அருந்ததியைப் பார்க்காதீர்கள் - லாம்டா டாரஸ் விண்மீன்களைப் பாருங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 4, 2023

அருந்ததியைப் பார்க்காதீர்கள் - லாம்டா டாரஸ் விண்மீன்களைப் பாருங்கள்

முன்னோர்கள் என்ன முட்டாள்களா?

“முன்னோர்கள் என்ன முட்டாள்களா?” அறிவியல் வாதங்களை முன்வைக்கும் போது மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் இப்படிக் கூறி மடக்கப் பார்ப்பார்கள் 

எதிர்வாதம் செய்பவர்களும் கொஞ்சம் குழம்பிப்போய் தம்முடைய கருத்தை மேலோட்டமாக வைத்துவிடுவர். 

அப்படி பல நிகழ்வுகள் உண்டு, ஆனால் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல, ஆனால் அவர்கள் கூறினார்கள், செய்தார்கள் என்ற பெயரில் இன்று மூடநம்பிக்கையை வளர்த்து அதன் மூலம் வயிற்றை நிரப்பும் கூட்டம் மேலும் மேலும் நாகரிகமான முறையில் போலி அறிவியலைச்சேர்த்து மக்களிடையே மூடநம்பிக்கையை பரப்பி வருகின்றனர். 

அதாவது உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதிலும் அப்டேட் ஆகிக் கொண்டு இருக்கின்றனர்.

குறிப்பாக பார்ப்பனர்களிடையே இணை ஏற்பு விழாவின் போது அருந்ததி விண்மீன் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்றை காணலாம். பொதுவாக இது குறிப்பிட்ட ஜாதியினரின் திருமணத்தில் மட்டுமே உண்டு. இதற்கு ஒரு கதை கட்டி விடுவார்கள். என்னவென்றால்... 

எது எப்படி என்றாலும் இது ஒரு சடங்கு. அது அந்த அளவில் இருப்பது வேறு. ஆனால், இது போன்ற சடங்குகளுக்குப் பின்னால் அறிவியல் இருப்பதாகவும், இன்றைய நவீன அறிவியல் கண்டறிந்த உண்மைகளை பழங்காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டறிந்துவிட்டதாகவும் கூறும் காட்சிப் பதிவுகள் பரவி வருகின்றன.

சமீபத்தில் அருந்ததி பார்ப்பது குறித்து தொலைக்காட்சியில் பேசிய ஒரு பெண் “பொதுவாக இரட்டை நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம் நிலையாக இருக்கும், மற்றொரு நட்சத்திரம் நிலையாக உள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும். ஆனால், அருந்ததி-வசிட்டர் நட்சத்திரங்கள் லட்சியத் தம்பதிகளைப் போல ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. வானத்தில் சிறு புள்ளிகளாகத் தெரியும் நட்சத்திரங்களின் செயல்பாட்டைக் கண்டறிந்து திருமண சடங்கில் வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார். 

இந்தக் கூற்று உண்மையா? உண்மையில் படித்த வர்க்கம் என்று பலரால் நம்பப்படும் ஒரு கூட்டம் இப்படி திருமணத்தின் போது அதுவும் பகலில் அருந்ததி நட்சத்திரம் பார்க்கலாம் என்று கூறுவது ஏமாற்றும் வேலைதானே?

முதலில் இந்த அருந்ததி நட்சத்திரம் குறித்துப் பார்க்கலாம்.

விண்மீன் மண்டலங்கள் குறித்து அறிவியல் கட்டுரைகளில் படித்திருக்கிறோம். அந்த விண்மீன் மண்டலங்களில் ஒன்று உர்சாமேஜர். இதனை ‘ஏழுமீன் கூட்டம்‘ என்றும், வடமொழியில் ‘சப்தரிஷி’ (7 விண்மீன்) என்றும் அழைப்பார்கள்.

பொதுவாக விண்மீன் மண்டலங்கள் பருவகாலங்களின் அறிவிப்புகளாக இருக்கும். எடுத்துக்காட்டாக ஓரையான் விண்மீன் மண்டலம் தலை உச்சிக்கு வரும் போது குளிர்காலம், ஸ்கார்ப்பியன் என்ற விருச்சிக விண்மீன் மண்டலத்தில் உள்ள ஆல்பா ஸ்கார்ப்பியன் என்னும் அதிக ஒளிகொண்ட விண்மீன் தமிழில் கோட்டை என்றும், வட மொழியில் ஜோஷ்டா என்றும் கூறப்படும் விண்மீன் உச்சிவானில் தெற்குப் பகுதியில் தெரிந்தால் அது கோடை காலம். இப்படி சில விண்மீன் மண்டலங்கள் புவியின் சுழற்சியால் நமது பார்வைக்குத்தெரியும் போது அது காலத்தை குறிக்கும் விண்மீன் மண்டலங்களாக தெரியும் 

ஆனால் பெருங்கரடி (Ursa Major) என்பது, ஆண்டு முழுதும் வடக்கு வானின் விளிம்பில் தெரியும் விண்மீன் கூட்டம் ஆகும்.

சரி ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதற்கு இலக்கணமாக குறிப்பிடும் இந்த விண்மீன் உண்மையிலேயே ஒன்றை ஒன்று சுற்றிவருகிறதா  என்றால் கிடையாது

காரணம்:

பூமியிலிருந்து சுமார் 81.7 ஒளியாண்டு தொலைவில் அருந்ததி (அல்கோர்) உள்ளது. ஆனால் வசிட்டர் (மிஸார்) 82.9 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. எனவே இரண்டும் அசல் ஜோடி அல்ல.

பார்வைக்கு இரண்டும் ஒரே திசையில் இருப்பதால் ஜோடிபோல நாடகம் ஆடும் விண்மீன்கள் தான் இவை. இதுபோன்ற போலி ஜோடி விண்மீன்களை ‘தோற்றமயக்கம் தரும் ஜோடி’ என வானவியலில் அழைப்பார்கள்.

எப்சிலன் லைரே போன்ற அசல் ஜோடி விண்மீன்கள் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு ஒன்றையொன்று சுற்றுகின்றன. இவை அசல் ஜோடி விண்மீன்கள். அல்ஜிடி போன்ற தோற்ற மயக்கம் தரும் ஜோடிகள் இடையே ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே தொடர்பு ஏதுமில்லை.

இப்படி தோற்ற மயக்கம் கொண்ட விண்மீன்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளாது, இரண்டு விண்மீன்களும் வெவ்வேறு தொலைவுகளில் இருந்தாலும் பார்வைக் கோட்டில் ஒரே திசையில் அமைவதால் ஏற்படும் தோற்ற மயக்கம் காரணமாக, இவை ஜோடி போலத் தோற்றம் தரும்.

எனவே, வசிட்டரும் (மிஸார்), அருந்ததியும் (அல்கோர்) ஜோடியே அல்ல. தொலைவில் ஒரே திசையில் இருக்கும் உயரமான இரண்டு மலைகள் பார்வைக்கு இணைந்து மலைத்தொடர் போன்ற தோற்ற மயக்கம் ஏற்படுத்துவது போல வசிட்டர் - அருந்ததி விண்மீன்கள் போலி ஜோடியாகும்.

இரண்டாவது காரணம்:

ஒரு ஒளிப் புள்ளியாக வெறும் கண்களுக்கு புலப்படும் அருந்ததி (அல்கோர்) விண்மீனுக்கு உண்மையிலேயே அல்கோர்-B என்று அழைக்கப்படும் அசல் இணை உள்ளது. வேறு சொற்களில் கூறினால், அருந்ததியின் அசலான இணை வசிட்டர் விண்மீன் அல்ல; அல்கோர்-ஙி என்னும் வேறொரு விண்மீன்.

உண்மையான இரட்டை விண்மீன் தொகுப்பு அனைத்திலுமே இரண்டு விண்மீன்களும் சுற்றி வரவே செய்யும். இரண்டு விண்மீன்களும் உண்மையில் ஒன்றை ஒன்று சுற்றுவதில்லை. பதிலாக இரண்டுக்கும் இடையில் உள்ள நிறை மய்யம் என்ற புள்ளியையே இரண்டும் சுற்றிவரும்.

புவி, சூரியனை சுற்றுவதாக எளிதாக கூறுகிறோம். ஆனால், உண்மையில் இரண்டுக்கும் இடையில் உள்ள நிறை மய்யத்தை ஒட்டியே புவி சுற்றி வருகிறது. அந்த நிறை மய்யத்தை சூரியனும்கூட சுற்றவே செய்கிறது. ஆனால், சூரியன் சுற்றுகிற வட்டம் மிகச் சிறியதாக இருக்கும். ஆட்டு உரலில் குழவிக்கல் சுற்றிவருவதைப் போல சூரியன் சுற்றுவது ஒரே இடத்திலேயே அமைந்திருக்கும்.

எனவே அம்மி மிதித்துப் பார்க்கும் அருந்ததி வசிட்டர்  என்பது உண்மையானது அல்ல, இது ஓர் ஏமாற்று வேலையே! 

அப்படி பைனரி அதாவது ஒன்றாக சுற்றும் விண்மீனைப் பார்க்க முடியுமா? என்றால் ஆம் முடியும். குளிர்காலங்களில் கார்த்திகை விண்மீன் கூட்டத்தின் தலைவனாக விளங்கும் டாரஸ் அதாவது காளைவடிவ விண்மீன் மண்டலத்தில் காளையின் கொம்பு பகுதியில் உள்ள லாம்டா டாரஸ் என்ற விண்மீன் இரட்டை விண்மீன்களைக் கொண்ட விண்மீன் ஆகும். இதை குளிர்கால இரவில் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் வெறும் கண்களாலேயே பார்க்கலாம் 

உண்மையில் இனிமேல் திருமணம் முடிக்கும் மேல்தட்டு மக்கள் குளிர்கால இரவில் ஜோடி விண்மீன்களாக லாம்டா டாரஸ் பார்த்தால் அதற்குத் தக்க அறிவியல் காரணம் உண்டு.

No comments:

Post a Comment