எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க சிபிஅய் நிர்ப்பந்திக்கப்படுகிறது! அய்க்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 12, 2023

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க சிபிஅய் நிர்ப்பந்திக்கப்படுகிறது! அய்க்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு

பாட்னா, மார்ச் 12-  “எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்யுமாறு சிபிஅய் நிர்ப்பந்திக்கப்படுகிறது" என்று அய்க்கிய ஜனதா தளம் தலைவர் லாலன் சிங் என்ற ராஜீவ் ரஞ்சன் சிங், ஒன்றிய பாஜக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2004-2009 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் ரயில்வே அமைச்ச ராக இருந்த லாலு பிரசாத், பீகாரைச் சேர்ந்த சிலருக்கு ரயில் வேயில் வேலை  வாங்கித் தருவ தற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக, ஒன்றிய பாஜக அரசால் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கில், லாலுவின் மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகள்களிடம் சிபிஅய் கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணை நடத்தினர். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, உடல் நலிவுற்ற நிலையில் இருக்கும் லாலு பிரசாத்திடம் சுமார் 5 மணி நேரம் வரை சிபிஅய் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்தப் பின்னணியிலேயே, ஒன்றிய அரசு மீது அய்க்கிய ஜனதா தளம் தலைவர் லாலன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

“லாலு மீதான இந்த வழக்கை, ஆதாரங்கள் இல்லாததால் சிபிஅய் இரண்டு முறை மூடி வைத்திருந்தது. தற்போது நிதிஷ் குமார்,  ராஷ்ட்ரிய ஜனதா தளத் துடன் கைகோர்த்த பிறகு, அந்த வழக்கு இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சிபிஅய் எப்படி திடீரென்று ஒரு சாட்சியை பெற்றது? என்று தெரியவில்லை. எதிர்க்கட்சிகளைப் பார்த்து பாஜக பயப்படுவதால், எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு களைத் தாக்கல் செய்ய சிபிஅய் நிர்பந்திக்கப்படுகிறது. 

தற்போதைய அரசாங்கம் எதிர்க் கட்சிகளை குறிவைக்க ஒன்றிய  புலனாய்வு நிறுவனங்களை பயன்படுத்துகிறது.

அவர்கள் பீகாரில் மட்டுமல்ல பிற மாநிலங் களிலும் தங்கள் அரசியல் எதிரிகளை குறிவைத்து வருகின்றனர். இவ்வாறு லாலன் சிங் கூறியுள்ளார்.

2008-இல், இதே லாலன் சிங் தாக்கல் செய்த புகாரின் அடிப் படையில்தான் லாலு பிரசாத்திற்கு எதிராக சிபிஅய் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment