Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
'கடவுள்' மனிதனுக்கு தோன்றியது எப்படி? - தந்தை பெரியார்
March 12, 2023 • Viduthalai

சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு, அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்று செல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு, மக்களுக்குள் தானாகவே ஒருவிதக் குழப்ப உணர்ச்சி தோன்றியிருப்பதை நாம் நன்றாய் உணர்ந்து வருகின்றோம். அதோடு கூட பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார்களில், அரசியல், தேசியம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர்களும், சமயம், புராணம், பிரசங்கம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர்களும் இவ்வியக்கத்தை எதிர்க்க கடவுளையும், மதத்தையும் பற்றிய பொதுமக்களின் குழப்பத்தைத் தங்களுக்கு ஆதாரமாய் வைத்துக்கொண்டும், மற்றும் திரித்துக் கூறிக்கொண்டும் விஷமப் பிரசாரம் செய்து வருவதனாலும், நமது இயக்கத்தில் உண்மையான பற்றுக்கொண்ட உண்மை நண்பர்களில் சிலர், இவ்விஷமப் பிரசாரத்தைக் கண்டு பயப்படுவதாகத் தெரிவதாலும், மற்றும் சில பெரியோர்களும், சமய சம்பந்தமாக மனத்துடிப்புக் கொள்வதாலும், நமது நிலையையும், கடவுள், மதம் என்பது பற்றி நாம் கொண்டுள்ள கருத்தின் நிலையையும் சற்று விளக்கிவிட வேண்டுமென்பதாகக் கருதி இதனை எழுதப் புகுந்தோம். இவைகளைப் பற்றி இதற்கு முன் பல தடவை பேசியும், எழுதியுமிருக்கின்றோம். 

ஆயினும் அவைகளைவிட இது சற்று தெளிவாக இருக்கலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே இதை எழுதுகின்றோம். வாசகர்கள் தயவுசெய்து இதைச் சற்று நிதானமாகவும், கவனமாகவும் படித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். இந்த முதல் பகுதியானது இதே தலைப்பின் கீழ் திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாட்டின் முடிவுரையின்போது நம்மால் எடுத்துச் சொல்லப்பட்டதை அனுசரித்தும், சில நண்பர்கள் அதை விளக்கி எழுதும்படி சொன்னதை ஆதரித்தும் எழுதப்பட்டதாகும்.

நமது கவலை?

முதலாவதாக, நமக்குக் கடவுளைப் பற்றியாவது, மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கின்றோம். அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும், மதத்தையும், கொண்டு வந்து குறுக்கே போட்டுவிட்டால்தான் நாம் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்றே ஒழிய உண்மையில் கடவுளையும், மதத்தையும் பற்றிப் பேசவேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்க வில்லை.

அதுபோலவேதான் சைவ சமயத்தைப் பற்றியும் நாம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் என்போம். எப்படியெனில் சில சைவத் தலைவர்கள் நமக்கு எதிராகத் தம்மால் கூடிய சூழ்ச்சிகள் எல்லாம் செய்து பார்த்தும், ஒன்றிலும் பயன் பெறாததால் கடைசியாகச் சமயமென்றும், சமயப் பெரியாரென்றும் கூறிக்கொண்டு அவ்வார்த்தைகளையே தமது ஆயுதமாகவும், சமய சம்பந்தமான சில பைத்தியக்காரர்களைத் தமக்குப் படை யாகவும் வைத்துக் கொண்டு, அவர்களைத் தெருவில் இழுத்து நம்மீது உசுப்படுத்திவிட்டுச் சூழ்ச்சிப்போர் தொடுக்க ஆரம்பித்ததின் பலனாய், சைவ சமயம் என்பதும் சமயாச்சாரியர்கள் என்பவர்களும் சந்திக்கு வரவேண்டியவர்களானதோடு சைவப் பெரியார்கள் என்பவர்களின் சாயமும் வெளுக்க வேண்டியதாய் விட்டது.

என்ன? எப்படி? எதனால்?

இன்றைய தினம் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், ராமாயணம், பாரதம் ஆகியவைகளிலுள்ள கதைகளை நம்பி முக்கிய கதாநாயகர்களைக் கடவுள்களாக மதித்து வணக்கம், பூஜை, உற்சவம் செய்ய எவனெவன் சம்மதிக்கின்றானோ அவன் மாத்திரமே கடவுள் நம்பிக்கையும், சமயப் பற்றும் கொண்டவன் என்றும், மற்றவர்கள் நாத்திகர்கள் - சமயத் துரோகிகளெனவும் தீர்மானிக்கப்பட்டு, அதுவே முடிந்த முடிவாகவும் சொல்லப்பட்டுவிட்டது.

இது எப்படி இருந்தபோதிலும், கடவுள், மதம் என்பது என்னவென்பது பற்றியும், இவை எப்படி உண்டாயிற்று என்பது பற்றியும், இவற்றை உண்டாக்கியவர்கள் கெட்ட எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது நல்ல எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது அறியாமையினால் உண்டாக்கினார்களா? என்பவைகளைப் பற்றியும், இவற்றில் நமது அதாவது மக்கள் - கடமை என்ன என்பது பற்றியும் சற்று ஆலோசித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். 

அதைப்பற்றி முதலாவதாக இங்கு குணம், உருவம், பெயர் அற்ற தன்மைகளையுடைய கடவுள் என்பதைப் பற்றியும், மக்களின் வாழ்க்கை நலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் தான் மதம் என்று சொல்லப்படும் மதத்தைப் பற்றியுமே இங்கு விவரிக்கக் கருதியுள்ளோமே தவிர, மற்றப்படி பல கடவுள்களின் தன்மையையும், மதப்பிரிவுகளான கிறிஸ்தவ, இஸ்லாமிய, சைன, பவுத்த, சீக்கிய, சைவ, வைணவ, ஸ்மார்த்த, சாக்கிய, வாம முதலிய பல உள் மதங்களைப் பற்றியும் நாம் இங்கு தனித்தனியாகப் பிரஸ்தாபிக்க உத்தேசமில்லை. ஏனெனில், அவற்றிற்கு ஏற்கெனவே மறுப்புகள் தாராளமாய் வெளிப்பட்டு ஒருவருக்கொருவர் பதில் சொல்ல முடியாமல் தத்துவார்த்தம் என்கின்றதற்குள் அடைக்கலம் புகுந்தும், நம்பித்தான் ஆகவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்திற்குள் புகுந்துமே தான், ஒவ்வொருவரும் அவரவர்கள் கடவுளையோ, கடவுள் தூதர்களையோ, அவதாரங்களையோ, சமயங்களையோ, சமயாச்சாரி யார்களையோ காப்பாற்றிக்கொள்ள முடிந்ததேயொழிய அறிவின் மீதோ, நியாயத்தின் மீதோ, நிலை நிறுத்த முடியாமல் போய்விட்ட விஷயம் உலகம் அறிந்த தாகும். ஆதலால் இப்பகுதியில் நாம் அவற்றில் பிரவேசிக்கவில்லை.

சக்தி என்பது எது?

முதலாவது மக்களுக்குக் கடவுள் எப்பொழுது? எப்படி ஏற்பட்டது? என்பதைப் பற்றி ஆராய்வோம். மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கப்பட்ட பிறகுதான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் செய்யப்பட்டு இருக்கவேண்டும். அதை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில் இப்போதுகூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும், நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவதில்லை. எப்படியெனில், சிறு குழந்தை களை நாம் கட்கத்தில் இடுக்கிக்கொண்டு ஒரு உருவத்தையோ, வஸ்துவையோ காட்டி ‘சாமி’ என்றும், அதைக் கைகூப்பிக் ‘கும்பிடு’ என்றும் சொல்லிக்கொடுத்த பிறகே, குழந்தை சாமியைக் கும்பிட அறிகின்றது. அதுபோல, ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகுதான் அவன் மனதிற்குக் கடவுள் நினைப்புத் தோன்றியிருக்கவேண்டும்.

அது எப்படி என்றும், எப்போதென்றும் பார்ப் போமானால் சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச் சியும், ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாத காலத்தில்தான் கடவுள் நினைப்புத் தோன்றி இருக்கவேண்டும். 

கடவுள் என்பது 

கடவுள், ஸ்வாமி அல்லா, காட் என்ற தமிழ், சமஸ்கிருதம்; அரபி, ஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற்களாக இருந்தாலும், குறிபிட்ட அர்த்தத்தில் உலகத் தோற்றத்திற்கும், நடப் பிற்கும், அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும், அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால், அவ்வியற்கையின் இயங்குதலுக்கும், பஞ்சபூதக்கூட்டு என்று சொல் லப்படுமானால் அக்கூட்டின் சேர்க்கைக்கும், ஏதாவது ஒரு சக்தி இருந்துதானே ஆகவேண்டும் என்பதுவும், அந்த சக்திதான் கடவுள், எல்லாம் வல்ல ஆண்டவன், அல்லா, காட் என்று சொல்லப்படுகின்றது என்று சொல்வதானாலும், அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனதிற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்கதாய் இருக்கின்றது. 

ஆகவே, அந்த சக்தி மனிதனுக்குத் தோன்றிய காலம் எது என்பதாகவும், அது நம் நாட்டைப் பொறுத்தவரை எப்படியிருந்தது என்பதாகவும் பார்க்க வேண்டுமானால், நம் நாட்டிலுள்ள கடவுள்களைக் கொண்டுதான் அதைத் தாராளமாய் உணர முடியும். அதாவது இப்போது நமது நாட்டிலுள்ள கடவுள்கள் எவையென்றால் பூமி, மலை, காற்று, நெருப்பு, நதி, சூரியன், சந்திரன், நட்சத்திரம், மழை, இடி, மின்னல், மேகம், நோய்கள், பயங்கரமான மிருகங்கள் ஆகியவைகளெல்லாம் கடவுளாகக் கருதப்படுகின்றன. 

இவைகளெல்லாம், இவற்றின் உண்மையை அறிய ஆற்றல் இல்லாத காலத்தில் கடவுளென்று ஒப்புக் கொள்ளப்பட்டவைகள். அதிலும் இமய மலையே கைலையங்கிரியாகவும், அதுவும் வெள்ளி மலையாகவும், அங்கு கடவுள் இருப்பதாகவும், அங்கிருந்து வரும் நீர் அம்மலையிலுள்ள கடவுளின் தலையிலிருந்து வருவதாகவும், கருதப்பட்டதோடு, இமயமலைக்கு அப்பால் ஒரு நாடும் கண்டுபிடிக்க முடியாதிருந்ததும், மேல்நாட்டை மேல்லோகமென்றும், கீழ்நாட்டை பாதாளலோகம், நரகலோகம் என்றும், இப்படிப் பலவாறாகக் கடவுள் தன்மையைச் சொன்னதற்குக் காரணமென்னவென்று பார்க்கும் போது அவற்றின் உண்மையை அறிய முடியாததாலேயே அவைகளைக் கடவுளென்றும், அவற்றின் இயங்குதலைக் கடவுள் சக்தி என்றும் சொல்லவேண்டிய அவசியம் தானாகவே ஏற்பட்டது.

இப்போதும் மனிதன் தன்னால் முடிந்தவைகள் போக, முடியாதவைகளுக்கே கடவுள் சக்தி என்று சொல்லி விடுகின்றான். உதாரணமாக, சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக்கைக்காரனுடைய செய்கையை மந்திர சக்தி என்றும், தெய்வ சக்தி என்றும், உபாசனா சக்தி என்றும் கருதுகிறார்கள். சிறுவனாயிருக்கும் பொழுது நாமும் அப்படியே கருதியிருந்தோம். இப்போது அறிவு வளர்ச்சி பெற்றபின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல் தந்திரம், கைத்திறம் என்று சொல்லுகின்றோம். மற்றும் அந்த ஜால வேடிக்கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு காலமும் மந்திரசக்தி என்றோ, தெய்வ சக்தி என்றோ, சொல்லாமல் “இது ஏதோ தந்திரம்தானே ஒழிய வேறில்லை; ஆனால் அது இன்னது என்று கண்டுபிடிக்க நம்மால் முடியவில்லை” என்று சொல்லி விடுகிறோம். 

எனவே, ஒரே காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும், தெய்வ சக்தியாகவும் தோன்றியது. பிறகு அது தந்திரம் என்று தோன்றக் காரணம் என்னவென்றால், அது அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சியின் பலனுமேயாகும். அதுபோலவே நமக்கு இப்போது தெய்வ சக்தி, கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம் மேல்நாட்டாருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றுவதில்லை. உதாரணமாக, சூரிய, சந்திர கிரகணம் இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத காலத்தில் நாம் அவைகளுக்கு ஒரு தெய்வ சக்தியைக் கண்டுபிடித்து, சூரியன் என்கின்ற தெய்வத்தை ராகு என்கின்ற பாம்பு பிடிப்பதாகவும், அது சூரியன் என்கின்ற கடவுளுக்கு ஏற்பட்ட சாபம் என்றும் சொல்லி, அச்சாபம் தீர நாம் மந்திரங்கள் ஜெபித்து, அத்தோஷம் தீர ஸ்நானமும் செய்து வருகின்றோம். இது வானசாஸ்திரம் தெரியாத காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட கருத்தாகும். இப்போது வானசாஸ்திரம் தெரிந்தவர்கள் பூமி, சூரியன் இவற்றின் இயங்குதல், அதன் காலஅளவு ஆகியவைகளைக் கண்டுபிடித்தபின், சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம். அதுபோலவே எங்கிருந்து எப்படி மழைத் தண்ணீர் வருகின்றதென்பது தெரிந்தவுடன் நதிக் கடவுளும், மேகக் கடவுளும், வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம் மனதைவிட்டு மறையத் தொடங்கிவிட்டன.

அதுபோலவே, வியாதிகள் எப்படி வருகின்றன என்கின்றதான சுகாதார ஆராய்ச்சியும், உடற்கூற்று ஆராய்ச்சியும் நமக்குத் தெரியவந்த பின்பு பேதி, மாரி, அம்மை முதலிய தெய்வங்களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன. இதுபோலவே “காற்று, கருப்பு, பேய்” முதலியவைகளும் மறைந்து வருகின்றன. துப்பாக்கி, பீரங்கி முதலிய ஆயுதங்கள் கண்டுபிடித்தபின் யானை, புலி, சிங்கம் முதலிய தெய்வங்களைப் பற்றிய பயமும் மறைய ஆரம்பித்துவிட்டன. இந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமேயானால், காரணகாரியம், ஆதாரம் முதலிய விவரங்கள் கண்டுபிடிக்க முடியாதவைகளையே கடவுள் செயல் என்றும், கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம். இவைகளும் நாளுக்கு நாள் மனிதன் அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சியும் முதிர முதிர மறைந்து கொண்டே தான் வரும். மேலும் இப்போது ஒருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படும் காரியங்கள், மற்றொருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படாமல் இருப்பதையும் பார்க்கின்றோம். அது அவ்விருவருடைய அறிவு ஆராய்ச்சி ஆகியவற்றின் வித்தியாசமேயாகும்.

ஏன் இருக்கிறது?

இப்போதும் நம் மனதிற்கு எட்டாத காரியங்களை மேனாட்டார் செய்யும்போது நாம் அதிசயப்பட்டாலும், அதை மந்திர சக்தி என்று நாம் சொல்லத் துணிவதில்லை. இந்த அளவுக்கு நாம் தைரியம் பெற்றுவிட்டோம் என்றாலும், நமக்குப் பூரண அறிவும் ஆராய்ச்சி முடிவும் ஏற்படும் வரை கடவுள் உணர்ச்சி நம்மை விட்டு விலக முடியாது. அன்றியும் வாழ்க்கையில் பக்குவமடையாதவர்களுக்குக் கடவுள் உணர்ச்சி சிறிது காலம் வரை இருந்தே தீரவேண்டியதாயும் இருக்கின்றது. அதாவது கஷ்டப்பட்டு ஏமாற்றமடைந்தவனுக்கும், ஈடு செய்யமுடியாத நஷ்டமடைந்தவனுக்கும் கடவுள் செயல் என்பதைச் சொல்லித்தான் ஆறுதலையும், திருப்தியையும் அடையச் செய்ய வேண்டியிருக்கின்றது. நல்ல அறிவும் ஆராய்ச்சியும் உடையவர்களும் தங்களுக்குக் காரண காரியம் எட்டாத இடத்திலும், ஈடு செய்யமுடியாத இடத்திலும் கடவுள் செயல் என்பதைக் கொண்டு தான் திருப்தி அடைகின்றார்கள்.

அப்போது தங்கள் அறிவுக்கு மேல் ஒன்று இருப்பதை எண்ணித்தீர வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் உறுதியான பக்குவமடைந்தவர்கள், எந்த விஷயத்திற்கும் தங்களுக்குத் தெரிந்த காரணத்தைக் கொண்டு சமாதானமடைவதும், தெரியாததாயிருந்தால் நமக்கு எட்டவில்லை என்றோ, அல்லது இதுதான் இயற்கை என்றோ கருதித் திருப்தியடைவதுமாய் இருக்கின்றார்கள். எனவே சாதாரண மக்களின் கடவுளுக்கும், சற்று அறிவுடைய மக்களின் கடவுளுக்கும், ஆராய்ச்சிக்காரர்களின் கடவுளுக்கும், பக்குவமடைந்தவர்கள் எண்ணத்திற்கும் வித்தியாசங்களுண்டு. ஒருவருக்கொருவர் கடவுள் வணக்கத்திலும், கடவுள் மீது சுமத்தும் பொறுப்பிலும் வித்தியாசங்களுண்டு.

குறிப்பு: (மெட்டிரியலிஸம் (உலோகாயதம்) என்ற தலைப்பில் பெரியார் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் பல இடங்களில் பேசியதும், எழுதியதும் ஆன தொகுப்பு)

குடிஅரசு - கட்டுரை - 16.04.1949


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn