தடியுண்டு, தடைதாண்டு பெண்ணே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 4, 2023

தடியுண்டு, தடைதாண்டு பெண்ணே!

“பெண்ணுக்கு இது ஒத்துவருமா?

பேசாமல் நீ வீட்டிலிருமா”

நான்கு தெரு தள்ளியிருக்கும்

நண்பரொருவர் புத்தி சொன்னார்.


ஆற்றலோ உரிமையோ வாய்ப்போ

ஆணுக்குள்ளது பெண்ணுக்கென

பேச்சோடு போனவரில்லை பெரியார்,

புடவைக்குப் பொதுவாழ்வைப் புகட்டினார்!


வைக்கம் தெருக்களில் நெஞ்சுரத்தில் 

வாகை சூடினார் நாகம்மையார்!

தெற்கு வேறு வடக்கு வேறென

தீப்பந்தம் எடுத்தார் மணியம்மையார்!


வீட்டிற்குள் முடக்கினால் பெண்ணை

நாட்டிற்கு வளர்ச்சியா வீழ்ச்சியா?

கட்டிக் காத்து கழகத்தை

கடலூராரிடம் ஒப்படைக்காதிருப்பின்

உரிமையும் ஒதுக்கீடும் நிலைத்திருக்குமோ?

புரிவீரே பெண்ணின் பெருமையென்றேன்!


இன்னுமொன்றும் இணைத்துச் சொன்னேன்!

மெச்சி மெச்சிப் பேசுகின்றீர்

மேலை நாட்டுச் செய்திகளை,

வேலூராம் நம்மூர் வெளிக்காட்டிய

மேன்மையாளர் மணியம்மையார் அறிகவென்றேன்!


மண்ணுக்கும் கீழே பெண்ணினத்தை

மதித்து மிதித்தீரே மனுக்களே,

பெரியாருக்குப் பின்னிருக்கும் இந்நாளில்

பெண்ணுரிமைச் பாய்ச்சலின்

பெருவேகம் இனி காண்மின் என்பேன்!


மகளிர் நாளென்று வேண்டுமா ஒன்று?

பெற்ற உரிமைகளெல்லாம் 

போராடாமல் உற்றதில்லை,

கண்டிப்பாய் வேண்டுமென்கிறது 

கடந்த கால வரலாறு...

தடைகளைத் தாண்டுகிறோமென்கிறது 

தற்கால வரலாறு...


உரிமை கொடு என்பது இறந்தகாலமாக,

உரிமை எடு என்பது இக்காலமாக,

இனி வரும் காலமெல்லாம்

பிறப்பும் இறப்பும் போல்

பசியும் தூக்கமும் போல்

ஈருயிர்க்கும் பொதுவுரிமை

இயல்பாகும் நாளது வரையில்

மகளிர் நாள் தேவை! தேவை!!


ஆட்சியிலோ அதிகாரத்திலோ

அடுப்பங்கரையிலோ அடுத்தெதுவிலோ

அய்ம்பதுக்கு அய்ம்பது என்போம்!

அதுவே நம் இலக்கு என்போம்!!

இடறி விடாமலிருக்க இப்பயணத்தில்

தடியைத் தந்தார்  தந்தை பெரியார்,

தடை தாண்டிவிட தயக்கமேன் பெண்ணே?!

- ம.கவிதா,

 பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர், திருப்பத்தூர்


No comments:

Post a Comment