எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகை - நாகை மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது: - தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 12, 2023

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகை - நாகை மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது: - தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

தமிழ்நாடு-இந்திய அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்திடுக!

ஏப்.14 ஜெகதாகப்பட்டினம் மாநாடு இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்த்தும்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகை, நாகை மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களை விடுவிக்க தமிழ்நாடு - இந்திய அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்திடுக! ஏப்.14 ஜெகதாகப்பட்டினம் மாநாடு இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்த்தும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு: 

16 மீனவர்களையும் சுற்றி வளைத்துக் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 172 விசைப்படகுகளில் 600க்கும் மேற்பட்ட புதுகை, நாகை மீனவர்கள் நேற்று (11.3.2023) கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இதில் ஆரோக்கியராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் அவரும், அசோக், கருப்பு, சக்தி உள்ளிட்ட 16 மீனவர்களும் இன்று (12.3.2023) அதிகாலை 4 மணியளவில் 30 நாட்டிகல் மைல் தொலைவில் அனலைத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த விசைப் படகுடன், 16 மீனவர்களையும் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர்.  

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்த 16 மீனவர்களும் பருத்தித்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

 ஒன்றிய அரசை கண்டிக்கிறோம்!

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவது மோசமான தொடர்கதையாக தொடர்ந்து கொண்டுள்ளது.  தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்கக் கோரி, தமிழ்நாடு அரசு, தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது. அண்டை நாட்டுடனான உறவுகளைப் பேண வேண்டிய ஒன்றிய அரசு இப்பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருப்பதும், நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கதாகும். 

ஏப்ரல் 14 இல் திராவிடர் கழக மாநாடு

கடலூர், நாகப்பட்டினம் தொடங்கி தூத்துக்குடி வரை உள்ள மீனவர்கள் ஒவ்வொரு முறை கடலுக்குச் செல்லும் போதும் அச்சத்துடனையே தங்கள் தொழிலை நடத்தவேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காணவும், மீனவர்கள் உரிமையை மீட்டெடுக்கவும், அவர்களின் நலன்களை காக்கவும் வலியுறுத்தி, வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ஜெகதாப்பட்டினத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாநாடு நடத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மீனவர்களும், அனைத்துக் கட்சிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்று, மீனவர் நலன் காக்க ஒருமித்த குரல் கொடுக்க முன்வருமாறு கடமை உணர்வுடன் அழைக்கின்றோம். செவிசாய்க்க மறுத்தால், போராட்டக் களம் காண வேண்டியது தவிர்க்க இயலாததாகிவிடும்.

இன்று கைது செய்யப்பட்டுள்ள புதுகை, நாகை மீனவர்களின் விடுதலைக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு, இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கவைக்க வேண்டுகிறோம்.


                                                                                                                                        கி.வீரமணி 

சென்னை                                                                                                                      தலைவர், 

12.3.2023                                                                                                         திராவிடர் கழகம்

No comments:

Post a Comment