புதுச்சேரியில் அன்னை மணியம்மையாரின் நினைவு நாள் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 23, 2023

புதுச்சேரியில் அன்னை மணியம்மையாரின் நினைவு நாள் கருத்தரங்கம்

புதுச்சேரி மண்டல பகுத்தறிவு ஆசிரியரணி மற்றும் புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் ஏற்பாட்டில் அன்னை மணியம்மையாரின் நினைவு நாள் கருத்தரங்கம் புதுச்சேரி இராஜா நகர் பெரியார் படிப்பகத்தில் 19.3.2023 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. புதுச்சேரி மண்டல திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு மகளிரணி தோழர் சுமதி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணை பொதுச் செயலாளர் கவிஞர் இளவரசி சஙகர் அவர்கள் தலைமை தாங்கினார். செல்வி செ.ம.காருண்யா வரவேற்புரை யாற்றினார்.

“வேலூர் ஈந்த புரட்சி மணி” எனும் தலைப்பில் நல்லாசிரியர் விருது பெற்ற பகுத்தறிவு கவிஞர்  அர.அனுசுயா அம்மையார் தத்துவத் தலைவர் தந்தை பெரியாரை 40 ஆண்டுகள் பாதுகாத்த பெருமைமிகு வீர மங்கை என்றும், மிசாவைக் கண்டு பயப்பாடாதவர் என்றும், இந்திய துணைக் கண்டத்தையே திரும்பிப் பார்க்க வைத்த இராவணா லீலாவை நடத்திய மாபெரும் புரட்சிப் பெண் எனவும், எதிரிகளும் நடுங்கும் வண்ணம் கழகத்தை கட்டிக் காத்தவர் என்றும், பல்வேறு சுவையான சம்பவங்களை அடுக்கடுக்கான எடுத்துக்காட்டுகளை எடுத்தியம்பி மிகச் சிறப்பாக உரையாற்றினார்.

முன்னதாக திராவிடர் இயக்க எழுத்தாளர் ந.க.மங்கள முருகேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 1 நிமிடம் மவுனம் கடைப்பிடிக்கப்பட்டது. திராவிட மகளிர் பாசறை செயலாளர் சிவகாமி சிவக்குமார் நன்றி நவின்றார். நிகழ்வில் புதுச்சேரி திராவிடர் கழக மண்டல தலைவர் வே.அன்பரசன், அமைப்பாளர் இர.இராசு, பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் கைலாச நெ.நடராசன், புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார், டாக்டர் கு.இராசகுமார், அனிதா பாலகிருஷ்ணன், புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், களஞ்சியம் வெங்கடேசன், வாணரப்பேட்டை பெ.ஆதிநாராயணன், புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், திராவிடர் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கே.குமார், பிரான்ஸ் தமிழ்ச் சங்க பொருளாளர் கோகுலன் கருணாகரன் ஆ.பூ.நாகராஜன், வெ.செந்தில்குமார், புதுவை பிரபா, மணிமேகலை, ஆ.சிவராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பகுத்தறிவாளர் கழக தலைவர் நெ.நடராசன் செய்திருந்தார். நிகழ்ச்சியினை கவிஞர் இளவரசி சங்கர் ஒருங்கிணைத்தார்.

No comments:

Post a Comment