செய்தி காண்க)

தமிழ் மன்னர்கள் கல்விக் கழகங்கள் கண்டனர். அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டவை என்ன?

ஆரியர்களுடைய மீமாம்ச வேதாந்த தத்துவம், சாரக சமிதை, அஷ்டாங்க இருதய சமிதை, மனுதர்மம் இதிகாசங்களும் தானே. அருண்மொழி வர்மன் என்ற தமிழ் பெயரை ராஜராஜன் என்று சமஸ்கிருதத்தில் மாற்றிக் கெண்ட பார்ப்பன அடிமைத் தனத்தை மன்னிக்க முடியுமா?

சமஸ்கிருத திணிப்பால் 

அழிந்த மாநிலங்களின் மொழிகள்.

இந்தியாவிலேயே ஹிந்தி வடிவில்வந்த சமஸ் கிருதத்தை முதன்முதலாக ஆட்சி மொழியாக அறிவித்த பீகார் மாநிலத்தில் தாய்மொழியான போஜ்புரி, மகத் மற்றும் மைதிலி போன்ற மொழிகள் காணாமல் போய்விட்டன.

உத்தரப்பிரதேசத்தில் அவதி, போஜ்புரி, கான்பூரி, பிரிஜ்பாஷா, புந்தேல்கண்டி, கன்னோஜி என்கிற மொழிகள் காணாமல் போய்விட்டன.

 உத்தராகண்ட் மாநிலத்தில்  சமஸ்கிருதம் அலுவலக மொழி. அம்மாநிலத்தில் மொழியான கடுவாலி மற்றும் குமோனி போன்றவை காணாமல் போனது.

ஹரியானி, ராஜஸ்தானி,  உருது, மால்வி, நிமதி, அவதி, பகேலி  காஷ்மிரி  டோக்ரி,பாடி..லடாக்கி,  போன்றவை அழிந்தே போனது - மத்திய கிழக்கு இந்தியாவின் மொழியான சட்டீஸ்கரி, கோர்பாஜார் கன்ஷி, சந்த்தலி. போன்ற மொழிகள் அழிந்தே போனது.

இப்படி பிறமொழிகளை உருக்குலையச் செய்த சமஸ்கிருதம் செத்த மொழி ஆனது ஏன்?

சமஸ்கிருதத்தை மற்றவர்கள் படிக்கக் கூடாது, கேட்கக் கூடாது என்று ஆக்கி வைத்த பார்ப்பனர் கள்தானே, சமஸ்கிருதம் செத்து ஒழிந்ததற்குக் காரணம்!

செத்த பிணத்தை உயிரூட்ட முடியுமா? செத்துப் போன சமஸ்கிருதத்தைத்தான் உயிரூட்ட முடியுமா? சிந்திப்பீர்!

(தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்புக் கருத்தரங்கில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆற்றிய உரை)

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் 26.2.2023 ஞாயிறு காலை 10 மணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்புக் கருத்தரங்கம் நடை பெற்றது. 

தலைமை: கவிஞர் இராமலிங்கம், 

முன்னிலை: தோழர்கள் டி.எஸ்.நடராசன், ஜீவா, மாணிக்கம், ஜி.மனோகரன், நாராயணசாமி.

வரவேற்புரை: கவிஞர் கருணை மணி

தொடக்கவுரை: மருத்துவர் அறம்.

கருத்தரங்க உரை வீச்சுகள்: 

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி.

கே.சுப்பராயன் எம்பி., 

கவிஞர் கலி.பூங்குன்றன், 

முனைவர் பொன்னவைக்கோ, 

மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

இணைப்புரை: மருத்துவர் சாந்தி.

நன்றியுரை: முனைவர் கணேஷ் இளங்கோ.

No comments:

Post a Comment