செய்திச் சிதறல்கள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

செய்திச் சிதறல்கள்....

சீன அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்றார்

பீஜிங், மார்ச் 11 சீனாவின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் முடிவை அப்படியே அங்கீகரிக்கும் அந்நாட்டு நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ், 

ஜி ஜின்பிங் தேர்வுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் சீன அதிபராக தொடர்ந்து 3 ஆவது முறையாக ஜின்பிங் பதவியேற்றார். 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோவுக்கு பிறகு 2 முறைக்கு மேல் அதிபராகியிருக்கும் முதல் தலைவர் ஜி ஜின்பிங் ஆவார். அவர் கடந்த 2012 இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது போட்டியாளர்களை ஓரங்கட்டி, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைப் பதவிகளை தனது ஆதரவாளர்களை கொண்டு நிரப்பினார். ஜின்பிங் கடந்த அக்டோபரில் கட்சியின் பொதுச்செயலாளராக மூன்றாவது முறையாக 

5 ஆண்டு காலத்துக்கு தேர்வாகியிருந்தார். இப்பதவியை சீனத் தலைவர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிறரிடம் ஒப்படைப்பது வழக்கம். அந்தப் பாரம்பரியத்தை ஜி ஜின் பிங் உடைத்தார்.முன்னதாக 2018 இல் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்ற சட்டத்தை நீக்கினார். இந்நிலையில் ஜின்பிங் தனது வாழ்நாள் முழுவதும் அதிபராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு 

வீட்டுமனைப் பட்டாக்கள்

சென்னை, மார்ச் 11 மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சமூக நலத்துறை அமைச்சர் முன்னிலையில் பல வகையான மாற்றுத்திறனாளிகள் 

சங்க பிரதிநிதிகளுடன் கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கங்கள், வீட்டு மனை பட்டா கோரும் மாற்றுத்திறனாளிகள் விவரங்களைத் தொகுத்து வருவாய்த் துறையினரிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட மனுக்களை தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஆய்வு செய்து அரசுக்கு உடனடியாக விவரங்களை அனுப்பும்படி மாவட்ட ஆட்சியர்களிடம் கோரப்பட்டது.அதன்படி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருப்பூர், கடலூர், சிவகங்கை, கரூர், திருவாரூர், ஈரோடு, சேலம் ஆகிய 

17 மாவட்டங்களில் மொத்தம் 696 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.தொடர்ந்து, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில், வீட்டுமனை பட்டா வழங்க, நடைமுறையில் உள்ள நில ஒப்படை முன்னுரிமை பட்டியலில் மாற்றுத்திறனாளிகளைச் சேர்த்து உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, அரசாணைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளபடி, மாவட்ட வாரியாக வீட்டுமனை பட்டா கோரும் மாற்றுத் திறனாளிகள் மனுக்களைப் பெற்று அதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து விவரத்தை அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டேட் வங்கியுடன் தமிழ்நாடு மின்சார நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, மார்ச் 11 தற்போது அரசு துறைகள் மின்-ஆளுமை சேவை கட்டணத்தை பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் இருந்து பெறுவதற்காக பல்வேறு கட்டண  நுழைவு வாயில்களைப் பயன்படுத்தி வருகின்றன. 

தற்போது, பாரத ஸ்டேட் வங்கியின் “கட்டண திரட்டு செயலியான” SBIePAY-யை ஒற்றை தீர்வாக கண்டறிந்துள்ளது. SBIePAY  ஒரு கட்டண திரட்டு செயலி ஆகும். இச்செயலி அனைத்து வகையான டெபிட் / கிரெடிட் கார்டுகள், யுபிஅய், பேமென்ட் பெட்டகம் மற்றும் இணைய வங்கி கட்டணங்களை வசூலிக்கவும், சேகரிக்கவும், ஒத்திசைவு செய்யவும் எளிதான ஒருங்கிணைந்த கட்டண இயங்கமைவு ஆகும். 

இது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மற்றும் அரசு துறைகளின்  கட்டண செலுத்து முறைகளுக்கு எளிதான அமைப்பு ஆகும். 

பாரத ஸ்டேட் வங்கி இந்த சேவையை, சந்தை விலையைவிட குறைவாக, “உபயோகிப்பு அளவு” அடிப்படையில் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மற்றும் பாரத ஸ்டேட் வங்கியுடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அனைத்து அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் இந்த சேவையை காலதாமதமின்றியும் பணவிரயமின்றியும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (10.3.2023) தமிழ்நாடு மின் ஆளுமை அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை முதன்மை நிர்வாக அலுவலர் பிரவீன் நாயர், பாரத ஸ்டேட் வங்கி (சென்னை வட்டம்) தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, பாரத ஸ்டேட் வங்கி  உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment