"நேஹா சிங் ரத்தோர்" சிறு உளியைக் கண்டு நடுங்கும் பெரு மலைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 4, 2023

"நேஹா சிங் ரத்தோர்" சிறு உளியைக் கண்டு நடுங்கும் பெரு மலைகள்

பாணன்

உ.பி.யில் நாட்டுப்புற பாடலான “கா பா” (என்ன ஆச்சு) 2ஆம் பாகத்தை பாடி மீண்டும் சாமியார் முதலமைச்சரையும் டில்லி பா.ஜ.க. தலைமையையும் கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்ற பட்டதாரிப் பெண் நேஹா சிங் ரத்தோர் யார் ?

உத்தரப்பிரதேசத்தில் சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத்தின் தூக்கத்தை - தனது புரட்சிகரமான இடதுசாரி கருத்தாழமிக்க பாடல்களால் - கெடுத்துக்கொண்டு இருக்கும் பல்கலைக்கழக பட்டதாரிப்பெண் நேஹா.

சாதாரண கிராமத்துப் பெண் போன்று சேலை அணிந்து முக்காடு போட்டு அவர் பாடிய போஜ்பூரி தொடர் பாடல்களான 

கா பா (என்ன ஆச்சு) என்ற பாடல் இன்று பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் முழுவதும் கிட்டத்தட்ட அனைவரது அலைபேசியிலும் எதிரொலித்து வருகிறது.

நேஹா சிங் ரத்தோர் யார்?

நேஹா சிங் ரத்தோர் ஒரு போஜ்பூரி பாடகி. இவர் பீகார் மாநிலம் கைமூர்மாவட்டத்தில் உள்ள ராம்கர் பகுதியை சேர்ந்தவர். 25 வயதான நேஹா கான்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

தற்போது வட இந்தியாவில் கல்லூரி செல்லும் மாணவிகள் தங்களை உணர்ந்து கொண்டது மட்டுமல்ல, தங்கள் மீதான இத்தனை ஆண்டுகால அடக்குமுறைகளையும் புரிந்துகொண்டனர். இதில் சிலர் துணிச்சலோடு பேசவும் துவங்கி உள்ளனர், ஆனால் இந்த துணிச்சல் எல்லாம் திருமணம் என்ற கம்பளிப் போர்வைக்குள் ஒழித்துவைத்த பூச்செண்டாக வாடி விடுகிறது. 

இதே போல் தான் நேஹா சிங் - பொறியியல் பட்டதாரியான இவர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் பாடல்களைப் பாடி தோழிகளை மகிழ்விப்பார். 

இவரது பெற்றோர் பாடகர்கள் அல்ல, இவரது தந்தை அரசுப் பணியாளர் - தாயார் வீட்டை கவனித்துகொண்டு இருப்பவர்.   கரோனா முழு அடைப்பு காலத்தில் இவர் கரோனாவில் மக்கள் படும் துன்பங்களை பாடலாக பாட அது மிகவும் பிரபலமாகிப்போனது, கரோனா முழு அடைப்பின் போது இவரது பல உறவினர்கள் மும்பை மற்றும் சூரத்தில் இருந்து ரயில் தண்டவாளங்கள் வழியாக பீகாரில் உள்ள இவரது சொந்த ஊர் சென்று சேர்ந்தது இவரது உள்ளத்தை அதிரவைத்தது. இதுவரை நையாண்டிப் பாடல்களைப் பாடிவந்த நேஹா - கரோனா காலத்தில் ஒன்றிய அரசு முன் யோசனையின்றி விடுத்த முழு அடைப்பால் மக்கள் படும் துயரங்களைப் பாடத்துவங்கினார். தானே பாட்டெழுதி தானே ராகம் இசைத்து தனது தோழிகளில் சிலரை பக்கவாத்தியம் வாசிக்கவைத்து பாடத்துவங்கியவர். மக்கள் அதிகம் ஆதரவு தரவே அந்த மக்களுக்கு ஒன்றிய அரசும் உத்தரப் பிரதேச சாமியார் அரசும் செய்யும் கொடுமைகளையும் போலி வாக்குறுதிகளையும் உடைக்கும் வேலையில் இறங்கினார். 

முதலில் ஏதோ கல்லூரிப் பெண் முழு அடைப்பின் போது நேரம் போகாமல் பாடுகிறாள் என்று அலட்சியமாக இருந்த பாஜக அவருக்கு கிடைத்த மக்கள் ஆதரவு மற்றும் அவரது பாடல் வரிகளின் சூடு தாங்காமல் குதிக்க ஆரம்பித்துவிட்டது. 

பகுத்தறிவோடு விழிப்புணர்வு மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து தனது சொந்தப் பாடல்களை எழுதுகிறார், தனது சொந்த ட்யூன்களை உருவாக்குகிறார், மேலும் பாடுகிறார். உத்தரப் பிரதேச அரசின் வண்டவாளங்களை பிரச்சினைகளை கிண்டலாகவும் - விமர்சன ரீதியாகவும் எழுப்புகிறார். முக்கியமாக இவர் உத்தரப் பிரதேசம் - பீகார் மற்றும் வடக்கு மத்தியப் பிரதேசங்களில் பேசப்படும் போஜ் பூரி மொழியில் பாடுவதால்  வீட்டுக்கு வீடு அதிகம் பேசப்படுகிறார்.

கடந்த ஆண்டு உ.பி. அரசு தீபாவளியின் போது கோடிக்கணக்கில் விளக்கு எண்ணெய் வாங்கி அயோத்தியில் சராயு நதிக்கரையில் விளக்கு எரித்தது, மறுநாள் அந்த விளக்கில் மீந்து போன எண்ணெய்யை சேகரிக்க நூற்றுக்கணக்கான ஏழைகள் சராயு நதிக்கரையில் அலைந்ததைக் கண்டு இதுதானா உங்கள் தீபாவளி - வெறும் விளக்கிற்கும் எண்ணெய்க்கும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்த சாமியார் அரசே, அதை இந்த மக்களுக்கு - காருக்கு..... 'ரோஜ் காருக்கு' செலவு செய்தால் (போஜ்பூரியில் பணியை ரோஜ்கார் என்று கூறுவார்கள்) உங்கள் தீபாவளி இருண்டு விடுமோ என்று பாடினார். சாமியார் முதலமைச்சருக்கு கோபம் வந்தது.  உடனே இவர் மீது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் செயல்பட்டார் என்று காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்யச் சென்றது. அவர் அதற்கு முன்பாகவே காவல் நிலையம் சென்று என் மீது என்ன வழக்கு என்று கேட்டு அதற்கான விளக்கமும் தந்து நீதிமன்றத்தில் பிணையும் பெற்றுவிட்டார். 

இந்த நிலையில் பாஜகவினர் களத்தில் இறங்கினர். இவர் பீகாரைச் சேர்ந்தவர் என்றும் இவர் எதிர்க்கட்சிகளிடம் நமது மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்க பணம் வாங்கி பாடுகிறார் என்றும் இவர் மீது தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றனர். 

எப்போதும் போல் சில்லறை சாமியார்கள் அமைப்பும் இவர் வாயாடி - ஹிந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும் விதமாக செயல்படுகிறார் என்று அறிக்கை எல்லாம் விடுத்தனர். 

 

ஆனால் இவரது தனித்திறமை என்னவென்றால் ஒவ்வொரு முறையும் இவர் மீது பாஜகவினரும் ஹிந்து அமைப்பினரும் குற்றச்சாட்டுகளை கூறும் போது அதே குற்றச்சாட்டை வைத்தே பாடல்களை தயார் செய்து மெட்டமைத்து பாடியும் விடுகிறார். 

 எடுத்துக்காட்டாக  சில ஹிந்து அமைப்புகள் இவர் முஸ்லிம்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கடுமையான முறையில் இவர் மீது குற்றச்சாட்டுகளை வைத்து மிரட்டல் கூட விடுத்தனர்.  இவரோ எதற்கும் அலட்டிக்கொள்ளாமல், 

“கா பா ஹிந்து ஜாயில் கமாவத் மெஹனத்

முகமதி நாபா வேகுல் காவத் 

பொலிடிகல் லாபா பாவே சாகப் 

கரோத் விரோத் பைடே 

பாவே ஹிந்து முஸ்லீம் ஜாபே” என்று பாடினார். 

அதாவது ஹிந்துவானாலும் முஸ்லீம் ஆனாலும் உழைத்தால் தான் சாப்பாடு - ஆனால் இவர்களுக்கு (பாஜகவினருக்கு) ஹிந்து முஸ்லீம்களைப் பற்றி பேசினால் தான் அவர்கள் அரசியலில் பிழைக்க முடியும், உழைக்கும் வழியைப் பார்த்துப் போங்கடா என்றார். 

இவர் இந்தப் பாடலை பாடி வெளியிட்ட சில மணி நேரங்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கேட்டனர். 

பெரும்பாலானவர்கள் ஆதரவு ஒரு பக்கம் - பாஜக, ஹிந்து அமைப்பினரின் கடுமையான எதிர்ப்பும் மோசமான சொற்களால் மிரட்டல் ஒருபுறம் - அவர் சந்திக்க நேர்ந்த போது அதை எல்லாம் ஏற்று கவலைப்படாமல் மேலும் மேலும் வீரியமிக்க வார்த்தைகளால் சங்கிகளுக்கு சாட்டையடி கொடுத்துவருகிறார்

மேலும் அவர் எந்த வாய்ப்பையும் விடுவதில்லை. வடக்கே எந்த விழாவாக இருந்தாலும் மேடையில் இவர் இல்லாமல் நிகழ்ச்சிகள் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார். 

தமிழ்நாட்டின் பொங்கலைப் போன்று வடக்கே சத்பூஜை (சூரியனை வழிபடும் திருவிழா) மிகவும் பிரபலமானது அந்தக் கொண்டாட்டத்தில் இவரது பாடலில்லாமல் முழுமையாகாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார். 

நேஹா கடந்த நான்கு ஆண்டுகளாக பாடல்களை பாடி வருகிறார். அவர் போஜ்பூரியில் பாடல்களைப் பாடுகிறார் ,சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை கிண்டலான முறையில் எழுப்புகிறார்.  உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலின் போது சாமியார் அரசின் ஆட்சியின் அவலம் குறித்து பாடிய பாடல், பிரபலமானது. பெரோஜ்கர் பானி சாஹேப், ரோஸ்கர் மங்கிலா..(வேலை வேண்டுமே சார் நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல, சோறு கேட்கவில்லை. வேலைகொடு நாங்கள் உழைத்துப் பிழைக்கிறோம்) என்ற பாடல் வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் முதல் யூடியூப் வரை  அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது. 

சமூக வலைதளங்களில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் தனது யூடியூப் சேனலில் 3 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார், அதே நேரத்தில் பேஸ்புக்கில் 3.87 லட்சத்திற்கும்அதிகமானோர் அவரைப் பின்தொடர்கின்றனர்.

ஹிந்துத்துவ அமைப்பினர் இவர் பீகாரி என்று கூறி இவரை உத்தரப்பிரதேசத்திற்கு எதிரானவர் என்று கூறிப் பார்த்தார்கள்.  

இவர் உத்தரப்பிரதேசத்தில் கான்பூரைச் சேர்ந்தவருடன் பூஜை, வேதமந்திரம் மற்றும் பார்ப்பனர்கள் யாருமின்றி வீட்டில் பெரிய மனிதர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இணையேற்பு விழா நடத்தினார். இவரது திருமணமும் சுயமரியாதைத் திருமணம் போன்றது தான். இவரது கணவர் பெயர் ஹிமான்ஷு சிங் - நேஹா சமூக வலைதளங்களில் தீவிரமாக செய்யப்படுவதால் கடுமையான மிரட்டல்களையும் பெறுகிறார். 

ஒருமுறை பொது இடம் ஒன்றில் பாஜகவின் பிரபலம் ஒருவர் - நீ சாமியார் அரசை மட்டுமே விமர்சிக்கிறாய், நீ எதிர்க்கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தானே இவ்வாறு செய்கிறாய் என்று கேட்டார். பொதுமக்கள் முன்பு அவரை மட்டம் தட்ட நினைத்தார் அந்த பாஜக பிரமுகர். 

அவர் அலட்டிக்கொள்ளாமல்  பொதுமக்கள் யாரை நாற்காலியில் அமர வைத்துள்ளார்களோ அவர்களைப் பற்றி கேள்வி கேட்பதுதானே சரி. அதை விட்டு விட்டு வேடிக்கை பார்க்கும் நபர்கள் மீது பழிசுமத்துவது சரியாகப் படுமா என்று பொது மக்களைப் பார்த்து கேட்க அந்த பாஜக பிரமுகர் சத்தமில்லாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

நான் நாற்காலியில் யார் அமர்ந்திருகிறார்களோ அவர்களைக் குறித்து கேள்வி கேட்பேன். தொடர்ந்து பாடலைப் பாடுவேன் - வேண்டுமென்றால் கேளுங்கள் இல்லையென்றால் நகருங்கள் என்று பொதுமேடையிலேயே அறிவித்தார். 

கடந்த ஆண்டு இறுதியில் ‘கா பா’ (என்ன ஆச்சு) என்ற தலைப்பில் பாடிய போஜ்புரி பாடல் அதிரவைத்ததால், அதே தலைப்பில் இந்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாள் அன்று ‘கா பா 2’ என்ற தலைப்பில் பாடலைப் பாடி வெளியிட்டார். 

அவ்வளவுதான் இவர் மீது உத்தரப்பிரதேச காவல்துறை கஞ்சா வழக்கை பதிவு செய்தது. 

 இவரோ அதிர்ச்சி அடையாமல் நான் என்ன சாமியாரா புகைபோட்டு சுருண்டு கிடக்க என்று ஒரு பாடலை வெளியிட்டார். அதுமட்டுமல்ல நான் கஞ்சா குடித்தேனா என்று எந்த ரத்தப் பரிசோதனை நிலையத்தில் வந்து சோதனை செய்யவேண்டும் என்று கூறுங்கள் உடனே வருகிறேன் என்று கூறினார். 

இவர் மீது ஆளும் கட்சி நடத்தும் அவதூறு தாக்குதல்கள் உத்தரப் பிரதேச சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.   சட்டமன்றத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும் போது, 

“இந்த சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஒரு பொறியியல் பட்டதாரியான நாட்டுப்புறப் பாடகி மீது இந்த அரசு வன்மக் கணைகளை வீசியுள்ளது.  நாட்டுப்புறப் பாடல்களில் இவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?  இவர்களின்(பாஜக  தலைமையின்) புகழ் பாடும் மடத்தின் பஜனைப்பாடலாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்களா? நாட்டுப்புறப் பாடல்களில் சமூகத்தின் அவலத்தைத்தானே கூறமுடியும்,  அதுவும் நமது மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் சில ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றால் அது நமக்குப் பெருமைதானே:? அவருக்கு இந்த நேரம் இந்த அரசு விருது அளித்து சிறப்பித்திருக்க வேண்டும் அல்லவா? நான் அவரைப் பாராட்டினால் எங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பாடுகிறார் என்று அவரைக் கொச்சைப் படுத்துவீர்கள். அவரின் பாடல்களில் அரசியலைப் புகுத்துவீர்கள். இருப்பினும் இந்த சட்டமன்றத்தின் வாயிலாக அவரைப் பாராட்டுகிறேன், எனது ஆட்சியிலும் இது போன்ற சில நாட்டுப்புறப் பாடகர்கள் எனது ஆட்சிகுறித்து விமர்சனம் செய்தனர். நாங்கள் அவர்களுக்கு ‘சத் பூஜை’ என்று விருது கொடுத்து சிறப்பித்தோம்.  என்னை விமர்சனம் செய்து வெளிவந்த பாடல்களில் என்னை நையாண்டி செய்த கார்ட்டூன்களோடு சேர்த்து புத்தகமாக வெளியிட்டனர் அதை நானே பாராட்டி இந்தியாவிலேயே நையாண்டிச்சித்திரமாக என்னை சித்தரித்து நூலாக வெளிவந்தது இதுதான் முதல்முறை என்று மேடையில் பேசினேன்.

பெண்களைப் பாதுகாப்போம் அவர்களை ஊக்குவிப்போம் என்று கூறிக்கொள்ளும் மாநில பாஜக அரசும் ஒன்றிய பாஜக அரசும் நேஹா சிங் ரத்தோருக்கு வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், இங்கே நடப்பது என்ன? சிறிய உளியைக் கண்டு பெருமலைகள் நடுங்குவதை இந்த சட்டமன்றம் முதல் முதலாக பார்க்கிறது” என்று கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இவ்வாறு கூறியபோது முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் எந்த ஒரு பதிலும் கூறாமல் முகத்தைக் கல்போல் வைத்து, கோபமாக பார்த்துக்கொண்டு இருந்தார். 

‘கா பா’ என்ற போஜ்பூரி பாடலில்  சில  வரிகள்: 

மந்ரிகே பெடுவா படி சங்கனுவா.  கிசானன் சாத்தி பர மோடருவா

ஜவுகிதாரு ஜமேதாருவா, 

ராம் ராஜ்ய ஜுகி பா

 காஷி மதுரா பாகிபா

கோரக்குபூர் கூன் ரங்கயில் பா

கோதல் பூரா காகி பா

 ஆரே காபா

யு பி மே கா பா

தமிழாக்கம்:

அமைச்சரின் மகன், போராட்டம் செய்யும் 

விவசாயிகளை கார் ஏற்றிக்கொலை செய்கிறான்

நம்ம சவுகிதார்(மோடி) என்ன செய்கிறார்  - இறந்த விவசாயிகளின் நீதிக்கு யார் பொறுப்பு

என்ன?

உ.பி.யில் என்ன நடக்கிறது

ராம்ராஜ்யம் என்ற பெயரில் வன்முறை அரங்கேறிவிட்டது,  அடுத்து காசி, மதுரா ரத்தக்கறை படியப்போகிறது

 சாமியார் முதலமைச்சரின் தொகுதியான 

கோரக்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளது.

எதிர்த்துக் கேட்டால் காக்கிச்சட்டை போட்ட போலீஸ் வந்து கஞ்சா கேஸ் போடுது

 உபியில் என்ன நடக்கிறது?

No comments:

Post a Comment